சில அரசியல் தலைவர்கள் கட்சி, ஜாதி, மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானவராக, எளிய மக்களில் ஒருவராக இருப்பார்கள். கன்னியாகுமரியைப் பொறுத்தவரை அவ்வாறு பல நேர்மையான அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். தற்போது கம்மூனிஸ்டு கட்சியில் திருமதி லீமாரோஸ், பிஜேபியில் பொன்னர் என்னும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள். இதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கடற்கரை மக்கள் ஏதேனும் உதவிக்கு சென்றாலும் அவரால் முடிந்ததை அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்திருக்கின்றார். ஆனாலும் சிலநேரம் அரசியல் அழுத்தங்கள் நமது தனமனித நேர்மைக்கு எதிராகவே அமைந்துவிடும்.
மீனவர்களின் வளர்ச்சிக்காக இனயம் கடற்கரை கிராமத்தில் ஒரு உலகத்தரம் வாய்ந்த துறைமுகம் அமைக்கவிருப்பதாக சொல்லும் பொன்னரின் பேட்டியை ஒரு பத்திரிகையின் ஓர் மூலையில் கண்டேன். இதன் திட்ட மதிப்பு 21000 கோடி ரூபாய். “இருபத்தோரு ஆயிரம் கோடி ரூபாய்”. ஆனால் இந்த திட்டத்தை இரகசியமாக செயல்படுத்துவதுதான் சந்தேகத்தை எழுப்புகின்றது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது.
இனயம் துறைமுக திட்டம் குறித்த எந்தவித ஆவணங்களும் பொதுவெளியில் கிடைக்கவில்லை. ஏன், இது கூடங்குளம் அணுவுலையை விட தேசிய பாதுகாப்பு சார்ந்த இரகசியத்திட்டமா? எதற்கு இந்த அவசரம்? டெண்டர் எப்போது விட்டீர்கள்? அதற்கு முன் துறைமுகத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை எங்கே? அதை யார் நடத்தினார்கள்? மக்களின் கருத்துக்களை கேட்டீர்களா? மக்கள் செறிவுள்ள இனயம் மக்களை ஏங்கே குடியமர்த்துவீர்கள்? அவ்வாறு குடியமர்த்தும்போது கடலை நம்பியிருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா?
500 ஏக்கர் கடல் பரப்பை மண்மூடி நிலப்பரப்பாக்கவேண்டுமென்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லையா? மணலை எங்கிருந்து கொண்டுவருவீர்கள்? அதை கடற்கரையிலிருந்தே எடுத்தால் மணிலின் அடியில் படிந்திருக்கும் உயர் கதிர்வீச்சு தனிமங்களால் புற்றுநோய் பாதிப்பு, மணவாளக்குறிச்சி மணல் ஆலை கடற்கரையில் ஏற்படுத்தும் புற்றுநோயை இன்னும் அதிகமாகாதா? பாறைகள் அதிகமுள்ள இனயம் கடலில் மீன்கள் அதிகமாக இருக்கும் பாருகள் அழிந்துவிடாதா? இதனால் ஒட்டுமொத்த மீனவமக்களுக்கும் பாதிப்பில்லையா?
கடற்கரையில் ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு அலைத்தடுப்பு அமைக்கும்போது மீனவர்களின் கரமடி, தட்டுமடி, கச்சாவலை போன்ற பாரம்பரிய தொழில்கள் அழிந்துவிடாதா? 500 ஏக்கர் கடல்பரப்பை மணலால் மூடும்போதும், நீண்ட தூரத்திற்கு அலைத்தடுப்பு அமைக்கும்போது பல கிராமங்கள் கடலரிப்பால் அழிந்துவிடாதா?
1500 ஏக்கர் நிலத்தை கரையிலிருந்து கையகப்படுத்தும்போது அதில் எந்தெந்த கிராமங்கள் உள்ளங்கியிருக்கும்? அவர்களுக்கு மாற்றுவழி என்ன? விழிஞ்சம் துறைமுகப்பகுதியை அதானிக்கு இனாமாக கொடுத்ததுபோல் இந்த கடற்கரைப்பகுதிகளை யாருக்கு இனாமாக? அல்லது எத்தனை வருட குத்தகைக்கு?
வல்லார்படம் துறைமுகத்தை 25% அளவிற்க்கு பயன்படுத்தாத நாம் விழிஞ்ச்சத்தில் துறைமுகம் அமைக்க முழுமூச்சில் இறங்கிவிட்டோம். இப்போது விஜிஞ்ச்சத்திலிருந்து 20மைல் தொலைவிலிருக்கும் இனையத்தில் இன்னொரு துறைமுகம் அமைப்பதால் என்ன லாபம்? மதர்ஷிப் என்னும் பெரிய சரக்குக்கப்பல்கள் வருவதற்கு கடலாழம் குறைந்தபட்சம் 20 மீட்டராவது இருக்கவேண்டும். இனயம் பகுதியில் 20மீட்டர் கடலாழம் எங்கிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து துவங்குகின்றது என்று தெரியுமா? 20மீட்டருக்கு கடலை ஆழப்படுத்தும்போது மீன்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லையா?
விழிஞ்சம் துறைமுகத்தால் 600 புதிய வேலை வாய்ப்புகளை மட்டுமே அடுத்த பத்து வருடங்களில் உருவாக்க முடியுமாம். இணையம் துறைமுகத்தால் எத்தனை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள்?
கொழும்பு, சிங்கப்பூர், துபாய் துறைமுகக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து மதர்ஷிப் என்னும் பெரிய கப்பல்களும் இனயும் துறைமுகத்தில் வந்துவிடுமா? அதற்கு தற்போதிருக்கும் கப்பல்களின் கூட்ட்மைப்பு எளிதில் அனுமதிக்குமா? அப்படி ஒரு கப்பல் வரவேண்டுமென்றால் அதற்கு நாம் கொடுக்கும் மானியம் என்ன? அதனால் நமது அரசாங்கத்திற்கு எத்தனை இழப்பு? கப்பல்களின் போக்குவரத்து அதிகரிக்கும்போது மீனவர்களுக்கு அதனால் பாதிப்பு அதிகமில்லையா? இப்போதே விசைப்படகுகளை கப்பல் இடிப்பதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமில்லையா? தினமும் கப்பல் ஏதேனும் ஒரு வளிவலையை அறுத்துவிட்டுத்தானே செல்கின்றது.
“அலை தாக்கம்” அறிக்கை தயார்செய்து விட்டீர்களா? கேரளக்கடற்கரையில் மே முதல் ஆகஸ்டு வரை அலைகளின் வீரியம் எப்படியென்று தெரியுமா? ஐமப்தடி உயரத்திற்கு அலைஎழுபி கடற்கரை வீடுகளை இடித்துத்தள்ளிவிடும் என்பதாவது தெரியுமா?
இப்போதே எளிதில் மீனவர்களை தீவிரவாதியென்று சுட்டுவிட்டு செல்கின்றான். அப்படியென்றால் கப்பல்தொகை பெருகும்போது?
விழிஞ்சம் துறைமுகப்பகுதிக்கு வெளியிலிருக்கும் பூவார் பகுதிமக்கள் தங்கள் வீட்டு பட்டாவிற்கு செல்லும்போது எப்போது கேட்டாலும் உங்கள் நிலத்தை துறைமுகத்திற்காக தரத்தயாராக இருக்கவேண்டும் என்னும் நிபந்தனையுடன் பட்டாகொடுப்பதுபோல் இனயம் பகுதிக்கு வெளியிலிருக்கும் ஊர்களுக்கும் மேற்சொன்ன பட்டா பிரச்சனை வராதா?
மீனவர்களின் இப்போதைய தேவை ஒரு சிறிய மீன்பிடி துறைமுகம். தூத்துர் கொல்லங்கோடு பகுதி மீனவர்கள் கேட்டதன்பேரில் தேங்காய்பட்டினத்தில் அதை நிறைவேற்றினீர்கள். இப்போது உங்களின் தவறான கட்டுமானத்தினால் தேங்காய்பட்டினம் துறைமுகத்தினுள் அலையடித்து அது பயன்படுத்த முடியாமல் கிடப்பது உங்களுக்கு தெரியுமா? அதை சரிசெய்ய துறைமுகம் கட்டுவதற்கு செலவான தொகைபோல் மூன்றுமடங்கு செலவுபிடிக்கும். அதற்கு எப்படியும் 150கோடிகள் மட்டும்தான். ஏன் தேங்காய்பட்டினம் துறைமுகத்தை முடிக்காமல் இனயம் துறைமுகத்திற்கான அவசம் என்ன?
இவை என் எளிய அறிவிற்கு தோன்றிய சில அடிப்படை கேள்விகள். கப்பல்தொழிலில் இருப்பவர்களுக்கு இன்னும் அதிகமாகவே தெரியும்.
இது வரும் தேர்தலுக்கான ஒரு ஸ்டண்ட் என்றால் தயவுசெய்து மீனவர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் தோற்றுவிடுவீர்கள். இல்லை இந்தியாவின் வளர்ச்சிக்காகதான் இந்த திட்டமென்றால் வெளிப்படையாக முதலிலிருந்தே துவங்குங்கள். ஆவணங்களை வெளியிடுங்கள். மீனவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒருபோதும் எதிரிகளல்ல.
அதிகாரவர்கம் எப்போதும் உலகை அழகியல் பார்வைகொண்டுதான் பார்க்கும்போலும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு. சசிதரூர். விழிஞ்சம் துறைமுகம் குறித்து என்டிடிவி-யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை “விழிஞ்சம் சோர்வான கடற்கரை கிராமம்” என்று துவங்கி “விஜிஞ்சம் கலங்கரை விளக்கத்திலிருந்து பார்க்கும்போது அடிவானம் சூரிய உதயத்தில் பிரகாசிக்கின்றது. துறைமுகம் கட்டிமுடித்தால் இந்த காட்சிபோல் வாய்ப்புகளும் அழகாக இருக்கும்”
ஆமாம், நீங்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து மாலை ஐந்துமணிக்கு கோட்டு சூட்டுடன் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். அங்கிருந்து கீழே இறங்கி வாருங்கள். எங்களில் ஒருவராக இருந்து எங்களின் கண்கொண்டு பாருங்கள். அப்போது தெரியும் ஒருவேளை உணவிற்காக காலை ஐந்து மணிக்கே கட்டுமரத்தில் சென்று அடிவானத்தில் மீன்பிடிக்கும் அவனது முதுகு வியர்வை காலை சூரிய உதயத்தில் ஒளிர்வதை.
[நாள்: செப்டம்பர் 16, 2015]