முக்காரு யுத்த கதா

-1-

இலங்கையின் சிங்கள அரசர் ஆறாம் பராக்கிரமபாகு, காஞ்சிபுரம், கீழக்கரை மற்றும்  காவேரிப்பட்டினம் கரையர் படைகளின் உதவியுடன் புத்தளத்தில் முகாமிட்டிருந்த  முக்காரு படையை தோற்கடித்ததை விவரிக்கும் முக்காரு யுத்த கதா என்னும் ஓலைச்சுவடி பிரிட்டானிய அருங்காட்சியகத்தில் (எண். Or. 6606) பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர் ஹூ நெவில் என்னும் பிரிட்டானியர். இலங்கையின் வரலாற்றையும், இனங்களையும் விரிவாக ஆய்வுசெய்து பதிவுசெய்தவர் இவர். பின்வருவது ஹூ நெவில் அவர்களின் முக்காரு யுத்த கதா குறித்த குறிப்பு. [ஹூ நெவில் ஓலைச்சுடியை ‘முக்காரு யுத்த கதா’ என்றும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த MD ராகவன் அவர்கள் அதை முக்கார கதானா என்றும் சொல்கிறார்கள்.]

முக்காரு யுத்த கதா என்னும் ஓலைச்சுவடி இலங்கையின் கோட்டி நாட்டு அரசர் ஆறாம் பராக்கிரம பாகுவின் ஆட்சி காலத்தில், சக வருடம் 1159,  கி.பி. 1237 வருடம்  முக்காரு இன மக்களின் யுத்த தோல்வியைக் குறித்த ஒரு சிறிய குறிப்பு ஆகும். இந்த வருடம் நம்மை தம்படேனியாவின் ஆட்சி காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. முக்காரு யுத்த கதாவின் இரண்டு பிரதிகளிலும் ஒரே வருடம்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி, கீழக்கரை மற்றும் காவேரிப்பட்டினம் நாடுகளிலிருந்து கரையர் படைகள் துணைக்கழைக்கப்பட்டு, கெலனி ஆற்றின் முகத்துவாரத்தில் முக்காரு படைகளுக்கெதிரான அரசபடைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அங்கிருந்து முக்குவர்கள் கைப்பற்றியிருந்த புத்தளம் கோட்டை நோக்கி அரசபடைகள் நகர்ந்தன. புத்தளத்தில் நடந்த யுத்தத்தில் 1500 அரச படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள். மூன்று மாத முற்றுகைக்குப்பிறகு புத்தளம்கோட்டையை காஞ்சி, கீழக்கரை மற்றும் காவேரிப்பட்டினம் கரையர் படைகளைக்கொண்ட கோட்டி நாட்டு அரசரின் படைகள் முக்குவர்களிடமிருந்து  கைப்பற்றிது. அங்கிருந்து அரச படைகள் நாகப்பட்டினம் நோக்கி நகர்ந்தது. நாகப்பட்டினத்தில் முக்குவர்களுடன் நடந்த யுத்ததில் அரசபடையணியின் முக்கியத்தளபதியான மாணிக்கத்தலைவன் உயிரிழந்தார். மூன்று மாதங்கள் இருபத்தைந்து நாட்கள் நடந்த யுத்தத்தில் முக்குவப்படைகள் தோர்க்கடிக்கப்பட்டு நாகப்பட்டினம் கோட்டையும் அரசபடையினால் கைப்பற்றப்பட்டது. இந்த யுத்தத்தில் 1300 அரச படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

முக்குவர்களுக்கெதிராக போர்தொடுக்க பராக்கிரம பாகுவின் அரசபடைகளுக்காக தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட  படைத்தளபதிகள் பின்வருமாறு: வக்குநாட்டு தேவரீர், குருகுலநாட்டு தேவரீர், மாணிக்கத்தலைவன், அதியரச அடப்பன், வர்ணசூரிய  டான் பிரனாட (Don Branada) அடப்பன், குருகுல சூரிய முடியான்சி,  பரதகுலசூரிய முடியான்சி மற்றும் அரசகுல சூரிய முடியான்சி.  இவர்கள் அனைவரும் கரையர் இன போர்த்தளபதிகள். யுத்தத்திற்குப் பிறகு இவர்கள் சிலோனின் மேற்குக் கடற்கரையில் சிலாவ் மற்றும் நீர்க்கொழும்பிற்கு இடைப்பட்ட பிராந்தியத்தில் குடியேறினார்கள். இதன் பிறகு போர்ச்சுக்கீசியர்களின் வருகையும், கரவா படைத்தளபதிகளின் துரோகம் மற்றும் தந்திரம் காரணமாக டச்சுப்படையும் ராஜசிங்காவும் நீர்க்கொழும்பை பிடித்ததும் இந்த ஓலைச்சுவடியில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கும் சக வருடம் 1159 என்பது மிகத்தெளிவாகவே தவறானதாகும். இது முக்காரு மக்களின் வரலாற்றின் வேறு ஏதேனும் நிகழ்வை குறிப்பதாகக் கூட இருக்கலாம்.  ஆனால், சக. 1150 என்பது கண்டிப்பாக தென்னிந்தியாவிலிருந்து வந்த கரையர் படைகளின் உதவியுடன் அரச படைகள் முக்காரு இன மக்களை வீழ்த்திய ஆண்டாக இருக்காது. ஓலைச்சுவடிகள் சேதமடைந்திருந்தால் இந்த பிழைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், முக்காரு கதனாவின் இரண்டு பிரதிகளிலும் ஒரே ஆண்டுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1508 வருடம் பதினாறாவது பராக்கிரமபாகு ஆட்சியில் இருந்தபோது அவரது தம்பியின் (Tani-ela Bahu Raja) தலைமையில் முக்காரு படைகள் தோர்க்கடிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

டான் பிரனாடா ( Don Branada ) அல்லது டான் பெர்னாண்டோ ( Don Fernando ) என்னும்  போர்த்தளபதி போர்ச்சுக்கீசியர்களின் வருகையின் துவக்க காலத்தின் போது மதாமாறிவராக இருக்கவேண்டும். அல்லது அவர் அந்தப் பெயரை ஜெனோவா பட்டணத்து சாகசக்காரர்களிடமிருந்து முற்காலத்தில் பெற்றிருக்கவேண்டும். போர்ச்சுக்கீசியர்களின் வருகைப்பின் நடந்த இந்த யுத்தத்தையும் பெயர் மாற்றத்தையும் மறைக்க, இந்த சிறிய யுத்த நிகழ் எழுதிய கவிஞரின் பிழையினால் இந்த வருடக்குழப்பம் வந்திருக்கும்.

இதைப்போன்ற இன்னொரு பிரதியும் கிடைத்தது. அது ஒழுங்கில்லாமல் இருந்தது. ஆனால் அது தம்மன்கடுவாவில் இருக்கும் எகோடாபட்டு தமிழ் கரையர்களால் ஒழுங்காக பராமரிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் ராஜசிங்கா நீர்க்கொழும்பை கரையர்களின் மூதாதையர்களின் உதவியுடன் கைப்பற்றியபிறகு, அவர்கள் கிபி 1646ம் வருடம் கரையர்கள் நீர்க்கொழும்பில் குடியேறியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் இந்த ஓலைச்சுவடி எழுதப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். முதல் பிரதியுடன் இதை ஒப்பிட்டுப்பார்த்தபோது உண்மையென்றே தோன்றுகின்றது.

வல்வெட்டி முதலியார் போர்ச்சுக்கீசியர்களை ராஜசிங்காவிற்கும் டச்சுப்படைகளுக்கும் காட்டிக்கொடுத்ததன் பரிசாக எடோகாபட்டுவாவும் மாத்தளை மாவட்டத்தின் பல கிராமங்களும் கிடைத்ததாக அவர்களின் பிரதி சொல்கிறது. பரிசு கிடைத்த திருப்பம் குறித்து, நீர்க்கொழும்பிலிருக்கும் கரவா படைத்தளபதிகளின் வாரிசுகளால் மிகச்சிறப்பாக பேணப்பட்டுவந்த முதல் பிரதியில் எதுவும் சொல்லப்படவில்லை. தொம்மன்கடுவாவிலிருந்து கிடைத்த பிரதி இன்னொன்றிலிருந்து நகலெடுத்ததாக/ படியெடுக்கப்பட்டதாக இருக்கும்.  அது ஒழுங்கான எண்வரிசை இல்லாமல் சிறிய ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஓலைச்சுவடியை புத்திசாலித்தனமின்றி முதல் பிரதியிலிருந்து படியெடுத்திருப்பதால் இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் குழப்பமாக உள்ளது.

-2-

சிங்கள மொழியில் எழுதப்பட்ட முக்காரு கதனாவை திரு. M.D. ராகவன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மானிடவியல்துறையின் முதல் தலைவராக இருந்தவர். அவரது ஓய்வுக்குப்பிறகு 1946 வருடத்திலிருந்து இலங்கை அரசால் மானிடவியலாளராக பணியிலமர்த்தப்பட்டார். இலங்கையின் இனங்கள் குறித்தும் நாட்டுப்புறவியல் குறித்தும் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

திரு. M.D. ராகவன் அவர்கள் மொழிபெயர்த்த முக்காரு கதானாவின் ஒருபகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருவது:

கோட்டி நாட்டு அரசர் ஶ்ரீ பராக்கிரமபாகுவின் ஆட்சிகாலத்தில் புன்னாலாவிலிருந்து வந்த முக்குவர்கள் (முக்காரு), இலங்கையை கைப்பற்றும் நோக்கத்துடன் புத்தளத்திலும் நாகப்பட்டினத்திலும் முகாமிட்டிருந்தார்கள். இந்த செய்தியை கொண்டுவந்த மேன்மக்களிடம்  (nobles) “முக்குவ சேனையுடன் யுத்தம் செய்வதற்குப் போதுமான பலம்கொண்டவர்களாக நீங்கள் யாரை நினைக்கின்றீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களுடன் யுத்தம் செய்யவேண்டுமென்றால், காஞ்சிபுரம், காவேரிப்பட்டினம் மற்றும் கீழக்கரை நாட்டு படைகளை நாம் வரவழைப்பது நல்லது”. மேன்மக்கள் சொன்ன பரிந்துரை அரசருக்கு உவப்பானதாக இருந்ததன் காரணமாக மூன்று நாடுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. மூன்று நாடுகளின் அரசவைக்கு இந்த செய்தி கிடைத்தபிறகு, மூன்று நாட்டுப் படைகளும் காஞ்சிபுரத்தில் ஒன்று கூடி, அந்த செய்தியை விவாதித்தபிற்கு, படைகளின் யுத்த அணிவகுப்புடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்கள்.

வம்முநாட்டு தேவரீர், குருகுலநாட்டு தேவரீர், மாணிக்கத் தலைவன், அதியரச அடப்ப உன்னாகி, வர்ணசூரிய தொம்பிரனாத அடப்ப உன்னாகி, குருகுல சூரிய முடியான்சி, பரதகுல சூரிய முடியான்சி மற்றும் அரசகுல சூரிய முடியான்சி என்பது அந்த மூன்று நாடுகளின் படைத்தளபதிகளின் பெயர்கள். இந்த படைத்தளபதிகளுடன், 18 துணைத்தளபதிகளும், 7740 படைவீரர்களும்,  ஒரு நாவிதரும்,  துணிதுவைப்பதற்கும், பறையடிப்பதற்கும், பேய் ஓட்டுவதற்குமாக 8 பேரும் உடன்சென்றார்கள். இவர்கள் மூன்று படகுகளில் பயணமாகி, இலங்கையின் கெலனி ஆற்றின் முகத்துவாரத்தில் சக.1159ம் வருடம் வந்திறங்கினார்கள். இது உண்மையாகவே நடந்தது.

ஒளிமிக்க தங்க சிம்மாசனத்தில் அரசர் அமர்ந்திருந்தார். இலங்கைக்கு வந்துசேர்ந்த படைத்தளபதிகள் மற்றும் அவர்களின் படையணிகளை வரவேற்று, அவர்களின் பெயர்களையும் அவர்களின் குலத்தையும், அவர்களின் கடல் பயணத்தையும் விசாரித்துவிட்டு அவர்களுக்கு மரியாதையையும் விருதுகளையும் அவர்களுக்கு அளித்தார். மூன்று நாட்டு  படையணிகளின் வரிசையை பார்வையிட்டபிறகு, சூரியனின் ஒளிவட்டத்திற்குள் நுழையும் சுக்கிரனின் பிரகாசத்துடன், இந்த படையணிகள் உண்மையிலேயே வலுவானது என்னும் முடிவிற்கு வந்தார். பின்னர், முக்குவர்களுடன் போரிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்பதை கேட்டறிந்தார்.  பின்னர் அவர்கள், வில், வாள், குத்துவாள், ஈட்டி, போர்க்கோடாரி, கவண் போன்ற யுத்த தளவாடங்களுடன் புத்தளத்திற்கு முன்னேறினார்கள். மூன்று மாதங்கள் நடந்த யுத்தத்திற்குப் பிறகு அவர்களின் கோட்டையை கைப்பற்றினார்கள். அவர்களில் 1500 படைவீரர்கள் வீழ்ந்தார்கள்.

இந்த இழப்பிலும் மனம்தளராத அவர்கள் யுத்தத்தை நாகப்பட்டினத்திற்கு நகர்த்தினார்கள். அங்கு 40 நாட்கள் யுத்தம் நடந்தது. நாகப்பட்டினத்தில் நடந்த யுத்தத்தில் படைத்தளபதி மாணிக்கத்தலைவன் யுத்த களத்தில் வீழ்ந்தார். இரண்டரை மாதங்கள் நடந்த யுத்தத்தில் அரச படைகள் நாகப்பட்டினம் கோட்டையை கைப்பற்றியது. இந்த இரண்டு யுத்தங்களிலும் 2800 அரச படைவீரர்கள் இறந்தார்கள். இரண்டு கோட்டைகளையும் கைப்பற்றியபிறகு கோட்டையில் ஏற்றியிருந்த இரண்டு சிவப்பு கொடிகளும், இரண்டு முக்குவ படைத்தளபதிகளின் தலைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வெற்றியினால் மகிழ்சியடைந்த அரசர், அவர்களுக்கு செம்பு பட்டயமும், பலகிராமங்களை பரவேணி என்னும் பரம்பரை நிலங்களாக அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இவற்றைத்தவிர, ராவணா, இரஹண்டா மகர கொடிகளையும் அவர்களுக்கு கொடுத்தார்கள். ஏராளமான நகை மற்றும் பொன் ஆபரணங்களுடன் அனைத்து துறைமுகங்களுக்கும் இலவசமாக வந்துபோவதற்கான உரிமையை கொடுத்தார்கள். நீர்க்கொழும்பை அவர்களுக்கு பரம்பரை நிலமாக அளித்தார்கள். அதன்பிறகு அவர்கள் (கரையர்கள்) நீர்க்கொழும்பில் குடியேறினார்கள்.

இந்த ஆட்சிகாலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் பெருமளவு பரிசுகள் மற்றும் காணிக்கைகளுடன் கோவாவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று விசாரித்தபோது, “எங்கள் நாடுகளில் பெருமளவிலான யுத்தங்கள் நடக்கின்றன. எனவே வர்த்தகம் நன்றாக இல்லை. அதன்காரணமாக, உங்கள் நாட்டில் வியாபாரம் செய்வதற்கு ஒரு சிறிய இடத்தை, குறைந்தபட்சம் ஒரு காளையின் தோல் அளவிலான இடத்தை, எங்களுக்கு தரவேண்டுமென்று உங்கள் காலில் விழுந்து கேட்க வந்திருக்கிறோம். அந்த இடத்தில் எங்கள் குடியேற்றத்தை நிறுவி, வியாபாரம் செய்து அரச சட்டத்தைற்கு உட்பட்டு  நாங்கள் இங்கே வாழ்வோம். அதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்றார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்டதும் அவர்களுக்கான நிலத்தை செம்பு பட்டயத்தில் எழுதிக்கொடுத்தார். போர்ச்சுக்கீசியர்கள் காளையின் தோலை மிகச்சிறிதாக நூல்போல் வெட்டி, அதைக்கொண்டு எவ்வளவு நிலத்தை சுற்றிப்பிடிக்க முடியுமோ அந்தளவிற்கு நிலத்தை கையகப்படுத்தி அதில் தங்கள் கோட்டையை நிறுவி அங்கே குடியேறினார்கள். இதனால் பாதுகாப்பின்மையை உணர்ந்த அரசர் சீதாவகாவிற்கு குடிபெயர்ந்தார். ஆனால், போர்ச்சுக்கீசியர்கள் சீதாவகாவிற்கும் குடியேறியேறியதைத் தொடர்ந்து, அரசர் சென்கடகலாவிற்கு இடம்பெயர்ந்தார். அரசர் இந்த நகரத்தில் இருந்தபோது பரங்கியர்கள் கொரவாகல்கடாவை எல்லையாகக் கொண்டு இருபத்தியோரு இராணுவ தளங்களை உருவாக்கினார்கள். அங்கே அவர்கள் நிலைகொண்டு, அந்தபகுதியின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தினார்கள்.

எங்கள் மேன்மைமிக்க ஆண்டகை, இலங்கையின் பேரரசர், நீரில் அமிழ்ந்த தூய்மையான களங்கமற்ற வெண்சங்குபோன்றவரான, அரியணையை ஆக்கிரமித்திருக்கும் மனுவம்சத்தின் நேரடியான வாரிசு ராஜசிங்ஹா, பாபுல்லாவில் வாழ்ந்துவந்தார். அவர் ஒரு பெரிய ராணுவத்தை உவாவிற்கு வரவழைத்தார். அந்த ராணுவத்தில் மகா அடம்பத்துவாவிலிருந்து வந்த 150,000 போர்வீரர்களும், தளபதிகளும், ராணுவ தளவாடங்களும், தோட்டாக்களும் வெடிமருந்துகளும் அடக்கம். அசுரர்களுடன்  யுத்தசெய்யும் தேவர்களின் கடவுளான இந்திரனைப்போல் (Lord Sakra), நான்மடிப்புகொண்ட போர்ப்படையுடன், ஒரு  ராஜசிங்கத்தைப்போல் யுத்தம் செய்து பரங்கிப்படைகளை பல இடங்களில் அவர் வெற்றிகொண்டார். பின்னர் அவர் அவரது தளபதிகளுடன் தலதகன்வேலாவிற்கு  எதிரிகளை வீழ்த்தும் நோக்குடன் விடாமுயற்சியுடன்  அணிவகுத்துச்சென்றார். யானைகளை பிளந்து திறக்கும் வலுகொண்ட ராஜசிங்கத்தைப்போல் எங்கள் பேரரசர் ராஜசிங்ஹா தலதகன்வேலாவிற்கு அணிவகுத்துச்சென்று அங்கே அவர் நிலைகொண்டார். அவரிடமிருந்து பல வெகுமதிகளைப் பெற்ற பல தளபதிகள் எதிரிப்படை நெருங்குவதைக் கண்டபொழுதில் ஓடிஒளிந்தார்கள். எங்கள் பேரரசருடன் இருந்த, கேடயம் ஏந்திவந்த பலிகவதன ராஜாவான முஹகும்புர எதிரிப்படைகள் நெருங்கிவருவதைக்கண்டதும், கேடயத்தை எறிந்துவிட்டு ஓடிஒழிந்தார். பேரரசர் அவரை இரண்டுமூன்றுமுறை நோக்கிவிட்டு சத்தமாக, “என்னுடைய கட்டளை உனக்கு எந்தவிதத்திலாவது பயன்தருமென்று நினைத்தால், ஓடவேண்டாம்! ஓடவேண்டாம்! நான் உனக்களித்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் மிகநீண்டதாகவும் இருக்கும்!” என்றார். அதற்கு அவர் “உயிர் எஞ்சுமென்றால் மட்டுமே, ஒரு கட்டளையினால் பலனுண்டு.” என்றார்.

(இது நான்குபகுதிகல் கொண்ட முக்கார கதனாவின் முதல் இரண்டு பகுதிகளின் மொழிபெயர்ப்பு மட்டுமே.)

-3-

M.D. ராகவன் அவர்களின் முக்கார கதனா மீதான சில ஐயப்பாடுகளும், விளக்கங்களும்.

1. தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், நிக்காய சங்கிரக, ராஜரத்னாகரயா, பூஜாவாளியா போன்ற இலங்கையின் வரலாறு மற்றும் வரலாற்று நிகழ்வுப்பட்டியல்களிலும் கரையர்கள் இலங்கையில் எப்போது குடியேறினார்கள் என்ற தகவல்கள் இல்லை.

2. ஆறாம் பராக்கிரமபாகுவாக இருக்கலாம். அவரது காலம் கிபி. 1412 முதல் கிபி 1467 வரை. கிபி 1237 (சக. 1159) என்று சொல்லப்படுவது நகலெடுத்தவரின் (படியெடுத்தவரின்)  தவறாக இருக்கலாம்.

3. நாகப்பட்டினம் என்பது புத்தளத்திற்கு வடக்கிலிருந்த, தற்போது வழக்கொழிந்து போன, கிராமாக இருக்கலாம். நாகமடு, நாகமொத்தை, நாகவில்லு ஆகிய கிராமங்கள் புத்தளத்தின் வடபகுதியில் இருக்கிறது.

4. Dom Branada என்பது தோமரம் நாதன் என்பதாக இருக்கலாம். இவர் வேல்/ஈட்டி அணியின் தளபதியாக இருக்கலாம். ஹூ நெவில் சொல்வதுபோல் போர்ச்சுக்கீசியர்களின் டான் பெர்னாண்டோ என்னும் பெயருக்கு சம்பந்தமில்லாதது. தோமரம் என்றால் வேல், தண்டாயுதம் என்று பொருள்படும்.

5. அப்போது மூன்று முக்குவ கொடிகள் பயன்பாட்டில் இருந்தது. அனுமான் கொடி, மோனரபாண்டி கொடி, இரகண்ட கொடி. நவகாடு என்னும் முக்குவ கிராமத்தில் அனுமான் கொடியும் சிங்கம் கொடியும் இருந்தன.

6. எழுதப்பட்டிருக்கும் மொழி மற்றும் சம்பவங்களை வைத்துப்பார்க்கும்போது முக்காரு கதனா பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

7. நீர்க்கொழும்பின் சூரிய குலத்தவர்கள் ஆறாம் பராக்கிரமபாகுவின் (கிபி 1412-கிபி. 1468) காலத்தில் குடியேறினார்கள். இது முக்குவர் யுத்தம் நடந்த வருடமான கிபி. 1237ம் ஆண்டுடன் ஒத்துப்போகவில்லை.

8. அனைத்து பிரதிகளும் கரையர்களை கோட்டி நாட்டு அரசர் யுத்தத்திற்கு அழைத்ததை சொல்கிறது. எனவே முக்குவர் யுத்தம் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்திற்கு முன்பு நடந்தது என்று சொல்வதை முற்றாக நிராகரிக்கவேண்டும். காரணம், கோட்டியை தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த முதல் சிங்கள அரசர் ஆறாம் பராக்கிரமபாகு மட்டுமே.

9. முக்கார கதனா மூன்று காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் என்பது ஆய்வில் தெரிய வருகின்றது. சூரிய குலத்தவர்கள் இலங்கைக்கு வந்தது ஶ்ரீ பராக்கிரமபாகுவின் ஆட்சிகாலத்தில் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு பிந்தய காலகட்டமென்பதையும் முற்றாக மறுப்பதற்கில்லை.

10. போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைக்கு வந்தது ஆற்றாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இது சாத்தியமே இல்லாதது. போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைக்கு வந்தது எட்டாம் வீர பராக்கிரமபாகு ஆட்சிசெய்துகொண்டிருந்த 1505ம் வருடம்.

 

11. முக்காரு கதனா ஹாலந்து நாட்டினர் இலங்கைக்கு வந்ததையும் சொல்கிறது. ஹாலந்து நாட்டினர் இலங்கைக்கு வந்தது கிபி. 1640ம் வருடம்.

-4-

இன்று வரலாறு என்னும் பெயரில், தங்களின் அரசியலுக்கும், ஜாதிமேட்டிமைகளுக்கும், தங்கள் விருப்பத்திற்கும் ஏற்றதாக உண்மையான வரலாறுகள் மாற்றியமைக்கப்படுகிறது. தாங்கள் ஆண்ட ஜாதி என்பதை நிறுவுவதற்காக வரலாறு பலவகையான சித்திரவதைக்கு ஆளாகின்றது.  முக்காரு  படைகளைத் தோற்கடித்த மாணிக்கத்தலைவன், வக்கநாட்டுதேவரீர் போன்றவர்களை முக்குவர்களின் போர்த்தளபதிகளாக இன்று பல ஆய்வுகள் நிறுவ முயல்கின்றது. முக்காரு கதனா நடந்த ஆண்டு கிபி.1237ம் ஆண்டுதான் என்று திட்டவட்டமாக எந்தவித அடிப்படையுமின்ற பறைசாற்றுகின்றது. இந்த ஆய்வுகளால் எதை சாதிக்கவிரும்புகின்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றிற்குப்பதிலாக வரலாற்றை நேர்மையாக எழுதுவதைத்தவிர நம்மால் வேறென்ன செய்யமுடியும்?

Reference:

  1. The Karava of Ceylon: Society and culture, by M. D Raghavan
  2. https://en.wikipedia.org/wiki/Mukkara_Hatana

One thought on “முக்காரு யுத்த கதா”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s