இனயம் துறைமுகம் – 6

உலகின் சயரோகம்

****

திறந்த வெளிக் கடலில் (Open Sea) துறைமுகம் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தியா இதுவரை தன்னிறைவு  அடையவில்லை. அதற்கான உண்மையான ஆய்வுகளும் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.  தென்மேற்கு பருவமழை (ஆனியாடி சீசன்) காலகட்டத்தில் இனயத்திற்கு பக்கத்திலிருக்கும் சிறிய மீன்பிடி துறைமுகங்களான முட்டம் மற்றும் தேங்காய்பட்டினம் துறைமுகங்களின் உட்புறம் அலையடிக்கின்றது. இதுதான் இன்றைய நமது ஆய்வு முடிவுகளின் தரம்.
தென்மேற்கு பருவமழை குறித்த அலெக்ஸ்சாண்டர் ஃரேட்டர் (Alexander Frater) எழுதிய ‘சேசிங் தி மன்சூன்’ (Chasing the Monsoon) புத்தகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்திய நிலப்பரப்பு பல மில்லியன் வருடங்களாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆசிய நிலத்தட்டுடன் மோதி இமயமலை உருவானதாக அவர் குறிப்பிடுகின்றார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து தென்மேற்கு பருவமழையின் வீரியத்தை தெரிந்துகொள்ளலாம். முதல் பருவமழையில் இனயம் மற்றும் விழிஞ்சம் துறைமுகங்களினுள் அலையடிக்கும்.
இனயம் பகுதியில் மிகப்பெரிய துறைமுக தேவைக்கான  தொழிற்பேட்டைகள் தென் தமிழகத்தில் இல்லையென்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான தேவைகள் நமக்கு இருக்கின்றதா என்பது குறித்தும் சிறிது யோசிக்கவேண்டியிருக்கின்றது. நிலக்கரியைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத்தெரியவில்லை. அதற்க்கு நாம் அதிகமும் அக்கறை செலுத்தாத நிலக்கரி மற்றும் மின் உற்பத்திக்கு செல்லவேண்டும். உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி இந்தியாவில் இருக்கின்றது. ஆனால் அதன் தரம் குறைவு. அனல் மின் நிலையங்களில் இந்திய நிலக்கரியை எரிக்கும்போது அதிக சாம்பல் கழிவு உருவாகின்றது.
சுற்றுச் சூழலுக்கு கேடில்லாத, அணுஉலைகள் உருகி வெடிக்குமென்ற பயமில்லாத, அணு இணைப்பு மூலம் “நட்சத்திர சக்தியை” பெறும் ஆய்வில் உலகின் முன்னணி கல்வி நிறுவங்கள் சாதனைகள் செய்துகொண்டிருக்கும்போது நாம் கண்ணுக்கெட்டா தூரத்தில் சாம்பல் புகையை சுவாசித்து இருமிக்கொண்டிருக்கின்றோம். அதுசரி, நமக்கும் சுற்றுச் சூழலுக்கும் என்ன சம்பந்தம்?
இனயம் துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் சைனாவின் ஆளுமையை கட்டுப்படுத்துவதெற்கென்று ஒரு கருத்து நிலவுகின்றது. உண்மைதான், அது சைனாவின் நிலக்கரி ஆளுமை. உலகின் நிலக்கரி விலையை நிர்ணயிப்பது சைனா. அதை கட்டுப்படுத்த நமக்கு இனயம் துறைமுகம் முக்கியம். மத்திய அரசு இனயம் பன்னாட்டு பெட்டகத்திற்காக தன் முழு பலத்தையும் காட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதை தெரிந்துகொள்ள நாம் சிறிது பயணப்படவேண்டும். சுமார் ஆறாயிரம் நாட்டிகல் மைல் தொலைவிலிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு.
திரு. அதானிக்கு சொந்தமான அனல் மின் நிலையம் ஒன்று குஜராத்தில் இருக்கின்றது. இது நிலக்கரியில் இயங்குகின்றது. முந்த்ரா துறைமுகப் பகுதியில் இருக்கும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய அனல் மின் நிலையம். இதன் திறன் 4620 MW.  [தமிழ்நாட்டின் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் திறன் 1970 MW மட்டுமே.] இதற்கு தேவையான நிலக்கரியில் 70% இந்தோனேசியாவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றது.
அதானியின் அனல் மின் நிலையத்தை ஒட்டி டாடாவிற்கு சொந்தமான அனல் மின் நிலையம் ஒன்றும் இருக்கின்றது. அதன் திறன்  4150 MW. இது இந்தியாவின் முன்றாவது பெரிய அனல் மின் நிலையம். இதற்கு வருடத்திற்கு 12 பில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகின்றது. அனைத்தையும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றது.
ஆனால் 2011-ல் இந்தோனேசிய அரசுகொண்டுவந்த புதிய சட்டத்தின் படி, நிலக்கரியின் விலையை அந்த நாடு உலக சந்தையில் நிலக்கரிக்கான மதிப்பில் நிர்ணயிப்பதாக அறிவித்தது. உலக சந்தையில் நிலக்கரியின் விலையை நிர்ணயிப்பது சைனா.
இதனால் டாட்டா மற்றும் அதானி குழுமங்கள் அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியது. இந்த விலை அதிகரிப்பிலிருந்து தப்புவதற்காக, டாடா குழுமம ரஷ்யாவின் சைபீரிய நிலக்கரி  நிர்வாகத்துடன் ஒப்பந்தமிட்டு அங்கிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யத்துவங்கியது. அதானி ஆஸ்திரேலியாவின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை பெறுவதில் ஆர்வம் காட்டியது.
பெட்ரொலியத்தின் விலை உயர்வை பெட்ரொல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தி சமாளிப்பதுபோல், தனியார் மின்சார நிறுவங்கள் நிலக்கரியின் விலை உயர்வை மின்சாரத்தின் விலையை அதிகரித்து பொதுமக்களிடமிருந்து வசூலிக்கத் துவங்கியது.
ஆனால், இவர்கள் நிலக்கரியின் விலையை உண்மையான விலையைவிட கூடுதலாக அரங்கத்திற்கு உயரத்திக்காட்டி சுமார் 50,000 கோடி (ரூபாய் ஐம்பதாயிரம் கோடி) அளவிற்கு பொதுமக்களின் பணத்தை சுருட்டியது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதானியும் டாடாவும் இதில் அடக்கம். மத்திய அரசு விசாரணை மேற்கொண்டிருக்கின்றது. [விசாரணை எவ்வளவு நேர்மையாக இருக்குமென்பது நம் அனைவருக்கும் தெரியும். அலைபேசி, பெட்ரோல்/டீசல்/எரிவாயு, மின்சாரம் போன்ற பணப்பயிர்கள் அனைத்தும் அதானி மற்றும் அம்பானிகளிடம்.]
இது ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய கார்மைக்கேல்  நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்தை பெறுவதில் பல சிக்கல்கள்.  கார்மைக்கேல் திட்ட மதிப்பு சுமார் 16.5 பில்லியன் டாலர்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய். எந்த வங்கியும் அதானிக்கு கடன் கொடுக்க முன்வரவில்லை. முதலில் 1பில்லியன் டாலர் (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு கோடி மட்டும்) கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பின்வாங்கிவிட்டது. ரகுராம் ராஜன் ஆர்பிஐ-யிலிருந்து பதவி விலகிய பிறகு சூழ்நிலைகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்போது அனைத்து தேசிய வங்கிகளும்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அரசு $1பில்லியன் டாலர் அதானிக்கு குறைந்த வட்டிக்கு கொடுப்பதாக அறிவித்திருக்கின்றது. இதற்கும் பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு. அதுபோல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதானிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் அதானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கின்றது.
கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வருடனத்திற்கு சுமார் 1.2 பில்லியன் டன் நிலக்கரி வெட்டியெடுத்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவின் அபாட் பாயிண்ட் மற்றும் ஹே பாயிண்ட் துறைமுகங்கள் வழியாக நிலக்கரிகள் ஏற்றுமதி செய்யபபடவிருக்கின்றது. அதற்காக அபாட் பாயிண்ட் துறைமுக விரிவாக்கத்திற்கு கடலை ஆழப்படுத்துவதற்கும், கடலில் மண் நிரப்புவதற்கும் எதிராக பொதுமக்களின் போராடடத்தை தொடர்ந்து நிலப்பகுதியில் துறைமுகத்தை விரிவாக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். துறைமுக விரிவாக்க திடடத்திற்கு கடன் அளிப்பதாக இருந்த வங்கிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடனளிப்பதிலிருந்து பின்வாங்கியிருக்கின்றன.
நிலக்கரிச்சுரங்கம், ஒரு லட்சம் கோடி ரூபாய் திட்டம், துறைமுக கட்டுமானம், சுரங்கத்தையும் துறைமுகத்தையும் இணைக்கும் 310 கிலோ மீட்டர் இரயில் பாதை கட்டுமானம் ஆகியவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகுமென்று அதானி ஆஸ்திரேலிய அரசிற்கு கொடுத்த அறிக்கையில் சொல்லியிருந்தார். ஆனான் அதிலிருந்து வெறும் 1464 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்க முடியுமென்று தற்போது கணித்திருக்கின்றார்கள்.
நிலக்கரி சுரங்கத்திலிருந்து வருடத்திற்கு 60 மில்லியன் டன் நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு அபாட் துறைமுகத்திலிருந்து நேரடியாக முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும். நிலக்கரியை கொண்டுவருவதற்கான கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதால் வீண்செலவு. எனவே, 2020-ற்குள் 3400கோடி ரூபாய் முதலீட்டில் 17 கப்பல்களை வாங்க திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கெனவே அதனிடம் 289மீட்டர் நீளம் கொண்ட இரண்டு பெரிய கப்பல்கள் இருக்கின்றது. இந்த கப்பல் 18.1 மீட்டர் கடலினுள் இருக்கும்.
அதானியால் புதிதாக கட்டப்டும் விழிஞ்சம் துறைமுத்தின் ஆழம் 24 மீட்டர். எனவே இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் அதானி போன்ற பெரிய கப்பல்கள் விழிஞ்சத்தில் தமிழகம் மற்றும் தமிழ் நாட்டிற்கு தேவையான நிலக்கரியை இறக்கிவைத்துவிட்டு சென்றுவிடலாம். அங்கிருந்து இரயிலில் உட்பகுதிக்கு எடுத்துசெல்லலாம். ஆனால், கேரளாவில் நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்கள் ஒன்றுமில்லை. அதுபோல், தமிழ்நாட்டிற்கு தேவையான நிலக்கரியை கேரளாவில் எதற்கு எடுத்துச்செல்ல வேண்டிய தேவையில்லை. நிலக்கரியை இறக்குவதற்கான கூலியின் ஒருபகுதி கேரள அரசிற்கு சென்றுவிடும்.
எண்ணூர் மற்றும் அத்திப்பட்டு  அனல்மின் நிலையத்திற்கு பக்கத்திலிருக்கும் எண்ணூர் துறைமுகம் அதானியால் கட்டப்படுகின்றது. இந்தோனேசியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை நேரடியாக இந்த அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லலாம்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் எரிபொருள் லிக்னைட். நிலக்கரி அங்கே தேவையில்லை. மேட்டுர் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரிகள் எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரயில் வழியாக மேட்டூர் கொண்டுசெல்லப் படுகின்றது. தூத்துக்குடிக்கு அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வழியாக பெறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் புதிதாக ராமனாதபுரம் மாவதிட்டத்திலுள்ள கடலாடி தாலுக்காவில் 4000MW திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் நிறுவப்பட்டவுள்ளது. இதற்கு தேவையான நிலக்கரியை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரயில் வழியாக கொண்டுவரப்படும் என்று அரசு அறிக்கை சொல்கின்றது.
தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான பல நுறு மில்லியன் டன்  நிலக்கரியை அதானியிடமிருந்துதானே வாங்கவேண்டும். வெளிநிலத்திற்கு இரயில் வழியாக கொண்டுசெல்லவேண்டும்.
தமிழகத்தில் மிகப்பெரிய சூரியஒளி மின்சார நிலையத்தை அதானி குழுமம் நிறுவியிருக்கின்றது. அவர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. அதிகமாக கொடுக்கப்பட்ட விலையை எவ்வாறு ஈடுகட்டுவார்கள்? மின்சாரத்திற்கான விலை அதிகரித்தாலும் வியப்பில்லை. நிலக்கரியும், அனல் மின் நிலையங்களும், இனயம் துறைமுகமும், வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை சுமந்துவரும் கப்பல்களும் அதானிக்கு சொந்தமாக இருக்கும்போது நிலக்கரிக்கும் மின்சாரத்திற்கு அவர் வைப்பதுதான் விலையாக இருக்கும்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்,  இனயம் நிலக்கரி துறைமுகம் அதானியால் தமிழக மக்கள் மீது எழுதப்படும் நிரந்தரமான “மின் அடிமை சாசனம்”. இதற்கு நாம் கொடுக்கும் விலை இரண்டு லட்சம் மக்களின் வாழ்வாதாரம். ஆஸிதிரேலியாவில் தூங்கிக்கொண்டிருக்கும் சயரோகம் இந்தியாவில் உயிர்த்தெழப்போகின்றது.
நான் கல்லூரியில் படிக்கும்போது என் தந்தையின் வருடாந்திர வருவாயாக என்னுடைய வருவாய் சான்றிதழில் எழுதப்பட்டிருந்தது ரூ.12,000/- தற்போது இதையே வருடம் ரூ. 50,000/- என்று கணக்கில் கொண்டாலும், அரசு கணக்குப்படி இந்த இரண்டு லட்சம் பாரம்பரிய தொழில்முறை மக்களின் (மீனவர், வெளிநிலத்தவர், பெண்கள், சிறுவர் சிறுமியர், இப்போது பிறந்த குழந்தைகள் உட்பட) வருமானம் அதிகபட்சமாக ஓர் ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் இனயம் துறைமுகத்தின் திட்ட மதிப்பு மட்டும் 30 ஆயிரம் கோடி!
இனயம் துறைமுகம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையத்தின் உயிர் அதானி குழுமத்திற்கு எதிரான வழக்குகளை விசாரித்துக்கொண்டிருக்கும்  ஆஸ்திரேலிய நீதிமன்றங்களின் கைகளிலும் இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் போடப்படும் புதிய நிலக்கரிச்சுரங்க ஒப்பந்தங்களிலும் இருக்கின்றது.
இந்திய மத்திய அரசு 2020-ம் வருடத்திற்குள் நூற்றிற்கும் அதிகமான புதிய நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்களை கட்ட திடடமிட்டிருக்கின்றது. அவை கட்டிமுடிக்கப்பட்டால், இந்தியா உலகின் சயரோக நோயாளியாக இருக்கும். நிலக்கரியை எரிப்பதுபோன்ற பாதிப்பு, நிலக்கரியை சேமித்து வைக்கும்போது ஏற்படும். எனவே இனயம் பகுதியும் பாதிப்பிற்கு விதிவிலக்கல்ல. சிறிது பாதரசம் அதிகமாக நிலத்தடி நீரில் கலக்கும். அதனால் ஒன்றுமில்லை, புற்றுநோய் நமது பகுதியில் இருப்பதைவிட இன்னும் சிறிது அதிகரிக்கும்.
ஏன் நீங்கள் வேறு தொழில் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் திரு. பொன்னார் கேட்கின்றார். அந்த கேள்வியில் சிறிது அக்கறையும் ஞாயமும் இருக்கத்தான் செய்கின்றது. இனயம் துறைமுகம் வந்தால் மீனிற்குப் பதிலாக நிலக்கரியை கடலில் வலைவீசிப் பிடிக்கலாம். அதுவும் தொழில்தானே. இந்தியாவை வல்லரசாக்க, புற்றுநோயையும் சயரோகத்தையும் பொருட்படுத்தாமல், இந்த மாற்றுத்தொழிலையா நமது எளிய மக்கள் செய்யமாட்டார்கள். அல்லது, தேசவிரோதிகள் பட்டம் மக்களுக்காகக் காத்திருக்கின்றது. ஜாக்கிரதை!
***
இணைப்புகள்:

துறைவன் விமர்சனம் – வால்தூஸ் இரயுமன்துறை

[gview file=”https://thuraivan.files.wordpress.com/2016/10/Valthoose-Michale.pdf”%5D