ஜார்ஜ் ஜோசப் – கே.எம்.பணிக்கர்

நான் சென்னையில் இருந்த போது நடந்த வைக்கம் சத்தியாகிரகம் சம்பந்தமான ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும். நானும் டி.கே.மாதவனும் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமான பழக்கம் எப்படி ஏற்பட்டதென்று இப்போது ஞாபகமில்லை. நாங்கள் இருவரும் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, தீண்டாமை குறித்து விவாதித்தோம். சத்தியாகிரகப்போராட்டம் வழியாக மட்டுமே, தீண்டாமையை முக்கிய பிரச்சனையாக பெரிதுபடுத்தமுடியுமென்று நான் அவரிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். எந்த இடத்தில் தொடங்கலாம் என்பதை நாங்கள் விவாதித்தோம். அவர் ஹரிப்பாடை முதலில் தேர்ந்தெடுத்தபோதிலும், வைக்கத்தில் சத்தியாகிர போராட்டத்தை துவங்கலாம் என்பதை முடிவுசெய்தோம். டி.கே.மாதவன் தன்னுடைய சுயசரிதையில் காகிநாடாவில் வைத்து நாங்கள் உருவாக்கிய இந்த திட்டத்தை விவரித்துள்ளார். வைக்கம் போராட்டம் துவங்கியபோது, நான் வட இந்தியாவில் இருந்ததால், தனிப்பட்டமுறையில் என்னால், இதில் கலந்துகொள்ள முடியவில்லை.


காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடக்கவிருந்தது. நான் ஜவகர்லாலுடன் அங்கு சென்றேன். நான் காந்தியை சந்திப்பதில் இன்னொரு காரணமும் இருந்தது. நான் அம்ரித்சருக்கு வந்தடைந்த ஒரு வார காலத்தில் டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன் போன்றவர்களால் வைக்கம் போராட்டம் துவங்கியது. நான் அந்த போராட்டத்தின் தூண்டுகோலாக இருந்தேன். நான் கேரளத்தில் இல்லாததன் தாக்கம் வெளிப்படையாகத்தெரிந்தது. எனவே, என் நண்பர்களுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் இணைந்துகொள்ள அனுமதிக்குமாறு காந்திஜியிடம் நான் வேண்டினேன். ஆனால், அவர் அம்ருதசரசில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையே மிகவும் பிரதானமனது, எனவே அதை முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுவே, நான் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளாததன் காரணம்.


என்னுடைய நண்பர் ஜார்ஜ் ஜோசப் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உடனடியாக சென்றுவிட்டார். கோயிலை சுற்றியுள்ள சாலையைப் பயன்படுத்துவதற்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை அடிப்படையாக்கொண்டு இந்த போராட்டம் இருப்பதால், பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த பாதிப்பிற்கு காரணமான உயர்ஜாதியினருக்கு மட்டுமே, இந்த பிரச்சனையில் தலையிட உரிமை உண்டு. கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனையில் தலையிட எந்தவித உரிமையும் இல்லையென்று நான் சென்னை பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தேன். ஜோசப்பின் செல்வாக்கினால், கேரள காங்கிரஸ்காரர்கள் என்னுடைய அணுகுமுறையை தடுத்ததோடல்லாமல், கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. ராமுண்ணி மேனன் என்பவர் பெயரில் என்னைத்தாக்கி ஒரு பதிலறிக்கையையும் வெளியிட்டிருந்தார்கள். ஹிந்துக்கள் அல்லாதவர்களை வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாதென்று நான் காந்திஜிக்கு வேண்டுகோள் வைத்தேன். அவர் எனது நிலைப்பாட்டை ஆதரித்தார். அப்போது, கேரளாவிலிருந்து வைக்கம் போராட்டம் சார்பாக, குரூர் நம்பூதிர்ப்பாடு மற்றும் கே. மாதவன் நாயர் ஆகியோருடன் ஒரு தூதுக்குழு காந்தியை சந்திக்கச்செல்லவிருப்பதை மெட்ராஸ் பத்திரிகைகள் வாயிலாக அறிந்துகொண்டேன். அந்த சந்திப்பின்போது, நான் அகமதாபாத்தில் இருக்க விரும்பினேன்.


அப்போது நான் சபர்மதியில் தங்கியிருந்தேன். ஆஸ்ரமத்தின் நடைமுறையை விவரிக்கத்தேவையில்லை. அன்று மாலையில் காந்தியடிகள் என்னை அழைத்து சீக்கியர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துகொண்டார். நான் அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொண்டு, நாபா குறித்த கேள்விக்கு நான் தயாரித்து வைத்திருந்த குறிப்பையும் அவரிடம் கொடுத்தேன். அதை படித்துவிட்டு மறுநாள் பதிலளிப்பதாக காந்தியடிகள் சொன்னார். நான் வைக்கம் சத்தியாகிரகம் குறித்து அவரிடம் குறிப்பிட்டேன். தான் வைக்கம் போராட்டம் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டதாகவும், அடுத்த நாள் கேரள தூதுக்குழு வரும்போது இதுகுறித்து பேசலாமென்றார். 


அடுத்தநாள், தூதுக்குழுவை சந்தித்தார். என்னுடைய கருத்துக்கு ஒப்புதலளிப்பதுபோல், வைக்கம் போராட்டத்தில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாதென்பதை மிகத்தெளிவாக அவர்களுக்கு விளக்கினார்.

[Autobiography, K M Panikkar, Pages 37, 44, 45, 46]