டிசம்பர் ஒன்றாம் நாள் அமெரிக்காவின் நாசா ஒகி புயல் குறித்த சில தகவல்களை வெளியிட்டது. தற்போது நம்முடைய மீனவர்கள் பாதிப்பிற்குள்ளான புயல் பகுதியை அமெரிக்காவின் அகுவா மற்றும் சுவோமி செயற்கைக்கோள்கள் கடந்துசென்றபோது மேகமூட்டத்தின் குளர் அளவு -63 டிகிரி பாரன்ஹீட் (-53 டிகிரி செல்சியஸ்). இந்த மேகங்கள் மழையாக கடலில் விழும்போது, குறைந்தபட்சம் குளிர் அளவு உறைநிலைக்கும் குறிவாகவே இருக்கும். இதை மீனவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதன் காரணமாக படகுகள் சேதமாகி, கடலில் விழுந்த பல மீனவர்கள் இறந்திருக்கின்றார்கள். முக்கியமாக சிறுவர்களும் இளைஞர்களும், இதுவரை நமக்கு தெரிந்தது 14-20 வரையில்லானவர்கள் இறந்திருக்கின்றார்கள். இதில் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக கடலுக்குச் சென்றவர்கள். உறைநிலை குளிரை பெரியவர்களால் கூட எதிர்கொள்ளமுடியாது. இந்த உறை குளிரையும் தாக்குப்பிடித்து பல மீனவர்கள் தப்பியிருக்கின்றார்கள்.
மீனவர்களுக்கு புயல் குறித்த தகவல் தெரிந்தது அக்டோபர் 29-ம் தியதிக்குப் பிறகுதான். தகவலறிந்ததும் யாரும் தொழிலுக்குச் செல்லவில்லை. கடலில் புயலால் பாதிப்படைந்தவர்கள் புயல் குறித்த தகவல் தெரியாதவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் கூட, புயல் வந்தபிறகுதான் தகவல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாட்டின் அமைப்புகளால் மீனவர்களுக்கு தெரியப்படுத்த முடியுமென்றால் உங்களை மனிதர்களாக கணக்கிலெடுக்கமுடியாது. ஒவ்வொரு நாடும், குறைந்த பட்சம் ஒருவாரத்திற்கான எதிர்வரும் வானிலையை துல்லியமாக கணித்து வெளியிடுகின்றது. இந்தியாவால் ஒரு நாள் முன்கூட்டியே வானிலையை கணிக்க முடியவில்லை. எங்கோ தவறிருக்கின்றது. அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் ஒகி புயலை கடந்துசென்றது பதிவாகியிருக்கிறது. இந்தியாவின் எத்தனை செயற்கைக்கோள்கள் ஒகி புயல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது? இந்தியா அனுப்பும் செயற்க்கைக்கோள்கள் யாருக்கு? யாருடைய லாபத்திற்கு?
மீட்புப்பணிகள் டிசம்பம் ஒன்றாம் தியதிக்குப்பிற்குதான் துவங்கியது. நவம்பர் 30-ம் தேதி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு யார் பொறுப்பேற்பது? ஆழ்கடலில் ஏராளம் பிணங்கள் மிதந்ததை தாங்கள் கண்தாக மீனவர்கள் சொல்கிறார்கள். படகு கவிழ்ந்து நீச்சலடித்து வந்த மூன்று வள்ளவிளை மீனவர்கள் இறந்துவிட்டார்கள். வள்ளவிளையில் இதுவரை 8, இரவிபுத்தன்துறையில் 6, நீரோடியில் 12 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இப்போதைய கணக்குப்படி (5/12/2017 மாலை 8:00 மணி) வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 37 விசைப்படகுகள் குறித்த தகவலில்லை. 500 மீனவர்களுக்கும் அதிகம். இந்திய கடற்படை கப்பல்கள் 60 நாட்டிகல் மைல்களுக்குள்ளாகவே தற்போது தேடுதல் நடத்துவதாக புகார்கள் எழுகின்றது. 60 நாட்டிகல் மைல்களுக்குள் இந்த விசைப்படகுகள் இல்லை. 100 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் தேடவேண்டும். அரசு நிர்வாகத்திடம் விசைப்படகுகளின் மிகத்துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடங்களிலிருந்து தாங்களாகவே மீண்டுவரும் மீனவர்கள், இந்தியாவின் கப்பல்களோ, விமானங்களோ அந்த பகுதியில் இதுவரை செல்லவில்லையென்று சொல்கின்றார்கள். கப்பல்களும் விமானங்களும் எங்கே தேடுதல் நடத்துகின்றது?
மீனவர்களும் தேடுதலில் ஈடுபடலாம் என்னும் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சில மீனவர்கள் தூத்துக்குடிக்கு சென்றார்கள். ஆனால், தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரை வரைத்தான் தேடமுடிமென்று மீனவர்களிடம் அதிகாரைகள் சொல்லியிருக்கின்றார்கள். நீங்கள் கடலில் எதற்கு தேடவேண்டும், ஊட்டியில் தேடுங்கள். சில ஊட்டிகளாவது கிடைக்கும். கறிவைத்து சாப்பிடுங்கள்.
ஒன்று கவனித்தால் தெரியும். இந்திய கடற்படையும், விமானப்படையும் ஒன்றிரெண்டு மீனவர்களாக தொடர்ந்து மீட்கின்றார்கள். தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கின்றது. மீட்புப்படைக்கு நன்றி. ஆனால், தாங்களாகவே கரைசேரும் மீனவர்கள் 200, 600, 900 என்ற கணக்கில் பெருந்தொகையாக வருகின்றார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் அரசு மீட்டதாகச் சொல்வது வருத்தத்திற்குரியது.
தற்போது மீனவர்களிடம் படகுகள் இல்லை. அல்லது அவர்களே அவர்களின் நண்பர்களை, உறவினரை தேடச்செல்வார்கள். அரசை கெஞ்சமாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களுக்கில்லை. இனியும் அரசாங்கத்தை நம்புவதிலும் அர்த்தமில்லை. மீனவர்கள் தங்களுக்கான தொழிநுட்பத்தையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும், ஒரு இணை அரசாங்கமாக அவர்களே செய்தாலொழிய மீனவர்களுக்கு எதிர்காலமில்லை.