எனது நல்லாசிரியர்கள்

[மார்த்தாண்டன்துறை புனித ஆலோசியஸ் மேல்நிலைப்ப்பள்ளி நூற்றாண்டுவிழா மலரில் வெளியான என்னுடைய கட்டுரை]

 

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” – மகாகவி. பாரதியார்

ஒரு பள்ளியின் வயது, அந்த பகுதியின் குறைந்தபட்ச நவீன கல்வியறிவின் வயது என்றுகூடச் சொல்லலாம். இந்தியாவில் ஒரு பள்ளி தன் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவது மிகவும் அபூர்வமானது. தற்போது நூற்றாண்டுவிழா கொண்டாடும் பள்ளிகளில் அநேகமானவை கிறிஸ்தவ மிஷனரிகளால் துவங்கப்பட்டவையாக இருக்கும். ஆனால், கடற்கரையில் மீனவர்களால் துவங்கப்பட்ட, மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தன் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவது மிகுந்த ஆச்சரியத்திற்குரியது. 1917-ம் வருடம் மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. அந்த பள்ளியில் எனது பள்ளிப்படிப்பை (1978-1990) முடித்தமைக்காக நான் பெருமைப்படுகின்றேன். தீர்க்கதரிசனத்துடன் இந்த பள்ளியை உருவாக்க பெருமுயற்சியெடுத்த என்னுடைய முன்னோர்களை பெருமையுடனும், நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.

இது பெயரளவில் கடற்கரையில் இருக்கும் பள்ளிக்கூடம். ஆனால், இதன் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள் அனைவரும் வெளிநிலத்தவர்கள். அனைத்து ஆசிரியர்களும் ஜாதி மதம் கடந்தவர்கள். நான் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வியின்ற பன்னிரண்டு வருடங்கள் எனக்கு கல்விகற்பித்த என்னுடைய நல்லாசிரியர்களை இந்த கட்டுரை மூலம் நினைவுகூர முயன்றிருக்கின்றேன். தேனீக்களைப்போல், எங்கிருந்தோ தேடிய அறிவுச்செலவங்களை நம்மீது சேமித்துவைத்தவர்கள். இன்று நான் அமெரிக்காவில் இருந்தாலும், என்னுடைய ஆசிரியர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டவன் என்பதை இதைவிட வேறுவழியில் சொல்லத்தெரியவில்லை. அதுபோல், ஒரு பள்ளியின் ஆண்டுவிழா அல்லது நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்கள் அந்த பள்ளிக்கு சேவைசெய்த ஆசிரியர்களை கௌரவிப்பதே சிறப்பானதாக இருக்கும். இந்த நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்திற்கு என்னுடைய பங்களிப்பாக ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்று என்னை கட்டாயப்படுத்திய நண்பர் செல்வதாசன் ஞானப்பிரகாசத்திற்கு என்னுடைய நன்றிகள்.

“அகிலாண்ட மண்டலம் அணியிச்சொருக்கி, அதினுள்ளில் ஆனந்த தீபம் கொளுத்தி, பரமாணு பொருளிலும் ஸ்வரணமாய் மின்னும், பரமப் பிரகாசமே சரணம் நீ எந்நும்

ஜனதேயும் ஜனதேயும் கைகோர்த்திணங்கி, ஜனிதா ஸவ்பாக்கியத்தில் கீதம் முழங்கி, நரலோக மெப்பேருமானந்தம் தேடி, விஜயிக்கான் நின்திரு நாமங்கள் பாடி”

இது எங்கள் பள்ளியின் காலைவணக்கப் பாடல். இந்த பாடல் மிக எளிதாக எங்களை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டது. இந்த பாடல் தற்போது நமது பள்ளியில் பாடப்படவில்லையென்றால், தொடர்ந்து பாடுவதற்கான முயற்சியை எடுக்கவேண்டும். காரணம், இந்த பாடல் நமது பள்ளி துவங்கிய காலத்திலிருந்தே பாடப்படும் இறைவணக்கப்பாடலாகக்கூட இருக்கலாம்.

நான் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கணிதம் படித்ததனால் நான் பெரும் அறிவாளியொன்றுமில்லை. ஆனால், கடின உழைப்பாளி. பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் பிரிட்டோ ஹாஸ்டல் ரெக்டர் அறையிலிருந்து பார்த்தால் என்னுடைய அறையின் உட்பகுதி மிகத் தெளிவாத்தெரியும். நடு இரவுவரை மின்விளக்கை எரியவிட்டு படிப்பதற்கு எனக்கு மட்டும் விதிவிலக்கு. முதுகலை படித்து முடித்து ஒரு சிறிய வேலைக்காவது சென்றுவிடவேண்டிய நிர்ப்பந்தம். தொடர்ந்து படிப்பதற்கான வசதியில்லை. பி.எட் முடித்து ஆசிரியர் ஆகவேண்டுமென்பதில் எனக்கு விருப்பமில்லை. கணிதத்தில் முதுகலை பட்டம் எந்த வேலையை எனக்கு பெற்றுத்தரும்? எம்பில் முடித்து டாக்டரேட் படிக்கவேண்டும். அவை என்னைப்போன்ற வறியவர்களுக்கானதல்ல.

தேர்வுமுடிவுகள் வெளிவந்தபிறகு புனித சவேரியார் கோயிலின் இடப்பக்கமிருக்கும் மாதாகுருசடியில் ஜெபம் செய்துவிட்டு வரும்போது என்னுடைய வாழ்வின் ஒளி ஏற்றப்பட்டிருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. என்னுடைய கணினி ஆசிரியர் முனைவர் திரு. அதிசயனாதன் சார் வந்துகொண்டிருந்தார். எனக்கு இளங்கலையிலும், முதுகலையிலும் கணினி துணைப்பாடம்.  அவரிடம் என்னுடைய நிலைமையைச் சொன்னேன். சில வினாடிகளில் பதில் சொன்னார். பாளையங்கோட்டையில் ஏதாவது நல்ல கணினி நிறுவனத்தில் சி++ அல்லது விஷுவல் பேசிக் மற்றும் ஆரக்கிள் படித்துவிட்டு சென்னைக்கு வேலைதேடிப் போகச்சொன்னார். கணித சிக்கல்களுக்கு தீர்வெழுதும் மென்பொருள் எழுதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச்சொன்னார். அவர் சொன்னதுபோல் சென்னைக்குச்சென்று பொலாரிஸ், ஹெச்.சி.எல் போன்ற பெருநிறுவனங்களில் வேலைபார்த்து தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்துவருகின்றேன். சென்னைக்குச் சென்ற துவக்க காலங்களில் மென்பொருள்துறையில் வேலைதேடுவதொன்றும் எளிய விஷயமல்ல. பொறியியல் பட்டதாரிகளுடன் போட்டியிடவேண்டும். சிறிய தூண்டில்கொண்டு நீலத்திமிங்கலம் பிடிப்பதைப்போன்றது.

என்னுடைய கணினிக்கல்வியின் அடித்தளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் போடப்பட்டது. 1988-ம் வருடம் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பாடம் அப்போதைய இந்திய பிரதமர் திரு. ராஜிவ் காந்தியின் பெருமுயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதப்பிரிவில் உயிரியல் பாடத்திற்குப் பதிலாக கணினி பாடம் உட்புகுத்தப்பட்டது. பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் எங்களுக்கு கணினி ஆசிரியாராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தவர் என்னுடைய ஊரைச்சார்ந்த திரு. சன்னி சார்.

கணினிக்கு தட்டச்சுப்பயிற்சி கண்டிப்பாக வேண்டுமென்று சொல்லி தட்டச்சு படிக்க என்னை நிர்பந்தப்படுத்தி, வள்ளவிளை புனித வின்செண்ட் தே பவுல் சங்க தட்டச்சு மையத்தில் வைத்து எனக்கு தட்டச்சு சொல்லித்தந்ததும் அவர்தான். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக நான் உட்பொதி முறைமை மென்பொருள் (Embedded Systems ) தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்க்கின்றேன். இரண்டடிமான எண்களையும் ( Binary Numbers) அறுபதின்ம எண்களையும் ( Hexadecimal Numbers) தினமும் பயன்படுத்துகின்றேன். இருமை (Binary) எண்களையும்,  எண்ம ( Octal ) மற்றும் அறுபதின்ம ( Hexadecimal ) எண்களையும் சன்னி சார் கரும்பலகையில் எழுதுவது இப்போதும் தெளிவாகவே தெரிகின்றது.

கணினியைப்போல் வேதியியல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடம். வேதியியல்  சமன்பாடுகளும் வேதிவினைகளும் நன்றாகத் தெரியும். மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் பாடம் நடத்தியது திரு. ஹரிஹரன் சார். எனக்கு வேதியியலின் மீது ஆர்வம் ஏற்படக்காரணம்,  ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திய திருமதி. நிர்மலாராணி டீச்சரும் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திய தேவநேசம் டீச்சரும். திருமதி. நிர்மலாராணி டீச்சர் எனக்குப்பிடித்தமான சிறந்த ஆசிரியர்களில் ஒருவர். அவர் தற்போது மேல்நிலையில் விலங்கியல் பாடம் நடத்துகின்றார்.

நிர்மலாராணி டீச்சர் எங்கள் பள்ளியில் இணைந்தபோது அவருடன் திருமதி. ஷீலா டீச்சரும்  திருமதி. ரோஸலின் நாயகம் டீச்சரும் புதிதாக சேர்ந்தார்கள். தற்போது ஷீலா டீச்சர் மேல்நிலையில் தாவரவியல் பாடம் நடத்துகின்றார். ரோசலின் நாயகம் டீச்சர் எங்களுக்கு ஆங்கிலப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவரது தலைப்பிரசவத்தின்போது அவரும் குழந்தையும் இறந்துபோனார்கள். அவர்களது நல்லடக்கத்திற்கு அவரது ஊரான ஆற்றூருக்கு சென்றிருந்தோம். அவரது கல்லறை இருந்த இடம் இரத்த நிறத்தில் செம்மண் நிறைந்து கிடந்தது இன்னும் நினைவிருக்கின்றது.

நான் கல்லூரியில் கணினி அல்லது வேதியியல் படிக்க விரும்பினேன். இந்த இரண்டு பாடங்களும் தூத்தூர் புனித யூதா கல்லூரியில் கிடையாது. மார்த்தாண்டம் ‘நேசமணி நினைவு கிறிஸ்தவ’ கல்லூரிக்குச் செல்லவேண்டும். பஸ்ஸில் சென்று படிக்கும் பொருளாதார நிலையில் நானில்லை. எனவே இன்னொரு விருப்பப்பாடமான கணிதத்தை தேர்ந்தெடுத்து தூத்தூர் புனித யூதா கல்லூரியில் சேர்ந்தேன்.

புனித அலோசியஸ் மேல்நிலைபள்ளியில் படித்தவர்கள் இரண்டு கணித ஆசிரியர்களை பயத்துடன் நினைத்துப்பார்ப்பார்கள். ஐந்தாம் வகுப்பில் கணிதப்பாடம் சொல்லித்தந்த திரு. தங்கராஜ் சார். அவருடைய கையிலிருக்கும் கம்பு இப்போதும் வாளைப்போல் மின்னுகின்றது. அடுத்து, பத்தாம் வகுப்பில் கணிதம் சொல்லித்தந்த திரு. தாணுமாலயப்பெருமாள் என்னும் மூர்த்தி சார். கணித அடிப்படைகள் இவர்கள் சொல்லிக்கொடுத்தது. ‘தேங்காய் பிளஸ் மாங்காய் த ஹோல் ஸ்கொயர் என்னடே?’ என்று கைசொடுக்கும் வேகத்தில் கேட்பார். சொல்லவில்லையென்றால் நுணுக்கியெடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் மிக விரைவாக கணித வாய்ப்பாடுகள் சொல்வார். தங்கராஜ் சாருக்குப் பயந்து பள்ளிக்கு வராமலிருந்தவர்களும் உண்டு. ஏழாம் வகுப்பில் திருமதி. மேழ்சி டீச்சரும் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் திருமதி. ட்ரீசா டீச்சரும் கணிதம் சொல்லித்தந்தார்கள். நமக்கு எந்த ஆசிரியரின் மீது ஈர்ப்பு அல்லது மரியாதை இருக்கின்றதோ அவர்கள் சொல்லித்தரும் பாடமும் நமக்கு பிடித்துப்போகும். அந்த வகையில் அனைத்து பாடங்களும் எனக்கு விருப்பமான பாடங்கள்தான்.

மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் பாடம் நடத்தியது திருமதி. டார்லிங் மேரி டீச்சர். சிறிது நாட்கள் ஜெயக்குமார் சாரும் பாடம் நடத்தினார். மற்ற பாடங்களை ஒப்பிடும்போது இயற்பியல் பாடம் எனக்கு சிறிது கடினமானது. தற்போது அதற்கான காரணம் என்னவென்று யோசித்தபோது தெரிந்தது, என்னுடைய ஆங்கில அறிவின் போதாமை. நான் ஒரு பரிபூரணமான கிராமத்து மாணவன். குறிப்பாக கடற்கரை மாணவர்களின், அதுவும் முதல் தலைமுறை மாணவர்களின், ஆங்கிலத்திறன் குறித்து சொல்லத்தேவையில்லை. பத்தாம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வியில் படித்துவிட்டு திடீரென்று மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பது கடினமான ஒன்று. இது நமது கல்வி முறையின் பிரச்சினை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஒரு மணிநேரம் மட்டும் ஆங்கிலம் படித்துவிட்டு, மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பது ஒருவிதனமான சித்திரவதை.

மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை திரு. நேசையன் சார் ஆங்கிலப்படம் நடத்தினார். அதன் பிறகு திருமதி. ஜெனி டீச்சர். விடுமுறை நாட்களில்  ஜெனி டீச்சரின் வீட்டைச்சுற்றி நிற்கும் மாந்த்தோட்டத்தில் நண்பர்களுடன் குரங்கு விளையாடச்செல்வோம். ஒருமுறை ஒரு உயர்ந்த கிளையில் ஒரு நண்பன் தாவி ஏறியபோது கிளை ஒடிந்து கீழே வீழ்ந்தான். அதன் பிறகு அங்கு செல்வதில்லை. ஆறாம் வகுப்பில் திருமதி. ரீத்தம்மா டீச்சர் சிறிது நாட்கள் ஆங்கிலப்பாடமெடுத்தார். பிறகு வள்ளைவிளை புனித யூதா பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். பத்தாம் வகுப்பில் திரு. முத்தையன் சார் இலக்கணம் மிகச்சிறப்பாக கற்றுத்தந்தார். ஆங்கிலப்பாடல்களை மிகச் சரளமாக எழுதுவார். அவை புத்தகமாக வெளிவந்ததென்றும் சொன்னார்கள்.   சமீபத்தில் அவர் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார். மேல்நிலைப்பள்ளியில் திரு. கெவன்சன் சார் ஆங்கில ஆசிரியர். அனைவரும் சிறந்த ஆசிரியர்கள்.  பிரச்சினை  என்னவென்றால் ஆங்கிலப்பாடம் வகுப்பறையில் படிப்பது மட்டும்தான். வீட்டில், கவிழ்த்து வைத்த ஓலைப்பெட்டியின்மீதிருக்கும் மண்ணெண்ணைவிளக்கு வெளிச்சத்தில் முதுகு குனிந்து படித்துக்கொண்டிருக்கும்  ஆங்கில பாடத்தில் ஏதேனும் சந்தேகமென்றால் எனக்கு நானே சொல்லித்தரவேண்டும். அதற்குப்பதிலாக கடற்கரையில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு நிம்மதியாக தூங்கலாம். சில நாட்கள் எங்கள் ஊர் சார்பாக, திரு. ஜெரால்டு சில்வா பங்குத்தந்தையாக இருந்தபோது,  டியூஷன் நடத்தினார்கள். திருமதி. செல்வி வள்ளவிளை பள்ளிக்கூடத்தில் வைத்து எங்களுக்கு ஆங்கிலப்படம் சொல்லித்தந்தார்கள்.

பாதிரியார்களை அதிகம் கொண்ட ஊர்களில் ஆங்கிலம் ஒரு பிரச்சினையாக இருப்பது பரிதாபகரமானது. அந்தந்த ஊர்களிலிருக்கும் பாதிரியார்கள் கல்விநேரம் போக, காலையிலோ மாலையிலோ நம்முடைய பள்ளிக்கூடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வியை, குறிப்பாக பேசவும் எழுதவும் கற்பித்தால் போதுமானது. மாணவகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பத்தாம் வகுப்பில் திருமதி. இசபெல்லா டீச்சர் வரலாறு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நானும் ரிச்சார்டும் எப்போதும் பக்கத்தில்தான் அமர்த்திருப்போம். அன்று நாங்கள் தனித்தனியாக இருந்ததை டீச்சர் கவனித்துவிட்டு பாடமெடுப்பதை நிறுத்தி, பின்னர் எங்களிடம் என்னவென்று விசாரித்தார். எங்கள் இருவருக்கும் ஒரு சிறு பிணக்கு. நட்புக்கு இலக்கணமாக இருக்கும் நீங்கள் சண்டை போடக்கூடாதென்று சொல்லி இரண்டு கோப்பை தேநீர் வரவழைத்து எங்களுக்கு குடிக்கத்தந்து எங்களை சேர்த்துவைத்தார். அவன் எனக்கும், நான் அவனுக்கு ஊட்டவேண்டும். பள்ளியில் தேநீர் போடுவதற்கான பசும்பால், திரு. சாகுல் ஹமீது சாரின் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும். சாகுல் சார் மலையாளமென்பதால் எனக்கு பாடமெடுக்கவில்லை. பல கிரிக்கெட் போட்டிகளை அவரது வீட்டிலிருந்து பார்த்ததுண்டு.

ரிச்சார்டும் நானும் ஒன்றாம் வகுப்பிலிருந்து இணைபிரியாத நண்பர்கள். தொடர்ந்து கல்லூரிவரை ஒன்றாக படித்தோம். சிறுவயதில் ஒருநாள் இரவு பொழியூர் கொல்லங்கோடு கொட்டகையில் சினிமா பார்ப்பதற்காக நாங்கள் இருவரும் சென்றுகொண்டிருக்கும்போது, நீ சாப்பிட்டாயா என்று விசாரித்துவிட்டு, வீட்டில் பட்டினி என்று சொன்னதும் அவனுடைய கையிலிருந்த சினிமா பார்ப்பதற்கான காசிற்கு மாவு உருண்டையும் பழமும் வாங்கித்தந்தான். அதே நட்பு இப்போதும் தொடர்கின்றது. திருமதி. இசபெல்லா டீச்சர் எங்கள் நட்பின் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டதில் வியப்பில்லை. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் திரு. டானியல் சாரும், எட்டு மற்றும் ஒன்பதில் திருமதி. ஹேமாவதி டீச்சரும் வரலாறு ஆசிரியர்கள். திருமதி. ஹேமாவதி டீச்சர் எங்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்தார். ஒன்தாம் வகுப்பில் பாடமெடுத்த லலிதாம்பிகா டீச்சர் சில மாதங்களில் மாற்றலாகிச் சென்றார்.

தமிழ் பாடமென்றால் முதலில் ஞாபகம் வருவது எங்கள் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி. ரெபேக்கம்மா டீச்சரின் சிரித்த முகம். நெற்றியில் பெரிய வட்ட வடிவில் பொட்டு வைத்திருப்பார். இரண்டாம் வகுப்பில் திருமதி. ஹெலன் டீச்சர் வகுப்பாசிரியை. மார்த்தாண்டந்துறை புனித வியாகுல மாதாவின் புதிய கோயிலினுள் வௌ;ளைமணலில் வைத்து எங்களுக்கு பாடமெடுத்தார். மூன்றாம் வகுப்பில் திருமதி. சத்தியப்பி டீச்சரும், நான்கு மாற்றும் ஐந்தாம் வகுப்புகளில் திரு. குமார் சாரும் தமிழ் கற்றுத்தந்தார்கள். குமார் சார் மாணவர்களை அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. சில மாதங்கள், பள்ளி முடிந்து மாலை நேரங்களில், எங்களுக்கு ஹிந்தி பாடமும் சொல்லித்தந்தார். திருமதி. ஜோசபின் டீச்சரும்;, திருமதி. மார்கிரட் அம்மாள் டீச்சரும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில்; பாடமெடுத்தார்கள்.

ஏழு மற்றும் எட்டாம் வகுப்பில் திருமதி. லில்லிமேரி டீச்சர் தமிழ்பாடமெடுத்தார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்து போனார். அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒருமுறை அலைபேசியில் பேசினேன். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் திருமதி. குளோரி டீச்சர் தமிழாசிரியை. தமிழ் இலக்கியத்தையும், யாப்பிலக்கணத்தையும் (நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா) கற்றுத்தந்தவர்.

மேல்நிலைப்பள்ளியில் திருமதி. அல்போன்சம்மா டீச்சர் தமிழ் ஆசிரியை. அல்போன்சம்மா டீச்சரின், ‘திருமணத்தின்போது தாலிகட்டும் முறை’ குறித்த விவாதம் மறக்கமுடியாதது. கிறிஸ்தவ திருமணத்திற்கு சென்றவர்களுக்குத்தெரியும், மணமகன் தாலியை பெண்ணின் கழுத்தில் வைப்பார். மணப்பெண்ணிற்கு தாலி கட்டுவது மணமகனின் அக்காவோ தங்கையாகவோ இருக்கும். இந்த முறையை மாற்றவேண்டும். தன்னுடைய மனைவிக்கு மணமகன்தான் தாலிகட்டவேண்டும். என்னுடைய மாணவர்கள் நாத்தனார் தாலிகட்டும் முறையை மாற்றவேண்டும். அவன் தான் என்னுடைய உண்மையான மாணவன் என்று எங்களுக்கு சொன்னவர்.

எங்களுக்கு படம் வரைய கற்றுத்தந்தவர் திரு. பிரபாகர பணிக்கர் சார். பென்சில் எப்போதும் கூர்மையாக இருக்கவேண்டும். வரைபடத்தாளை சிறிது கறுப்பாக்கினாலும் அடிதான். சிறுவயதில் எங்களை பள்ளிக்கூடத்திலிருந்து திரைப்படம் பார்க்கக் அழைத்துச் செல்வார்கள். பழைய உச்சக்கடை ஸ்ரீகுமார் திரையரங்கில் ‘அம்பா, அம்பிகா, அம்பாலிகா’ திரைப்படம் பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கின்றது. பரசுராமரின் அம்புகளை பீஷ்மரின் அம்புகள் துளைத்துச்செல்லும்.

எங்கள் பள்ளி நாட்களில் விளையாட்டிலும் புனித அலோசியஸ் பள்ளி சிறந்து விளங்கியது. திருமதி. ஜோதீஷ்மதியம்மா டீச்சரும், திரு. ஜான் வில்லியம் சாரும் எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள். அவர் ஒரு சிறந்த சித்த வைத்தியரும் கூட. விளையாடும்போது மாணவர்களுக்கு சிறிய முறிவு ஏற்பட்டால் அவரே வைத்தியம் பார்ப்பார். அவரால் கையாள முடியவில்லையென்றால்  அவரது வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்வார். ஆண்கள் மற்றும்  பெண்கள் ஹாக்கி அணியை உருவாக்கினார்.  பெண்கள் ஹாக்கி அணி தொடர்ந்து பல பதக்கங்களை வென்றது. திரு. சூசைநாயகம் சார் துணை ஆசிரியராக வந்த பிறகு, நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, 1-0 என்ற கோல் கணக்கில் தூத்தூர் பயஸ் மேல்நிலைப்பள்ளியை தோற்கடித்தோம். நானும் எங்கள் அணியில் உண்டு. கால்பந்தைப் பொறுத்தவரை இதுவொரு சாதனைதான்.

ஒரு பள்ளியின் முதுகெலும்பு அதன் தலைமை ஆசிரியர். சிறந்த தலைமை ஆசிரியர்களை கொண்ட பள்ளிகள் பேறுபெற்றவை. எங்கள் காலத்தில் தலைமை ஆசிரியருக்கு சிறந்த உதாரணம் திரு. வர்கீஸ் சார் அவர்கள். கையில் பிரம்புடன் வரும்போது நமக்கு கை கால் நடுங்கும். திடீரென்று நம்முடைய வகுப்பறையில் வந்து பாடமெடுப்பார். எங்களுக்கு பத்தாம் வகுப்பில் ஒரு நாள் கணித பாடம் நடத்தினார். மேட்ரிக்ஸ் பெருக்கல் பாடத்தை கல்லில் செதுக்குவதுபோல் சொல்லித்தந்தார். பொதுத்தேர்வில் மேட்ரிக்ஸ் வினாவிற்கு அனைவருக்கும் முழுமதிப்பெண்களும் கிடைத்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

எங்கள் பள்ளியில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முந்திய காலங்களில்;, இரவுநேரப் படிப்பும் உண்டு. மின்சார வசதியில்லாத என்னைப்போன்ற மாணவர்களுக்கு இது பேருதவியாக இருந்தது. இரவுப்படிப்பு நாட்களில் அதிகாலை நான்கு மணிக்கு அவரது வீட்டிலிருந்து மூன்று நான்கு கிலோமீட்டர்கள் நடந்து எங்களை மேற்பார்வையிட வருவார். அவர் பள்ளியில் இருக்குமிடம் எப்போதும் மயான அமைதியாகதான் இருக்கும். ஒருமுறை பெரிய அண்ணன்மார்கள் பள்ளிக்கு வெளியில் சென்று போராட்டம் நடத்தியபோது, அவர்களை கடலைத்தேடி வெரட்டியட்டித்தார். அதற்கு முன்னும் பின்னும் புனித அலோசியஸ் பள்ளியில் போராட்டமென்பதே இல்லை. பள்ளிக்கு சிறிது தாமதமாக வந்தாலோ, சிறுதவறு செய்தால்கூட தயவு தாட்சண்யம் காட்டமாட்டார். புனித அலோசியஸ் பள்ளியிலிருந்து ஒவ்வொரு வருடமும் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வார்கள். நான் ஒருமுறைகூட சென்றதில்லை. நாங்கள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை நாகர்கோவிலில் பதிவு செய்துவிட்டு, எங்களை சுசீந்திரம் கோயிலுக்கும் கன்னியாகுமரிக்கும் அழைத்துச்சென்றார். கிறிக்கெட் போட்டிகளையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகாபாரதம் டீவி தொடரையும் பார்ப்பது வர்க்கீஸ் சாரின் வீட்டிலிருந்துதான். அவரது காலத்தில் புனித அலோசியஸ் பள்ளி கல்வியில் சிறந்து விளங்கியது. திரு. வர்கீஸ் சாருக்கு முன்பு தலைமை ஆசிரியராக இருந்த பாறசாலை திரு. கிறகரி சாரும் ஒரு சிறந்த ஆசிரியரென்று அவரிடம் கல்விபயின்றவர்கள் சொன்னார்கள்.

புனித அலோசியஸ் பள்ளி பல கல்வியாளர்களையும், தலைவர்களையும் தந்திருக்கின்றது. குறிப்பாக,  தற்போதைய திருவனந்தபுரம் பிஷப் டாக்டர். சூசைபாக்கியம் மற்றும் நம்முடைய கடற்கரையின் முதல் ஐஏஎஸ் அதிகாரி திரு. மரிய டெசால்பின் ஆகியோர் புனித அலோசியஸ் பள்ளி மாணவர்கள் என்பதில் நமக்கு பெருமையுண்டு.

மார்த்தாண்டந்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இல்லையென்றால், என்னைப்போன்ற பலரும் கல்லூரிப்படிப்பை எட்டியிருப்போமா என்பது கேள்விக்குறியே. கடல் எங்களை அரவணைக்க எப்போதும் இருகரம் விரித்து காத்துக்கொண்டேயிருக்கும். கடலின் பிடியிலிருந்து எங்களை விடுவித்த எங்கள் நல்லாசிரியர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். கடலன்னைக்கு மாறாக சரஸ்வதியின் அருள் எங்களுக்குக்கிடைத்தது நாங்கள் பெற்ற பெரும்பேறு. பாரதி சொன்னதுபோல், ஏழைகளுக்கு கல்வி புகட்டிய உங்கள் அனைவருக்கும் ஒரு கோடி புண்ணியங்கள். உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி கடற்கரையிலிருக்கும் ஒரு ஏழையின் இருண்ட வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஒரு சிறு மெழுகுவர்த்திரி. கடந்த நூறுவருடங்களாக எந்த புயலிலும் அணையாமல் அது தன் ஒளியைவீசி பலரின் வாழ்வை மேன்மையடையச்செய்திருக்கின்றது. புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இன்னும் பல நூற்றாண்டுகள் தன் கல்விச்சேவையை தொடர இறைவன் அருள்புரியட்டும். நன்றி!




மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s