இனயம் துறைமுகம் – 8

*கனவு மெய்ப்படுமா?*

 

இனயம் துறைமுக திட்டம் என்றால் என்ன?

இந்தியாவிலிருக்கும் அதானியின் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை, அதானியால் ஒப்பந்தமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து, அதானியின் நிலக்கரி சுரங்க நிறுவனத்தினால் வெட்டியெடுக்கப்பட்டு, அதானியின் கப்பல் நிறுவனத்தினால் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான துறைமுகத்தை, அதானியின் துறைமுக நிறுவனத்தால், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, இனயம் கடற்கரை கிராமத்தில் கட்டப்படவிருக்கும் திட்டமே இனயம் துறைமுக திட்டம் என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
இனயம் துறைமுகத் திட்டத்தின் ஆன்மா ஆஸ்திரேலியாவின் கார்மைக்கேல் நிலக்கரிச்சுரங்கத்தில் இருக்கின்றதென்று உலகின் சயரோகம் கட்டுரையில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றது.
இனயம் துறைமுகத்துக்கு இருக்கும் எதிர்ப்புபோல், ஆஸ்திரேலிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திற்கும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் மக்களிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு. பல வழக்குகள். அனைத்தையும் ஒவ்வொன்றாக தாண்டி வந்துகொண்டிருந்தது அதானியின் நிலக்கரிச்சுரங்க நிறுவனம்.
ஒரு நிறுவனம் செய்யும் வரி ஏய்ப்பின் அளவு அந்த நிறுவனத்தின் நிதி வலிமை என்றுகூட சிறிது கிண்டல் தொனியில் சொன்னாலும் அதில் உண்மை இல்லாமலில்லை. அதானியம்பானிகள் இந்தியாவில் செய்யும் வரி ஏய்ப்புகள் ஆயிரக்கணக்கான கோடிகளில் இருக்கின்றது. அதுபோல் அதானியின் ஆஸ்திரேலிய நிறுவங்களும் விதிவிலக்கல்ல. 2014-15ம் ஆண்டில் 487மில்லியன் டாலர் வருமானத்தை கொண்ட அதானியின் நிறுவனம் கொடுத்த வரி வெறும் 39,000 டாலர் மட்டும் தான். 0.008 சதமானம். அந்த வகையில் அதானியின் ஆஸ்திரேலிய குழுமம் மிகவும் வலுவானது.
கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை அபாட் பாயிண்ட் துறைமுகம் வரை இரயில் மூலமாக கொண்டுவரவேண்டும். 310 கிலோமீட்டர் நீள இரயில் பாதை அமைப்பதற்கான 1பில்லியன் டாலர் கடனைத்தான் செல்லாக்காசு திட்டத்திற்கு பிறகு தன்னிடமிருக்கும் மிதமிஞ்சிய மக்களின் பணத்தை என்னசெய்வதென்றறியாமல் முழித்துக்கொண்டிருந்த எஸ்பிஐ அதானிக்கு வழங்கியது. 2014-ம் வருடம் அதானிக்கு 1பில்லியன் டாலர் கடனளிப்பதிலிருந்து எஸ்பிஐ பின்வாங்கியதும், அப்போது திரு. ரகுராம் ராஜன் ஆர்பிஐ-யின் கவர்னராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணமில்லா வர்த்தகம் தற்போதைய செல்லாக்காசு பிரச்சனையின் விளைவென்று சொல்லிக்கொள்கின்றார்கள். இந்தியாவில் நடந்த பெரும்பஞ்சங்களின் போதும் பல பெரிய கட்டுமானங்களும் நடந்தன. ஒருவேளை உணவிற்காக கல்லும் மண்ணும் தூக்கிச்சுமந்து மக்கள் செத்து மடிந்தார்கள். அதுபோல், பஞ்சகாலங்களின் போது அடிமை வியாபாரமும் உச்சத்தில் இருந்தது. பட்டினியிலிருந்து தப்புவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அடிமைகளாக கப்பலேறி வெளிநாடு சென்றார்கள். இது நியூட்டனின் மூன்றாம் விதி. எந்த வினைக்கும் அதற்கிணையான எதிர்வினை உண்டு. செல்லாக்காசின் விளைவு பணமில்லா வர்த்தகம். இன்னொரு விளைவு இனயம் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் பலத்த சிக்கல்கள்.
ஆஸ்திரேலியா கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தின் திட்ட மதிப்பு 16பில்லின் டாலர்கள். சுமார் ஒரு லட்சம் கோடி டாலர்கள். இந்த தொகையை அதானிக்கு கடனளிப்பதாக இருந்த ANZ வங்கி தற்போது பின்வாங்கியிருக்கின்றது. அதானியின் குழுமம் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயை எஸ்பிஐ கடனளிப்பதற்கும் வாய்ப்புகள் இல்லாமலில்லை. செல்லாக்காசு என்னும் பெயரில் மக்களிடமிருந்து பிடுங்கிய பல லட்சம் கோடிகள் எஸ்பிஐ-யிடம் இருக்கின்றது. என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அதானி வங்கிக்கு இதுவரை திருப்பிச்செலுத்தவேண்டிய தொகை 96,000 கோடிகள் என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டியுள்ளது.
எனவே தற்போது நிலக்கரி சுரங்கமும் இனயம் துறைமுகமும் தரைதட்டி நிற்கின்றது. கடந்த வருடம்வரை குளச்சல் வர்த்தக துறைமுகமென்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகுதான் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் என்று பெயர் மாறியது. அதற்கும் காரணம் இல்லாமலில்லை.
அமெரிக்கா, ரஷ்யா, சைனா, ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக அளவிலான நிலக்கரி இருக்கின்றது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதியை குறைத்து, இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக, “இந்திய நிலக்கரி குழுமம்” நிலக்கரி சுரங்கங்களிலிருக்கும் பல்லாயிரம் டன் நிலக்கரியை இ-ஆக்சன் முறையில் விற்பனை செய்துகொண்டிருக்கின்றது.
அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் நிலக்கரி இறக்குமதிக்கான தேவையில்லை என்று இந்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொல்கின்றார். ஆனால் அதானி குழுமம் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தை எளிதில் கைவிட்டுவிடாது. இதில் நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் இருண்ட வீடுகளின் மின்சார வசதிக்காகாத்தான் இந்த நிலக்கரி பயன்படுத்தப்படவிருக்கின்றது என்று சொல்லியே அதானி குழுமம் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க ஒப்பத்தனத்தை பெற்றது என்பது.
ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்படும் நிலக்கரியை, தன்னுடைய அனல் மின் நிலையங்களுக்கான தேவை போக, மீதியை இந்தியாவின் துறைமுகத்தில் அல்லது வெளிக்கடலில் வைத்திருந்து அங்கிருந்து வேறு நாட்டிற்கு அனுப்பவேண்டும். அதற்கானதுதான் இந்த பன்னாட்டு பெட்டக மாற்று துறைமுகம் என்பது எந்த சிற்றறிவிற்கும் புலப்படும்.
நிலக்கரியில்லையென்றால் இனயம் பெட்டக மாற்று முனையத்திற்கான தேவையில்லை.  ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கம் இருக்கும்வரை இனயம் துறைமுகத்திட்டம் பேச்சளவிலாவது இருந்துகொண்டிருக்கும். தற்போதைய நிலவரப்படி இனயம் துறைமுகக் கனவு மெய்ப்படுவது அவ்வளவு எளிதானதல்ல.
*

இனயம் துறைமுகம் – 7

* வெட்ஜ் பேங்க் *
கடலில் பவளப்பாறை திட்டுகளில் மீன்கள் அடர்த்தியாக ஒரே இடத்தில் பல்லாயிரம் டன் அளவிற்கு பெருத்து வளரும். அந்த பவளப்பாறையை மீனவர்கள் கண்டுபிடிக்காத வரை அந்த திட்டுகளில் மீன்கள் பிறந்து, வளர்ந்து, செத்து, மட்கி, சிறுமீனிற்கு உணவாகும். இதுபோன்ற திட்டுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் முறை துண்டிலிடும்போது மீன்களின் அடர்த்தி காரணமாக துண்டில் கீழிறங்காது. அந்தளவிற்கு மீன் செறிவாக இருக்கும்.
பளப்பாறைகளைப்போல், சிறிய பாறைகள், உடைந்து மூழ்கிய கப்பல் போன்றவற்றிலும் அதிக அளவு மீன்கள் கூட்டமாக வசிக்கும். மீனவர்கள் இவற்றை “பாரு” என்பார்கள்.  விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலங்களில் கணியம் பார்த்துதான் ஒரு குறிப்பிட்ட பாருக்கு செல்வார்கள். மீன் அதிகமாகவுள்ள பாருகள் யாருக்காவது தெரிந்தால் அவர்களின் பல சந்ததிகளும் வசதியுடன் இருக்கும். அந்த பாருக்கான ரேகையை வேறு யாருக்கும் எளிதில் சொல்லமாட்டார்கள். அதிகமான கட்டுமரங்கள் ஒரே பாரில் சென்றால் மீன்பெருக்கு எளிதில் குறைந்துவிடும். எனவே, தன் சந்ததிகளிடமும், மிக நம்பிக்கையானவர்களிடமும் மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள்.
அனைவருக்கும் தெரிந்த பொதுவான பாருகளும் உண்டு. ஒவ்வொரு ஸீஸனுக்கும் தனித்தனி பாருகள். சில பாருகளுக்கு மாலையில் சென்று காலையில் திரும்பி வருவார்கள். ஆழ்கடலில் மிகத்தொலைவிலிருக்கும் பாருக்கு  பாய்மரத்தில்  மூன்று நான்கு நாட்கள் தங்கலுக்கு செல்வார்கள்.
சிறிதும் பெரிதுமாக பல்லாயிரக்கணக்கான பாருகள்  கடலில் இருக்கின்றது. ஒவ்வொரு பாரிலும் விதவிதமான பாசிகளும், கடல் தாவரங்களும் வளரும். ஒவ்வொரு பாரிலிருக்கும் மீனிற்கும் தனிச்சுவை. எனவே மேற்கு கடற்கரை மீனிற்கும் கிழக்கு கடற்கரை மீனிற்கும் சுவைவேறுபாடு இருப்பதில் வியப்பில்லை. முட்டம் பகுதி மீனிற்கும் நீரோடி பகுதி மீனிற்குமான சுவைவேறுபாட்டைக்  கூட கண்டறிய முடியும்.
இந்தியாவின் அரபிக்கடலோரத்தில் கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை 22 மிக முக்கியமான மிகப்பெரிய பவளப்பாறை திட்டுகள் அல்லது மீன்பிடித்தளங்கள் இருக்கின்றன. இனயம் கற்பனைத் துறைமுகத்திற்கு பக்கத்தில் வெட்ஜ் பேங்க் என்னும் மிக முக்கியமான பவளப்பாறைதிட்டு இருக்கின்றது.
வெட்ஜ் பேங்க் பவளப்பாறைதிட்டு (7º 00′ – 8º 20′ N, 76º 30′ – 78º 00′ E ) கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்காக 36 மைல் தூரத்தில் மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கின்றது. இனயம் கிராமத்திலிருந்து வெட்ஜ் பேங்க் மீன்பிடித்தளத்திற்கு சுமார் 40 மைல் (35 கடல் மைல்) தூரம். தற்போதைய விசைப்படுகுகளின் வேகம் சராசரியாக 8 நாட்டிகல் மைல்கள். இனயம் பகுதியிலிருந்து வெட்ஜ் பேங்க் மீன்பிடித்தளத்திற்கு நான்கரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். வெட்ஜ் பேங்க்  இலங்கையின் கொழும்பிலிருந்து  115 கடல் மைல் தொலைவிலிருக்கின்றது.
முதன் முதலில் இந்த பளப்பாறைத்திட்டை கண்டறிந்தவர் கேப்டன் கார்ஸ்பர்க். இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் இரண்டாவது நீர்வளவியலாளர். இவர் 1810-லிருந்து 1836-ல் தான் இறப்பதுவரை வரை கிழக்கிந்தியக் கம்பனியின் கடல் வரைபடங்களை சரிபார்ப்பவராக இருந்தார். கன்னியாகுமரியிலிந்து சிறிது தூரத்தில் கலவா (cod) மீன் அபரிமிதமாகக் கிடைக்கும் ஒரு பகுதி இருக்கின்றது. இங்கிருந்து பல கப்பல்களும் அதிகமான மீனை பிடித்துச்செல்கின்றது. அனால் இந்த பகுதி யாருக்கும் அதிகமாக தெரியாது என்று கேப்டன் கார்ஸ்பர்க் குறிப்பிடுகின்றார்.
அதன் பிறகு, பாம்பேயிலிருந்து கல்கட்டாவிற்கு ‘ஷா ஆலம்’ என்னும்  கப்பலில் பயணிக்கும் கேப்டன் வெட்ஜ் என்பவர் கன்னியாகுமரிக்கு தெற்கில் 36 மைல் தூரத்தில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் பாறைத்திட்டுகள் இருப்பதை கண்டறிகின்றார். 1861-ம் வருடம் அந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது அதன் குறைந்தபட்ச ஆழம் 25 மீட்டர் என்று உறுதிசெய்யப்பட்டது. இன்று, அந்த பாறைத்திட்டுகள் கேப்டன் வெட்ஜின் பெயராலேயே அறியப்படுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்ச்சத்திற்கு பிறகு மீன்பிடித்தல் மெட்றாஸ் பிரசிடன்சியின் பொருளாதார வளர்சசிக்கு ஏற்புடைய துறையாக பார்க்கப்பட்டது. 1899-ம் வருடம் மெட்றாஸ் பிஷரீஸ் பீரோவின் கௌரவ இயக்குனராக இருந்த சர். எப். எ. நிக்கோல்ஸன்  மக்கள்தொகை பெருக்கம், வறட்சி, பஞ்சம், ஆலைக்கழிவு அனைத்திற்கும் அப்பாற்பட்ட மீன்வளத்தை அரசாங்க வருமானத்தின் மூலதனமாக மட்டும் பார்க்காமல் முக்கியமான உணவு ஆதாரமாகப் பார்க்கவேண்டுமென்று வாதிட்டார்.
மீன்பிடித்தல் அப்போது வளச்சியடையாமல் மிகச்சிறிய துறையாக இருப்பதினால் மீன்வளத்துறையை விவசாயத்துறை கவனித்துக்கொள்ளவேண்டுமென்றும் நிக்கோல்ஸன் சொன்னார். பஞ்ச நிவாரணத்திற்காக மீனுணவு பயன்படுத்தப்பட்டு, மீன்வளத்தின் பயன்பாடும் வருவாயும் உறுதி செய்யப்பட்டபிறகு 1907-ம் வருடம் மீன்வளத்துறை விவசாயத்துறையின் துணைநிறுவனமாக துவங்கப்பட்டது. அனைத்து கட்டுமரங்களையும் இழுவைமடிமளாக மாற்றி துரிதமான தொழில்வளர்ச்சியில் ஆர்வமில்லாமல் மீன்வளத்துறையை  மெதுவான நிலையானதாக வளர்த்தெடுப்பதில் அவர் விருப்பம்கொண்டிருந்தார். எனவே அவர் தொழில்நுட்பம் சார்ந்த மீன்பிடித்தலுக்குப் பதிலாக சிறிய அளவிலான மீன்பிடித்தத்தை ஊக்கப்படுத்தினார்.
இலங்கை இந்தியாவைப்போலல்லாமல் கடல்வள ஆய்வை 1900-ம் வருடங்களில் மேற்கொண்டிருந்தது. 1902 மற்றும் 1907-ம் வருடங்களில்  இழுவைமாடி பயன்படுத்தி மீன்பிடிக்கும் முயற்ச்சியை இலங்கையின் பெறுவணிகர்கள் மேற்கொண்டனர். அதன்பிறகு இழுவைமடி முயற்சியை கைவிட்டனர்.
ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான தற்போதைய இழுவைமடியை முதன்முதலில் தென்கிழக்கு இங்கிலாந்தின் பிரிக்ஸ்ஹாம் என்னும் கடற்கரை மீனவர்கள் 18-ம் நூற்றாண்டில் பயன்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. அதுற்கு முன்பு 14-ம் நூற்றாண்டில் டச்சு மீனவர்களால் இழுவைமடி வடகடலில் மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்டது. இழுவைமடியை டாகர் என்னும் படகில் வைத்து வடகடலில் மீன்பிடித்ததனால் அந்த ஆழ்கடல் மீன்பிடித்ததளம் டாகர் பேங்க் என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றது.
சர். நிக்கோலஸனுக்கு அடுத்து தலைவராக வந்த ஜேம்ஸ் ஹார்னல் தான் மீனவர்களின் உண்மையான வளர்சசிக்கு வித்திட்டவர். அரசாங்க நிர்வாகத்திலும், கொள்கை உருவாக்கத்திலும்  பாரம்பரிய மீனவர்கள் அங்கம் வகிக்கவேண்டுமென்று திடமாக இருந்தார்.
அவரது முயற்சியால் மீனவர்கள் கடல்வழி வருவாய் கோட்டத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும், மெட்றாஸ் பிரசிடன்சியின் கவுன்சிலர்களாகவும், கௌரவ நீதிபதிகளாகவும் உயர்ந்தார்கள். மீனவரான ஜெ. எ. பெர்னாண்டஸ் மீன்வளத்துறையின் நிர்வாகியாகவும் இருந்தார். நிக்கோல்ஸனைப்போலவே ஹார்னலும் இழுவை மடியில் ஆர்வம் கொள்ளவில்லை. அதற்குப்பதிலாக டேனிஷ் வலையை நம் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.
வெட்ஜ் பேங்க் அப்போதைய மெட்றாஸ் பிரஸிடென்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதி. 1923-ம் வருடம், மெட்றாஸ் பிஷரிஸ் பிபீரோவின் தலைவராக இருந்த சுந்தரர் ராஜ் சென்னைக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல்வள ஆய்விற்காக இழுவைமடியும் டேனிஷ் கட்டர் கப்பலும் வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கைவைத்தார். ஆனால் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. ஆனால் அதே காலகட்டத்தில் இலங்கை கப்பல்கள் இழுவைமடி கொண்டு வெட்ஜ் பேங்கில் மீன்பிடித்துக்கொண்டிருந்தன.
இலங்கையின் கரையோரங்களில் இழுவைமடிகொண்டு மீன்பிடிப்பதற்கு ஏதுவான பகுதிகளை கண்டறிவதற்கான சர்வே 1920-லிருந்து 1923வரை மேற்கொள்ளப்பட்டது.  முடிவில், வெட்ஜ் பேங்க் மற்றும் பெட்றோ பேங்க் என்ற இரண்டு பகுதிகளும் இழுவைமடி மீன்பிடித்தத்திற்கு சிறந்தவையாக கண்டறியப்பட்டது. கொழும்பிலிருந்து வெட்ஜ் பேங்கிற்கும், காங்கேசன்துறை மற்றும் திரிகோணமலையிருந்து பெட்ரோ பேங்கிற்கும் இழுவைமாடி கப்பல்கள் மீன்பிடித்தத்தில் ஈடுபட்டன.
மீன்வள சர்வே மேற்கொண்ட லீலா என்னும் கப்பல் வருடத்திற்கு 244 மெட்ரிக் டன் வெட்ஜ் பேங்கிலிருந்து மீன் அறுவடை செய்தது. வெட்ஜ் பேங்கில் வணிக ரீதியிலான மீன்பிடித் தொழில் 1928-ம் வருடம் துவங்கியது. 1928-லிருந்து 1930 வரை தாங்கோல் மற்றும் புல்புல் என்னும் கப்பல்கள் வருடத்திற்கு 228 மெட்ரிக் டன்னிலிருந்து 590 மெட்ரிக் டன் மீன்களை அறுவடை செய்தது. 1935-ல் புல்புல் கப்பலின் உரிமையாளரான ‘தி சிலோன் பிஷரிஸ் லிட்’ நிறுவனம் கலைக்கப்படுவதுவரை புல்புல் வெட்ஜ் பேங்கில் மீன்பிடித்தத்தில் ஈடுபட்டது.
1930-லும் மீண்டும் சுந்தரர் ராஜ் இழுவைமடி மீதான தனது விருப்பத்தை அரசாங்கத்திடம் எடுத்துச்சென்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘இந்திய மீனவர்கள் மிகவும் ஏழ்மையான, அறியாமையிலுழலும், ஒரு பழமைவாத இனம். தொழிலை முன்னெடுக்கும் முயற்சியோ அதற்கான மூலதனமோ அவர்களிடம் இல்லை… வள்ளமும் கட்டுமரமும் மட்டுமே நம் மீன்வர்களிடம் இருக்கின்றது. தொழிலாளர்களின் உழைப்பு குறைவாக தேவைப்படும் இயந்திரங்கள் நம்முடைய மீனவர்களிடம் இல்லாத காரணத்தினால், அவர்கள் கடற்கரையிலிருந்து 10 மைல்களுக்குள்ளாகவே மீன்பிடிக்க முடிகின்றது. வெலிக்கடல் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவில்லையென்றால் ஏழ்மையிலிருந்து மீளமுடியாது. இழுவைமடியிலிருந்தான் வெளிக்கடலில் சென்று மீன்பிடிப்பதற்கான அறிவை அவர்கள் பெற முடியும்.’ ஆனால் ஹார்னல் இழுவைமடி வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். காரணம் ஒரு இழுவைமடி மற்றும் கப்பலின் மதிப்பு சுமார் 1.5 லட்சம் ரூபாய்.
இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து (1935) யுத்தம் முடிவதுவரை (1945) வெட்ஜ் பேங்கில் இழுவைமடிகொண்டு மீன்பிடித்தம் நடைபெறவில்லை. யுத்தத்தங்களின்போது கப்பல்களை தகர்ப்பதற்காக நதியிலும், கடலில் போடப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்த இழுவைமடிகள் பயன்படுத்தபட்டது.
1945-லிருந்து 1951வரை ரங்க்லன் கேசில் கப்பல் வருடத்திற்கு 270மெட்ரிக் டன்களும், பிராகோன்கிளென் கப்பல் 1952-லிருந்து 1958வரை 680 மெட்ரிக் டன்களும், அதன்பிறகு 1963வரை 400 மெட்ரிக் டன்களும் அறுவடை செய்தது. ஆனால்,  மேப்பிள் லீப் கப்பல் 1953லிருந்து   1965வரையான அறுவடையின் வருட சராசரி 560 மெட்ரிக் டன்கள்.
1962ம் வருட கணக்கின்படி இந்த மீன்தளத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 600 டன் (1962) அளவிற்கு சேமீனும் (snapper) கலவா (grouper, reef cod) மீனும் ,இந்திய படகுகளால் பிடிக்கப்பட்டது. இலங்கை சார்ந்த டிராலர் படகுகளால் மூன்றிலிருந்து ஆறு டன் அளவிற்கு ஒவ்வொரு நாளும் பிடிக்கப்பட்டது. ஜப்பானிய ட்ராலர் கப்பல்கள் பத்து வருட வணிக ரீதியில் வெட்ஜ் பேங்கில் மீன்பிடித்தத்தில் ஈடுபட்டிருந்தன.
1965லிருந்து 1970வரை 3226 மெட்ரிக் டன் மீன்கள் டிராலர் படகுகளால் அறுவடை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் (அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரை) கடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் காரணத்தினால் மீன்வரத்தும் குறைவாக இருக்கும். நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு 183கிலோ மீன்களும் மே மாதத்திருந்து அக்டோபர் மாதம் வரை ஒரு மணி நேரத்துக்கு 282.9 கிலோ மீன்களும் பிடிக்கப்பட்டதாக தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை சொல்கின்றது.
1965ம்  ஆண்டின் புள்ளிவிவரப்படி வெட்ஜ் பேங்கின் மீன்வளம் 8390 மெட்ரிக் டன்கள். ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின்   1977-ம் வருட கணக்கின்படி வெட்ஜ் பேங்க், பால்க் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 5.5 லட்சம் மெட்ரிக் டன் மீன்வளம் இருப்பதாக கணக்கிடப்பட்டது. இதில் வெட்ஜ் பெங்கின் பங்கு மூன்றில் ஒன்றெனக்கொண்டாலும் 1.8லட்சம் மெட்ரிக் டன்கள்.
மேற்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து மீன்அறுவடை ஒவ்வொருவருடமும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. காரணம், வெட்ஜ் பேங்கின் மீன் இருப்பும் உற்பத்தியும் மிகவும் அதிகம்.
குளச்சல், தூத்தூர், வள்ளவிளை பகுதி மீனவர்களுக்கு இந்தோ நார்வேஜியன் திட்டப்படி லூர்தம்மாள் சைமனால் 1957க்குப் பிறகுதான் விசைப்படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீப காலம் வரை நமக்கு வெட்ஜ் பேங்க் என்று ஒன்று இருப்பதே தெரிந்திருக்கவில்லை.  சுமார் 100 வருடங்கள் நமக்குச்சொந்தமான வெட்ஜ் பேங்க் மீன்தளத்திலிந்து இலங்கையும் வெளிநாட்டு கப்பல்களும் மட்டுமே நமது மீன்வனத்தை இழுவைமடி கொண்டு வேட்டையாடி பவளப்பாறைகளை அழித்துக்கொண்டிருக்கின்றன. இழுவைமடியினுள் பெரிய மீன்களைவிட அதிகமாக சிறிய மீன்குஞ்சுகளும் அகப்படும். பெரியமீன்களை மட்டும் கப்பலில் எடுத்துவிட்டு சிறிய மீன்களை வெளியில் கொட்டிவிடுவார்கள். கடலில் கொட்டப்படும்போது அநேகமாக அவை இறந்துபோயிருக்கும். அவ்வாறு மீன் வளர்ச்சியையும் இழுவைமடிகள் குறைக்கின்றன.
நமது கடற்கரை மீனவர்கள் பல்லாண்டு காலமாக கரையிலிருந்துக்கு இழுக்கும் கரமடியையும், கரையிலிருந்துக்கு சிறிது தூரத்தில் இரண்டு கட்டுமரங்கள் கொண்டு இழுக்கும் தட்டுமாடியையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதனால பவளப்பாறைகளுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்புமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இனயம் சார்ந்த நமது மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன் பிடிப்பவர்கள். மட்டு என்னும் தூண்டில் கொண்டு கையினால் சுறா வேட்டையாடுவதில் விற்பன்னர்கள். பவளப்பாறைகளின் அழிவு காரணமாக, கணவாய் போன்ற மீன்களுக்காக இனயம் மற்றும் வள்ளவிளை பகுதி கடற்கரை மீனவர்கள் செயற்கையாக பாருகளை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மேற்கு கடற்கரையில் கொச்சி, கண்ணூர், கார்வார் பகுதிகளில் 1954-ல்தான் இறால்மீன் பிடிப்பதற்காக முதன்முதலில் இழுவைமடி பயன்படுத்தபட்டது. 1961-ம்வருட கண்ணுக்குப்படி நாளொன்றிற்கு 5டன் இறால் பிடிக்கப்பட்டது.
வெட்ஜ் பேங்க் இந்தியாவின் கடல் எல்லைக்கு உட்பட்டப்பகுதி. இந்தியாவும் இலங்கையும் 1976-ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அதுவரை வெட்ஜ் பேங்க் மீன்பிடித்தளத்தின் மீன்வளத்தை அறுவடை செய்துகொண்டிருந்த இலங்கை 1981-க்குப்பிறகு அந்த தளத்தில் மீன்பிடிப்பதை நிறுத்தவேண்டும். ஆனால் இன்றுவரை இலங்கைதான் வெட்ஜ் பேங்கின் மீன்வளத்தை அறுவடை செய்துகொண்டிருக்கின்றது. வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களும் நம்முடைய வளத்தை வாரிச்செல்கின்றன.
நம்முடைய அரசாங்கமும் வெட்ஜ் பேங்க் மீன்பிடித்தளம் குறித்து மீனவர்களுக்கு எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. நமக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய மீன்வளத்தை இலங்கை மற்றும் வெளிநாட்டு கப்பல்களுக்கு இனாமாக கொடுத்திருக்கின்றோம்.
வெட்ஜ் பேங்க் பவளப்பாறைதிட்டுகள் எதிர்கால, கனவுத்திட்டமான இனயம் துறைமுகத்திற்கு வருவதற்கான பன்னாட்டு கப்பல் வழிப்பாதையில் அமைந்திருக்கின்றது. துறைமுக கட்டுமானத்தினால் கடலில் கலக்கும் பல்லாயிரம் டன் மணல் கழிவுகள் கடலின் சுற்றுச்சூழளுக்கும் கேட்டை விளைவிப்பதுடன், கப்பல் கழிவுகளும்  இயற்கை நீரோட்டத்தினால் அடித்துச்செல்லப்பட்டு ஒட்டுமொத்த வெட்ஜ் பேங்கையும் பாதிக்கும். ஒட்டுமொத்த மீன்வளமும் அழிந்துவிடும்.
அதுபோல் இனயம் துறைமுகத்துக்கு வந்து செல்லும் வெளிநாட்டுக்கப்பல்கள் வெட்ஜ் பேங்க் மீன்வளத்தை இன்னும் அதிகமாக சூறையாடும். அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்கவும் செல்லமுடியாது. இனயம் பகுதியிலிருக்கும் இரண்டு லட்சம் மீனவமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
வெட்ஜ் பேங்கில் மீன்பிடிக்க சிறந்த காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை. இந்த காலகட்டத்தில் நெய்மீன், கலவா, சேமீன், சுறா போன்றவை அதிகமாக கிடைக்கும். இது நமக்கு கடல் சீற்றம் அதிகமான ஆனியாடி காலகட்டம். நமது மீனவர்கள் ஆனியாடி காலத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க அதிகமும் செல்வதில்லை. மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டத்தில் 45நாட்கள்  மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கக்கூடாதென்று சட்டமிருக்கின்றது. வெட்ஜ் பேங்க் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு சிறந்த இடம். ஆனால், வெட்ஜ் பேங்கில் மீன்பிடிக்க வெளிநாட்டுக்கப்பல்களுக்கும், இழுவைமடிகளுக்கும்  தடையில்லை. இதை யாரிடம் முறையிடுவது?
இனயம் துறைமுக திட்டத்தினால் வெட்ஜ் பேங்க் மீன்பிடித்தளத்திற்கு ஏற்படும் சேதம் என்பது சென்னையைப்போல் பதினைந்து இருபது மடங்கு பரப்பளவுள்ள நிலப்பரப்பில் அறுவடைக்கு காத்திருக்கும் வயல்வெளியை தீவைத்து கொளுத்துவத்தைப்போன்றது. விவசாயம் சார்ந்த மக்கள் தங்கள் வீட்டில் வளரும் ஒரேயொரு தென்னையையோ அல்லது பனைமரத்தையோ தேவையில்லாமல் வெட்டிச்சாய்க்க முடிவெடுப்பார்களா? எப்படி நமது ஆட்சியாளர்கள் பல லட்சம் டன் மீன்வளத்தை அழிக்க முன்வந்திருக்கின்றார்கள்? காரணம், அவர்களுக்கு கடல்குறித்தும், மீன்குறித்தும் அடிப்படையான அறிவு எதுவும் இல்லை என்பதுதானே. மீனவர்களின் மீதான அவர்களின் நிசாரமான, துச்சமான பார்வைதானே இந்த முடிவிற்கு கொண்டுவந்திருக்கின்றது.
2015-16-ம் வருட கணக்குப்படி தமிழகத்தின் கடல் மீன் அறுவடை 4.57லட்சம் டன்கள். 7லட்சம் டன் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் நம்மிடம் போதுமான அளவு மீன்பிடி துறைமுகங்கள் இல்லாதது. இனயம், தூத்தூர், வள்ளவிளை பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஆழ்கடல் விசைப்படகுகள் இருக்கிறன. நம்மிடம் சிறந்த பெரிய மீன்பிடி துறைமுகங்கள் இல்லாத காரணத்தினால் அந்த படகுகள் அனைத்தும் கொச்சியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. அங்கேயே மீன்கள் அனைத்தயும் விற்கப்படுகின்றன. எனவே மீன் சம்பந்தமான அனைத்து வருவாயும் கேரளாவிற்குச் செல்கின்றது. வெட்ஜ் பேங்கிற்கு பக்கத்திலிருக்கும் தேங்காய்பட்டினம் துறைமுகம் இன்னும் முடிவடையவில்லை. கட்டிமுடித்தாக சொன்னதில் மீண்டும் கட்டுமானக் கோளாறு.
இனயம் துறைமுகம் வந்தால் வருடத்திற்கு 1500 கோடி லாபமிருப்பதாக சொல்கின்றார்கள். ஆனால், இதில் பாதி அளவிற்கு கடலை ஆழப்படுத்துவதற்காகவே செலவாகும். இரண்டு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை துச்சமாக நினைத்து, நம்முடைய பல்லாயிரம் கோடி மதிப்புள்ள மீன்வளங்களின் இருப்பைக்கூட அறியாமல், இந்திய வல்லரசுக்கனவிற்கு அதானியம்பானிகளின் வளர்ச்சி மட்டுமே போதுமென்று ஒரு சிலர் கனவு காண்கின்றார்கள்.
இனயம் துறைமுகத்திலிருந்து கிடைக்கும் வருட லாபமான 1500 கோடியை விட அதிகமான மீனை வெட்ஜ் பேங்க் மீன்பிடித் தளத்திலிருந்து அறுவடை செய்யமுடியும்.  அதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். நாம் அதிநவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கின்றோம். கடல்வள ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். மீன்பிடித்தல் சம்பந்தமான அனைத்து தொழில்நுட்பங்களையும் நாம் இன்னும் வெளிநாட்டிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கின்றோம். மீன்வள வளர்ச்சிக்கும், மீன் பிடித்தத்திற்கும் நாம் சொல்லும்படியான எந்தவித ஆய்வுகளையும் மேற்கொண்டதில்லை. ஆனால், பாரம்பரிய மீனவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தில் பலபடி மேலே சென்றிருக்கின்றார்.
தங்கள் ஒரே மீன்வனமான வெட்ஜ் பேங்கிற்கு அருகாமையிலிருக்கும் இனயத்தில் பன்னாட்டு வர்த்தக துறைமுகம் வருவது  வெட்ஜ் பேங்கை சார்ந்திருக்கும் இரண்டு லட்சம் மீனவர்களையும் தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்துவதற்குச் சமம். எதிர்கால இந்தியாவின் நிரந்தர வளர்ச்சியை கருத்தில்கொண்டும், இரண்டு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டும்  இனயம் துறைமுக திட்டத்தை கைவிடுவதே புத்திசாலித்தனம். வெட்ஜ் பேங்கின் மீன்பிடி உரிமையை இந்திய மீனவர்களுக்கு கொடுக்கவேண்டும். வெளிநாட்டு இழுவைமடி கப்பல்களும் படகுகளும் வெட்ஜ் பேங்கில் மீன்பிடிப்பதை தடைசெய்யவேண்டும். வெட்ஜ் பேங்க் ஒரு நிரந்தர மீன்வங்கி. கடலன்னை மீனவர்களுக்கு அளித்திருக்கும் அமுதசுரபி. முட்டாள்தனத்தினாலும், பேராசையினாலும் வங்கியை திவாலாக்கிவிட முயலக்கூடாது.
இணைப்புகள்: