துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

[நண்பர் வேணு தயாநிதி சொல்வனம் இலக்கிய இதழில் எழுதிய கட்டுரை.]

//அலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. யானைகளின் குருதி வெள்ளை நிற நுரையாகக் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கிறது.//

//அலை விழும் இடத்திலிருந்து கடல் விளிம்பு வரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்பு சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளை விளிம்புபோலத் தரையில் உரசியபடி படிகிறது. அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொள்கிறது. வீடுகளின் இடுக்குவழியாக ஓடிய செம்மண் கலந்த மழைவெள்ளம் கடற்கரையெங்கும் இரத்தம் போலச் சகதியாகிறது. மீனவர் வாழ்க்கையில் கடலே சகல திசைகளிலும் வியாபித்திருக்கிறது.//

//”நாமளே எரப்பம்மாரு. எரப்பன் எரந்து எரப்பாளிச்சு கொடுக்கணும்”. “அப்போ நான் பணக்காறனெண்னு அடுத்தவனுக்குக் காட்டவேண்டி குடிச்சேன். அதுக்கப்பெறவு எனக்க போட்ட எரிச்ச சோகத்துல குடிச்சேன். இப்போ கேன்சறுக்க வேதன தெரியாமயிருக்கக் குடிக்கேன். இனியும் இத விட முடியாது பிள்ள” என்பது போன்ற உரையாடல்கள் கதையின் மொழிக்குள் இயல்பாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. படமெடுத்தாடும் ஒரு சர்ப்பத்தின் தலைமேல் நிற்பதை போலத் தன் கட்டுமரத்தில் நின்று கொண்டிருக்கிறார் பார்த்தலோமி.//

//ஓர் இலக்கிய முயற்சியின் முக்கியத்துவம் அதன் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான ஒன்றாக முன்னிறுத்தப்படக்கூடும். இதுவரையிலும் முற்றிலும் அறியாத தமிழ்நாட்டின் தென்மேற்கு கடற்கரையின் வாழ்க்கையைத் தமிழ் வாசகனுக்கு இயல்பாக அறியத்தருகிறது என்பதால் துறைவன் முக்கியமான ஒரு நூலாகிறது. //

முழுவதும் படிக்க: http://solvanam.com/?p=43698

துறைவன் – என்னுரை

இந்தியாவின் வரலாறு அதன் இனக்குழுக்களின் வரலாறுகள் இல்லாமல் முழுமையடையாது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் முக்குவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய இனம். இவர்களின் வரலாறாக தற்போது கிடைப்பவை அனைத்தும் போர்சுகீசியர்களின் வருகைக்குப்பிந்திய இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கின்றது. பதினாறாம் நூற்றாட்டுக்கு முந்தைய முக்குவா இனமக்களின் வரலாறு தெளிவாக இன்னும் ஆராயப்படாமலிருக்கின்றது.

“வரலாறென்பது உண்மைக்கும் தொன்மத்திற்கும் பிறந்த புதல்வி” என்று நிகாஸ் கசந்த்சாகீஸ் சொல்வார். ஆனால் நமக்கு இப்போது  கிடைக்கும் வரலாறுகளும், அதுபோல் இன்று எழுதப்படும் வரலாறுகளும் இன மேட்டிமையுடன் ஒரு பக்க சார்புடன் உண்மைக்கு வெகுதொலைவில் இருக்கின்றது. இதில் நமது கல்லூரி பாடபுத்தகங்களும் விதிவிலக்கல்ல. துறைவனில் முக்குவர்களின் வரலாற்றை நடுநிலைமையுடன் சிறிது ஆராய்ச்சி நோக்குடன் நேர்மையாக அறிய முயன்றிருக்கின்றேன். இது ஒரு துவக்கம் மட்டுமே.  இன்னும்  செல்லும் தூரம் அதிகமிருக்கின்றது.

நான் கடற்கரையில் நேரடியாக அனுபவித்த வாழ்கையையும் கடற்கரையில் சொல்லிக்கேட்ட கதைகளையும் துறைவன் வடிவில் இலக்கியமாக்க முயன்றிருக்கின்றேன். தொழில் வளர்ச்சி காரணமாக இன்று பாரம்பரிய மீன்பிடி யுத்திகள் அழிந்துவருவதனால்  துறைவனில் பலவிதமான மீன்பிடி யுத்திகளை ஆவணப்படுத்தியிருக்கின்றேன்.

இதனை முக்குவா இன மக்களின் வரலாறு, கடலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னும் கோணத்தில் பதிவுசெய்திருக்கின்றேன். எனவே இது ஒரு தனிமனிதன் வாழ்க்கை என்றில்லாமல் ஒரு சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் மீன்பிடி வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும்.

இந்த நாவலின் ஒவ்வொரு அதிகாரங்களையும் சிறுகதை வடிவில்தான் எழுத்தினேன். எனது முதல் சிறுகதையான கடலாழம் ஜெயமோகன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, ஜெயமோகன்.இன் தளத்தில் வெளியானது. அதன் பிறகு மீன்குருதி, ஆழிச்சுழி, அல்கந்தர் என்று தொடர்ந்து எழுதினேன். முடிவில் அனைத்து சிறுகதைகளையும் இணைத்து சிறிது மாற்றங்களுடன் ஒரு நாவலாகினேன்.

துறைவன் எனது முதல் நாவல். இதில் இலக்கியமும் இனவரைவியலும் இணைத்திருப்பதால் நாவல் வடிவத்தில் சில போதாமைகளும் குறைகளும் இருக்கலாம். இருப்பினும் இதிலிருக்கும் தகவல்களும்  மீனவர்களின் கடல்வாழ்க்கையும் மீன்பிடியுத்திகளும் அவர்களின் வரலாறும் சிறந்ததொரு வாசிப்பனுவத்தை வாசகனுக்கு  தருமென்பதில் ஐயமில்லை.

எனக்கு அறிவுரைகள் வழங்கிய சொல்புதிது குழும நண்பர்களுக்கும் குறிப்பாக ராஜகோபாலன் ஜானகிராமன் அவர்களுக்கும், ரிச்சார்டு அல்போன்ஸ், திலீப் அலெக்ஸ், பேட்ரிக் ஜோசப், ததேயூஸ் டென்னிஸ், விக்டர் டென்னிஸ், வில்ஃப்ரெட் ராஜப்பன், பிரான்சீஸ் ஆன்றணி, ஜோஸ் புஷ்பநாயகம், புஷ்பராஜ் புஷ்பநாயகம், ஆரோக்கியதாஸ் மரியதாசன், ஜஸ்டின் ஆன்றணி பனியடிமை, ஜாண் அக்ரிமா, முனைவர் அல்பாரிஸ் ஜாண்ரத்தினம், றோக்கி போஸ்கோ, வேணு தயாநிதி, அர்விந்த் கருணாகரன், ஆர்வி, போகன் சங்கர், ராம் சர்மா, அரங்கசாமி கே.வி., சிறில் அலெக்ஸ், ஓவியர் சண்முகவேல் ஆகியோருக்கும் எனது நன்றி.

ஒரு மூத்த சகோதரன் போல் துறைவன் வெளிவர அனைத்து ஏற்பாடுகளையும் உரிமையோடும் கடமையோடும் செய்த நண்பர் குறும்பனை பெர்லின் அவர்களுக்கு நன்றி.

நான் துறைவனுக்கு அணிந்துரை எழுதிக்கேட்டதும் மறுக்காமல் சிறப்பாக எழுதிக்கொடுத்த மதிப்பிற்குரிய பாதிரியார் பங்கிராஸ் அருளப்பன் (வழக்குரைஞர்) அவர்களுக்கும், “பேறுகாலமாய் இருந்த எலிசபத்தம்மாளை மரியாள் சந்திக்கிறாள், எலிசபத்தம்மாளின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியதாம். அதே பரவசம்…” என்று துறைவனை படித்துவிட்டு என்னை ஊக்கப்படுத்தியதோடல்லாமல் “துறைவனுக்கு அணிந்துரை எழுதுவது என்னுடைய கடமை” என்று உரிமையுடன் அணிந்துரை எழுதிய அண்ணன் ஜோ டி’க்ரூஸ் அவர்களுக்கும், துறைவனை வெளியிடும் முக்கடல் பதிப்பகத்தாருக்கும், இந்த நாவல் ஆக்கத்திற்கு பெரிதும் துணைபுரிந்த எழுத்தாளரும் பேராசிரியருமான முகிலை ராஜபாண்டியன் அவர்களுக்கும் எனது வணக்கங்கள்.

முக்கியமாக “நீங்கள் ஏன் எழுதக்கூடாது? உங்கள் நடை சரளமாக இருக்கிறது. சிறிய நுண் விஷயங்களைக் கவனிக்கும் கண் உள்ளது. அனுபவங்களை நேர்மையாகச் சந்திக்கிறீர்கள். ஆகவே எழுதுங்கள்” என்று  என்னை எழுத ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எழுதுவதற்காக எனக்கு ஒரு தளம் அமைத்துக்கொடுத்த மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்.

இறுதியாக, இந்த முயற்சி எனது மனைவி ஆரோக்கிய மேரி கிறிஸ்டோபர் மற்றும் குழந்தைகள் ஃபெல்டன் (Felton), ரான் (Ron), ரையன் (Ryan), ஆரோன் (Aaron) ஆகியோரின் பங்களிப்பில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. நான் இந்த புத்தகத்திற்காக செலவழித்த  நேரம் முழுவதும் அவர்களுக்கு சொந்தமானது. அதற்கு ஈடாக கடலுடனும் மீனவர்களுடனும் தொடர்பறுந்துபோன என்  குழந்தைகளுக்கு அவர்களின்  மூதாதையர்கள் குறித்தான துறைவன் சிறந்த  கைமாறாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

கிறிஸ்டோபர் ஆன்றணி, மிச்சிகன், அமெரிக்கா

இனயம் துறைமுகம் – 1

சில அரசியல் தலைவர்கள் கட்சி, ஜாதி, மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானவராக, எளிய மக்களில் ஒருவராக இருப்பார்கள். கன்னியாகுமரியைப் பொறுத்தவரை அவ்வாறு பல நேர்மையான அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். தற்போது கம்மூனிஸ்டு கட்சியில் திருமதி லீமாரோஸ், பிஜேபியில் பொன்னர் என்னும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள். இதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கடற்கரை மக்கள் ஏதேனும் உதவிக்கு சென்றாலும் அவரால் முடிந்ததை அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்திருக்கின்றார். ஆனாலும் சிலநேரம் அரசியல் அழுத்தங்கள் நமது தனமனித நேர்மைக்கு எதிராகவே அமைந்துவிடும்.

மீனவர்களின் வளர்ச்சிக்காக இனயம் கடற்கரை கிராமத்தில் ஒரு உலகத்தரம் வாய்ந்த துறைமுகம் அமைக்கவிருப்பதாக சொல்லும் பொன்னரின் பேட்டியை ஒரு பத்திரிகையின் ஓர் மூலையில் கண்டேன். இதன் திட்ட மதிப்பு 21000 கோடி ரூபாய். “இருபத்தோரு ஆயிரம் கோடி ரூபாய்”. ஆனால் இந்த திட்டத்தை இரகசியமாக செயல்படுத்துவதுதான் சந்தேகத்தை எழுப்புகின்றது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது.

இனயம் துறைமுக திட்டம் குறித்த எந்தவித ஆவணங்களும் பொதுவெளியில் கிடைக்கவில்லை. ஏன், இது கூடங்குளம் அணுவுலையை விட தேசிய பாதுகாப்பு சார்ந்த இரகசியத்திட்டமா? எதற்கு இந்த அவசரம்? டெண்டர் எப்போது விட்டீர்கள்? அதற்கு முன் துறைமுகத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை எங்கே? அதை யார் நடத்தினார்கள்? மக்களின் கருத்துக்களை கேட்டீர்களா? மக்கள் செறிவுள்ள இனயம் மக்களை ஏங்கே குடியமர்த்துவீர்கள்? அவ்வாறு குடியமர்த்தும்போது கடலை நம்பியிருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா?

500 ஏக்கர் கடல் பரப்பை மண்மூடி நிலப்பரப்பாக்கவேண்டுமென்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லையா? மணலை எங்கிருந்து கொண்டுவருவீர்கள்? அதை கடற்கரையிலிருந்தே எடுத்தால் மணிலின் அடியில் படிந்திருக்கும் உயர் கதிர்வீச்சு தனிமங்களால் புற்றுநோய் பாதிப்பு, மணவாளக்குறிச்சி மணல் ஆலை கடற்கரையில் ஏற்படுத்தும் புற்றுநோயை இன்னும் அதிகமாகாதா? பாறைகள் அதிகமுள்ள இனயம் கடலில் மீன்கள் அதிகமாக இருக்கும் பாருகள் அழிந்துவிடாதா? இதனால் ஒட்டுமொத்த மீனவமக்களுக்கும் பாதிப்பில்லையா?

கடற்கரையில் ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு அலைத்தடுப்பு அமைக்கும்போது மீனவர்களின் கரமடி, தட்டுமடி, கச்சாவலை போன்ற பாரம்பரிய தொழில்கள் அழிந்துவிடாதா? 500 ஏக்கர் கடல்பரப்பை மணலால் மூடும்போதும், நீண்ட தூரத்திற்கு அலைத்தடுப்பு அமைக்கும்போது பல கிராமங்கள் கடலரிப்பால் அழிந்துவிடாதா?

1500 ஏக்கர் நிலத்தை கரையிலிருந்து கையகப்படுத்தும்போது அதில் எந்தெந்த கிராமங்கள் உள்ளங்கியிருக்கும்? அவர்களுக்கு மாற்றுவழி என்ன? விழிஞ்சம் துறைமுகப்பகுதியை அதானிக்கு இனாமாக கொடுத்ததுபோல் இந்த கடற்கரைப்பகுதிகளை யாருக்கு இனாமாக? அல்லது எத்தனை வருட குத்தகைக்கு?

வல்லார்படம் துறைமுகத்தை 25% அளவிற்க்கு பயன்படுத்தாத நாம் விழிஞ்ச்சத்தில் துறைமுகம் அமைக்க முழுமூச்சில் இறங்கிவிட்டோம். இப்போது விஜிஞ்ச்சத்திலிருந்து 20மைல் தொலைவிலிருக்கும் இனையத்தில் இன்னொரு துறைமுகம் அமைப்பதால் என்ன லாபம்? மதர்ஷிப் என்னும் பெரிய சரக்குக்கப்பல்கள் வருவதற்கு கடலாழம் குறைந்தபட்சம் 20 மீட்டராவது இருக்கவேண்டும். இனயம் பகுதியில் 20மீட்டர் கடலாழம் எங்கிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து துவங்குகின்றது என்று தெரியுமா? 20மீட்டருக்கு கடலை ஆழப்படுத்தும்போது மீன்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லையா?

விழிஞ்சம் துறைமுகத்தால் 600 புதிய வேலை வாய்ப்புகளை மட்டுமே அடுத்த பத்து வருடங்களில் உருவாக்க முடியுமாம். இணையம் துறைமுகத்தால் எத்தனை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள்?

கொழும்பு, சிங்கப்பூர், துபாய் துறைமுகக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து மதர்ஷிப் என்னும் பெரிய கப்பல்களும் இனயும் துறைமுகத்தில் வந்துவிடுமா? அதற்கு தற்போதிருக்கும் கப்பல்களின் கூட்ட்மைப்பு எளிதில் அனுமதிக்குமா? அப்படி ஒரு கப்பல் வரவேண்டுமென்றால் அதற்கு நாம் கொடுக்கும் மானியம் என்ன? அதனால் நமது அரசாங்கத்திற்கு எத்தனை இழப்பு? கப்பல்களின் போக்குவரத்து அதிகரிக்கும்போது மீனவர்களுக்கு அதனால் பாதிப்பு அதிகமில்லையா? இப்போதே விசைப்படகுகளை கப்பல் இடிப்பதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமில்லையா? தினமும் கப்பல் ஏதேனும் ஒரு வளிவலையை அறுத்துவிட்டுத்தானே செல்கின்றது.

“அலை தாக்கம்” அறிக்கை தயார்செய்து விட்டீர்களா? கேரளக்கடற்கரையில் மே முதல் ஆகஸ்டு வரை அலைகளின் வீரியம் எப்படியென்று தெரியுமா? ஐமப்தடி உயரத்திற்கு அலைஎழுபி கடற்கரை வீடுகளை இடித்துத்தள்ளிவிடும் என்பதாவது தெரியுமா?

இப்போதே எளிதில் மீனவர்களை தீவிரவாதியென்று சுட்டுவிட்டு செல்கின்றான். அப்படியென்றால் கப்பல்தொகை பெருகும்போது?

விழிஞ்சம் துறைமுகப்பகுதிக்கு வெளியிலிருக்கும் பூவார் பகுதிமக்கள் தங்கள் வீட்டு பட்டாவிற்கு செல்லும்போது எப்போது கேட்டாலும் உங்கள் நிலத்தை துறைமுகத்திற்காக தரத்தயாராக இருக்கவேண்டும் என்னும் நிபந்தனையுடன் பட்டாகொடுப்பதுபோல் இனயம் பகுதிக்கு வெளியிலிருக்கும் ஊர்களுக்கும் மேற்சொன்ன பட்டா பிரச்சனை வராதா?

மீனவர்களின் இப்போதைய தேவை ஒரு சிறிய மீன்பிடி துறைமுகம். தூத்துர் கொல்லங்கோடு பகுதி மீனவர்கள் கேட்டதன்பேரில் தேங்காய்பட்டினத்தில் அதை நிறைவேற்றினீர்கள். இப்போது உங்களின் தவறான கட்டுமானத்தினால் தேங்காய்பட்டினம் துறைமுகத்தினுள் அலையடித்து அது பயன்படுத்த முடியாமல் கிடப்பது உங்களுக்கு தெரியுமா? அதை சரிசெய்ய துறைமுகம் கட்டுவதற்கு செலவான தொகைபோல் மூன்றுமடங்கு செலவுபிடிக்கும். அதற்கு எப்படியும் 150கோடிகள் மட்டும்தான். ஏன் தேங்காய்பட்டினம் துறைமுகத்தை முடிக்காமல் இனயம் துறைமுகத்திற்கான அவசம் என்ன?

இவை என் எளிய அறிவிற்கு தோன்றிய சில அடிப்படை கேள்விகள். கப்பல்தொழிலில் இருப்பவர்களுக்கு இன்னும் அதிகமாகவே தெரியும்.

இது வரும் தேர்தலுக்கான ஒரு ஸ்டண்ட் என்றால் தயவுசெய்து மீனவர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் தோற்றுவிடுவீர்கள். இல்லை இந்தியாவின் வளர்ச்சிக்காகதான் இந்த திட்டமென்றால் வெளிப்படையாக முதலிலிருந்தே துவங்குங்கள். ஆவணங்களை வெளியிடுங்கள். மீனவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒருபோதும் எதிரிகளல்ல.

அதிகாரவர்கம் எப்போதும் உலகை அழகியல் பார்வைகொண்டுதான் பார்க்கும்போலும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு. சசிதரூர். விழிஞ்சம் துறைமுகம் குறித்து என்டிடிவி-யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை “விழிஞ்சம் சோர்வான கடற்கரை கிராமம்” என்று துவங்கி “விஜிஞ்சம் கலங்கரை விளக்கத்திலிருந்து பார்க்கும்போது அடிவானம் சூரிய உதயத்தில் பிரகாசிக்கின்றது. துறைமுகம் கட்டிமுடித்தால் இந்த காட்சிபோல் வாய்ப்புகளும் அழகாக இருக்கும்”

ஆமாம், நீங்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து மாலை ஐந்துமணிக்கு கோட்டு சூட்டுடன் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். அங்கிருந்து கீழே இறங்கி வாருங்கள். எங்களில் ஒருவராக இருந்து எங்களின் கண்கொண்டு பாருங்கள். அப்போது தெரியும் ஒருவேளை உணவிற்காக காலை ஐந்து மணிக்கே கட்டுமரத்தில் சென்று அடிவானத்தில் மீன்பிடிக்கும் அவனது முதுகு வியர்வை காலை சூரிய உதயத்தில் ஒளிர்வதை.

 

[நாள்: செப்டம்பர் 16, 2015]

இனயம் துறைமுகம் – 2

இந்தியாவின் மேற்கு கடற்கரையின் ஆழம் அதன் கடல்வெட்டிலிருந்தே துவங்குகின்றது. அதுபோல் பொழிமுகங்களும் அரபிக்கடல் கடற்கரைகளில் அதிகம். இவையே இந்த பகுதிகளில் இயற்கை துறைமுகங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகள். இதற்கு விதிவிலக்கு விழிஞ்சம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள். கடலரிப்பு காரணமாக கடலினுள் சென்ற பாறைகள் இயற்கையான தடுப்பரண்கள்போல் கடற்கரைகளை பாதுகாக்கின்றது. இந்த பாறைகளும், கடல் ஆழமும் விழிஞ்சம் மற்றும் குளச்சலில் இயற்கை துறைமுக உருவாகத்தில் முக்கிய பங்குவகிக்கின்றன.

கரைகளில் மட்டுமல்ல கடலிலும் பல இடங்களில் இந்த பாறைகள் ஏராளம் கறுத்த யானைகள்போல் முதுகுகாட்டி படுத்திருக்கின்றது. இதுபோன்ற பாறைகளே மீன்கள் அடர்த்தியாக வசிக்கும் பாராக மாறி மீனவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் இருக்கின்றது.

மீனவர்கள் இந்த பாருகளில் தூண்டிலிடும்போதோ அல்லது வலைவீசி மீன்பிடிக்கும்போதோ தூண்டிலும் வலையும் பாரில் அகப்பட்டு கடலின் ஆழத்தில் அவை நிரந்தரமாக தங்கிவிடும். நாம் வலைவீசி பிடிக்கும் மீனைவிட பலமடங்கு மீன்களை இந்த வலைகள் பிடிக்கும். அந்த மீன்கள் எதற்கும் பயன்படாமல் மட்கி வீணாகிவிடும்.

வலையை கப்பல் அறுத்துவிட்ட செய்தியை நாம் கடற்கரைகளில் தினமும் கேட்கமுடியும். பாரில் அகப்பட்ட வலைகள் ஓரிடத்தில் தங்கும். ஆனால் கப்பல் அறுத்த வலைகள் நீரோட்டத்தின் போக்கில் இடம் மாறி சென்றுகொண்டிருக்கும். செல்லும் இடங்களில் தானாக அந்த வலை மீனை பிடித்துக்கொண்டிருக்கும். இவை மீன் குஞ்சுகளையும் விட்டுவைக்காது. அந்த மீன்களை பெரிய மீன்கள் உண்ணும்போது சுறா போன்ற பெரிய மீன்களும் அகப்படும். இதுபோன்ற “பேய் வலை” அல்லது “மீவலை”கள் மீன் உற்பத்தியையும், மீன் வளத்தையும், சுற்றுச்சூழலையும் பெருமளவில் பாதிக்கின்றது.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும்கூட மீவலைகள் உருவாகாமல் தடுப்பதற்கான, அவற்றை கண்டுபிடிப்பதற்கான எந்த முயற்சியும் அரசால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பத்துலட்சம் ரூபாய் வலையில் நூறுரூபாய் செலவில் அதன் இடத்தை கண்டுபிடிக்கும் சாதனம் ஒன்றை வடிமைக்க சிக்கலெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

2011 ஏப்ரல் மாதம் பனாமா நாட்டுக்குச்சொந்தமான எம்வி மிராச் என்னும் சக்குக்கப்பல் இரும்பு தாதுவை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினத்திலிருந்து கராச்சிக்கு கொளச்சல் துறைமுகம் வழியாக சென்றுகொண்டிருக்கும்போது கடியப்பட்டினம் கடல் பகுதியில் பாறையில் மோதி மூழ்கியது. ஆனால் இன்றுவரை அந்த கப்பல் மீட்கப்பட்டதாக தகவலில்லை. அதை யாரும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற கப்பல்கள் கடலில் பாறைகள்போல் புதிய பாராக மாறும். ஆனாலும் நாட்கள் செல்லச்செல்ல இந்த கப்பல்கள் உருக்குலைந்து அதன் சிதிலங்கள் மீனவர்கள் கணிக்க முடியாத இடங்களுக்கு இடம்மாறி அவர்களின் வலைகளுக்கு எமனாக மாறி வலைகளை அறுத்து மீவலைகளுக்கான மூலகாரணமாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது. அதுபோல் கரைமடி மற்றும் வலைகொண்டுள்ள அனைத்து பாரம்பரிய தொழில் முறைகளையும் இது அழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

கடியப்பட்டினத்தைப்போல் இனயம் பகுதியிலும் பாறைகள் அதிகமென்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுவரை இணையவெளியில் நமக்கு கிடைக்கும் தகவிலின் படி, TYPSA என்னும் பன்னாட்டு அமைப்பு தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வை நடத்தியிருக்கின்றது. [TYPSA-விற்கு டெல்லியிலும் அலுவலகம் இருக்கின்றது.] ஆனால் இவர்களின் ஆய்வறிக்கை மட்டும் எங்கும் இதுவரை வெளியாகவில்லை. மத்திய அரசு வெளியிட்டதாகவும் தகவலில்லை. குறைந்தபட்சம் எப்போது எங்கே இந்த ஆய்வு நடத்தப்பட்டதென்றாவது சொல்லவேண்டும். [கீழே கொடுத்திருக்கும் தலைப்பில் கொளச்சல் என்றிருக்கின்றது. ஏமாந்துவிடாதீர்கள். உள்ளே செய்தியில் ஆய்வறிக்கை இனயத்தில் நடத்தியதாகத்தான் இருக்கின்றது.]

இனயம் சார்ந்த குளச்சல் துறைமுகம் தமிழ்நாடு மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது. இனயம் துறைமுகம் குளச்சல் துறைமுகத்தை விரிவு படுத்தும் திட்டமென்றால் மாநில அரசு குளச்சல் துறைமுகத்தின் உரிமையை மத்திய அரசாங்கத்திற்கு கையளிக்கவேண்டும். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த வித அரசாணையையும் மாநில அரசு வெளியிடவில்லை.

2009-ல் ஜி. கே.வாசன் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது மாநில அரசிற்கு கொளச்சல் துறைமுகத்தை கையளிக்க எழுதிய கடிதத்திற்கு (PD 26013/2009 – MP dt: 21.07.2009) பதில் என்னவென்று தெரியவில்லை. எனவே இனயம் பகுதியில் மத்திய அரசு துறைமுகம் அமைக்கவேண்டுமென்றால் அது புதிய துறைமுகமாகத்தான் இருக்கமுடியும். ஆனால் மத்திய அரசு 21000 கோடிக்கான புதிய துறைமுக திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் அதற்கான அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டதா என்பது கேவிக்குறிதான்.

இந்திய அரசு தனது வளர்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக “சாகர் மாலை” என்னும் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கின்றது. துறைமுகம் சார்ந்த கடற்கரைகளின் வளச்சியினூடாக இந்தியாவின் வளர்ச்சி. இதற்காக பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடாகக்கொண்டு பழைய துறைமுகங்களை நவீனப்படுத்தவும், புதிய துறைமுகங்களை கட்டவும் முழுவீச்சில் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதிதான் இனயம் துறைமுகம். குளச்சல் துறைமுகத்தோடு தொடர்பில்லாத புதிய இனயம் துறைமுகம். இந்தியாவின் வளர்ச்சியில் மீனவர்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இனயம் துறைமுகத்தால் யாருக்கு என்ன லாபம் என்பதே மீனவர்களின் கேள்வியாக இருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்பு மலையாள பத்திரிகைகளில் செய்தியொன்று வந்தது. விஜிஞ்ஞம் துறைமுகத்தினால் கேரளாவிற்கு பொருளாதார ரீதியில் எந்த வித அனுகூலமுமில்லை. வல்லார்பாடம் துறைமுகத்திற்கு உண்டான கதிதான் விஜிஞ்ஞம் துறைமுகத்திற்கும் ஏற்படும் என்று ‘மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் திரு. இ. ஸ்ரீதரன் கூறியிருக்கின்றார்.

திரு. இ. ஸ்ரீதரன் இந்தியாவின் மிகச்சிறந்த பொறியாளர். மும்பைக்கும் மங்கலாபுரத்துக்கும் இடையிலான, இரண்டாயிரம் பாலங்களும் தொண்ணூறு சுரங்கங்களும் 740 கிலோமீட்டர் நீளமும் கொண்ட, மிகச்சிக்கலான பொறியியல் சவால்கள் கொண்ட கொங்கன் ரயில்திட்டத்தின் பிதாமகன்.

விஜிஞ்ஞம் துறைமுகத்தால் கேரளாவிற்கு பொருளாதார லாபமில்லையென்று இ.ஸ்ரீதரன் அவர்கள் சொல்வதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறியலாம். அவர் ஒருபடி மேலே சென்று கொச்சி வல்லார்பாடம் வர்த்தக துறைமுகத்தின் கதிதான் விஜிஞ்ஞம் துறைமுகத்திற்கும் ஏற்படும் என்றார். விழிஞ்ஞத்திற்கும் இனயத்திற்கும் அதிகமொன்றும் வித்தியாசமில்லை.

உண்மையில் இந்தியாவின் வளச்சிக்காகத்தான் இனயம் துறைமுகம் அமையவிருக்கின்றதென்றால், மீனவர்களின் வளர்ச்சியுடனான இந்தியாவின் வளச்சிதான் முக்கியமென்றால், மீனவர்களின் தேவை புதிய இனயம் வர்த்தக துறைமுகமல்ல. ஆழ்கடல் மற்றும் சுறா வேட்டையில் விற்பன்னர்களான தென்தமிழக கேரளக்கடற்கரை மீனவர்களுக்கு, குறிப்பாக தூத்தூர் கொல்லங்கோடு பகுதி மீனவர்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய மீன்பிடி துறைமுகம்தான் தேவை. இன்று இவர்கள் துறைமுகம் இல்லாத காரணத்தால் பக்கத்து மாநிலங்களில், சொந்த நாட்டில், அடிமைகள் போல் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். கொச்சி, நீண்டகரை, குஜராத்தில் இவர்களின் மீனை விற்ற கமிஷன் கொண்டு உருவான கோடீஸ்வரர்கள் ஏராளம்.

எனவே பலகோடி ரூபாய் செலவு செய்து வரத்தக துறைமுகம் கட்டுவதற்குப்பதிலாக பயன்படுத்தமுடியாமல், எதற்கும் பலனின்றிக்கிடக்கும் புதிதாக கட்டிய தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சரிசெய்து சற்று பெரிதாக்கி நவீனப்படுத்தினாலே போதும். மீனவர்கள் மட்டுமல்ல இனயம், தூத்தூர், கொல்லங்கோடு பகுதி சார்ந்த அனைத்து சமுதாய மக்களின் வாழ்க்கையும் பலமடங்கு மேம்படும்.

வல்லார்பாடம் துறைமுகத்தை மேம்படுத்துங்கள். பாவம் இனயத்தை விட்டுவிடுங்கள். மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். மாறாக, மீவலைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாதீர்கள்.

வரும் நவம்பர் 21-ம் நாள் உலக மீனவர் தினம். அன்று இனயம் துறைமுகத்திற்கு பதிலாக தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டத்தை அரசு அறிவித்தால் அதுவே மத்திய அரசு மீனவர்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

 

 [நாள்: நவம்பர் 18, 2015]
TYPSA has just finished the study commissioned by V. O. Chidambaranar Port Trust to assess the…
TYPSA.COM

திலேப்பியா

இடைப்பாடு கிராமத்தில் கடற்காற்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. கடலிருக்குமிடம் தெற்கு! சூரியன் உச்சியில் நிலைத்து மெதுவான அதிர்வுகளோடு தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கடலில்குளித்து கரையேறிய சிறுவர்கள் சுடுமணலில் உட்கார்ந்து தொடையிடுக்கில் சுடுமணலை வாரிவாரி வைத்து புதைந்தார்கள். கட்டுமரங்கள் மெதுவாக ஆழ்கடலிலிருந்து கரைநோக்கி உடைந்து சிதறிய கண்ணாடிச் சில்லுகளின்மேல் சேதாரமின்றி வழுவி வந்துகொண்டிருந்தது. சில வள்ளங்களை தலை நிமிர்ந்து மீனவர்கள் கடலில் நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.
ஒருசிறுவன் மயக்கம் தெளிந்து, “லேய், ராயூ வருதாம் பாரு”, என்று கூவியபடி பயந்து கடல் நோக்கி ஓடினான்.
மற்ற சிறுவர்கள் கண்திறப்பதற்க்குள், ராஜு அருகில் வந்துவிட்டிருந்தான். வந்தவன் முகத்திற்கும் ஓடிய சிறுவனின் அலறலுக்கும் எந்தவித சம்மந்தமும் இருக்கவில்லை. ராஜு சிறுவர்களைப் பார்த்து பல்காட்டி சிரித்தான். பல் முழுக்க பச்சைமஞ்சள். ஒரு சிறுவன் வந்தவனை வடக்குப்பக்கம் வந்து உட்காரச்சொல்வதற்கு சைகையால் மன்றாடினான். சிறுவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை. கையால் மூக்கை பொத்திக்கொண்டார்கள்.
ராஜு வந்து உட்கார்ந்ததும், கடற்கரையை ஒட்டியிருந்த முத்தம்மாளின் வீட்டின் முன் நின்றிருந்த தென்னை மரத்தில் உட்கார்ந்திருந்த காக்கை ஒன்று கலவரமாக கரைந்துவிட்டு ஓலை மாறி உட்கார்ந்தது. ஓலையில் கால்வழுக்கியதால் கரைந்து மீண்டும் ஓலை மாறியது.
வீட்டுத்திண்ணையில் நூல்முடித்துக்கொண்டிருந்த முத்தம்மை, காக்கைச் சத்தம்கேட்டு, “யாரு, புதிய விருந்து…?” என்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கடற்காற்று அதற்கேயுரிய வெம்மையோடு மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. ராஜுவைக் கண்டதும், வீட்டுமூலையில் வைத்திருந்த அலுமினிய சருவத்தை சும்மாட்டுத்துணியால் துடைத்துவைத்துவிட்டு, நேற்று சந்தையில் யாருக்காகவோ வாங்கிய ஒரு மாங்காயை சருவத்தில் எடுத்துப்போட்டுவிட்டு, கட்டுமரம் கரைக்கு பக்கத்தில் வருவதை மீண்டும் உறுதிசெய்துகொண்டு அது வரும் திசை நோக்கி, சும்மாட்டுத்துணியை சருவத்தில் போட்டுவிட்டு அதை இடுப்பில் அணைத்துக்கொண்டு நடந்தாள்.
ராஜு கடற்கரையின் எந்தப்பகுதியில் சென்று உட்கார்கின்றானோ அங்கே ஏதேனும் கட்டுமரம் கரையில் அணையவருகின்றது என்று அர்த்தம். கட்டுமரம் இல்லையென்றால் எங்கும் உட்காரமாட்டன். ஒன்று நடந்துகொண்டேயிருப்பான் அல்லது ஆற்றில் சென்று மீன்பிடிப்பான். இப்போதும்கூட தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டி இங்கே வந்து சேர்ந்திருந்தான்.
ராஜு சட்டை போட்டு நான் பார்த்ததில்லை. கறுத்த மிக மெல்லிய தேகம். உடல் முழுக்க வெள்ளை உப்புப் பொருக்கை பரவியிருந்தது. உடுத்தியிருக்கும் ஒரே லுங்கிதான் எப்போதும் அவனது மீன்போட்டுவைக்கும் கூடை.
ஒருசிறுவன் லுங்கியின் “கக்குமடியில்” மீன் இருக்கின்றதா என்று சைகையில் கேட்டான். இல்லையென்று கைமலர்த்தி தலையசைத்துச் சிரித்தபோது ஈறு சிவந்திருந்தது. நேற்றைய மீனின் செதில்கள் லுங்கி முழுக்க ஒட்டியிருந்தது. லுங்கி கறுப்பு மற்றும் மஞ்சளுக்கு இடைப்பட்ட அனைத்து நிறங்களையும் தாங்கி, இனிமேலும் அழுக்கை வாங்கும் திராணி இல்லாமலிருந்தது. கக்குமடியில் மீனில்லையென்றால் கட்டுமரமெதுவும் கரைக்கு வரவில்லை என்று அர்த்தம்.
கட்டுமரங்களின் மீன் விற்பனை செய்வதற்கு முன் தனக்குப் பிடித்தமான மீனை எடுத்துக்கொள்வான். அனைத்து கட்டுமரங்களும் அவனுக்குச் சொந்தமானதல்லவா!
பதின்ம வயது. சிறுவயதில் ராஜூ நன்றாகத்தானிருந்தான். வயது ஏற ஏற அவனில் சில மாற்றங்கள். தண்ணீரைக்கண்டால் அவ்வளவு எரிச்சல். ஆனால் மழையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்றுகொண்டிருப்பான்.
முத்தம்மா சிறுவர்களின் பக்கதில் சென்று, “லேய், ராயு…” என்றழைத்துவிட்டு சருவத்திலிருந்து மாங்காயை எடுத்துக் காட்டினாள். ராஜு “ஓ…” வென்று கத்திவிட்டு மாங்காயைத்தேடி எம்பிக்குதிதான். முத்தம்மை கராறாக, “ஆத்தியம் பல்லுதீட்டு. அப்பந்தான் மாங்காயத் தருவேன்”, என்றாள். ஒரு நாள் முத்தம்மை ராஜுவின் பின்பக்கமாக வந்து அவனது தலையில் கையில் கொண்டுவந்த தேங்காய் எண்ணையை தேய்த்த அன்றிலிருந்து சிறிது நாட்கள் இந்தப் பக்கம் வராமலிருந்தான்.
ராஜுவும் ஆர்வமாக உட்கார்ந்து, உலர்ந்த மணலை நீவி அதற்கு கீழிருந்த ஈரமான வண்டல் மண்ணை எடுத்து வாயில் போட்டு விரலால் பல்தீட்டினான். சிறிது நேரத்தில் வாய் முழுக்க சகதியில்லாத வெத்திலை பாக்கு. துப்பியபோது சிவப்பு நூல் வழிந்தது. கையால் துடைத்துவிட்டு மாங்காயை வாங்கி அதை சாப்பிட்டுக்கொண்டே கட்டுமரம் நோக்கி சிறுவர்களுடன் முத்தம்மையை பின்தொடர்ந்து சென்றான். வேறு சில வியாபாரிகளும் பெண்களும் அணைந்த கட்டுமரத்தின் பக்கதில் கூடினர்.
கட்டுமரத்திலிருந்து விற்பனைக்கு எடுத்துபோட்ட மீனைச் சுற்றி நின்றிருந்தவர்களைத் தள்ளிவிட்டு மீனைத்தேடி முன்னேறியபோது யாரோ ஒருவர் ஈரமணலை அவனது தலையில் வாரிப்போட்டார். அவனது சத்தத்தின் எதிரொலியில் கூட்டம் சற்று சிதறியது. பயத்தில் ஓடிய சிறுவர்களை விரட்டிக்கொண்டு ஓடினான். சிறுவர்கள் சிறிது தூரம் ஓடியதும் கடலில் குதித்தார்கள். சிறுவர்களைப் பார்த்து கோபத்தில் சத்தம் போட்டவனை கடல் அலை தன்னை தரையில் அறைந்து அவனை திருப்பித் திட்டியது. இவனும் விடவில்லை. இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டிருந்தார்காள். கோபம் தலைக்கேறிய அலை முடிவில் இவனது லுங்கியை நனைத்து இழுத்தது. இவன் பயத்தில் கத்திவிட்டு விலகி ஓடினான். கோபத்தின் உச்சியில் கையிலிருந்த மாங்காயை அலையை நோக்கி எறிந்தான். அது லாவகமாக அதனை வாங்கி அதிலிருந்து ரத்தத்தை உறுஞ்சிவிட்டு கரையில் மிச்சத்தை துப்பிவிட்டுச் சென்றது. ராஜுவின் சுயமரியாதை ஒப்புக்கொள்ளாததனால் அதை எடுக்க மனமின்றி மீன் விற்பனை செய்யும் இடத்தை நோக்கி திரும்பி நடந்தான்.
கூட்டதை வந்ததடைந்தபோது மீன் ஏலத்தில் முத்தம்மைக்கு கட்டுப்படியாகும் விலையில் மொத்த மீனும் கிடைக்கும் சாத்தியக்கூறு அதிகமாக இருந்தது. வந்தவன் கூட்டத்தை விலக்கி தனக்கான மீனை எடுத்தபோது “ஒருதரம்….ரெண்டுதரம்….மூணுதரம்” என்று ஏலம் போட்டவர் முத்தம்மை மீன் வாங்கியதான அத்தாட்சியைக் கொடுத்தார்.
ராஜு எடுத்தது ஒரு பெரிய “வேளாக்குட்டி கார” மீன். மொத்த விற்பனைத் தொகையில் ஐந்தில் ஒருபங்கு. “ஐயோ எனக்க செல்ல மோன அதத்தா.” என்று முத்தம்மை கெஞ்சினாள். ராஜுவுக்கு அலையோடுள்ள கோபம் மூக்கின் நுனில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. முத்தம்மையும் மற்றும் சிலரும் அந்த மீனை அவனிடமிருந்து பிடுங்க முயன்றபோது, பக்கதில் நின்ற முத்தம்மையின் இடது விலாவில் தனது வலது உலக்கையை இறக்கினான். முத்தம்மைக்கு முப்பது வருடம் கழிந்து மீண்டும் பிரசவ வலி. மூச்சுமுட்டி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உட்கார்திருந்தாள். கடல் அலை தன் சத்தத்தை பயத்தில் அடக்கியது.
முத்தம்மையின் பக்கத்தில் நின்றிருந்த ராஜு, மீனை அவளிடம் நீட்டியபோது அதை வாங்கிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தாள்.
கடலிலிருந்து ஒரு 200மீட்டர் தள்ளி வடக்குப்பக்கம் அனந்த விக்டோரியா மார்த்தாண்டம் கால்வாய் ஓடுகின்றது. இது மார்த்தாண்டவர்மாவினால் திருவனந்தபுரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் நீர்வழிப்போக்குவரத்திற்காக இருபதாம் நூற்றாண்டின் முடிவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த ஆறு திருவனந்தபுரத்திலிருந்து தேங்காய்ப்பட்டணம் வரை ஓடி பின்னர் தேங்காய்ப்பட்டணத்திலிருந்து கல்வீடுகளுக்கு கீழ் சில மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் வழியாக கன்னியாகுமரிவரை ஓடி உயிர்தப்புகின்றது என்ற நம்பிக்கையுமுண்டு!
எங்களூர் ஆற்றில் சுலோப்பியா என்று நாங்கள் அழைக்கும் திலேப்பியா என்னும் நன்னீர் மீன் அதிகமாக கிடைக்கும்.  முதுகில் முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிருக்கும். இந்த மீனின் பிறப்பிடம் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மீன்பிடித்த கலீலியக்கடல். அப்படியென்றால் கலீலியக்கடல் கடலில்லையா? அங்கிருந்து இந்தமீன் எவ்வாறு, புனித தோமா போல், மலபார் கரையை வந்தடைந்தது? அல்லது இந்தியாவில் இரண்டாவதாக வந்ததாகக் கருதப்படும், தோலுரிக்கப்பட்ட அப்போஸ்தலர் புனித பர்த்தலோமியோ என்னும் நத்தானியேல் கொண்டுவந்ததா? கிறிஸ்து இரண்டு மீனையும் இரண்டு அப்பத்தையும் பதினையாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள் ஒன்று. அந்த இரண்டு மீன்களும் உலர்ந்த அல்லது உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட திலேப்பியாக்கள் தானா? திலேப்பியாவை புனித பீட்டர் மீன் என்பார்கள் சிலர்.
ராஜு முத்தம்மாள் கொடுத்த காசில் சில தூண்டில்கள் மற்றும் கங்கூஸ் என்னும் நைலான் ரோளும் வாங்கிக்கொண்டு மிச்சத்தை தன்னுடன் வந்த சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களையும் கூட்டிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தான். கையில் ஒரு சிரு பிளாஸ்டிக் பையை எடுத்து வைத்துக்கொண்டான்.
போகும் வழியில் அத்துலுவாப்பாவின் சாயக்கடையின் பின்பக்கத்தில் சாக்கடை நீர் தேங்கிய பகுதியில் சென்று ஒரு சிறு கம்பினால் தோண்டி கையினால் நெழியும் மண்புழுவை எடுத்து பையில் போட்டான். ராஜுவின் பையிலிருந்த இடியாப்பத்திற்கு உயிரிருந்தது.
“லேய், மதி. பெண்ணுங்க குளிச்ச வருததுக்க முன்ன போலாம்”, ஒரு சிறுவன் சற்று தள்ளி நின்று ராஜுவிடம் சொன்னான்.
“ங்..ங்க்..” என்று இளித்து சிரித்துவிட்டு எழும்பி கையை உதறிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தான்.
சிறுவர்கள் ஆற்றை வந்தடைந்ததும் ஒரு பெண் கத்தினாள், “லேய், லேய்… போங்கல அங்ஙன. ஆத்திலி மீனிபிடிச்ச வருதானுவ. நிங்க அமமமாரு பெறேஞ்சா?”
திலேப்பியா மீன் குழந்தை பெற்ற பெண்களின் பத்திய உணவில் முக்கியமானதாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ராஜு சிரித்துவிட்டு கத்தினான், “நீ…நீ….பெத்…த.. ஓ….ஓ….”
மார்புக்கு மேல் லுங்கியை தூக்கிக்கட்டிய பெண்கள் சிறுவர்களை தாங்கள் குளிக்கும் துறையிலிருந்து விரட்டியடித்தனர்.
சிறுவர்கள் பெண்கள் குளிக்கும் துறைதாண்டி சிறிது தூரம் நீங்கிச் சென்றனர். பெண்கள் குளிக்கும் பகுதி தாண்டி ஆறு மிக சகதியாக இருந்தது. ஆற்றின் இரண்டு கரையிலும் தென்னைந்தொண்டுகள் பெரிய வலையில் போடப்பட்டு ஊறவைக்கப்பட்டிருந்தது. நன்கு ஊறியபிறகு இதனை அடித்து அதன் நாரை தனியாகப்பிரிது கயிறாக திரிப்பார்கள். இது பலகாலமாக ஒரு குறிப்பிட்ட இனமக்களால் செய்யப்படும் தொழில். இதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.
ஆற்றின் இருபக்கங்களிலும் தென்னை மரங்கள் நெருக்கமாக ஓங்கி வளர்ந்திருந்தது. சூரிய ஒளிக்கீற்றுகள் தென்னையின் இடைவெளி வழியாக ஊடுருவி வந்தது.
சிறுவர்கள் இருந்த பகுதியில் ஆறு கறுப்பாக ஓடியது. அவர்கள் அங்கே உட்கார்ந்து தூண்டிலை நைலான் ரோளின் நுனியில் கட்டி, தூண்டிலில் மண்புழுவை பிய்த்து கொருத்து ஆற்றில் வீசி மீன்பிடிக்கத் தொடிங்கினார்கள். கிடைக்கும் மீன்களை நுனியில் கட்டிட்ட ஈர்க்கிலை மீனின் வாயில் நுழைத்து செவுள்வழியாக கொருத்தெடுத்து மீன்மேல் மீனாக மாலைபோல் ஆக்கிக்கொண்டார்கள். திலேப்பியா மீன் மிகவும் கறுப்பாக வழுவழுப்பாக சேணி நாற்றத்துடனிருந்தது.
இரண்டு மூன்று மாலை மீன்கள் கிடைத்ததும் சிறுவர்கள் அதனை விற்பதற்காக பக்கத்து ஊர் மீன் கடைக்கு எடுத்துச் செல்வதை சந்தையிலிருந்து திரும்பி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முத்தம்மை கண்டாள். ராஜுவைக் காணாமல் திரும்பிப் பார்த்தபோது அவன் தனியாக மீன்பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வேறு யாரும் அவனுடன் இல்லை.
முத்தம்மாள் குளித்து கரையேறியபோது சில தவளைகள் சத்தமிட்டு உயிருக்குப் பயந்து சற்று தள்ளி கரையேறியது.
முத்தம்மாள் துணிமாற்றி சுத்தமாகக் கழுவிய ஒற்றைக்குரிசு வரைந்த சருவத்தை இடுப்பில் வைத்து நடக்கத் துவங்கியபோது ராஜுவின் “ம்..ம்ம்…மா…” என்ற அலறல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜு தேள் கொட்டியது போல், அலறலிட்டு ஓடினான். ஓடியவேகத்தில் தென்னையில் இடித்து விழுந்துவிட்டு மீண்டும் மீண்டும் எழும்பி உடலை வளைத்து ஓடினான். எம்பி எம்பிக் குதித்தான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் ஓடி தென்னையில் இடித்து கீழே விழுந்து மண்புழுபோல் ஊர்ந்தும் கடைசியில் எழும்பி ஓட சக்தியற்று தலையை மண்ணில் புதைத்து உருண்டுகொண்டிருந்தான்.
“எனக்க ஏசுவே, ஏனக்க ஏசுவே…” என்று பயத்தில் செய்வதறியாது முத்தம்மாள் முனகிக்கொண்டு பின்னர் வெறிவந்தவளாக, சருவத்தையும் பணத்தையும் தூரவீசிவிட்டு, ராஜுவை நோக்கி ஓடினாள். முந்தானை அவிழ அவிழ அதைப் பிடித்துக்கொண்டு ஓடி ராஜுவின் பக்கத்தில் சென்றபோது அவன் பேச்சில்லாமல் கிடந்தான். தலையிலிருந்தும் வாயிலிலுந்தும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. உடல் முழுக்க சிராய்ப்பு.
முத்தம்மாள் சுருண்டு அடங்கிய ராஜுவின் தலையை தன் மடியில் தூக்கிவைத்து, வாயில் கையிட்டு எதையோ தேடினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, திலேப்பியாவின் சில சதைத் துண்டுகள் இரத்தத்தோடு கையில் வந்தது.

எரியும் பனிக்கட்டி

[மீத்தேன் பிரச்சனை துவங்குவதற்கு முன்பு 2012 எழுதிய ஒரு எளிய கட்டுரை]
ஒருபக்கம் இலங்கை கடற்படை, மறுபக்கம் அணுவுலை அது போக ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமையை பன்னாட்டு மீன்பிடி கம்பனிகளுக்கும் தாரை வார்த்து இந்திய மீனவனில் சங்கை நெரித்து குப்புறத் தள்ளியாகி விட்டது. இன்னும் என்ன என்று யோசித்த போது இது சிக்கியது. எரியும் பனிக்கட்டி!
புவியின் வெப்பத்தை சமன் செய்வதில் புவி வளிமண்டலத்திலிருக்கும் பசுமைக்குடில் வாயுக்களான மீத்தேன், கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் ஓசோன் போன்றவை பெரும்பங்காற்றுகின்றன. இந்த வாயுக்களால், புவியின் சராசரி வெப்பநிலை 33% செல்சியஸ் உயர்ந்து, தற்போது 16° செல்சியஸ் அளவாக இருக்கின்றது. இந்த வாயுக்கள் இல்லையெனில், புவி வெப்பனிலை -20° செல்சியஸாக இருந்திருக்கும். பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவற்றின் வெப்பம் உமிழும் தன்மை காரணமாக, புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்ப்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு, வளிமண்டலத்தின் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கணிசமாக உயர ஆரம்பித்து இன்று விரிந்து பரவி பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு என்று மனித இனத்திற்கு சவாலாக வந்து நிற்கின்றது. இதில் நாம் பயன்படுத்தும் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப்பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு.
இது ஒருபுறமிருக்கு, மனிதனின் இயற்க்கை எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து, அனைத்து நாடுகளும் ஒரு சில எண்ணை வளமிக்க வளைகுடா நாடுகளையே நம்பியிருக்கின்றது. பயன்பாடு காரணமாக, எண்ணைவளமும் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றது. தற்போதைய தேவையை கருத்தில் கொண்டால், பூமியின் எண்ணைவள கையிருப்பு இன்னும் 40 வருடங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு பூமித்தாய், போண்டியாகிவிடுவாள் என்று கருதி ஒவ்வொரு நாடும் தங்களால் முடிந்த மட்டும் சேமிக்கத் துவங்கியது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. குறிப்பாக, பெட்ரோலியப் பொருகளை ஒரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்க்கு கடல்வழி மற்றும் தரை மாற்க்கமாக கொண்டுசெல்வது மிக சவாலாகவே உள்ளது. இன்னொருபக்கம், சில நாடுகள் கார்பன்-டை-ஆக்ஸைட் வாவுவை குறைவாக வெளிவிடும் மாற்று எரிவாயு பக்கமும் தங்கள் ஆராய்ச்சியை முடுக்கி விட்டது.
ஆனால், குறிப்பாக, அமெரிக்கா தன் கவனத்தை இன்னொரு பக்கம் திருப்பியது. 1823-ம் வருடம் ஹம்ப்ரி டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் அவரது ஆய்வுக்கூட உதவியாளர் மைக்கேல் ஃபாரடேவுக்கு கண்டுபிடிப்புக்கான பெருமையை பெற்றுக் கொடுத்த, மீத்தேன் ஹைட்ரேட் (அல்லது எரியும் பனிக்கட்டி) தங்கள் கடற்கரை படுகையில் இருக்குமா என்பதை கண்டறிய 1982லிருந்து 1992க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டது. ஆனால் 1990க்குப் பிறகு, இந்தியாவும் ஜப்பானுமே மீத்தேன் ஹைட்ரேட் ஆரய்ச்சியில் முன்னிலையிலிருந்த்தது.
இப்போது அமெரிக்கா, கனடா, ஜப்பான், சைனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கடற்கரைகளில் 1000 அடி ஆழத்திற்கு கீழ் மீத்தேன் ஹைட்ரேட் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையிலும், அந்தமானின் கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் அரபிக்கடலோரம் நெடுகிலும் மீத்தேன் ஹைட்ரேட் இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த குறிப்பிட்ட பகுதியில் கண்டறியப்பட்டவை தோராயமாக 5 ட்ரில்லியன் கனமீட்டர்கள்.
மீத்தேன் ஹைட்ரேட் அல்லது மீத்தேன் கிளாத்ரேட் என்பது இயற்கை எரிவாயுவான, மீத்தேன் வாயுவின் அணுக்கள் உயர் அழுத்தம் மற்றும் மிகக் குறைவான வெப்பனிலை காரணமாக தண்ணீர் மூலக்கூறிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களோடு இணந்து பனிக்கட்டி வடிவில் உறைந்திருக்கும் ஒரு கரிம வேதிப்பொருள். ஒரு கனமீட்டர் மீத்தேன் ஹைட்ரேட்டில் 164 கனமீட்டர் அளவுக்கு மீத்தேன் இயற்கை எரிவாயு அடைந்திருக்கும். இதை வெட்டியெடுத்து கொண்டுசெல்வதும் சுலபம். அதாவது, 164 டேங்கர் லாரி கொள்ளளவுள்ள மீத்தேன் வாயுவை ஒரு லாரியில் திணிப்பதுபோல.
கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் வாயுவுக்கு 21 மடங்கு வெப்பத்தை தக்கவைக்கும் திறன் அதிகம். அதுபோல் மீத்தேன் வாயு காற்றைவிட கனம் குறைவாதலால், இது மிக விரைவாக, மீவெளிமண்டலத்தில் சென்று தங்கிவிடும். இதன் ஆயுட்காலம் 10லிந்து 20 வருடங்கள். ஆனால், கார்பன்-டை-ஆக்சைடின் ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள்.
கடலாழத்திலிருக்கும் மீத்தேன் படிகம் எப்போதும் கடல்தளத்தை நிலயற்றதாக வைத்திருக்கும். சில இடங்களில், எரிவாயுவிற்காக, கடலில் துளையிடும்போது மீத்தேன் படிகம் அகப்படுவதுமுண்டு. அவ்வாறு எதிர்பாராத விதமாக அல்லது மீத்தேன் படிகத்தையே துளையிட்டு எடுக்கும்போது ஏற்படும் விபத்து காரணமாக மீத்தேன் வெளிப்பட்டு மீவளிமண்டலத்தில் தங்கி புவியின் வெப்பனிலையை விரைவாக உயர்த்திவிடும்.அவ்வாறு வெளியேறும்போது அல்லது வெட்டியெடுக்கும்போது கடலாழத்தில் ஏற்படும் பள்ளம் காரணமாக, நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட வய்ப்புகள் அதிகம். வளிமண்டலத்தில் இருப்பதைபோல் 3000 மடங்கு மீத்தேன் மீத்தேன் படிகமாக உறைந்திருக்கின்றது. இதில் சிறு கூறு வளிமண்டலத்தில் கலந்தால்கூட தட்பவெப்பனிலையை வெகுவாக பாதித்துவிடும்.
இப்போதைய பூமியின் இயற்கை எரிவாவுவின் கையிருப்பு சுமார் 368 ட்ரில்லியன் கன மீட்டர். ஆனால், தற்போது மதிப்பிடப்பட்டுள்ள, நிலத்தடியில் படிந்திருக்கும் மீத்தேன் ஹைட்ரேட்டின் அளவு 2,800 ட்ரில்லியன் கன மீட்டரிலிருந்து 8.5 மில்லியன் ட்ரில்லியன் கன மீட்டர்கள். எனவே அனைத்து நாடுகளும் மீத்தேன் ஹைட்ரேட் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியதில் ஆச்சரியமில்லை.
சுடு நீரை படிகத்தில் செலுத்தியோ அல்லது எரிசாராயம் என்னும் மெத்தனாலுடன் வேதிவினையாற்றியோ மீத்தேனை பிரித்தெடுக்கலாம். இருப்பினும் மீத்தேன் படிகத்தின் அழுத்தத்தைக் குறைத்து, படிகத்திலிருந்து மீத்தேனை பிரித்தெடுப்பதே மிகசிறந்த முறையாக கருதப்படுகின்றது. மீத்தேன் படிகம் இருக்கும் பகுதியில் துளையிட்டு, அதன் அழுத்து வெளிப்படும் மீத்தேனை குழாய் வழியாக வெளியிலெடுக்கப்படுகின்றது.
பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் திடீரென்று மூழ்குவது மற்றும் விமானங்கள் காணாமலாவது, அந்த பகுதியில் உறைந்திருக்கும் மீத்தேன் ஹைட்ரேட் அங்கு ஏற்ப்படும் நில அதிர்ச்சி காரணமாக மீத்தேன் வடிவில் வெளிவருவதானால் என்ற ஒரு கருத்துண்டு. ஆனால், இதை பல அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். எனினும், பெர்முடா முக்கோணத்தின் புதிருக்கு மீத்தேன் ஹைட்ரேட்டின் பங்கும் கண்சமாக உண்டு என்பதில் ஐயமில்லை.
இன்னும் சில வருடங்களில், கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை வெட்டியெடுப்பது போல் கடற்கரை ஆழத்திலிருந்து எரியும் பனிக்கட்டியை வெட்டியெடுப்பதைக் காணலாம். இந்தியாவில், ஆழ்துளையிட்டு பூமித்தாயின் கருங்குருதியை உறுஞ்சிக்குடித்து மிச்சத்திற்கு விலை நிர்ணயிக்கும் பொறுப்பு சில தனியார் எண்ணை நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தனை டன் வெட்டியெடுத்தார்களென்று கணக்கிருக்குமா?
கூடங்குளம் அணுமின் நிலயம் அமைந்திருக்கும், கடல்பகுதியின் ஆழத்தில் மீத்தேன் படிகம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்வது யார்? அணுவுலைகளுக்கிருப்பதுபோல், மீத்தேன் படிகத்திற்க்கும் ஏதேனும் வரைமுறைகள் இருக்கின்றதா? யார் கண்காணிப்பது?
ஜப்பான், இப்போது தனது அனைத்து அணுவுலைகளின் பயன்பாட்டையும் நிறுத்திவிட்டு, தனது கடலாழத்திலுள்ள மீத்தேன் ஹைட்ரேட்டை வெட்டியெடுக்க முயற்சியை துவங்கியுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை இல்லையெனில், இன்னும் ஒரு புஃகுஷிமா போன்ற போன்ற பேரிடரை அது சந்திக்க வாய்ப்புகள் அதிகம்.
அப்படியென்றால் நாம் ஜப்பானுக்கு சளைத்தவர்களா?
இந்தியா தனது கடற்கரையை ஒரு கிலோமீட்டர் அளவிற்கு உள்ளுக்குள் சுருக்கினாலே போதும், இந்தியா 2020-ல் வல்லரசாவது உறுதி.

துறைவன் – புத்தகம் என் பார்வையில்

[மரிய ஜாண், பூத்துறை எழுதியது.]
நூலின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆண்டனிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படிக்கும்போத 20/25 வருடங்களுக்கு முன்பு அழைத்து செல்கிறது.    இரையுமன்துறை  முதல் நீரோடி வரை உள்ள 8 கிராமங்களும் தங்களது தனிதன்மை கொண்ட மொழியால் வேறுபட்டு உள்ளன. இதுபோல் வேறு எங்குமே காண முடியாது என எண்ணுகிறேன். நமது வட்டார மொழியை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். நமது அடுத்த தலைமுறை இந்த வட்டார மொழிகளை இது போன்ற ஒருசில புத்தகங்களில் மட்டும் தான் பார்த்து தெரிந்து கொள்ள இயலும் என நம்புகிறேன்.
=======================
ஆழிச்சுழி
=======================
ஆனியாடி இடிகரை மற்றும் மரம்புடி தொழிலை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

“போ…போ…”

“போ…ல…போ…ல…”

“கீளாட்டுபோ…கீளாட்டுபோ… ”

“மலத்துலே…மலத்துலே…”

“தொளா…தொளா…”

“தொளா…ல    தொளா…ல”

“கீளாட்டு தொளா…கீளாட்டு தொளா…”

இந்த சத்தத்தை வைத்தே வீட்டில் இருக்கும் பெண்களும், பெரியவர்களும் மரம் கடல் தாண்டி சென்றதையும், கடல் அடித்து கரை திரும்பியதையும் கூறுவார்கள்.

மரம்புடியாளி மரம் புறப்பட்ட பிறகு அடுத்த மரத்தை தேடி ஓடும் காட்சி, யுத்தகளத்தில் போர் வீரர்கள் ஓடுவதை போல தோன்றும். சிறு வயதில் கடற்கரையில் நின்று மரம் புறப்படும் காட்சியை பார்த்ததை,  இப்பொது நினைக்கும் போது ஆங்கில action திரைப்படம் பார்த்தது போல் ஒரு உணர்வு.

ஆனியாடி மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் முன்பே சீலாந்தி பட்டை போட்டு கொதிக்க கொதிக்க சுடு தண்ணி வீட்டின் முன்பு பெரிய பானைகளில் காச்சுவர்கள். இதற்காகவே எனது ஆத்தாவால்(பாட்டியால்) எங்களது வீட்டின் முன்பு ஒரு சீலாந்தி மரம் வளர்க்கபட்டது.
முழுவதும் படிக்க: http://www.mariajohnpoothurai.blogspot.com/2016/01/blog-post.html

இலங்கிறும் பரப்பின் எறி சுறா நீக்கி…

[துறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ்]

மகிழ்வதற்கான தருணமிது. தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், நெய்தலே அதன் வீரத்தை, விவேகத்தை, வாழ்க்கைக்கான போராட்டத்தை, கடலாடும் வித்தையை அகவிழி திறந்து பேச ஆரம்பித்திருக்கிறது. வரலற்றுக் காலந் தொட்டு இன்று வரையிலான வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை துறைவன் என்ற பதிவின் மூலம் ஒருசேர அள்ள முயன்ற தம்பி கிறிஸ்டோபர் ஆன்றனியின் முயற்சியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும் படிக்க: http://padhaakai.com/2016/01/10/துறைவன்-நாவல்-முன்னுரை-ஜ/

ஒரு ரசனை…

[துறைவனுக்கு மதிப்பிற்குரிய பாதர் பங்கி எழுதிய அணிந்துரை]

‘நீரின்றி அமையாது உலகம்’ என்பதுபோல் உணவின்றி அமையாது உயிர். உணவுக்கு உழவு எவ்வளவு அவசியம் என்பதையுணர்ந்த வள்ளுவர் கூற்றை பாருங்கள்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு பின் செல்வர்.’ ஒருவேளை உழவுக்கு முன்னரே மனிதன் கரையில் மிருகங்களை வேட்டையாடியும், நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்தும், பழங்களை பறித்தும், கிழங்குகளை தோண்டியெடுத்தும் உணவு தேடியிருக்கவேண்டும்.

உணவில் புரதச்சத்தின் தேவையை மீன்போல் மற்றெதுவும் சுலபமாகவும் சுத்தமாகவும் தந்திருக்காது. நமது இன்றைய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் அன்னிய செலவாணியின் அவசியம் யாரும் சொல்லி நாம் தெரிந்துகொள்ள தேவையில்லை. அதை கணிசமான அளவுக்கு கொணர்வதில் மீன் ஏற்றுமதி அளிக்கும் பங்கு மிக முக்கியமானது.

இந்த மீனை கரைசேர்ப்பதற்கு கணிக்க முடியாத கடலின் அலைகளை, அதன் சீற்றத்தை, மற்று மாறுதல்களை மீனவர்கள் உயிரை பணையம் வைத்து போராடிக்கடந்து பாடுபடவேண்டியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் மீனவர்கள் ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படியே தூண்டில்போட்டு சுறா வேட்டை நடத்துகின்றனர். இதற்கு இணையாக/ நிகராக உலகில் வேறு யாரும் இல்லை எனும் சிறப்பு இவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

மட்டுமின்றி கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை என்ன, ஆகாயப்படைகூட கண்ணயரலாம்; ஆனால், கண்ணயராமல் கடலிலேயே விழித்திருந்து மீன் பிடிக்கும் இம்மக்களை கண்மூடி நம்பலாம். அவர்களை தாண்டி யாரும் நம் எல்லைக்குள் நுழைய முடியாது.

இத்தகைய மீனவர்களை வரலாறு ‘படைத்தவர்கள்’ மறந்தனர். இதைப்பற்றி கிறிஸ்டோபர் ஆன்றணி இந்த புதினத்தில் ஆதங்கப்படுவதை காணலாம். இலக்கிய படைப்பாளிகளும் இவர்களை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இந்த குறை அண்மைக்காலமாக நிவர்த்திசெய்யப்படுவதை பார்க்கிறோம், குறிப்பாக தேசிய விருதுவரை வாங்கிய ஜோ டி’க்ரூசினுடைய ‘கொற்கை’ போன்ற படைப்புகளினூடே. அந்த வரிசையில் அரபிக்கடலோர, கேரளா மாநில எல்லைக்கு அருகாமையில் மலையாள சுவையுள்ள தமிழ் பேசும் ஒரு கிராமத்தின் கதையை, அதன் அனைத்து கோணங்களினின்றும் பார்த்து மிகுந்த அழகியல், அறிவியல் ரசனையோடு நயம்பட சொல்லும் பெருமை கிறிஸ்டோபர் ஆன்றணிக்கே உரித்தானது.

படத்தலோமி எனும் மிகச் சாதாரணமான ஒரு மீனவனை நாயகனாக்கி இந்த கிராம சரித்திர புதினம் படைத்தது அருமையிலும் அருமையே. தாங்கள் இன்றளவும் நம்பிய கிறிஸ்தவம்/ கத்தோலிக்கம் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தங்களுக்கு வெளி உலகை காட்டாமல், கல்வி புகட்டாமல் தங்களை உண்மையிலேயே வளரவிடாமல் வைத்திருப்பதன் ஆதங்கத்தை ‘எல்லோருக்க பேரும் ‘அடிமையும்’ ‘தாசனும்’ தான். எத்தனை காலந்தான் அடிமையாட்டு இருக்கப்போறோம்?’ என்று தாசன் எனும் நீதி, நேர்மைக்கு இலக்கணமான, நீண்டகால பஞ்சாயத்து தலைவரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த நாவல் களம்/அரங்கு 1880-களிலேயே மதத்தலைமைக்கு ‘ஆமேன்’ மட்டும் சொல்லாமல், தேவையானபோது கேள்வி கேட்கவும் (வள்ளவிளை அல்கந்தர்), அவசியமென்றபோது புரட்சிக்கும் துணிந்த கிராமம் என்பதை பெருமையோடு மட்டுமே நினைக்கத் தூண்டுகிறது. நாவல் காலத்தில் கோயிலின் அருகாமையிலேயே கம்யூனிஸக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது இந்த கிராமம்! அரசியல் வேறுபாடுகளிருந்தபோதும் ஊர் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாக்கும் தலைமையும் அன்றிருந்ததை இன்றைய தலைமை நினைத்து வெட்கப்படவேண்டும், திருந்தவேண்டும்.

மீண்டும், திருவிதாங்கூர் சரித்திரவுமாக இந்த மக்களுக்குள்ள உறவை, ‘எட்டுவீட்டு பிள்ளை’மார் எனும் தம்பிகளின் துரோக செயல்களும், அதற்கு தண்டனையாக அவர்களை கொன்றதும், அவர்களது பெண்களை கடற்கரைகளில் கைவிட்டுசென்றபோது அவர்களை இந்த மக்கள் (மணக்கரம் நீட்டி) ஏற்றுக்கொண்டதும், குளச்சல் போரின்போது இந்த மக்களின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற வீரசூர ஈடுபாட்டாலும் கிடைத்த வெற்றியும் எல்லாம் வரலாறாக சொல்லிப்போகிறார் கிறிஸ்டோபர்.

தங்களது பெண்களை இழிவுபடுத்தி எழுதியதென்று நினைத்த புத்தகத்தையே கொளுத்திய தன்மானத்தை என்னென்பது! மற்றபடி இம்மக்கள் புத்தகங்களை நேசித்தார்கள், வாசித்தார்கள் என்பது இன்று நேற்றல்ல, 1948 முதலே நூலகம் அமைத்து, அதற்கு அரசு உதவியும் பெற்றார்கள் என்பதுவும் பெருமைப்படவேண்டிய செய்தியாகத் தருகிறார்.

மேலும் முக்குவன் என்ற பெயரையே அலசுகிறார் ஆசிரியர்… முடிவில் ‘துறைவன்’ என்பதையே இந்த நாவலின் பெயராக்கியதும் பாராட்டுக்குரியதே. வரலாற்றைப்பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை சொல்லிப்போகிறார்: ‘ஜெயிச்சவன் எழுதிவச்சதுதான் வரலாறு, கள்ள வரலாறு’. ‘எரிப்போம் அந்த தவறான வரலாற்றை… நாமே எழுதுவோம் நம்ம வரலாற்றை’ எனும் சூளுரை விடுக்கின்றார் இந்த மக்களுக்கு.

மீனவர் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை ‘இரவில் படகு என்பது மிதக்கும் கல்லறை’ எனும் கூற்றால் உலகிற்கு சொல்லித்தருகின்றார். இதுகூட இன்றைய தொழில் நுட்ப சூழலிலும் நடக்கின்றதே என்பது கவலைக்கிடமானது. பரம்பரை தொழில் நுட்பத்தோடு சுறா வேட்டையில் இறங்கும் இம்மக்களின் ‘நெஞ்சுர’த்தை ஒரு அதிகாரமாக்கியிருக்கின்றார்!

‘ஆய்’ அரச பரம்பரை பற்றி, அதன் தலைநகரமே நமது பக்கத்து ஊரான விழிஞ்ஞம் என்ற தகவலைத்தருவதும், இந்த நாட்டிற்கும் சாலமன் அரசரின் இஸ்ராயேல் நாட்டிற்குமிடேயே நடந்த ‘குருமிளகு’ எனப்படும் நல்லமிளகு போன்ற வாசனைப்போருட்களின் வர்த்தகம் நடந்ததையும், வள்ளவிளை போன்ற ஊர்களின் பெயர்க்காரணங்களையும் சொல்வதும், இவர் இதற்காக எவ்வளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

“தாயக்கூறு…தருமக்கூறு…/ பித்தளபித்தள சேரச்சேர/ ரொட்டிக்கு ரொட்டிக்கு என்னப்பளம்… வாளப்பளம்…/ வாளப்பளத்துக்க தோலக்கடி…தட்டில கஞ்சிய…/ பிளா… பிளா… எல்லாம் பிளா…” எனும் சிறார் விளையாட்டு பாடல் மற்றும் மீனவர்கள் வேலைப்பளுவை குறைக்க பாடும் ‘ஏல’ எனப்படும் கீழ்வரும்: “கொண்டையிலே பூவும்சூடி/ கோயிலுக்கு போற பெண்ணே/ அள்ளிவச்ச கொண்டையிலே/ நுள்ளிவச்சா ஆகாதோ” மற்றும் குழுக்களாக பாடும் “பண்டாரம் பரதேசி/ நான் தாந்த பணமெங்கே/ எந்த பணம், ஏது பணம்/ மாதாக் கோவிலில் தந்த பணம்” போன்ற பாடல்களையும் தந்து இன்றைய தலைமுறைக்கு ஒருபோதும் திருப்பிக்கிடைக்க வாய்ப்பில்லாத அரிய பாரம்பரியங்களை தந்ததும் பாராட்டுக்குரியதே…

அல்கந்தர் எனும் வீர நாயகன் புரட்சி கதாபாத்திரமாக வருவது அருமையே. அவர் தம் மக்களின் உரிமைக்காக, சுயமரியாதைக்காக மதத் தலைமையோடு நடத்தும் போராட்டம், நீதி தேடி நீதிமன்றங்களுக்கும், தேவைப்பட்டபோது மேல்முறையீடுக்கும் துணிந்ததும் நம்மவர்கள் எப்படியெல்லாம் திறம்பட வாழ்ந்தார்கள் என்பதன் பெருமைக்குரிய எடுத்துக்காட்டே. இந்த ‘மாவீரன்’ கூற்றை கேளுங்கள்: ‘சிலுவையைத் தவிர கத்தோலிக்கம் இந்த மீனவ மக்களுக்கு தந்தது என்ன?’

‘வானம் மழை வடிவில் கடலில் இறங்கிகொண்டிருந்த’தைப்போன்று வாழ்வும் வளமும் அறிவு வடிவில், அபிமான வடிவில் நம் மக்களின் உள்ளமெனும் கடலிலும் இறங்கவேண்டும், அது சங்கில் தானாகவே முழங்கும் ‘ஓம்’ எனும் சத்தம்போல் நமது சமூகத்திலும் முழங்கவேண்டுமென விழைகிறேன். அதற்கு கிறிஸ்டோபர் ஆன்றணியின் ‘துறைவன்’ ஒரு நிமித்தமாகட்டும். இவரைத் தொடர்ந்துவரும் எழுத்தாளர்களும் இத்தகைய இலக்கிய படைப்புக்களை தந்து தமிழ் மொழிக்கும் நம் மக்களுக்கும் சேவை செய்து செழிக்கவைக்க வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள்..! பாராட்டுக்கள்.!! வணக்கங்கள்!!!

(வழக்குரைஞர்) பணி. பங்கிராஸ் அருளப்பன்

(திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், வஞ்சியூர்)

குருக்கள் நல வாரிய தலைவர் மற்றும் செனட் ஆப் ப்ரீஸ்ட்ஸ் செயலர்,

திருவனந்தபுரம் இலத்தீன் உயர் மறைமாவட்டம்,

20.09.2015

http://antharankam.blogspot.com/2015/09/blog-post.html

துறைவன் – சாகர் இரயும்மன்துறை

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சார்ந்தவர் கிரிஸ்டோபர் ஆன்டணி ! இவர் தான் அனுபவித்த கடற்கரை கிராமத்து வாழ்க்கையையும் , கடற்கரையில் சொல்லி கேட்ட கதைகளையும் ஒன்றிணைத்து ‘துறைவன் ‘ எனும் நாவலை படைத்துள்ளார். இதுவரை வந்த கடலோர நாவல்களில் ஐயத்திர்க்கிடமின்றி ஆழிசூழ் உலகுதான் சிறந்தது . துறைமுகம் ஒரு பெரும்படைப்பே . அவ்விரு ஆக்கங்களுக்கும் அனைத்து வகையிலும் நிகராக நிற்கும் படைப்பு இது . தமிழுக்கு ஒரு கொடை . . என துறைவன் நாவலை விமர்சித்துள்ளார் ‪#‎ஜெயமோகன்‬ இதற்குமேல் நான் என்ன கூறுவது ?
இந்த நூல் நாம் அனைவரும் வாங்கி படித்து கொண்டாட வேண்டிய பெரும் பொக்கிஷம். நம் சகோதரர் இன்னும் பல நூல் எழுதி நம் மீனவ சமூகத்திர்க்கும், தமிழ் இலக்கியத்திர்க்கும் பெருமை சேர்க்க வேண்டும் .!
வாழ்த்துக்கள் ! ! !