இனயம் துறைமுகம்

[எதிர் வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய ‘இனயம் துறைமுகம்’ என்னும் கட்டுரை நூலுக்கு எழுதிய முன்னுரை.]

கடந்த காலங்களை விட தற்போது கடலரிப்பு காரணமாக  கடற்கரைகள்  வெகுவிரைவாகச் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. மீனவர்கள் கடற்கரைகளிலிருந்து அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த கடற்கரையில் 60% கடற்கரைகள் கடலரிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது. கடந்த  பதினைந்து   வருடங்களில் 250 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இந்திய கடற்கரைகளை கடல்கொண்டிருக்கின்றது. இதற்கு கடற்கரை சார்ந்த கட்டுமானங்களும் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வும் முக்கிய காரணங்கள். கடற்கரையில் துறைமுகம் போன்ற கட்டுமானங்கள் அதிகரிக்க கடற்கரைகள் இன்னும் அழிந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு எல்லையை விரிவாக்கம் செய்ய முயன்று கொண்டிருக்கும்போது,  நமது  கவனக்குறைவினாலும், தவறான முடிவுகளாலும், இந்திய நாட்டின் நிலப்பரப்பை கடலிடம் சிறிது சிறிதாக நாம் இழந்துகொண்டிருக்கிறோம்.

 

நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய வீட்டிற்கு தெற்கில் இரண்டு வரிசை வீடும், மூன்று வரிசை தென்னை மரங்களும் இருந்தன. தற்போது, தென்னை மரங்கள் இருந்ததற்கான தடையமில்லை. ஒரு வரிசை வீடுகளும் கடலரிப்பில் அழிந்துவிட்டது.  ஐந்து வருடங்களுக்கு முன்பு, வள்ளவிளை மற்றும் இரவிபுத்தன்துறை கிராமங்களுக்கு இடைப்பட்ட கடற்கரை சாலை கடலரிப்பு காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. அந்த கடற்கரை சாலை இதுவரை சரிசெய்யப்படவிலை. கடல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கின்றது. அதை தடுப்பதற்கான முயற்சி இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வருடம் மட்டும் வள்ளவிளையில் பத்திற்கும் அதிகமான வீடுகள் முழுவதுமாக கடலெடுத்திருக்கின்றது. தென்மேற்கு கடற்கரையில் கேரளத்தை ஒட்டிய அனைத்து கடற்கரை கிராமங்களின் நிலையும் இதுதான்.

 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த கண்டைனர் சரக்கு வர்த்தகத்தில் 70% துறைமுகங்களை அடிப்படையாகக்கொண்டு கடல்வழியாக நடக்கின்றது. சரக்கு வர்த்தகத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும், கடற்கரைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் புதிய துறைமுகங்களை கட்டுவதற்காக இந்திய அரசு சாகர்மாலா என்னும் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியிருக்கின்றது. சாகர்மாலா திட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு கடற்கரையிலிருக்கும் இனயம் கிராமத்தில் ‘பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம்’ என்னும் பெயரில் 28,000 கோடி செலவில் ஒரு பெருந்துறைமுகத்தை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது. ஆனால், மத்திய அரசாங்கம் தேர்வுசெய்துள்ள இனயம் துறைமுகப்பகுதியில் மக்கள் செறிவாக வசிக்கின்றார்கள்.

 

ஏற்கெனவே, இனயத்திற்கு வெகு அருகில், 25 கிலோமீட்டர் வான்வெளி தொலைவில், கேரளாவின் விழிஞ்சத்தில் பன்னாட்டு துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது. ஆனால், விழிஞ்சம் துறைமுகத்தினால் அரசாங்கத்திற்கு எந்தவித பலனுமில்லையென்று இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான திரு. இ. ஸ்ரீதரனும், விழிஞ்சம் துறைமுகம் ஏற்கெனவே கட்டப்பட்டுவருவதால், அதற்கு பக்கத்திலிருக்கும் இனயம் பகுதியில் இன்னொரு துறைமுகம் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திரு. சசி தரூரும், ‘புதிய துறைமுகம் வரும்போது அதை சுற்றிய பகுதிகளில் துறைமுகத்தை நம்பியிருக்கும் தொழிற்பேட்டைகள் வேண்டும்; எந்த விதமான தொழில்களும் தொழிற்பேட்டைகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை. எனவே இனயம் துறைமுகத்திட்டம் தேவையற்ற ஒன்று’ என்று கப்பல் நிபுணரும் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி’குரூஸ் அவர்களும் சொல்கின்றார்கள். இனயம் துறைமுகத்தினால் விழிஞ்சம் துறைமுகத்தின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும் என்ற காரணத்தினால் கேரள அரசு இனயம் துறைமுகத்தை தீவிரமாக எதிர்ப்பதை நேர்மையானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

விழிஞ்சம் துறைமுகத்தை கேரள அரசும் அதானி குழுமமும் இணைந்து அரசு – தனியார் கூட்டுமுயற்சி (Public Private Partnership) முறையில்  நிர்வகிக்கவிருக்கின்றார்கள். பொதுவாக PPP முறையில் முதல் 30 வருடங்கள் தனியாரும் அதன்பிறகு அரசும் துறைமுகத்தை நிர்வகிக்கவேண்டும். ஆனால், கேரள அரசு அதானி குழுமத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி குழுமம் முதலில் 40 வருடங்களும் அதன் பிறகு 20 வருடங்களும்  நிர்வகிக்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கேரள அரசிற்கு 29,217 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுமென்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்ககையாளரின் அறிக்கை சொல்கின்றது.

 

ஆனால், துறைமுகம் சார்ந்த தொழிலில் நிச்சயமற்ற எதிர்காலமும், தோல்வி ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் தனியாருக்கு இதுபோன்ற சலுகைகளை செய்வதில் தவறில்லை என்று மர்மகோவா துறைமுக கழகத்தின் முன்னாள் தலைவர் திரு. ஜோஸ் பால் அவர்கள் கேரள அரசும் அதானி குழுமமும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பேசுகின்றார். விழிஞ்சம் துறைமுகத்தின் எதிர்காலமே நிச்சயமில்லாமல் இருக்கும்போது, விழிஞ்சத்திற்கு வெகு அருகில் இனயத்தில் இன்னொரு பன்னாட்டு துறைமுகம் எதற்கு என்ற கேள்வியும் எழுகின்றது.

 

துறைமுகம் போன்ற கடல்சார்ந்த கட்டுமானங்கள்  உள்நாட்டில் கட்டப்படும் கட்டுமானங்களைப்போன்றதல்ல. துறைமுகக் கட்டுமானங்கள் கடல் நீரோட்டங்களில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதன்காரணமாக கடலரிப்பு ஏற்படுகின்றது. துறைமுகங்கள் கடல் சூழியலுக்கு பெரும் பாதிப்பபையும் ஏற்படுத்துகின்றது. இனயம் துறைமுகம் சார்ந்த கடற்கரைகள் அபாயகரமான கடலரிப்பு பகுதிகளில் இருக்கின்றது. இதுபோன்ற பகுதிகளில் துறைமுகம் போன்ற பெரிய கட்டுமானங்களை அனுமதிக்க முடியாதென்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ‘சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை’ அமைச்சராக இருந்த திரு. ஜெயராம் ரமேஷ் சொல்லியிருந்தார். ஆனால், அவற்றை தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சகம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

 

கடற்கரைகளில் கடலரிப்பு துறைமுக கட்டுமானங்கள் முக்கியமான காரணியாக இருக்கின்றன. துறைமுகப்பகுதிகளின் ஒரு பக்கம் கடலரிப்பும், இன்னொரு பக்கம் கடற்கரை பெருக்கமும் இருப்பதை அனைத்து துறைமுகப்பகுதிகளிலும் காணமுடியும். எனவே, இனயம் போன்ற அபாயகரமான கடலரிப்பு பகுதிகளில் கட்டப்படும்  பெருந்துறைமுகங்கள் கடற்கரையை முற்றாக அழித்துவிடும் வல்லமை கொண்டது.

 

இனயம் துறைமுகத்திற்கு மாற்றாக தமிழகத்தின் தென்மேற்குக் கடற்கரையில் துறைமுகக் கட்டுமானத்திற்கு உகந்த வேறு இடங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இனயம் சார்ந்த கடற்கரைகளில் கட்டப்படும் துறைமுகங்கள் விழிஞ்சம் துறைமுகத்தின் துணைத்துறைமுகங்களைப் போன்றுதான் இருக்கும்.

 

இனயம் துறைமுகத்தினால் பாதிப்புகள் தான் அதிகமென்பதற்கான காரணங்களை கடந்த ஒன்றரை வருடங்களாக எழுதிய இந்த சிறிய கட்டுரைகளின் வழியாக முன்வைத்திருக்கின்றேன். சுருக்கமாக சில காரணங்கள் இவை:

 

 1. இனயம் துறைமுகத்தின் மேற்கில் தீவிர கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமங்களை கடல்கொள்ளும் அபாயம்.
 2. வெட்ஜ் பேங்க் மற்றும் கடற்கரையை ஒட்டிய பவளப்பாறைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 3. இனயம் துறைமுத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு.
 4. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் ரசாயனப் பொருட்கள் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கும்.
 5. கப்பல் கழிவுகள், எண்ணெய்க் கழிவுகள் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். அதுபோல், இனயம் பகுதியிலிருக்கும் அரியவகை ஆமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 6. கடலை ஆழப்படுத்துவதால் நீரோட்டத்துடன் அடித்துவரப்படும் கதிர்வீச்சு தனிமமணல் காரணமாக புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம்.
 7. அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து பாரம்பரிய மீனவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சவாலாக இருக்கும்.
 8. உரிய ஆய்வுகள் செய்யப்படாமல் துறைமுகம் கட்டப்படுவதால் அது துறைமுகம் சார்ந்த பகுதிகளில் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தும்.
 9. ஏற்கெனவே சுனாமி பாதிப்பிற்குள்ளான பகுதியென்பதால், துறைமுக கட்டுமானம் சுனாமியின் பாதிப்பை இன்னும் அதிகரிக்கும்.
 10. இனயத்திலிருந்து மேலக்குறும்பனை வரையிலான பாரம்பரிய மீன்வர்கள் வேறு கடற்கரை கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து மீன்பிடிக்கும் சூழலை ஏற்படுத்தும்.

 

இந்த கட்டுரைகளும் பத்திகளும் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டவையல்ல. கடல் சூழியல் மற்றும் மீனவர்களின் மீதான அக்கறையுடன் மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. இந்த கட்டுரைகளின் வழியாக மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக என்னென்ன செய்யலாமென்பதை இங்கே தருகின்றேன்.

 

 1. கடலரிப்பை தடுப்பதற்கான, நமது கடற்கரைகளுக்கு ஏதுவானகட்டுமானத்திற்கான உண்மையான ஆய்வுகளை விரிவாக மேற்கொள்ளவேண்டும். ஆய்வுகளின் அடிபப்டையில் கட்டுமானத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும். கடற்கரைகளில் சோதனை முயற்சியை கைவிடவேண்டும்.

 

 1. கடலரிப்பை தடுப்பதற்கான கட்டுமானங்களினால் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளுக்கும், கடற்கரைகளில்ஆமைகள் குஞ்சு பொரிப்பதற்கும், கடல் நீரோட்டத்திற்கும், சூழியலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும்.

 

 1. கடல் மற்றும்கடற்கரை சார்ந்த, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும்  வசிப்பிடம் சம்பந்தமான எந்தவிதமான புதிய சட்டங்களோ அல்லது சட்ட திருத்தமோ மேற்கொள்ளும்போது அந்த சட்ட வரைவுகளை அந்தந்த பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து மீனவர்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும். சட்ட வரைவு குறித்த விழிப்புணர்வை அரசு மீனவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மீனவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் ‘பிரதான துறைமுக அதிகாரசபை மசோதா, 2016’ -ஐ நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், பிரதான துறைமுக வாரியத்தில் மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்யவேண்டும்.

 

 1. இந்தியாவிற்கு சொந்தமான, மீன்கள் செழித்து வளரும் வெட்ஜ் பேங்க் என்னும் பவளப்பாறைதிட்டுகளில் வெளிநாட்டு கப்பல்களும் படகுகளும் மீன்பிடிப்பதற்கான உரிமையை ரத்து செய்யவேண்டும். வெட்ஜ் பேங்கில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் கிடைக்கும் அந்நிய செலாவணியும், வருவாயும் இனயம் துறைமுகத்தினால் கிடைக்கும் லாபத்தைவிட அதிகமாக இருக்கும்.

 

 1. மீனவர்களுக்கு தேவையானது உலகத்தரம் வாய்ந்த சிறிய மீன்பிடித் துறைமுகங்கள். தானியங்கு இயந்திரங்களை அடிபப்டையாகக் கொண்டிருக்கும்இனயம் போன்ற பன்னாட்டு துறைமுகங்களை விட அதிகமான வேலைவாய்ப்பை இந்த சிறிய மீன்பிடித் துறைமுகங்களினால் உருவாக்க முடியும். பெருந்துறைமுகங்களை விட சிறு துறைமுகங்களினால் கடலரிப்பின் வீரியம் குறைவு. அதைப்போல், சிறந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டப்படும் சிறு துறைமுகங்கள் கடல் நீரோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன்.

 

 1. மீனவர்களுக்கு பாதிப்பபை ஏற்படுத்தும் இனயம் துறைமுகத்தை கைவிட்டுவிட்டு அந்த திட்ட மதிப்பின் ஒரு சிறுபகுதியைக் கொண்டு, ஏற்கெனவே அதிக அளவில்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மக்களுக்காக ஒரு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்க வேண்டும். இனயம் சார்ந்த பகுதியில் கடல் பொறியியல் மற்றும் கடலியல் ஆய்வுகளுக்கான கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும். பாரம்பரிய மீனவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

 

 1. இனயத்திற்கு பக்கத்தில் கட்டப்பட்டுவரும் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தினால்மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணமாக, பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் கல்விச்சலுகைகள் அனைத்தும் மீனவர்களின் பெண் குழந்தைகளுக்கும் கிடைப்பதற்கான அரசாணையை கேரளா அரசு வெளியிட்டிருக்கின்றது. தற்போது, இது விழிஞ்சம் துறைமுக எல்லைக்கு உட்பட்டிருக்கும் கேரள மீனவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்கின்றது. ஆனால், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களும்  விழிஞ்சம் துறைமுக எல்லைக்குள் வருகின்றது. எனவே, தமிழக மீனவர்களின் குழந்தைகளுக்கும் அந்த சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும். அதுபோல், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

 

 1. மீனவர்களின் நீண்டகால  கோரிக்கையாக இருக்கும், மீன்வளத்திற்கென்று தனியாக ஒரு அமைச்சக்கத்தை உருவாக்க வேண்டும்.

 

 1. இனயம் சார்ந்த பகுதிகள் தமிழகத்தோடு இணைவதற்கு முன்பு, திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் இருந்தபோது மீனவர்களுக்கான கொல்லங்கோடு சட்டமன்ற தனித்தொகுதியை மீனவர்களுக்கு மீண்டும்கிடைக்கச்செய்ய வேண்டும்.

 

 1. புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் பிரதான துறைமுக அதிகாரசபை மசோதாவை ஆய்வு செய்த நிலைக்குழு பரிந்துரைத்திருப்பதுபோல் பெருந்துறைமுகத்தின் 100கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய துறைமுகங்களைக் கட்ட அனுமதிக்கக்கூடாது. விழிஞ்சம் துறைமுகத்தை பெருந்துறைமுகமாகக் கணக்கில்கொள்ளவேண்டும்.

 

நமது மத்திய மாநில அரசாங்கங்கள் மீனவர்களின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டிருக்கும் பட்சத்தில் மேற்கண்ட மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமென்றே நினைக்கின்றேன்.

 

புத்தகம் வெளிவர உதவி புரிந்த கவிஞர். போகன் சங்கர், எதிர் வெளியீடு அனுஷ், நண்பர்கள் உயிரியல் விஞ்ஞானி வேணு தயாநிதி, திலீப் ஜோஸ் அலெக்ஸ் மற்றும் பாலசுப்ரமணியம் முத்துசாமி ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

 

என் மனைவி மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பில்லாமல் இந்தக் கட்டுரைகள் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு என் பேரன்பு.

 

என்னுடைய முந்தைய புத்தகமான துறைவன் நாவலைப்போல், இந்த சிறிய கட்டுரை புத்தகத்தையும், மீனவர்களின் ஞானத்தந்தையான புனித பிரான்சிஸ்  சவேரியாருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.

 

குறிப்புகள்:

 1. http://www.hindustantimes.com/india/india-lost-250-sq-km-to-rising-seas-in-15-years/story-6q8Wm4IMdurmCZkDUs4UiJ.html
 2. http://indianexpress.com/article/india/maharashtra/assessment-using-satellite-data-60-of-coastal-length-under-erosion-suggest-reports/
 3. http://www.thehindubusinessline.com/opinion/cag-charges-on-vizhinjam-are-baseless/article9760559.ece
 4. http://www.thehindu.com/news/national/kerala/vizhinjam-pact-loaded-in-favour-of-adani-cag/article18530667.ece
 5. http://tamil.thehindu.com/opinion/columns/குளச்சல்-இணையம்-பெருந்துறைமுகத்-திட்டம்-போகாத-ஊருக்கு-வழி/article8904616.ece
 6. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/kerala-to-take-colachel-issue-to-pm-narendra-modi/articleshow/53225792.cms
 7. https://www.youtube.com/watch?v=GBH965v1uMA