-1-
ஒவ்வொரு நாடும் நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனுக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் விதிவிலக்காக நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கு கேடுவிளைவிக்குமென்று கருதி தடைசெய்திருப்பது கேவலமானது, முட்டாள்தனமானது. அதாவது, கணினியில் ஹேக்கர்கள் ஊடுருவுவார்கள் என்பதால் நாட்டில் கணினியே பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதைப்போன்றது இது. எவ்வளவு வெட்கக்கேடானது? ஆங்கிலத்தில் டெக்னோபோபியா (Technophobia) என்று ஒரு வார்த்தை இருக்கின்றது. இதன் பொருள் நவீன தொழில் நுட்பங்களைக் கண்ட பயம். இந்தியாவிற்கு டெக்னோபோபியா என்னும் சொல் சாலப்பொருந்தும்.
ஆழ்கடல் மீன்பிடித்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வெளிநாட்டு கப்பல்கள் எதுவும் ஒக்கி புயலில் சிக்கவில்லை. காரணம், அவகளிடம் நவீன தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கின்றதென்றால், அது கரையை தொடர்புகொள்வதற்கும், கரையிலிருந்து கப்பலை தொடர்புகொள்வதற்குமான வசதி அந்த கப்பலில் இருக்கவேண்டும்.
இந்தியாவின் எல்லையில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கப்பல்களுக்கு இந்த தொலைதொடர்பு (சேட்டலைட் போன் உட்பட) வசதிகள் இருக்குமென்றால், இந்தியாவின் மீன்பிடி விசைப்படகுகளுக்கும் இந்த வசதிகள் இருந்தாகவேண்டும். இதற்கு தடையாக இருப்பது, ஒரு படகு கப்பலாக கணக்கில் கொள்ளவேண்டுமென்றால் அதற்கு குறைந்த பட்சம் 20 மீட்டர் நீளம் இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய படகுகள் 15 முதல் 20 மீட்டர் நீளம் கொண்டவை. எனவே இந்த படகுகளில் நவீன தொலைதொடர்பு வசதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றது. இதற்கு தீர்வு, பாரம்பரியமுறையில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நம்முடைய விசைப்படகுகள் அனைத்தையும் மீன்பிடி கப்பல்கள் என்று கணக்கில் கொள்ளவேண்டும். இதற்கு மீன்வளத்துறையின் ஒரு சிறிய உத்தரவே போதுமானது. எந்த சட்டத்திருத்தமும் தேவையிருப்பதாகத் தெரியவில்லை. இது சிக்கல் என்னவென்றால், மீன்பிடி கப்பல்கள் மத்திய அரசிடமிருந்து மீன்பிடி உரிமம் (Letter of Permit) பெறவேண்டும். பாரம்பரியமுறையில் மீன்பிடிக்கும் நமது விசைப்படகுகளுக்கு LoPயிலிந்து விலக்களிக்கலாம். இந்த மாற்றங்கள் ஓரிரு நாட்களிலேயே செய்துவிடமுடியும். நவீன தொலைதொடர்பு வசதிகளை நம்முடைய படகுகளில் எளிதாக பயன்படுத்தாமென்றும் நம்புகின்றேன். (கப்பல் மாலுமிகள் அதிகம்கொண்ட நம்முடைய தூத்தூர் பகுதி மீன்வர்கள் இதை ஒரு விவாதப்பொருளாக எடுக்கலாம்.)
ஏற்கெனவே, இந்தியாவில் செயல்பாட்டிலுள்ள திட்டமான, சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்தை தென்மேற்கு கடற்கரையில் செயல்படுத்தாதன் காரணமாக, இருநூற்றிற்கும் அதிகமான உயிர்கள் பலியாயிருக்கின்றது. சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்திலிருக்கும் வழிகாட்டுதல்களை கடற்கரைகளில் செயல்படுத்துவதற்கான எந்தமுயற்சியையும் அரசு இதுவரை செய்யவில்லை. இந்த நிலையில் வரும் ஜனவரி ஒன்றாம் நாளிலிருந்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லவிருக்கின்றார்கள். மத்திய மாநில அரசுகள் ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் அளித்திருக்கின்றது? குறைந்தபட்சமான நவீன தொலைதொடர்பு வசதிகளையாவது செய்து கொடுத்திருக்கின்றதா? சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்தை செயல்படுத்தாமைக்காக இதுவரை யாராவது போறுப்பேற்றிருக்கின்றார்களா?
-2-
இந்திய பொருளாதார பிரத்தியேக மண்டல (EEZ) கடல் எல்லை 200 நாட்டிகல் மைல்கள் வரை. அதற்கு அப்பால் பன்னாட்டு கடல். தென்தமிழகத்தின் தூத்தூர் பகுதியின் எட்டு ஊர்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் ஆழ்கடலில், 200 நாட்டிகல் மைல்களுக்கு வெளியில், மீன்பிடிக்கின்றன. ஒக்கி புயலில் பாதிப்பிற்குள்ளானவர்களில் 100ற்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்து கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்த ஆயிரக்கணக்கான படகுகளை கருத்தில் கொள்ளாமல், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திறமை இந்தியாவில் இல்லையென்று சொல்லி இந்திய பொருளாதார பிரத்தியேக மண்டல (EEZ) கடல் எல்லைக்குள் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் (Letter of Permit) கொடுக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு கப்பல்களுக்கான உரிமத்தை ரத்துசெய்யவேண்டுமென்று மீனவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த வருடம் 2017 ஜனவரி மாதத்திலிருந்து வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கான உரிமத்தை ரத்துசெய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. வெளிநாட்டு கப்பல்களின் மீன்பிடிஉரிமத்தை ரத்துசெய்திருப்பதன் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளைவிட இந்தவருடம் 18.86% அதிகமாக மீன் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வருடம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மீன்பொருட்களின் மதிப்பு ரூபாய் 37,871 கோடிகள். நம் நாட்டிலிருந்து அதிகமான அளவு மீன்பொருட்கள் ஏற்றுமதியானது இந்த வருடம்தான். வெளிநாட்டுக்கப்பல்கள் திருடிச்சென்ற மீனவளங்கள் இப்போது நம்நாட்டு கஜானாவை நிரப்பத்தொடங்கியிருக்கின்றது. இது, எந்தவிதமான நவீன தொழில்நுட்ப வசதியுமற்ற நமது பாரம்பரிய ஆழ்கடல் மீனவர்களின் உழைப்பு.
ஆனால் மத்திய அரசு எப்போது வேண்டுமென்றாலும் இந்த தடையை எப்போது வேண்டுமென்றாலும் மாற்றி மீண்டும் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதியளிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, இதற்கு நிரந்தரமான சட்டத்திருத்தம்தான் ஒரே வழி. வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்காக The Maritime zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி, இந்திய பிரஜை இந்திய அரசின் அனுமதியைப்பெற்று வெளிநாட்டுகப்பல்களைக் கொண்டு இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கலாம். ஆனால், பொதுவாக இந்த வெளிநாட்டு கப்பல்கள்இந்தியருக்கு ஒரு சிறிய தொகையை கமிஷனாக கொடுத்துக்கொண்டு இந்திய மீன்வளம் அனைத்தையும் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச்செல்கின்றது. இந்த கப்பல்களுக்கு நம்முடைய மீனவர்களுக்கு கிடைப்பதைவிடவும் மிகக்குறைந்த விலைவில் டீசல் வேறு கிடைக்கின்றது. கடந்த 2015ம் வருடம் வரை 800 வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. [வள்ளவிளை விசைபடகுகள் மட்டும் கொச்சி துறைமுகத்திலிந்து ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு லட்சம் லிட்டர் டீசலை எந்தவித சலுகை விலையுமின்றி வாங்குகின்றார்கள் என்று நண்பர் சொல்கின்றார். இந்த டீசலுக்கு சாலைவரியும் கொடுக்கின்றார்களாம். எப்படியெல்லாம் மீனவர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள் பாருங்கள்!]
அதைப்போல வெளிநாட்டுக்கப்பல்கள் பயன்படுத்துவது இழுவைமடிகளை. இதனால், பவளப்பாறைகளும் மீன்குஞ்சுகளுக்கும் அழிந்து கடல்வளத்தை ஒட்டுமொத்தமாக சூறையாடுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக நமது ஆழ்கடல் மீனவர்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கின்றார்கள். எனவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக இருப்பதாலும், வெளிநாட்டு கப்பல்களுக்கான உரிமங்களை நிரந்தரமாக தடைசெய்யவேண்டும். அதற்கு ஒரேவழி, The Maritime zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். அல்லது இந்த வெளிநாட்டுகப்பல்களுக்கு போட்டியாக ஆழ்கடலின் தொலைதூரத்திற்கு, ஆஸ்திரேலியாவரை, எந்தவித நவீன தொலைதொடர்பு வசதிகளுமின்றி சென்றுகொண்டேயிருக்கவேண்டும். ஒருசில சட்டதிருத்தங்களைச்செய்து, 200 நாட்டிகல் மைல்களுக்குள்ளாகவே மீன்வளத்தை பெருக்கி, நம்முடைய ஆழ்கடல் மீனவர்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசாங்கம் கொண்டுவரவேண்டும். இல்லையேல், இழப்புகள் அனைத்தும் மீனவர்களுக்குத்தான். பொருளாதார இழப்புகுறித்து அரசாங்கத்திற்கு கவலையில்லை. அவர்களுக்கு கடனளிக்க உலகவங்கி காத்திருக்கின்றது. மீனவர்களின் உயிர்?
References:
- http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=173699
- http://dahd.nic.in/acts-rules/maritime-zones-india-regulation-fishing-foreign-vessels-act-1981
- http://www.downtoearth.org.in/news/how-foreign-vessels-exploit-indias-loopholes-in-fishing-laws–37779
- https://www.researchgate.net/publication/301603388_DEEP_SEA_FISHING_POLICIES_IN_INDIA_FROM_1981_TO_2014-_AN_ANALYSIS
- http://medcraveonline.com/JAMB/JAMB-05-00112.php
- http://www.ndma.gov.in/images/guidelines/cyclones.pdf