ஜார்ஜ் ஜோசப் – கே.எம்.பணிக்கர்

நான் சென்னையில் இருந்த போது நடந்த வைக்கம் சத்தியாகிரகம் சம்பந்தமான ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும். நானும் டி.கே.மாதவனும் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமான பழக்கம் எப்படி ஏற்பட்டதென்று இப்போது ஞாபகமில்லை. நாங்கள் இருவரும் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, தீண்டாமை குறித்து விவாதித்தோம். சத்தியாகிரகப்போராட்டம் வழியாக மட்டுமே, தீண்டாமையை முக்கிய பிரச்சனையாக பெரிதுபடுத்தமுடியுமென்று நான் அவரிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். எந்த இடத்தில் தொடங்கலாம் என்பதை நாங்கள் விவாதித்தோம். அவர் ஹரிப்பாடை முதலில் தேர்ந்தெடுத்தபோதிலும், வைக்கத்தில் சத்தியாகிர போராட்டத்தை துவங்கலாம் என்பதை முடிவுசெய்தோம். டி.கே.மாதவன் தன்னுடைய சுயசரிதையில் காகிநாடாவில் வைத்து நாங்கள் உருவாக்கிய இந்த திட்டத்தை விவரித்துள்ளார். வைக்கம் போராட்டம் துவங்கியபோது, நான் வட இந்தியாவில் இருந்ததால், தனிப்பட்டமுறையில் என்னால், இதில் கலந்துகொள்ள முடியவில்லை.


காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடக்கவிருந்தது. நான் ஜவகர்லாலுடன் அங்கு சென்றேன். நான் காந்தியை சந்திப்பதில் இன்னொரு காரணமும் இருந்தது. நான் அம்ரித்சருக்கு வந்தடைந்த ஒரு வார காலத்தில் டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன் போன்றவர்களால் வைக்கம் போராட்டம் துவங்கியது. நான் அந்த போராட்டத்தின் தூண்டுகோலாக இருந்தேன். நான் கேரளத்தில் இல்லாததன் தாக்கம் வெளிப்படையாகத்தெரிந்தது. எனவே, என் நண்பர்களுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் இணைந்துகொள்ள அனுமதிக்குமாறு காந்திஜியிடம் நான் வேண்டினேன். ஆனால், அவர் அம்ருதசரசில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையே மிகவும் பிரதானமனது, எனவே அதை முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுவே, நான் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளாததன் காரணம்.


என்னுடைய நண்பர் ஜார்ஜ் ஜோசப் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உடனடியாக சென்றுவிட்டார். கோயிலை சுற்றியுள்ள சாலையைப் பயன்படுத்துவதற்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை அடிப்படையாக்கொண்டு இந்த போராட்டம் இருப்பதால், பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த பாதிப்பிற்கு காரணமான உயர்ஜாதியினருக்கு மட்டுமே, இந்த பிரச்சனையில் தலையிட உரிமை உண்டு. கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனையில் தலையிட எந்தவித உரிமையும் இல்லையென்று நான் சென்னை பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தேன். ஜோசப்பின் செல்வாக்கினால், கேரள காங்கிரஸ்காரர்கள் என்னுடைய அணுகுமுறையை தடுத்ததோடல்லாமல், கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. ராமுண்ணி மேனன் என்பவர் பெயரில் என்னைத்தாக்கி ஒரு பதிலறிக்கையையும் வெளியிட்டிருந்தார்கள். ஹிந்துக்கள் அல்லாதவர்களை வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாதென்று நான் காந்திஜிக்கு வேண்டுகோள் வைத்தேன். அவர் எனது நிலைப்பாட்டை ஆதரித்தார். அப்போது, கேரளாவிலிருந்து வைக்கம் போராட்டம் சார்பாக, குரூர் நம்பூதிர்ப்பாடு மற்றும் கே. மாதவன் நாயர் ஆகியோருடன் ஒரு தூதுக்குழு காந்தியை சந்திக்கச்செல்லவிருப்பதை மெட்ராஸ் பத்திரிகைகள் வாயிலாக அறிந்துகொண்டேன். அந்த சந்திப்பின்போது, நான் அகமதாபாத்தில் இருக்க விரும்பினேன்.


அப்போது நான் சபர்மதியில் தங்கியிருந்தேன். ஆஸ்ரமத்தின் நடைமுறையை விவரிக்கத்தேவையில்லை. அன்று மாலையில் காந்தியடிகள் என்னை அழைத்து சீக்கியர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துகொண்டார். நான் அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொண்டு, நாபா குறித்த கேள்விக்கு நான் தயாரித்து வைத்திருந்த குறிப்பையும் அவரிடம் கொடுத்தேன். அதை படித்துவிட்டு மறுநாள் பதிலளிப்பதாக காந்தியடிகள் சொன்னார். நான் வைக்கம் சத்தியாகிரகம் குறித்து அவரிடம் குறிப்பிட்டேன். தான் வைக்கம் போராட்டம் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டதாகவும், அடுத்த நாள் கேரள தூதுக்குழு வரும்போது இதுகுறித்து பேசலாமென்றார். 


அடுத்தநாள், தூதுக்குழுவை சந்தித்தார். என்னுடைய கருத்துக்கு ஒப்புதலளிப்பதுபோல், வைக்கம் போராட்டத்தில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாதென்பதை மிகத்தெளிவாக அவர்களுக்கு விளக்கினார்.

[Autobiography, K M Panikkar, Pages 37, 44, 45, 46]

இளம் இந்தியா தன் கூழாங்கல்லை வீசுகிறது – சி. எப். ஆன்ரூஸ்

இந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தற்போதைய நிலையை யோசிக்கும்போது, ஒரு பழைய பைபிள் கதை அடிக்கடி என் நினைவுக்கு வருகிறது. கோலியாத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தாவீது எவ்வாறு புறப்பட்டார் என்று பைபிளின் ஆரம்ப புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்பு, சவுல் தான் பயன்படுத்திய கனமான கவசத்தை அணிவதற்கு தாவீதை வற்புறுத்தினார். தாவீது முதலில் அதைப் அணிய முயன்றாலும், மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார். பின்னர், அந்த கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓடைக்குச் சென்று சில மென்மையான கற்களை எடுத்துக்கொண்டு, தன் கவணைப் பயன்படுத்தி அந்த பெரிய ராட்சதனைக் கொன்றார்.

இது, இந்திய விவகாரங்களில் ஒரு உவமையாக எனக்கு எப்போதும் தோன்றுகிறது. இந்தியாவின் சமூக சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வம்கொண்ட, இந்தியாவை ஆளும் மேற்கத்திய சக்திகள், பயனுள்ளதென நிரூபணமான தங்கள் சக்திவாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, கிழக்கத்திய நாடுகளின் சமூக அமைப்புகளில் ஆழமாக வேரூன்றிய பழமையான தீமைகளுக்கு எதிராக போராடுவதற்காக இந்திய இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக முயன்றன. படித்த இந்தியர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த மீண்டும் மீண்டும் முயன்றனர். ஆனால், சமீபகாலங்களில் மகாத்மா காந்தியின் தலைமையில், இளம் இந்தியா மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்காமல், தாவீதைப்போல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது. மேற்கத்திய வழிமுறைகளுக்கு எதிரான இந்த எதிர்வினையில், இந்தியாவின் பழைய சமூக தீமைகளை கையாள்வதற்கு அதன் சொந்த விசித்திரமான வழிகளில் அது திரும்பியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் விவகாரங்களில் இதுவே தற்போதைய அம்சமாகும். கிழக்கில் தேசியவாதத்தின் எழுச்சி என்று சில நேரங்களில் இதை நாம் கருதினாலும், மேற்கின் துணையின்றி நம் சுய வழியில் காரியங்களைச் செய்வதற்கான ஒரு முயற்சி என்றே கருதவேண்டும்.

இந்த ஆய்வறிக்கையை எனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்க விரும்புகிறேன். நான் மகாத்மா காந்தியின் சீடர்களுடன் நெருக்கமாகப் பழகியதன் காரணமாக, நான் சொல்லப்போகும் அனைத்தும் என் கண்களால் நான் கண்டவற்றின் அடிப்படையிலானது.

வைக்கம் போராட்டம் என்று அழைக்கப்படும், தென்னிந்தியாவின் “தீண்டாமைக்கு” எதிரான தார்மீக போராட்டத்தை முதலில் விளக்குகிறேன். மிக அதிக எண்ணிக்கையிலான ஏழ்மையான மக்கள், குறிப்பாக தென்னிந்தியாவில், பறையர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தொடுவது கூட  உயர்சாதி மக்களால் தீட்டாக கருதப்படுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காயல்களுக்கு நடுவில் வைக்கம் கிராமம் இருக்கிறது. நிலப்பரப்பைச் சுற்றியிருக்கும் பல கால்வாய்களின் வழியாக கடல் அலைகள் உள்ளே நுழைகிறது. அதுபோல், ஒரேயொரு நெடுஞ்சாலை மட்டுமே வைக்கம் வழியாகச் செல்கிறது. இந்த சாலை இல்லையென்றால், வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு வயல் வரப்புகளையும் நீர்நிலைகளையும் தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே, இந்த நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானது. ஆனால் இது வைக்கம் கோயிலுக்கு அருகிலிருக்கும்  உயர்ஜாதி பிராமண குடியிருப்பு வழியாகச் செல்வதால், பறையர் இன மக்களால் தங்களுக்கு தீட்டுப்படும் என்பதால், பல நூறு ஆண்டுகளாக பிராமணர்கள் அந்த சாலைவழியாகச் செல்வதற்கு  பறையர் இன மக்களை அனுமதிக்கவில்லை. எனவே, இந்தச் சாலையை உயர்ஜாதியினர் மட்டுமே பயன்படுத்தினர். அதற்கு சட்டத்தின் அனுமதியையும் பெற்றிருந்தனர். இந்த சமூக அநீதியை துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் சட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

காந்தியின் இளம் சீடர்கள் இதை ஒரு சோதனைக் களமாகக்கொண்டு, இந்த சாலையை அனைத்து இன மக்களும் பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்கள். மகாத்மா காந்தியின் இயக்கத்தின் வலிமையைக் காட்டும் இந்த கதையின் சுவாரஸ்யமான விஷயம் இதுதான்: இந்த போராட்டத்தின் யோசனையைத் தோற்றுவித்த இளம் தலைவர், திருவிதாங்கூரில் உள்ள பண்டைய சிரியன் சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் – ஜார்ஜ் ஜோசப் என்ற இளம் பேரறிஞர். அவர் காந்தியின் தீவிர சீடர், மட்டுமன்றிதிருவிதாங்கூரில் ஒரு முக்கிய தேசபக்தி கொண்ட தொழிலாளி. போராட்டம் தொடங்கிய நேரத்தில் மகாத்மா காந்தி ஏறக்குறைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், பம்பாய்க்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் நான் அவருடன் இருந்தேன். அங்கு அவர் மிகுந்த பலவீனப்பட்டு கிடந்தார். ஜார்ஜ் ஜோசப் காந்தியை சந்திக்க வந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. எப்படியிருந்தாலும், காந்தியின் படுக்கையறையிலிருந்து முழு செயல் திட்டமும் வரைபடமாக்கப்பட்டு, போராட்டம் தொடங்கியது.

மகாத்மா காந்தியின் சீடர்கள், தாங்கள் ஆதரிக்கும் “தீண்டத்தகாத” நண்பர்களையும் அழைத்துக்கொண்டு பிராமணர்களின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தனர். அவர்கள் உடனடியாக தாக்கப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். திருவாங்கூர் மாநில காவல்துறையினர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் அவரது ஆதரவாளர்களை அத்துமீறலை ஊக்குவித்ததற்காக கைது செய்தனர். அவர்களுக்கு ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் இடத்தை நிரப்புவதற்காக நாட்டின் பல இடங்களிலிருந்தும் தன்னார்வலர்கள்  ஒரே நேரத்தில் அணிதிரண்டனர். அதன்பிறகு, யாரையும் கைது செய்யப்படக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டது. காந்தியின் ஆதரவாளர்கள் சாலையில் நுழைவதை காவல்துறையினர் பலத்துடன் தடுத்தார்கள். அவர்கள் சாலையின் குறுக்கே தடுப்புவேலி ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது காந்தியின் சீடர்கள் அவரது அறிவுரையைக் கேட்டார்கள். காவல்துறை வழிவிடும் வரை, காவல்துறை  அமைத்த தடுப்புவேலிக்கு எதிரே நிற்குமாறு அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் மனப்பான்மையுடன் அந்த போராட்டத்தை தங்களின் புனிதமான மதக் கடமையாகக் கருதினார்கள். காந்தியின் இளம் சீடர்கள் கிராமத்திற்கு அருகில் ஆஸ்ரமம் ஒன்றை அமைத்து, அனைத்தையும் மத அடிப்படையில் ஏற்பாடு செய்ததுடன், ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து முடித்தனர். போராட்டத்தில் எந்த விதத்திலும் வன்முறைக்கு இடங்கொடுக்காமல், அவர்கள் இறைபாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலிவரை சென்றார்கள். எவ்வளவு காலம் நீட்டிக்கமுடியுமோ, அதுவரை போராட்டதை தொடர்ந்து நடத்த மகாத்மா காந்தி அவர்களை வலியுறுத்தினார். அனைத்து ஏற்பாடுகளும் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செயலற்றிருக்கும் எதிர்ப்பாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு உதவிசெய்வதற்கும், நடப்பவற்றை அவருக்கு தெரியப்படுத்தவும், காந்தி என்னை அங்கு அனுப்பினார். பின்வருபவற்றை நான் என் கண்களால் கண்டேன்.

அந்த இடம் மிகவும் தட்டையான தாழ்வான பகுதி. அந்த இடத்தை அடைய, நான் பல படகுகள் மாறி,நீர்வழிகளைக் கடக்கவேண்டியிருந்தது. அனைத்து இடங்களிலும் தென்னை மரங்கள் ஆடம்பரமாக வளர்ந்திருந்தன. அது தென்னை மரங்களின் நிலம். அவை தண்ணீரில் பிரதிபலித்தது. காந்தியின் சீடர்களின் ஆஸ்ரமம் தென்னை ஓலையால் அடர்த்தியாக வேயப்பட்டிருந்தது. ஆஸ்ரமத்தில் அதிகாலை நான்குமணிக்கு பிராத்தனை துவங்கியது. அதிகாலையில் அவர்கள் தங்கள் அரிசி உணவை விரைவாக சமைத்தார்கள். ஐந்து மணிக்குப் பிறகு, தன்னார்வலர்கள் தடுப்புவேலியை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். கிராமத்தின் மத்தியப் பகுதிக்குச் செல்வதற்கு, தென்னைமரங்களுக்கு இடையினூடாக, கொடூரமான குறுகிய பாதைகள் இருந்தன. சத்தியாகிரகிகள் கடந்து செல்வதைக்காண கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் சாலையோரத்தில் வரிசையாக நின்றார்கள். அவர்கள் வெள்ளியாடை உடுத்தி இறைதுதிப்பாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலி நோக்கிச் சென்றார்கள். அவர்கள் பிரார்த்தனை மனநிலையில், பறையர்களுடன் தடுப்புவேலியருகே நின்றனர். மகாத்மா காந்தியின் கதர் இயக்கத்தின் அடையாளமாக ஒருவர் ராட்டைச் சக்கரத்தில் அமர்ந்து முழு நேரமும் அமைதியாக ராட்டையை சுற்றிக்கொண்டிருந்தார்.

கிராமவாசிகள் காந்தியின் போராட்டக்காரர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருக்கும்போது பிராமணர்களுடன் பலமுறை கலந்து பேசினேன். அவர்கள் நிலையற்றிருந்ததை காணமுடிந்தது. ஆனாலும் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் நீண்டகால சலுகையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. நற்பண்புகளின் மீதான நம்பிக்கையைவிடவும், பழமைவாதத்தின் மீது அவர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

தன்னார்வலர்களின் வெவ்வேறு குழுக்கள் ஆறு மணி நேரம் இடைவெளி இல்லாமல் தடுப்புவேலியில் நின்றார்கள. ஒவ்வொரு குழுவும் நண்பகலில் மீண்டு இன்னொரு குழு அவர்களிடத்தில் வந்தது. மாலை ஆறு மணிக்கு அன்றைய நாள் போராட்டம் முடிவுற்றது. பின்னர் தொண்டர்கள் தங்கள் மாலை நேரத்து கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி திரும்பிச் சென்றனர். முழு ஆசிரமமும், அரிசி சாதம் சாப்பிட்ட பிறகு, எட்டு முதல் ஒன்பது மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஓய்வெடுக்கச்சென்றது.

தென்மேற்கு பருவமழையின் போது உச்சகட்ட நிகழ்வு நடந்தது. அந்த நேரத்தில் கடல் மட்டத்திற்கு மிக அருகில் இருந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த போராட்டம் நடந்த வருடத்தில், வெள்ள நீர் தடுப்புவேலியில் நின்றவர்களின் இடுப்பு வரை சென்றது. வெள்ளப்பெருக்கின் போது தட்டையான படகுகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். படகுகள் சாலையின் குறுக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது. அவற்றை கயிற்றால் கட்டி தூண்களில் இணைத்திருந்தார்கள். அவ்வாறு, காவலர்கள் தண்ணீரில் நனையாமல் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். சிலநேரங்களில் தொண்டர்களில் தோள் அளவிற்கு தண்ணிர் இருந்தது. அவர்களின் சிரமத்தை கணக்கில்கொண்டு, தொண்டர்களின் போராட்ட நேரம் ஆறுமணியிலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு சமயத்தில் முகாமில் அதிக நோய் இருந்தது. முகாம் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கியிருந்தது. ஒரு காலகட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கடுமையாக இருந்தது. ஆனால், இந்த கொடிய நிலமையை தாங்கிக்கொண்ட துணிச்சலால், போராட்டக்காரர்களின் மீதான பொதுமக்களின் அனுதாபம் இயற்கையாகவே அதிகரித்தது.

அனேகமாக, மற்ற எதையும்விட, இந்த துணிச்சல்தான் பிராமணர்களின் எதிர்ப்பை உடைத்தது. முடிவில், சுமார் ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, போராட்டம் முடிவடைந்து, சாலை திறக்கப்பட்டது. பிராமணர்கள் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பறையர்களை கோயில் மற்றும் பிராமண வாழ்விடப்பகுதிகள் வழியாக நடக்க அனுமதித்தனர். “அவர்களின் வேண்டுதலை நாங்கள் இனியும் எதிர்க்கமுடியாது. நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர்கள் [பிராமணர்கள்] சொன்னார்கள்.

மேற்குலகின் ஆயுதங்களைப் போலல்லாமல், தனது சொந்த சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இந்தியாவின் இந்த சுதேச ஆயுதங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விளக்கத்திலிருந்து எளிதாகக் காணலாம். இந்த வைக்கம் போராட்டம் வாயிலாக, பறையர்களுக்கு ஒரே ஒரு நெடுஞ்சாலையைத் திறப்பதை, அல்லது இதுபோன்ற பல சாலைகளைப் பயன்படுத்துவதற்கான மனித உரிமையை வென்றெடுப்பதைவிட, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பழமைவாத சமூகங்களின் பார்வையிலும் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த போராட்டத்தின் வெற்றியின் மகுடமாக இருக்கும். ஐந்து கோடிக்கும் அதிகமான இந்த ஏழை “தீண்டத்தகாத” மக்கள் இருக்கும் நாட்டில், இதன் பொருளை அரிதாகவே மிகைப்படுத்த முடியும். பல நூற்றாண்டுகளாக, ஆழமாக வேரூன்றிய இந்த தீமை வெல்லப்படாமல் நடந்து வருகிறது. இப்போது இந்த தீமை அதன் உயிர் சக்தியை அழித்து பூமியிலிருந்து முழுமையாக அகற்றப்படும் என்று தோன்றுகிறது.

[Young India Throws Its Pebble, C.F. Andrews, The Survey, March 1, 1929]

கணவாய் மீன்கள்

*கணவாய் மீன்கள்*

மத்திய கடல்வள ஆய்வு நிறுவனம் (Central Marine Fisheries Research Institute) சமீபத்தில் கடலில் செயற்கையான வெளிச்சத்தைக்கொண்டு மீன்பிடிப்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கின்றது. இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பில், 13°N/71°E, 11°N/72°E and 10°N/71°E  பகுதிகளில், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4.2 முதல் 92.8 டன் என்ற விகிதத்தில் மொத்தம் 25.2 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

அதுபோல், வருடத்திற்கு 6.3 லட்சம் டன் கணவாய்மீன்களை இந்த பகுதிகளிலிருந்து பிடிக்கமுடியுமென்றும், இந்த பகுதிகளுக்கு கொச்சி, மங்கலாபுரம் மற்றும் கோவா துறைமுகளை தங்குதளமாகக்கொண்டு அந்தந்த மாநிலங்கள் கணவாய் மீன்களை பிடிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்றும் இந்த ஆய்வு சொல்கின்றது.

முக்கியமாக, செயற்கை விளக்கொளியை பயன்படுத்தி, கணவாய்மீன் பிடிப்பதை இந்த ஆய்வுகட்டுரை ஊக்கப்படுத்துகின்றது. ஆனால், செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதால் ஏற்படும் கடலியல் சுற்றுச்சூழல்கேடு குறித்து எந்தவிதமான விரிவான தகவலும் இதில் சொல்லப்படவில்லை என்பதால், இந்த ஆய்வு முழுமையானதல்ல என்று நம்பலாம். எனவே, செயற்கையான விளக்கொளியை பயன்படுத்துவதானால் ஏற்படும் சூழியல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை   CMFRI மேற்கொள்ளவேண்டும். அதுபோல், மேற்சொன்ன புள்ளிகளில் கணவாய் மீன்கள் இருப்பதை மீனவர்கள் உறுதிப்படுத்தலாம். 

இந்த ஆய்வு, செயற்கை விளக்கொளியில் மீன்பிடிப்பதை ஊக்கப்படுத்தினாலும்கூட, சில முக்கியமான பரிந்துரைகளையும் சொல்லியிருக்கின்றது.

 1. 12 நாட்டிகல் மைல்களுக்குள் செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.
 2. இழுவை மடிகளில் விளக்கொளியை பயன்படுத்தக்கூடாது.
 3. மீன் திரட்டு சாதனங்களில் (drifting Fish Aggregating Devices, DFAD) விளக்குகள் பயன்படுத்தக்கூடாது.
 4. 12 நாட்டிகல் மைல்களுக்கு வெளியில் சில கட்டுப்பாடுகளுடன்   செயற்கை  விளக்கொளியை பயன்படுத்தலாம். முக்கியமாக, 45மிமீ அதிகமான கண்ணிகள் கொண்ட வலைகளை தவிர்க்கவேண்டும். 25கிவாட்டிற்கு அதிகமான விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. நீருக்கடியில் விளக்கொளியை பயன்படுத்தக்கூடாது.
 5. விளக்கொளியில் மீன்பிடிப்பதை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
 6. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளக்கொளி பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்.

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், விளக்கொளி பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான வரைமுறைகளோ, சட்டதிட்டங்களோ எதுவும் இந்திய மற்றும் மாநில அரசுகளிடம் இதுவரை கிடையாது. கடல்சார்ந்த சட்டதிட்டங்கங்கள், வரைமுறைகள், தொழில்நுட்பங்கள் அனைத்திலும் இந்தியாக ஏழ்மையாகவே இன்னும் இருக்கின்றது. விளக்கொளியில் மீன்பிடிப்பதை கண்காணிக்கும் அமைப்புகள் எதுவும் இந்தியாவில் இல்லை. எனவே, குறிப்பிட்ட மீன்வகைகளை பிடிப்பதை கட்டுப்படுத்துவதுவதும், விளக்கொளிக்கான கட்டுப்பாடுகளை மேற்கொள்வதும் இயலாதகாரியம்.

செயற்கை விளக்கொளியை பயன்படுத்தி மீன்களை அதிகப்படியாக அறுவடைசெய்யமுடிந்தாலும்கூட, இதனால் கடல் சூழியலுக்கு பெரும்பாதிப்பு என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதால்:

 1. மீன்களின் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
 2. இனப்பெருக்கத்தில் மாற்றம் ஏற்படும்.
 3. பவளப்பாறைகளுக்கு மிகுந்த சேதத்தை உருவாக்கும்.
 4. மடிவலைகள் கொண்டு மீன்களை மொத்தமாக பிடிப்பதனால், மீன்குஞ்சுகள் அதிகமாக பிடிக்கப்பட்டு, மீன்வளம் வெகுவாக குறையும்.
 5. கணவாய் மீனிற்கென்று தனியான விளக்கொளி எதுவுமில்லை. விளக்கொளியில் அனைத்து மீன்வகைகளும் கூட்டம் சேரும். அதிகப்படியான மீன்களை ஒட்டுமொத்தமாக அள்ளியெடுப்பதால் மீன்வளம் வெகுவாக குறையும்.

நம்முடைய பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் முக்கியமாக சூரை, கேரை, சுறா, இறால் மற்றும் கணவாய் மீன்களை பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அதுபோல், கணவாய் மீன்பிடிப்பதற்கான தொழில்நுட்பம் நம்முடைய மீனவர்களிடம் இருக்கின்றது. பலநாடுகள் கணவாய் மீன்பிடிப்பதற்காக பேலாஜிக் (Pelagic) என்னும் இழுவை வலைகளை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் நீண்டகாலமாக நமது மீனவர்களிடம் இருக்கின்றது. 

இன்னொரு தொழில்நுட்பம், கடலில் விளக்கொளியில் மீன்பிடிப்பது. இரவு நேரங்களில் கணவாய் மற்றும் “கண்ணன் கொழுவாளை” மீன்களை பிடிப்பதற்காக மண்ணெண்ணை விளக்குகளை கட்டுமர மீனவர்கள், என்னுடைய அப்பா உட்பட, பலர் பயன்படுத்துவார்கள். நம்முடைய விசைப்படகு மீனவர்கள் மின்சார விளக்குகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தியாவில் விளக்கொளியில் மீன்பிடிப்பதற்கு தடையிருக்கின்றது. பலநாடுகள் அண்மைக்கடல் பகுதியில் விளக்கொளியில் மீன்பிடிப்பதை தடைசெய்திருக்கின்றது. ஆனால், கோவா போன்ற ஒருசில மாநிலங்கள் விளக்கொளியில் மீன்பிடிப்பதை அனுமதிக்கவும் செய்கின்றது. 

அதுபோல், நம்முடைய மீனவர்கள் கணவாய் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஓலை/தென்னைமட்டைகளைக் கொண்டு இயற்கையான புதர்களை உருவாக்கி, கணவாய் மீன்களை பெருமளவில் பிடிக்கின்றார்கள். இது அரசிற்கு தெரிந்திருக்குமா என்பது தெளிவில்லை. இது போன்ற சுற்றுச்சூழலுக்கு சீர்கேடில்லாத மீன்பிடிமுறைகளே நமக்கு தேவையானது.

நமது மீனவர்களிடம் கணவாய்மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லையென்பதனால், மீன்வள ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் கணவாய்மீன்களை பிடிப்பதற்காக வெளிநாட்டு கப்பல்களை நமது கடல்பகுதியில் அனுமதிப்பதற்கான விவாதங்களும் நடக்கின்றது. இது முட்டாள்தனமானதும், அப்பட்டமாக நமது வளத்தை வெளிநாட்டுக்கு தாரைவார்ப்பதுமாகும். ஏற்கெனவே வெளிநாட்டுகப்பல்கள் நமது கடல்பரப்பில் LoP(Letter of Permit) முறையில் மீன்பிடிப்பதற்கு தடையிருக்கின்றது. இதை நிரந்தர சட்டமாக்கவேண்டுமென்பது மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

கணவாய்மீன் பிடிப்பதற்காக நம்மிடம் இல்லாத தொழில்நுட்பமாக சொல்லப்படுவது, பேலாஜிக் வலை, ஸ்குயிட் ஜிக்கிங் மற்றும் விளக்கொளியில் மீன்பிடிப்பது. இவற்றை பயன்படுத்தி நமது மீனவர்களே மீன்பிடிக்கும்போது, இந்த தொழில்நுட்பம் நம்மிடம் இல்லயென்பதால் வெளிநாட்டிற்கு மீன்பிடிக்க அனுமதிப்பது, நம்முடைய மீனவர்களை முட்டாள்களாக்கி, வியாபார இடைத்தரகர்களின் லாபத்திற்காகு உதவுவது மட்டுமே. 

கணவாய்மீன்கள் மிகக்குறைவான ஆயுட்காலம் கொண்டவை. அவை அதிகபட்சம் இரண்டுவருடங்கள் மட்டுமே உயிர்வாழும். அதுபோல், கணவாய்மீன்கள் கடல்சீதோஷணத்திற்கு தங்களை மிக எளிதாக தங்களை தவமைத்துக்கொள்பவை. எனவே, கடல்வெப்பநிலை உயர்வு கணவாய்மீன்களுக்கு சாதகனாதாக இருக்கின்றது. இதன்காரணமாக கணவாய்மீன்கள் ஒவ்வொருவருடம், கடல்வெப்பநிலை உயர உயர, அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. எனவே, கணவாய்மீன்களை கூடுமானவரை அறுவடைசெய்வதே நல்லது. அதற்காக, வெளிநாடுகளை நம்பியிருப்பதென்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. 

நம்முடைய மீனவர்களுக்கு அதன் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். விருப்பமான மீனவர்களின் விசைபப்டகுகளை கணவாய்மீன் பிடிப்பதற்கானமுறையில் மறுவடிவமைப்புசெய்ய அரசு உதவவேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மீனவர்களுக்கு விசைப்படகுகளை ஒருசில விதிமுறைகளுடன் மானியவிலையில் அரசியல் உள்ளீடற்ற முறையில் கொடுக்கலாம். இது அன்னிய நாட்டுகப்பல்கள் நமது கடல்வளத்தை சுரண்டுவதை தடுக்கும். மீனவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

தற்போது கணவாய்மீன்களை விளக்கொளியை பயன்படுத்தி அதிக அளவில் அறுவடை செய்யும் ஜப்பான், நார்வே, கொரியா மற்றும் ஸ்பெயின் விளக்கொளியில் மீன்பிடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றது. டுகளஆனால், இந்தியாவில் அதுபோல் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இதுவரை இல்லை. எனவே, நமது கடற்பரப்பில் கணவாய்மீன் பிடிக்கவரும் வெளிநாட்டுகப்பல்கள் நமது வளங்களை, சுற்றுச்சூழல்கேடுகளை ஒருபொருட்டாக மதிக்காமல் வாரிச்செல்லும். இது திருப்பியெடுக்கமுடியாத சூழல்கேட்டிற்கே இட்டுச்செல்லும்.

கணவாய்மீன்கள் குறித்த ஆய்வுகள் 2016 நடந்திருக்கின்றது. அதுபோல், ஜனவரி 13, 2017ம் நாள் வெளியிடப்பட்டிருக்கின்றது. கணவாய்மீன்களின் ஆயுட்காலம் 2 வருடங்கள் என்று கொண்டாலும் 2019 ஜனவரி மாதத்துடன் அந்த இடங்களிலிருந்த கணவாய்மீன்கள் முதிர்ச்சியடைந்திருக்கும். கடல் நீரோட்டத்தில் அவை இடம்பெயராமல் அதே இடத்தில்தான் நிலைகொண்டிருக்கின்றதா? கடல்நீரோட்டம் இந்த கணவாய் பெருமடையை இடம்மாற்றி கொண்டுசெல்லவில்லையா? புதிய இடங்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லையா? 

மீனவர்களுக்கு இந்த ஆய்வு குறித்த செய்திகள், இரண்டுவருடங்களுக்குப்பிறகு இப்போதுதான் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். இதுவரை அந்த இடங்களிலிருந்து கணவாய்மீன்களை வேறுயாரேனும் பிடிக்கவில்லையா? இந்திய கடல்வள ஆய்வுநிறுவனத்தின் 2016-17ற்கான ஆண்டு அறிக்கையில் இந்த பெருவாரியான கணவாய்மீன்கள் குறித்த எந்த தகவலும் இல்லையே, ஏன்? மீனவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பெருமுதலாளிகளின் லாபத்திற்காக மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும்  கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பாணை 2018லிருந்து மீனவர்களின் பார்வையை திசைதிருப்பவா? 

கணவாய்மீன்கள் இருக்கும் ஜிபிஎஸ் புள்ளிகள் இன்னும் மீனவர்களுக்கு உரியமுறையில் கொடுக்கப்படவுமில்லை, அவர்களை அந்த இடங்களுக்குச்சென்று மீன்பிடிக்க அரசு இதுவரை அறிவுறுத்தமில்லை. எனவே, 13°N/71°E, 11°N/72°E and 10°N/71°E பகுதிகளில் உண்மையிலேயே கணவாய்மீன்கள் இருந்தால், அவற்றை நமது மீனவர்கள், அவர்களிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைகொண்டு ஒரு கணவாயையும் விடாமல் பிடித்தெடுக்கவேண்டும். அப்படியாவது இந்தியாவின் அந்நியசெலவாணியாவது பெருகட்டும்.

Reference:

 1. Fishing Using Lights: How should India handle this new development, K. Sunil Mohamed, CMFRI
 1. Fishing with Light: Ecological Consequences for Coastal Habitats, Ogunola Oluniyi Solomon, Onada Olawale Ahmed
 1. ANNUAL REPORT 2016 – 17, FISHERY SURVEY OF INDIA, Dept. of Animal Husbandry, Dairying & Fisheries, Mumbai Ministry of Agriculture & Farmers’ Welfare
 1. Attracting Fish with Light, M. Ben-Yami, Food and Agriculture Organization of the United Nations
 1. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=186875

மரிய லூர்தம்மாள் சைமன்

*மரிய லூர்தம்மாள் சைமன்*

முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய லூர்தம்மாள் சைமன் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என்னும் வேண்டுகோளை நண்பர் குறும்பனை பெர்லின் தொடர்ந்து அரசிற்கு வைக்கின்றார். அந்த கோரிக்கை என்னவானது என்பதை “மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகம் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார். லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிலைவைக்கவேண்டும், அவர் பிறந்த ஊரான மணக்குடி கிராமத்திலிருக்கும் பாலத்திற்கு அவர் பெயர் சூட்டவேண்டும், தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு அவர் பெயரை வைக்கவேண்டும், குளச்சலில் ஒரு மணிமண்டபம்  கட்டவேண்டும் என்னும் எளிய கோரிக்கைகளுக்குக்கூட போராடவேண்டியிருப்பது வருத்தமானது.

[இந்த புத்தகத்திலிருக்கும் ஒரு சிறு தவறை வெளிப்படையாக சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. லூர்தம்மாள் சைமனின் பிறந்த நாளாக 26/09/1911 என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப்போல, ஏற்கெனவே வெளிவந்த ஜோ. தமிழ்செல்வனின் “உள்ளாட்சி & மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன்” என்னும் புத்தகத்திலும் 26/09/1911 என்பதே பிறந்தநாளாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல் அரசிற்கு வைக்கப்பட்டிருந்த கோரிக்கையிலும் 26/09/1911 என்று பிறந்த நாளாக சொல்லப்பட்டு, 2011 நூற்றாண்டுவிழா கொண்டாடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அரசு ஆவணப்படி அவரது பிறந்த நாள் 26/09/1912. இந்த தவறை சரிபார்த்து திருத்தம் செய்ய அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.]

காங்கிரஸ் பேரியக்கம் பல தன்னலமற்ற ஒப்பற்ற தலைவர்களை உருவாக்கியது. கேரளக்கடற்கரையைப் பொறுத்தவரையில் கே. காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற மரிய லூர்தம்மாள் சைமன் மற்றும் ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஆனி மஸ்கரின் என்னும் இரண்டு சிறுபான்மை சமூகத்தைச்சார்ந்த பெண்தலைவர்கள் மிக முக்கியமானவர்கள். தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஊழல்கறை படியாத, அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் கொண்டுவந்த நலத்திட்டங்கள், மீனவர்களின் மீதான அவரது பாசம், அவரது மனிதாபிமானம், அவரை அரசியலிலிருந்து திட்டமிட்டு நிர்மூலமாக்கியது என்பனவற்றை இந்த புத்தகம் விரிவாக அலசுகின்றது.

மரிய லூர்தம்மாள் சைமன், 1912ம் வருடம் செப்டம்பர் 26 நாள் மணக்குடி கடற்கரைகிராமத்தில்  பிறந்தார். நாகர்கோவில் செயிண்ட் ஜோசப் கான்வென்டில் பத்தாம் வகுப்புவரை ஆங்கிலவழியில் படித்து அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் வேலைபார்த்தார். அவரது கணவர் சைமன் அலெக்சாண்டர் அவர்கள் கொல்லங்கோடு மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் வென்று இரண்டுமுறை திரு-கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தபிறகு 1957ம் வருட தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று, கே. காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உறுப்பினரானார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியில், உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக லூர்தம்மாள் சைமன் பொறுப்பிலிருந்தது நமது நல்லூழ். காமராஜரின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்துமுடிக்க பி.கக்கன்,  ஆர். வெங்கட்ராமன், எம்.பக்தவச்சலம், சி.சுப்ரமணியம் போன்ற தலைவர்களுடன் உறுதுணையாக நின்றார்.

இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத்திட்டதை நடைமுறைப்படுத்தியிருந்த   அமெரிக்க தொண்டு நிறுவனமான கேர் (CARE – Cooperative for Assistance and Relief Everywhere) அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் கே. காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை உள்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுசென்றார் என்று அரசு அறிக்கை சொல்கின்றது. இதனால் சுமார் 14 லட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள்.

இதைப்போல், காமராஜரின் கல்வித்திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தினார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதில் மிகுந்த அக்கறைகாட்டினார். பொதுவாக கடல்சார்ந்த பிரச்சனைகள் வரும்போது, மீனவர்கள் கல்வி கற்று மாற்று வேலைகள் தேடவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லப்படுவதுண்டு. இது கடற்கரைகளில் கல்வியறிவு இல்லை என்னும் பொதுப்புத்தியின் மாயத்தோற்றம் மட்டுமே. 2010வருடத்தின் தமிழக கடற்கரை மீனவர்களின் கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி கடற்கரை மீனவர்களின் கல்வியறிவு 94.66 சதவிகிதம். இது வேறெந்த சமூகத்திற்கும் குறைவானதல்ல. இதில் லூர்தம்மாள் சைமனின் பங்களிப்பு முக்கியமானது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களை (பஞ்சாயத்து ராஜ்) செயல்படுத்தியதை லூர்தம்மாள் சைமன் அவர்களின் முக்கியமான சாதனையாகச் சொல்லலாம். 1958ம் வருடம் மெட்ராஸ் பஞ்சாயத்து , அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1959ம் வருடம் சட்டமாக்கப்பட்டது. 1960 வருட காந்தி ஜெயந்தி நாளிலிருந்து ஊராட்சி மன்றங்கள் மூன்று கட்டமாக, 32 மாதகாலத்தில் செயல்முறைப்படுத்தினார். 1962ம் வருடத்தில் 12,360 ஊராட்சிகள், 597 பேரூராட்சிகள், 374 பஞ்சாயத்து யூனியன்களையும் உருவாக்கி காந்தியின் கனவுத்திட்டத்தை தமிழக கிராமம் முழுவதும் கொண்டுசென்றார்.

1956ம் வருட நிலவரப்படை, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 48 படுக்கை வசதிகளே இருந்தது. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த லூர்தம்மாள் சைமன் காமராஜரிடம் வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று, 1960ம்வருடம் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளும் கொண்ட, 140 படுக்கை வசதிகளுடன், புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்தார்கள். இன்று அது  தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியாக வளர்ந்து நிற்கின்றது.

ஆனால், காமராஜர் புதிய மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்ததை நாகர்கோவில் உள்ளூர் மருத்துவர்கள் விரும்பவில்லை. தனியார் மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் லூர்தம்மாள் சைமன் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையை செயல்படுத்தினால் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தனக்கு எதிராக செயல்படுவார்கள் என்பதும், தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதை அவர் அறிந்திருந்தும் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார். இதுபோன்ற சுயநலமற்ற செயல்பாடுகளுக்கு உறுதியான ஆன்ம பலமும், நேர்மையும் வேண்டும்.

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒருபகுதியாக, மணிமுத்தாறு, வைகை அணைத்திட்டங்கள், கிராமங்களுக்கான அடிப்படை மின்சார வசதிகள், அடிப்படை சுகாதாரம் என்று பல நலத்திட்டங்கள் தமிழகத்தில் காமராஜரால் நடைமுறைப்படுத்தப்பட்டன. மணிமுத்தாறு அணைக்கட்டு அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

ஐந்தாட்டுத்திட்டதின் ஒரு பகுதியாக மீனவர்களுக்கு விசைப்படகுகளும் நைலான் வலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. விசைப்படகுகள் தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையின் பொருளாதாரத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தியது. கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஒப்பற்றிருப்பதற்கு இதுவே அடித்தளம் அமைத்தது. பாரம்பரியத்தை இழக்காத புதிய தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலேயே அவர் ஆர்வம் காட்டினார். [லூர்தம்மாள் சைமன் அவகளின் காலகட்டத்திற்குப் பிறகு, திமுக அரசால் இழுவைமடிகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.]

பெருந்தலைவர் கே. காமராஜர் அல்லது பி. கக்கன் என்று சொல்லும்போது, நமக்கு லூர்தம்மாள் சைமன் என்னும் பெயரும் ஞாபகத்திற்கு வரவேண்டும். ஆனால், அவரது பெயரை அவர் சார்ந்த மதம் மற்றும் ஜாதியை காரணம் காட்டி, அவரது பங்களிப்பை மறைப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. இது ஒரு வரலாற்றுப்பிழையாகவே எதிர்காலத்தில் எஞ்சும்.

இந்த நூலில் பல நெகிழ்ச்சியான, லூர்தம்மாள் சைமன் அவர்களின் மனிதநேயம் மிக்க சம்பவங்களும் இதில் சொல்லப்படிருக்கின்றது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வேண்டுகோள்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை. ஆனால், இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கும் லூர்தம்மாள் சைமன் யாரென்று தெரியாமலிருப்பது வியப்பாக இருக்கின்றது. ‘காங்கிரசை காங்கிரசே அழிக்கும்’ என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இருப்பினும், விடாப்பிடியாக, இந்த வேண்டுகோள்களை மீனவர்களின் உரிமையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து சாத்வீக வழியில் போராடும் நண்பர் பெர்லின் அவர்களுக்கு என்னுடைய அன்பும், பாராட்டுகளும். உங்கள் கனவு மெய்ப்படும் என்று நம்புவோம். வாழ்த்துகள்!!!

[“மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை]

சார்கள்

சார்கள் (சிறுகதை)

*

“திலீபு, இனியும் எனக்கு நடக்க முடியாலும்” மூச்சிரைக்க ஒவ்வொரு வார்த்தையாக பர்னாந்து சொன்னார். 

“ஒரு இன்கம் சர்ட்டிபிகேட் வாங்க இத்ற கஷ்டமா? அவன் அவனுக்க தோனியாசமும் காட்டிண்டு காலேஜுக்கு போயாச்சு. நான் கெடந்து சாவணும்” பர்னாந்திற்கு மூச்சு முட்டியது. நடக்க முடியவில்லை.

“கொறச்சு நேரம் இதில இரியுமி.” குழித்துறை கோர்ட்டிலிருந்து இடைவழியாக பஸ்டாப்புக்கு வரும் வழியிலிருந்த வயலோர தென்னைமர நிழலில் உடகார்ந்தார்கள். ஒவ்வொரு இருமலுக்கும் கபம் வெளிவந்தது. துப்பிக்கொண்டிருந்தார்.

“மருந்து இருக்குதா?”

“தின்னாச்சு. ஒரு நாளு ரெண்டுதான்.” சுவாசம் முட்டியது. வில்லேஜு ஆப்பீசர் எழுதி கையெழுத்திட்ட படிவத்தை கூர்ந்து நோக்கினார். 

“ஏன், மத்தவ, அந்த தாசில்சாறு இதில ஒப்பு தருதாளில்ல.”

“அது நாம அவளுக்கு வல்லதும் கொடுக்கணும்”

“நான் எனக்க கையிலிருந்த காசெல்லாம் அவளுக்கு நீட்டினேன். தூக்கி எறிஞ்சா” இருமல் சற்று அடங்கியிருந்தது.

“அந்த பேப்பற தருமி.” திலீப் அதை வாங்கி பார்த்தான். “இதில செவப்பு மசிவெச்சு ஏதோ எளுதியிருக்கு. நம்ம  படிச்சவன் வல்லதும் குண்டாமண்டித்தனம் காட்டிக்காணும்”

“ஒள்ளதுதான் பிள்ள. அவன் இந்த வில்லேஜாப்பீசறுக்கிட்ட செறிய தர்க்கமாம். இவனிட்ட பைசா கேட்டானாம். இவன் ஒரு நயா பைசா தரமாட்டேன்னு சொல்லியிருக்கு”

“பிச்சக்காறனுக்கு வல்லதும் கொடுத்து விடவேண்டியது. நாம இப்படி அலயவேண்டிய தேவயில்ல.”

“இனியும் இருந்தா பத்தாது. நாம நடக்கலாம். அவ காஞ்சாம்பொறத்தணும் எடம் கடருததுக்கொள்ள போயி பிடிச்சலாம். பைசா கொடுத்து சர்ட்டிபிகேட்டு வாங்கண்டாணு அவன் சொன்னான். அந்த பைசாச்சு மருந்துவாங்கி தின்னச்சொன்னான்.”

இருவரும் நடந்தார்கள். தாசில்தார் கையொப்பமிடாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருந்தார். காரணம் எதுவென்று தெரியவில்லை. மகனுக்கு இன்னும் ஒருவாரத்தில் இன்கம் சர்டிபிகேட் கல்லூரியில் கொடுத்தால்தான் பீஸ் கன்சஷன் கிடைக்கும். குழித்துறையில் வந்திருந்த தாசில்தார் காஞ்சாம்புறம் ரேஷன்கடையில் அவசர வேலையிருப்பதாக அங்கு வரச்சொல்லியிருந்தாள்.

“நீங்க இந்த ரோகத்துக்கு ஆஸ்பத்திரியில போகவேண்டியதுதானே”

“இல்ல பிள்ள, நான் போகாத ஆசுபத்திரியில்ல. சாரயத்த நிறுத்தி இருவது கொல்லம் ஆவுது. தீந்தபாடில்ல”

“நாட்டுவைச்சியர பாத்திருக்கலாம்”

“அது மட்டுந்தான் கொறவு. ஒரு தடவ ஒரு வைச்சியன பக்கப்போனேன்.” வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு தொடர்ந்தார். “அப்பத்தான், வைச்சியன் வடிச்செடுத்த எண்ணைய குடிச்சத்தந்தான். இனியும் இந்த ரோகம் இருந்த எடம் தெரியாதெண்ணு சொன்னான். அப்பத்தான் எனக்கு உயிரு வந்தது.”

“அது எந்த எண்ண? வெளி மார்க்கட்டில கிட்டுமா?”

“அதுவா? நானும் வைச்சியருக்ககிட்ட கேட்டேன். எண்ண உருக்குத எடத்தில என்னய கூட்டிப்போயி காட்டினான்” சிறிது நேரம் பர்னாந்து பேசவில்லை. “ஒரு சாக்கு நெறய ஏதோ செடிவேரு மாதிரி இருந்தது. அதக்கொண்டு கொதிச்சித எண்ணயில கொண்டு தட்டினான்.”

“வேரு தானா?”

“வேரா? நான் அவிடத்தான் சர்த்திச்சு தொளிச்சு போட்டேன். எரப்பாம்பு”

“எரப்பாம்பா?”

“ஓம் பிள்ள, எரப்பாம்பு. வெளியில் சாக்கு நெறய பொங்கிளி தள்ளி, மெணஞ்சிண்டு கெடந்தது. அத எண்ணியில வதக்கி, அரிச்செடுத்து குப்பியில பிடிச்செடுத்தான்”

“ரோகம் தீந்ததா?”

“பின்னல்லாம. எரப்பாம்புக்க ரோகம் தீந்தது. எனக்கு கூடிப்போச்சு” என்று சொன்னபோது மூச்சு முட்டியது. சிறிது நேரம் இருவரும் அம்மன் கோயில் மர நிழலில் நின்றார்கள்.

குழித்துறை பஸ் டாப் வந்து காஞ்சாம்புறம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். பர்னாந்திற்கு உட்கார முடியவில்லை. வியர்த்துக்கொட்டியது. மூச்சு வானக்கும் மண்ணுக்கும் மேலும் கீழுமாக இழுத்தது. “இனியும் கொறச்சு தூரம்தான்” திலீப் ஆறுதல் சொன்னான். வண்டியில் இருந்தவர்கள் தங்கள் மூச்சை மெதுவாகவிட்டார்கள். அவர்களுக்கும் பரவுமென்ற சந்தேகம். “இதென்ன இளுப்பு. வல்லதும் ஆசுபத்திரியில எறக்கி விடடே”  வண்டியிலிருந்த ஒரு பயில்வான் பக்கிறி சொன்னான்.

“லேய், வாயணும் ஒண்ணும் வேண்டாத இரியில அவிட. நிங்கம்மைக்க வண்டி. நிக்க நொய்ய எடுத்துக்களயுவேன், சும்மா இருந்துக்கோ. இனி இந்த வண்டியில ஒரு மூச்சு மட்டுந்தான் கேக்கணும். ரெண்டாமத்த மூச்சுச்சத்தம் எனக்கு கேட்டா, அந்த மூச்ச அடச்சுப்போடுவேன், அடச்சு.” திலீப் சத்தமிட்டுச்சொன்னான். வண்டி பயத்தில் பம்மிச்சென்றது. “ஆசுபத்திரியும் மயிரும். மத்தவள எங்க வீட்டில வந்து சைனுபோடச்சொல்லு, நாங்க ஆசுபத்திரியில போறோம்”. வண்டி தன் கடைசி மூச்சை காஞ்சாம்புறத்தில் நிறுத்தியது.

வண்டியிலிருந்து இறங்கி அவள் சொன்ன இடத்திற்கு நடந்தார்கள். பர்னாந்துக்கு மூச்சு முட்டியது. அவரால் இருமவும் முடியவில்லை. தீலீபின் தோளைப்பிடித்து நடந்தார். “நீங்க இங்க இரியுமி. நான் அவள பாத்திட்டு வாறேன்”

“இல்ல பிள்ள, நானும் வாறேன். நான் படுத பாட அவ பாக்கணும்”

ரேஷன் கடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்திருந்தாள். இருவரும் அவள் முன் சென்று நின்றார்கள். “ஏய் சயரோகம், வெளியில போ நில்லுடே. உயிர எடுக்காம.”

“மேடம், ஒரு சைனு தந்தா உங்கள எதுக்கு தொந்தரவு பண்ணப்போறோம்”

“நீ யாருடே. உங்க அண்ணனா ததேயூஸ்? அவனுக்க திமிருக்கு எனக்க கையிலிருந்து ஒண்ணும் கெடைக்காது. நீங்க வீட்டுக்கு போங்க”

“எனக்க பிரண்டு மேடம், நாங்க பஞ்சோரு பாவங்க. இதில போட்டிருக்க மாசம் 1000 ரூபாயும் எங்களுக்கு வருமானமா கிட்டாது. இந்த சர்ட்டிபிகேட்டு தருததில உங்களுக்கு என்ன பிரச்சன?”

“அவன் எங்க படிக்கான்?”

“செயின்ட் சேவியர் காலேஜ், திருநெல்வேலி.”

“வல்லிய காலேஜ். அங்க படிக்க இந்த சர்ட்டிபிகேட்டு ஒண்ணும் தேவயில்ல. அவிங்களுக்கு தெரியும். அங்க படிக்க எல்லாரும் உங்கள மாதிரியான ஆளுங்கதான். இந்த காலத்தில 1000 ரூபாவ வெச்சு ஜீவிக்க முடியுமா?”

“அப்போ நீங்க தரமாட்டீங்க?” என்று திலீப் கேட்டபோது பர்னாந்து சுவாசமுட்டலுடன் குந்தி உட்கார்ந்திருந்தார்.

“இல்ல, கனவிலும் நெனச்சு பாக்காதீங்க. வல்லதும் நோய பரப்பாம இங்கிருந்து போங்க. யோவ், அந்தப்பக்கமா போயி எச்சில் துப்பையா.”

இனியும் கெஞ்சி பலனில்லை. இருவரும் அடுத்த பஸ்சிலேறி வீட்டிற்கு வந்தார்கள். இந்த சர்ட்டிபிகேட் கிடைக்கவில்லையென்றால், வீட்டிற்கு திரும்பி வருதாக ததேயூஸ் சொல்லியிருந்தான். ஆனால், அடுத்த கடிதத்தில் ததேயூஸ் இனியும் இந்த சர்ட்டிபிகேட்டிற்கு அலயவேண்டாமென்று சொல்லிவிட்டான். நாட்கள் பிந்திவிட்டது. இனியும் கொடுத்தும் பலனில்லை. அவனுக்கு கல்விக்கட்டணத்திலும் ஹாஸ்டில் பீசிலும் சலுகைகள் அளிக்கப்பட்டதாகச் சொல்லியிருந்தான். 

சில நாட்களுக்குப்பிறகு, தாசில்தாரும் வில்லேஜ் ஆப்பீசரும் இடைப்பாடு ரேஷன் கடையில் வந்திருந்தார்கள். பர்னாந்து கட்டுமரம் கரையிலணைந்து வீட்டில் வந்தபோது, தீலீப் ஓடிவந்தான்.  “பெட்டெந்நு வருமி. மத்த ரெண்டுபேரும் நம்ம ரேசன் கடயில வந்திருக்கு”. 

“பிள்ள, ததேயூசு இந்த சர்ட்டிபிகேட்டு வேணாமெண்ணு சொன்னான். நமக்கு வேண்டாம் பிள்ள. இனியும் எதுக்கு அவனுவள கெஞ்சிக்கொண்டு.”

“அதுக்கில்ல, இது நம்ம உரிமையாக்கும். அவுங்க நமக்கு இத தந்தாவணும். நம்மளமாதிரி எத்ற பாவங்களுக்க வைத்தில அடிச்சிருப்பானுவ. நீங்க அந்த பேப்பற எனக்க கையில தந்தாமதி. மிச்சத்த நான் பாக்குதேன்”

இருவரும் இன்கம் சர்ட்டிபிகேட் படிவத்தை எடுத்துக்கொண்டு விரைந்து சென்றார்கள். ஆபீசர்கள் இருவரும் ரேஷன்கடையினுள் உட்கார்ந்திருந்தார்கள். திலீப் அந்த படிவத்தை அவர்கள் முன்னால் தூக்கி வீசினான். “இந்த ஆளுவள தெரியுமா? இதில சைனு போடாத நீங்க ரெண்டெண்ணமும் வெளியில போவமுடியாது.” என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்து ரேசன்கடை கதவை மூடினான். “ஏய், கதவத்திற” தாசில்தார் சத்தமிட்டாள்.

“ஆத்தியம் சைனப்போடுங்கடே.” என்று திலீப் சொல்லிக்கொண்டு, “எதுக்கும் நீங்க அந்த பக்கெட்டில, அன்னா கெடக்குத சாணாங்கிய கலக்குமி. இந்த ஊப்பிசாறுமார சும்மாவிடப்பணி. இண்ணு இவளுக்கு சாணாங்கி குளியல்தான்.” என்று பர்னாந்திடம் சார்கள் கேட்கும்படியாக சத்தமாகச் சொல்லிவிட்டு, பர்னாந்தையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

ரேஷன்கடையின் உள்ளிருந்து “சார், சார், கதவத்தெறங்க, சார். சைன் போட்டாச்சு, சார்” என்று அவர்கள் இருவரும் வாழ்நாளில் வாங்கிய சார்கள் அனைத்தும் வாய்வழியாக தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.

*

எரப்பாம்பு – மண்புழு

குளச்சல் யுத்தம்

நண்பர் என்.டி. தினகர் மற்றும் பாதர். கிளாரட் ஆன்றணி அவர்களும் எழுதிய குளச்சல் போர் குறித்த புதிய புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் மார்க் டி.  லெனாய் எழுதிய “The kulasekara perumals of Travancore – History and state formaton in Travancore from 1671 – 1758” என்னும் ஆய்வுநூலை அடைப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.  இந்த ஆய்வு நூலின் தமிழாக்கமும் இந்த புத்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [நண்பர் என்.டி. தினகர், திருவிதாங்கூர் சார்ந்த வரலாற்றாய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.]

பொதுவெளியில் நமக்குத்தெரிந்தது, குளச்சல் போரில் டி. லெனாய் தலைமையிலான டச்சுப்படை மார்த்தாண்டவர்மாவிடம் சரணடைந்தது என்றுதான் இதுவரை படித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், டி. லெனாய் கன்னியாகுமரியிலிருந்த டச்சு முகாமிலிருந்து வெளியேறி, மார்த்தாண்டவர்மாவுக்காக குளச்சல் டச்சுப்படைகளை முழுமையாக சரணடைய உதவினார் என்பது ஒரு புதிய தகவல். அதுபோ, குளச்சல் யுத்தத்தில் திருவிதாங்கூர் படையில் அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள், கடலில் யுத்தம் ஒருபோதும் நடக்கவில்லை என்பதுபோன்ற தகவல்களை ஆணித்தரமாக நிறுவுகின்றது.

குளச்சல் யுத்தத்திற்கான, மூலகாரணங்களை, அரசியல், பொருளாதார காரணங்களை இந்த நூல் சுருக்கமாக பேசுகின்றது. 400 டச்சுப்படை வீரர்களை இருபதாயிரத்துக்கும் மேலான திருவாங்கூர் படையினரால் ஏன் எதிர்க்க முடியவில்லை என்பதற்கான காரணங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் ஏன் கிறிஸ்தவர்களான டச்சுக்காரர்களுக்கு ஏன் உதவவில்லை என்பதை அறிய டச்சு மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கிடையிலான உள்ளூர் பிரச்சனைக்கக்கு செல்லவேண்டும்.

யானை என்பது ஒரு அரசன். யானையை சீண்டுவததென்பது அந்நாட்டு அரசனை சீண்டுவதுதான். மலபாரில் போர்ச்சுக்கீசியர்களால் கோழிக்கோடு சாமுத்திரிக ராஜாவை தோர்க்கடிக்க முடியவில்லை. அதற்கு முழுக்காரணம் சமுத்திரிக ராஜாவின் கடற்படையை நடத்திய மரக்கார் குஞ்சாலிகள். ஒரு கட்டத்தில், போர்ச்சுக்கீசியரை வெற்றிகண்டு பெருமிதப்பிலிருந்த நான்காம் குஞ்சாலி சாமுத்திரிக ராஜாவின் ஒரு யானைவின் வாலை அறுத்துவிடுவதன்காரணமாக கோபம்கொண்ட சாமுத்திரி, போர்ச்சுக்கீசியருடன் கூட்டு சேர்ந்து குஞ்சாலியை பழிவாங்குகின்றார். குஞ்சாலிகள் இல்லாத கோழிக்கோட்டை போர்ச்சுக்கீசியர்கள் எளிதாக வெல்கின்றார்கள். [உபயம்: கேஎம் பணிக்கரின் மலபார் மற்றும் போர்ச்சுக்கீஸ்] 

அதுபோல், 1939 முதல் 1743 வரை நடந்த திருவிதாங்கூர் யுத்தங்களின் துவக்கமான மார்த்தாண்டவர்மா காட்டுயானைகளை வேட்டையாடிய நெடுமங்காடு ஆனைப்பிடி பிரச்சனையிலிருந்தே துவங்குகின்றது. ஆனைப்பிடியிலிருந்து குளச்சல் யுத்தம் வரை இந்த நூலில் காணலாம்.

இந்த புத்தகம் மார்க் டி.  லெனாயின் ஆய்வுநூலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருந்தாலும் இதில் சில *கடல்சார்ந்த* சம்பவங்களை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். முக்கியமாக,

 1. குளச்சல் யுத்தத்தில் டச்சுப்படையணியில் மீனவர்களும் இருந்தார்கள். சரணடைந்த மீனவர்களை சிறைவைத்த தகவல்கள் அடங்கிய மதிலகம் ஆவணங்கள் குறித்து இதில் எதுவுமில்லை.
 2. குளச்சல் யுத்தத்திற்கு கூடுதல் டச்சுப்படையணிகள் ஏன் சிலோணிலிருந்தோ அல்லது பட்டாவியாவிலிருந்தோ வரவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பது சொல்லப்படவில்லை.
 3. இலங்கைக்கான டச்சு கவர்னர் வான் இம்காஃ திருவிதாங்கூருக்கு வந்து மார்த்தாண்டவர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. தேங்காய்பட்டினத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல். ஆனால்,  வான் இம்காஃ மற்றும் மார்த்தாண்டவர்மாவுக்குமான பிரசித்திபெற்ற உரையாடல் இதில் விடுபட்டிருக்கின்றது. எளயடத்து ஸ்வரூபம் (கொட்டாரக்கரா) இளவரசியை மார்த்தாண்டவர்மா சிறைவைத்தபோது, இளவரசி அதிலிருந்து தப்பி தெக்கம்கூர் சமஸ்தானத்திற்கு செல்வார். அப்போது, வான் இம்காஃ இளவரசிக்காக மார்த்தாண்டவர்மாவிடம் பேச்சுவார்த்தைக்கு வருவார். மார்த்தாண்டவர்மா இம்காஃபின் எந்த கோரிக்கைக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரின் சம்பாஷணை:

“திருவிதாங்கூரை டச்சுப்படை கைப்பற்றும்” – இம்காஃ

“டச்சுப்படைகளின் சமாதி திருவிதாங்கூர் காடுகளில்” – மார்த்தாண்டவர்மா

“திருவிதாங்கூர் படை எங்கு சென்றாலும் டச்சுப்படை பின்தொடரும்” – இம்காஃ

“நான் எனது மீனவர்களையும் அவர்களது வள்ளங்களையும் கொண்டு ஐரோப்பாவை கைப்பற்றுவது குறித்து நீண்டகாலமாக யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.” – மார்த்தாண்டவர்மா

இந்த நூலை இன்னும் சிறிது விரிவாக ஆய்வு செய்திருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் மேலே சொன்ன என்னுடைய விருபங்கள் எதுவும் ஆய்வுநூலின் மதிப்பை எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்தாது. மொத்தத்தில் இது குளச்சல் யுத்தம் சார்ந்த ஒரு சிறந்த ஆய்வுநூல். வெளியீடு நகர்வு வெளியீட்டகம்.

மீனவர்கள் எதிர்நோக்கும் புதிய சவால்கள்

சமீபத்தில் ஆழ்கடல் மீனவர்களுக்கு சேட்டலைட் தொலைபேசி, நேவ்டெக்ச் (NavTex), மற்றும் நேவிக்(NavIC) கருவிகள் இலவசமாக அரசு அளிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றது. பாராட்டப்படவேண்டிய விசயம். இவை எளிய இலவசங்களல்ல, ஆழ்கடல் மீனவர்களின் உயிர்காக்கும் கருவிகள்.  உண்மையில் ஆழ்கடல் மீனவர்களுக்கு கிடைக்கவேண்டியது, AIS (Automatic Information System) கருவிகள். அனைத்து விசைப்படகுகளிலும் AIS கருவிகள் இருக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தவேண்டும். அவற்றை இலவசமாக அரசு மீனவர்களுக்கு கொடுக்கவேண்டும். அதுபோல், வானிலை சார்ந்த ஆய்வுகள் மற்றும் வானிலைக்கான தொலைதொடர்பு சாதங்களையும் நவீனப்படுத்தவேண்டும்.

உலகின் மொத்த மீன் அறுவடையில் 86% வளர்ச்சியடைந்த நாடுகளான சைனா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஸ்பென் என்னும் ஐந்து நாடுகளின் பங்கு. இவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மட்டுமல்ல, ஏழைநாடுகளின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (Exclusive Economic Zone) அதிகளவு மீன்பிடித்தத்தில் ஈடுபடுகின்றார்கள். கடந்த சில வருடங்களாக இந்தியா வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிப்பதை தடைசெய்திருக்கின்றது என்பது பாராட்டிற்குரியது.

2050ம் வருடம் உலக மக்கள்தொகை ஆயிரம் கோடிகளாக இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கப்பல்கள் அளவுக்கதிகமாக மீன்பிடிப்பதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் சுமார் 85கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு சொல்கின்றது. வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இந்தியா அரசு அனுமதி கொடுக்காமல் இருக்கும்வரை நமக்கு பாதிப்பில்லை என்று நம்பலாம். 

ஆனால், ஜப்பான் நாட்டு நிறுவங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் தமிழகத்தில் முதலீடு செய்யவிருப்பதாகவும், அவர்களை ஜனவரியில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைத்திருப்பதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடல்சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதியளிப்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நல்லதல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்பில் நம்நாட்டு மீனவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

அரபிக்கடலில், தரமான சுண்ணாம்பு சேறு மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான கடல்மணல் பெருமளவில் இந்திய பிரத்யேக பொருளாதார மண்டல கடல் எல்லைக்குள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகழ்ந்தெடுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவற்றை அகழ்ந்தெடுப்பனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் ஆராயப்படவில்லை. கடற்கரைகளில் மணல் அகழ்வதினால், கிராமங்கள் கடலில் மூழ்குவதை கண்கூடாகப் பார்த்துகொண்டிருக்கின்றோம். கடலில் சுண்ணாம்பு மற்றும் கடல்மணலை அகழ்வது கடல்சூழியலுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.

அதுபோல், வணிகக்கப்பல்களின் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்காக, கடற்கரையிலிருந்து 15 முதல் 40 நாட்டிகல்மைல்கள் வரை அரபிக்கடலில் புதிய வழித்தடம் ஏற்படுத்தபடவிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த வழித்தடத்தை எந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தீர்மானித்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 15முதல் 40 நாட்டில் மைல்கள் வரையிலான கடற்பரப்பில்தான், பாரம்பரிய கரைக்கடல் மீனவர்கள் மீன்பிடிக்கின்றார்கள். இந்த புதிய வழித்தடம், கரைக்கடல் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். அதுபோல், நம்நாட்டில், கப்பல்கள் மீனவர்களின் படகுகளை மோதிவிட்டு-ஓடுவது (hit and run) சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றது. அதற்கான தீர்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த புதிய கப்பல் வழித்தடம் மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் எமனாகவே இருக்கும்.

References:

 1. http://advances.sciencemag.org/content/4/8/eaau2161
 2. https://cosmosmagazine.com/biology/five-nations-take-the-lion-s-share-of-the-world-s-fish
 3. https://www.newsdeeply.com/oceans/articles/2018/08/03/rich-and-poor-divide-which-nations-benefit-from-global-fishing
 4. https://www.nature.com/news/nutrition-fall-in-fish-catch-threatens-human-health-1.20074
 5. https://timesofindia.indiatimes.com/city/kolkata/geologists-strike-seabed-gold-in-peninsular-india/articleshow/59624483.cms
 6. https://timesofindia.indiatimes.com/business/india-business/gsi-unearths-import-quality-lime-mud-marine-sand/articleshow/65522441.cms
 7. https://timesofindia.indiatimes.com/city/madurai/fishers-protest-against-proposed-new-shipping-corridor/articleshow/66407102.cms
 8. https://www.deccanchronicle.com/nation/current-affairs/210918/kollam-shipping-corridor-to-hit-livelihood-of-fishers.html

ஒக்கி புயலும் நோக்கா செயலும்

*ஒக்கி புயலும் நோக்கா செயலும்*

குறும்பனை பெர்லினும், நானும் (கிறிஸ்டோபர் ஆன்றணி) எழுதிய “ஒக்கி புயலும் நோக்கா செயலும்” என்னும் கட்டுரை புத்தம், ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில், திருவனந்தபுரம் பேராயர் டாக்டர் சூசைபாக்கியம் அவர்களால் வள்ளவிளையில் வைத்து 01/09/2018 சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இது ஒக்கி புயல் சார்ந்த அனைத்து தரவுகளின் தொகுப்பு. இதில் எங்கள் இருவரின் கட்டுரையுடன் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் திரு. ஹென்றி டிஃபேன் மற்றும் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரின் ஒக்கி புயல் அறிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், அரசாங்கத்தின் மனிதாபிமானம் சார்ந்த செயல்பாடுகளும், அரசு ஆணைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தின் முக்கிய குறிக்கோள், ஒக்கி புயல் சார்ந்த அனைத்தையும் ஆவணப்படுத்துவது. இதுவரை கடற்கரை சார்ந்த எந்தவிதமான பேரிடர்களும் ஆவணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக சுனாமி தடம் தெரியாமல் சென்றுவிட்டது. நாளைய தலைமுறைக்கு சுனாமி குறித்து சொல்வதற்கு நம்மிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. வருங்காலத்திலும் சுனாமி காலகட்டத்தில் செய்த தவறை நாம் செய்யக்கூடாது. அதன் முதல் முயற்ச்சியே, “ஒக்கி புயலும் நோக்கா செயலும்” ஆவணப்புத்தகம். அரசு சார்பில் வெளியிடப்படும் ஒக்கி சார்ந்த புதிய அரசாணைகளும் முக்கிய அறிக்கைகளும் அடுத்த பதிப்புகளில் இணைக்கப்படும்.

ஒக்கி பேரிடர் நடந்து முடிந்து ஒன்பது மாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஒக்கியின் ரணம் இன்னும் தீரவில்லை. ஒக்கியின் ஓலம், திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரேல”, அருள் எழிலனின் “பெருங்கடல் வேட்டத்து” போன்ற ஆவண்ப்படங்கள் வாயிலாக நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளியல் உதவி பெருமதிப்புமிக்கது. ஒருமாதகாலத்திற்குள் கடலில் காணமல்போன மீனவர்களை இறந்தவர்களாக அறிவித்தது அரசாங்கத்தின் மனிதாபிமான உச்சம் எனலாம். மத்தியமாநில அரசுகள் பாராட்டிற்குரியவை. ஆனால், கடலில் காணாமல் போன மீன்வர்களை விரைவாக தேடுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மீனவர்களின் அனைத்து வழக்குகளும் நீக்கப்படுமென்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஜெயகுமார் அவர்கள் வாக்குறுதியளித்தபின்னரும், மீனவர்களை கோர்ட்டு கேஸ் என்று அலைக்களிப்பதில் எந்தவிதமான நியாயவுமில்லை.

ஒக்கி புயல் சார்ந்த அரசு அறிக்கைகளில் முக்கியமானது, முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற நிலக்குழுவின் அறிக்கை. ஏப்ரல் 4, 2018ம் நாள் ஒக்கி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு குறித்த அறிக்கை ராஜ்யசபாவில் வெளியானது. அதில் சொல்லப்படும் முக்கிய பரிந்துரைகள்:

 1. இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வதுபோல், விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகள் அரிய நிகழ்வல்ல. பல நாடுகள் ஒக்கி போன்ற சூறாவளிகளை தகுந்த நேரத்தில் கணிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கின்றன. விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகளை கணிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த தொழில்நுட்பம் இருக்கும் நாடுகளின் உதவியையும் பெறவேண்டும்.
 2. இந்திய வானிலை மையம், வானிலையை கணிக்க வளிமண்டல மாதிரிகளை (atmospheric models) மட்டுமே பயன்படுத்துகின்றது. கடல் மாதிரிகளை (oceanic models) பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஒக்கி புயல் கடல் மாதிரிகளை பயன்படுத்தாத காரணத்தினால், நம்மால் ஒக்கிபுயலை கணிக்கமுடியவில்லை. எனவே, கடல் மாதிரிகளை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்படுத்தவேண்டும். வெளிநாடுகளின் உதவியுடன், அதற்கான ஆய்வுகளை விரைந்து நடத்தவேண்டும். [2016ம் வருடத்திலிருந்தே, வானிலை ஆய்வில் கடல் மாதிரிகள் பயன்படுத்தப்படுமென்று சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள் என்பதும் அதை செயல்படுத்தாமல் இருப்பதும் வருத்தமான விஷயம்.]
 3. கடல் சீதோஷண நிலையை தெர்மல் செயற்கைக்கோள்களின் உதவியுடன் பெற்று அதை சூறாவளி   முன்கணிப்பு மாதிரிகளுடன் இணைக்கவேண்டும்.
 4. புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல்நீர் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. எனவே, ஒக்கி போன்ற சூறாவளிகளின் பாதையையும் வீரியத்தையும் கணிப்பது கடினமானது. எனவே, கணிக்கமுடியாத சூறாவளிக்களுக்கு பொதுவான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure) உலக நாடுகளுடன் செயல்படுத்தவேண்டும். 
 1. INSAT 5B செயற்கைகோளின் உதவியுடன் செயல்படும், படகுகளில் பயன்படுத்தப்படும் கப்பல் கண்காணிப்பு யூசர் டெர்மினல்களையும், மைய கண்காணிப்பு அமைப்பையும் கூடிய விரைவில் இஸ்ரோவின் உதவியுடன் செயல்படுத்தவேண்டும். மேற்சொன்ன Vessel Tracking System அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளிலும் கண்டிப்பாக இருக்கும்படிசெய்யவேண்டும். மற்றபடகுகளில் VHF மற்றும் DAT ஆகியவையும் இருக்கவேண்டும். இவற்றை சலுகை விலையில் கொடுக்கவேண்டும்.
 2. இஸ்ரோ உருவாக்கிக்கொண்டிருக்கும் FishermanApp அடுத்த ஆறுமாத காலத்தில் அனைத்து மீனவர்களின் செல்பேசிகளிலும் இருக்கும்படி செய்யவேண்டும். FishermanApp தரவிறக்கம் செய்யப்பட்ட செல்பேசிகளில் செயற்கைகோள் மூலமாக தகவலகளை பரப்பமுடியும்.
 3. மீனவர்களின் இழப்பும், காலம் பிந்திய தேடுதல் நடவடிக்கையும் வருத்தத்திற்குரியது. தேடுதல் நடவடிக்கை முடிவடையும் போது, 244 மீனவர்கள் இன்னும் காணாமலாகியிருக்கின்றார்கள். அவர்களின் குடுபங்களுக்கு வாழ்வாதார நிவாரணம் மிக விரைவாக கிடைக்கும்படி செய்யவேண்டும். [மாநில அரசு சார்பில் இறந்த/காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் தகுந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது.]
 4. மத்திய அரசு சார்பில், இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் மறுவாழ்விற்கு மாநில அரசுகள் சிறப்பு உதவிகளை விரைவாக செய்யவேண்டும்.
 5. புயலில் உயிரிழந்த/காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியை அளிக்கவேண்டும். குடுபத்தில் ஒருவருக்கு மறுவாழ்விற்கான பயிற்சியை அளிக்கவேண்டும்.

இவற்றில் தொழில் நுட்பம் சார்ந்து எந்தவித முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசுகள் உறுதியளித்ததுபோல், பொருளியல் உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால், மத்திய அரசு நிலைக்குழு பரிந்துரைத்த பொருளியல் உதவியை செய்ததாகத்தெரியவில்லை. பொருளியல் உதவிக்கு மேலாக வானிலை முன்கணிப்பிற்கான தொழில் நுட்ப முன்னேற்றமே நமக்கு தேவையானது. அல்லாத பட்சத்தில் ஒக்கி போன்ற பேரிடர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

“ஒக்கி புயலும் நோக்கா செயலும்” கட்டுரை புத்தகத்தை வெளியிட்ட மதிப்பிற்குரிய திருவனந்தபுரம் பேராயர் டாக்டர் சூசைபாக்கியம் அவர்களுக்கும் வள்ளவிளை பங்குத்தந்தை பாதர் டார்வின் பீட்டர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. புத்தகத்தை ஒக்கி புயல் நிவாரண நிகழ்வில் வெளியிட உதவிய நண்பர்கள் திலீப் மற்றும் ஆல்பர்ட் ஆகியோருக்கும், சேலாளி பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த நன்றி. 

Click to access The%20Cyclone%20Ockhi.pdf

Click to access LSQ.4065.pdf

கிமு. கிபி.

தமிழக புதிய தமிழ் பாடப்புத்தங்களில் கிமு கிபி என்ற வார்த்தை குறித்து சில விவாதங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிறிஸ்துவுக்கு முன் / பின் என்பதை மாற்றி பொது ஆண்டிற்கு முன் / பின் என்று பயன்படுத்த உலக கல்வி நிறுவனங்கள் முழுமனதாக தீர்மானித்திருப்பதாக பொய்ப்பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவான கொள்கை முடிவுகளை உருவாகும்  உலகளாவிய கல்வி நிறுவனங்களுக்கான அமைப்புகள் எதுவுமில்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் கூட கொள்கை முடிவுகளை அந்தந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாவட்ட நிர்வாகவுமே எடுக்கின்றது.

தமிழக பாடநூல்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவென்பதை புரிந்துகொள்ள புதிய  பதினொன்றாம் வகுப்பு தமிழ் மின்னூல் புத்தகத்தை புரட்டிப்பார்த்தேன். ஓரிடத்தில் மட்டும் “பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டு: பித்தகோரஸ்தான் முதலில் மனம் மூளையில் இருக்கின்றதென்றார்.” என்று பொ.ஆ.மு.  குறிப்பிடப்பட்டுள்ளது. பொ.ஆ.மு. என்றால் பொது ஆண்டுக்கு முன் என்று நினைக்கின்றேன். பொது ஆண்டு என்றால் கிறிஸ்து பிறந்த ஆண்டு. எனவே, பொ.ஆ.மு என்பதற்கும் கி.மு என்பதற்கும் எந்தவிதமான வேறுபாடுமில்லை. மீதி இடங்களில் வருடங்கள் முன்னொட்டு இல்லாமல் இருக்கின்றது. உண்மையாகச்சொன்னால், இதையே ராராசோமு / ராராசோபி (ராஜராஜ சோழனுக்கு முன்னும் பின்னும்) என்று மாற்றியிருந்தாலாவது ஏதாவது அர்த்தமிருக்கும்.

கிமு மற்றும் கிபி என்பதை பொ.ஆ.மு மற்றும் பொ.ஆ.பி என்று, வேற்று மத மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மாற்றவேண்டுமென்பதை 2017ம் வருடம் இங்கிலாந்தின் மதக்கல்விகளுக்கான அமைப்பு  (SACRE) முதன்முதலில் முன்மொழிந்தது. இங்கிலாந்து கிறிஸ்தவ பெரும்பான்மை நாடென்பதால் கிமு/கிபி என்று புத்தகங்களில் இருப்பதை எதிர்மறையாகப் பார்க்கின்றீர்களா என்று சிறுபான்மை மதத்தவரிடம் கேட்கப்பட்டது.  ஆனால், கிமு கிபி என்றிருப்பது எங்களுக்கு எந்தவிதத்திலும் புண்படுத்தவில்லையென்று முஸ்லிம் மற்றும் யூத மதத்தலைவர்கள் சொன்னார்கள். வேறு எந்த நாட்டிலும்  பொ.ஆ.மு/பி என்று திட்டவட்டமாக பின்பற்றப்படவுமில்லை. எனவே, கிமு. கிபி என்பதை பொ.ஆ.மு./பொ.ஆ.பி என்று மாற்றவேண்டுமா என்பதை தனிப்பட்ட பள்ளிகள் முடிவு செய்யலாம் என்று SACRE அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, தமிழக பாடபுத்தகத்தில் மட்டும் கிமு. கிபி என்பதை மாற்றுவது அடிப்படை நேர்மையில்லாதது.

இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் கி.மு. கி.பி என்றிருப்பதற்கு பதில், பொதுவான முறையில் வருடங்களை குறிப்பிடுவதுதான் சரியானதாக இருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் சரியானதல்ல. இதை நடைமுறைப்படுத்திய கல்வி குழுவும் முற்று முழுதான அதிகாரம் கொண்டதுமல்ல. எனவே இந்த மாற்றம், மதம் தாண்டிய கல்வியாளர்களின் விவாதத்திற்குரியது. இந்த மாற்றத்தில் தொடர்புடைய மக்களின் / மாணவர்களின் / கல்வியாளர்களின் கருத்தை கேட்கும் கடமை அரசிற்கு இருக்கின்றது.

இந்த புத்தகத்தை புரிட்டியபோது எனக்குக் கிடைத்த அனுபவம் வேறுவிதமானது. இதில் சித்தர்கள், வில்லிபாரதம், சீறாப்புராணம் என்று மதம் சார்ந்த பாடங்கள் இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் சுமார் 1900 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் கிறிஸ்தவம் குறித்து எதுவுமில்லை. அதுபோல், அனைத்து திணைகளும் சொல்லப்பட்டிருக்கின்றது. நெய்தல் திணைகுறித்து எதுவுமில்லை. காடு, நாடு, மாடு, புலம்பெயர் உலகு என்று பலதரப்பட்ட வாழ்வியல் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நெய்தல் மக்களின் வாழ்வியல் குறித்து எதுவுமில்லை. புத்தக வடிவமைப்பாளர்கள் இவையெல்லாம் தேவையில்லையென்று நினைத்திருக்கலாம். அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உட்படுத்தலாமென்று முடிவெடுத்திருக்காம். பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.

இந்த மின்நூல் புத்தகத்தின் ஆறாம் பக்கதில் “சீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்” என்றிருக்கின்றது. அதையாவது அச்சுப்புத்தகத்தில் சரியாக அச்சிட்டால் வாழ்த்தலாம்.

http://www.tnscert.org/tnscert/ebooks/

https://www.telegraph.co.uk/news/2017/10/01/bce-not-bce-common-era-bc-ad-appears/

கனிமப்புற்று

மணவாளக்குறிச்சியை மையமாகக்கொண்டு கடற்கரையில் கனிமமண் அகழ்வு கடந்த நூறுவருடங்களாக நடைபெற்றுவருகின்றது. ‘கனிம மணல் கடற்கரையில் இருப்பதால் மீனவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடுவதால், குறிப்பாக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால், அந்த கனிம மணலை கடற்கரையிலிருந்து முற்றிலுமாக அகற்றி, கடற்கரையிலிருந்து புற்றுநோயை முழுமையாக அகற்றி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்துடன் இந்திய கனிமாவள நிறுவனம் கடற்கரையிலிருந்து கனிம மணலை தோண்டியெடுக்கும் வேலையை செய்துவருவதாக’ நக்கலாகச் சொல்லப்படுகின்றது.

ஆனாலும், கடந்த நூறு வருடங்களுக்கும் அதிகமாக புற்றுநோய் பலமடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கடற்கரைகளில் புற்றுநோய் தாக்கம், பிறபகுதிகளை ஒப்பிடும்போது, சற்று அதிகம்.  பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக மணவாளக்குறிச்சி மண்ணள்ளு நிலையம் அதன் சேவையை நிறுத்தியது. கடந்த 2018 ஏப்ரல் மாதம் மணவாளக்குறிச்சி சார்த்த இரண்டு இடங்களில் புதிதாக மண்ணகழ்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்திருக்கின்றது. இந்த சுற்றுச்சூழலுக்கான ஆவணங்களை இலக்கிய நயத்துடன் படிக்கலாம்.

அதில் முக்கியமானது, மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவனம், அவர்கள் கடற்கரையில் தொடர்ச்சியாக செய்துவரும் மருத்துவ சேவையை சொல்லுமிடத்து, கடந்த 2004வருட சுனாமியின்போது, இலவச மருத்துவ சேவையை பெருமையுடன் சொல்கின்றார்கள். அதன்பிறகு இவர்களின் சேவை என்னவென்று தெரியவில்லை. [2002முதல் 2012வரை சுமார் 60லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கனிமமணல் ஊழலும் நடந்திருக்கின்றது என்பது வேறுவிஷயம். இந்திய கனிமவள நிறுவனத்தின் கடந்தவருட வருவாய் துச்சமான 58கோடிகள்.] அதுபோல் கதிர்வீச்சு குறித்த உயர்கல்வி  ஆய்வு  ஆய்வறிக்கைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. 

கனிமவள நிறுவனம் பயன்படுத்தியிருக்கும் கடற்கரை மண்ட மேலாண்மை வரைவு (CZMP) வரைபடம் பழையது. புதிதாக சுற்றுக்கு விடப்பட்டிருக்கும் தமிழகத்தின் CZMP வரைபடத்தில் கனிம வளங்களின் இருப்பிடங்கள் ஒட்டுமொத்தமாக விடுபட்டிருக்கின்றது. இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழகத்தின் CZMP வரைபடத்தை நிராகரிக்க வேண்டும். அதுபோல் புதிய CZMP வரைவு நிறைவேறும் வரை கடற்கரைகளில் புதிதாக எந்தவித திட்டங்களுக்கும் அனுமதியளிக்கக்கூடாது. அதுபோல்  2017 நவம்பர் மாதம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிப்பாணையில் (notification) செய்யப்பட்டிருக்கும் திருத்தமும் கூட மீனவர்களில் கருத்தைக் கேட்காமல் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே முதலில் அந்த திருத்தங்களை ரத்துசெய்யவேண்டும். CRZ, CZMP மற்றும் மணவாளக்குறிச்சி மண்ணள்ளும் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி அனைத்திற்கும் தொடர்புண்டு.

மணவாளக்குறிச்சி கனிம வள நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்காக 2013ம் வருடம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தின் நிகழ்வின் நகல் இந்திய சுற்றுச்சூழல் மாற்றும் வனத்துறையின் வலைத்தளத்தில் இருக்கின்றது. படிக்க படு சுவாரஸ்யமானது. “புற்றுநோய் டெல்லியில் இருக்கின்றது. ஜார்ஜ்கண்டில் இருக்கின்றது கேரளாவில் இருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கின்றது புற்றுநோய். அங்கெல்லாம் இந்த மணவாளக்குறிச்சி மண்ணு காத்தில பறந்துபோயி புற்றுநோயை உண்டாக்கிச்சா? அதனால, அனுமதியை கண்டிப்பா கொடுத்தாகணும்” என்பதுபோன்ற அதிபயங்கர ஏழ்மையான கருத்துக்களும் உண்டு. கூட்டத்திற்கு வந்த பொதுமக்களில் 99% பேரை கனிமவள நிறுவனம் காசுகொடுத்து அழைத்து வந்தது என்னும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றது.

கதிர்வீச்சு எங்கும் நிறைந்திருக்கின்றது. எந்தவித கதிர்வீச்சும் இல்லாத இடத்தில் நாம் நடமாடினால்கூட நமக்கு  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம் உடலில் தங்கும். இந்தியாவின் சராசரி இயற்கை கதிர்வீச்சு 2.4msV/year. இதுவே கேரளக்கடற்கரையில் 12.5msV/year. இது இந்திய அணுசக்தி கழகத்தின் புள்ளிவிவரம். 

மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவத்தின் எல்லைக்கு உட்பட்ட மிடாலம் கிராமத்தில் வருடாந்திர கதிர்வீச்சு 8.23 msV/year இருப்பதாக அந்த நிறுவத்தின் ஆய்வு சொல்கின்றது. சூற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கான ஆவணத்தில் 1-4மைக்ரோ சீவெர்ட் என்று மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவம் சொல்கின்றது. இதை வருடக்கணக்காக மாற்றினால் 8.7msV/year முதல் 35.04msV/year. மேற்சொன்ன ஆய்வு/அளவுகளில் எதை நம்புவது? கதிவீச்சின் அளவு இதை விட அதிகமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

500 mSv அளவிற்கு அதிகமான கதிர்வீச்சை நமது உடல் உட்கொள்ளும்போது புற்றுநோய் காரணமாக உயிர்ழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக,  25msV/year கதிர்வீச்சளவு கொண்ட இடத்தில் ஒருவர் தொடர்ந்து 20 வருடங்கள் வசித்துவந்தால் அவருக்கு 500 mSv கதிர்வீச்சு அவரது உடலில் படியும். அவருக்கு தீவிரமான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைவிட குறைந்த அளவு கதிர்வீச்சும் உடலுறுப்புகளை சேதப்படுத்தும் வல்லமை கொண்டது.

அரசு சாரா கல்விநிறுவனம் மணவாளக்குறிச்சி பகுதியில் கதிர்வீச்சின் ஆய்வை வெளிப்படையாக ஆய்வுசெய்யவேண்டும். அல்லது, குறைந்தபட்சம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் சட்டைப்பாக்கெட்டுகளிலும் தங்கள் உடலில் படியும் கதிவீச்சு அளவை கணக்கிடும் டொசிமீட்டர் (Dosimeter) கருவி பொருத்த அனுமதிக்கவேண்டும். டொசிமீட்டரின் பதிவாகும் கதிர்வீச்சளவை நடுநிலை அரசுசாரா நிறுவனம் கண்காணிக்கவேண்டும். அதுபோல் கனிம மணல் குவாரிகளை மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் அனுமதிக்கக்கக்கூடாது.

கடற்கரையை தோண்டிக்கொண்டே இருக்கின்றார்கள். தோண்டிய இடங்கள் அனைத்திலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து  எதற்கும் பயன்படாமல் கிடக்கின்றது. நிலத்தடிநீர் குறித்து சொல்லவேண்டாம், உப்புநீர்தான். எத்தனை  மீட்டர் ஆழம் வரை கனிம மணல் இருக்கின்றது என்னும் ஆய்வு இதுவரை அந்த அரசு நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. கனிமமணலை தோண்டியெடுப்பதால் கதிர்வீச்சளவு குறைந்ததாக ஆய்வுகள் எதையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனாலும் புற்றுநோய் காரணமான இறப்புவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கனிமமண் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிமென்றே வெளிநாட்டு ஆய்வுகள் சொல்கின்றது. உள்நாட்டில் கொல்லம் சாவறா பகுதி இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம்.

இன்று இரண்டு இடங்களில் கனிம மண் அகழ்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. கடியப்பட்டினம் கிராமத்தில் மட்டும் 20 வருடங்களில் புற்றுநோயால் இறந்தவர்கள் சுமார் 850 பேர். இதில் 250 பேர் ஆறு வயதுமுதல் 18வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றது. தென்மேற்கு கடற்கரை முழுக்க இதே நிலைதான். தென்மேற்கு கடற்கரையில் கனிம மணலை அகழ்வதற்கு நிரந்தரமாக தடைவிதிப்பதே இதற்கான நிரந்தர தீர்வு.

References:

 1. http://environmentclearance.nic.in/writereaddata/Public%20Hearing/2712201713WN7GNAAnnexureDocumentofPublichearing.pdf
 2. http://environmentclearance.nic.in/writereaddata/EIA/27122017319N0QM2AnnexureDocumentofEIAEMP.pdf
 3. http://www.moef.nic.in/sites/default/files/CRZ%20AMENDMENT%206-11-2017.pdf
 4. https://en.wikipedia.org/wiki/Background_radiation
 5. https://www.aerb.gov.in/index.php/english/background-natural-radiation
 6. http://www.irel.co.in/WriteReadData/userfiles/file/AREPORT20171.pdf
 7. https://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/bio-effects-radiation.html