இளம் இந்தியா தன் கூழாங்கல்லை வீசுகிறது – சி. எப். ஆன்ரூஸ்

இந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தற்போதைய நிலையை யோசிக்கும்போது, ஒரு பழைய பைபிள் கதை அடிக்கடி என் நினைவுக்கு வருகிறது. கோலியாத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தாவீது எவ்வாறு புறப்பட்டார் என்று பைபிளின் ஆரம்ப புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்பு, சவுல் தான் பயன்படுத்திய கனமான கவசத்தை அணிவதற்கு தாவீதை வற்புறுத்தினார். தாவீது முதலில் அதைப் அணிய முயன்றாலும், மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார். பின்னர், அந்த கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓடைக்குச் சென்று சில மென்மையான கற்களை எடுத்துக்கொண்டு, தன் கவணைப் பயன்படுத்தி அந்த பெரிய ராட்சதனைக் கொன்றார்.

இது, இந்திய விவகாரங்களில் ஒரு உவமையாக எனக்கு எப்போதும் தோன்றுகிறது. இந்தியாவின் சமூக சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வம்கொண்ட, இந்தியாவை ஆளும் மேற்கத்திய சக்திகள், பயனுள்ளதென நிரூபணமான தங்கள் சக்திவாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, கிழக்கத்திய நாடுகளின் சமூக அமைப்புகளில் ஆழமாக வேரூன்றிய பழமையான தீமைகளுக்கு எதிராக போராடுவதற்காக இந்திய இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக முயன்றன. படித்த இந்தியர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த மீண்டும் மீண்டும் முயன்றனர். ஆனால், சமீபகாலங்களில் மகாத்மா காந்தியின் தலைமையில், இளம் இந்தியா மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்காமல், தாவீதைப்போல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது. மேற்கத்திய வழிமுறைகளுக்கு எதிரான இந்த எதிர்வினையில், இந்தியாவின் பழைய சமூக தீமைகளை கையாள்வதற்கு அதன் சொந்த விசித்திரமான வழிகளில் அது திரும்பியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் விவகாரங்களில் இதுவே தற்போதைய அம்சமாகும். கிழக்கில் தேசியவாதத்தின் எழுச்சி என்று சில நேரங்களில் இதை நாம் கருதினாலும், மேற்கின் துணையின்றி நம் சுய வழியில் காரியங்களைச் செய்வதற்கான ஒரு முயற்சி என்றே கருதவேண்டும்.

இந்த ஆய்வறிக்கையை எனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்க விரும்புகிறேன். நான் மகாத்மா காந்தியின் சீடர்களுடன் நெருக்கமாகப் பழகியதன் காரணமாக, நான் சொல்லப்போகும் அனைத்தும் என் கண்களால் நான் கண்டவற்றின் அடிப்படையிலானது.

வைக்கம் போராட்டம் என்று அழைக்கப்படும், தென்னிந்தியாவின் “தீண்டாமைக்கு” எதிரான தார்மீக போராட்டத்தை முதலில் விளக்குகிறேன். மிக அதிக எண்ணிக்கையிலான ஏழ்மையான மக்கள், குறிப்பாக தென்னிந்தியாவில், பறையர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தொடுவது கூட  உயர்சாதி மக்களால் தீட்டாக கருதப்படுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காயல்களுக்கு நடுவில் வைக்கம் கிராமம் இருக்கிறது. நிலப்பரப்பைச் சுற்றியிருக்கும் பல கால்வாய்களின் வழியாக கடல் அலைகள் உள்ளே நுழைகிறது. அதுபோல், ஒரேயொரு நெடுஞ்சாலை மட்டுமே வைக்கம் வழியாகச் செல்கிறது. இந்த சாலை இல்லையென்றால், வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு வயல் வரப்புகளையும் நீர்நிலைகளையும் தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே, இந்த நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானது. ஆனால் இது வைக்கம் கோயிலுக்கு அருகிலிருக்கும்  உயர்ஜாதி பிராமண குடியிருப்பு வழியாகச் செல்வதால், பறையர் இன மக்களால் தங்களுக்கு தீட்டுப்படும் என்பதால், பல நூறு ஆண்டுகளாக பிராமணர்கள் அந்த சாலைவழியாகச் செல்வதற்கு  பறையர் இன மக்களை அனுமதிக்கவில்லை. எனவே, இந்தச் சாலையை உயர்ஜாதியினர் மட்டுமே பயன்படுத்தினர். அதற்கு சட்டத்தின் அனுமதியையும் பெற்றிருந்தனர். இந்த சமூக அநீதியை துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் சட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

காந்தியின் இளம் சீடர்கள் இதை ஒரு சோதனைக் களமாகக்கொண்டு, இந்த சாலையை அனைத்து இன மக்களும் பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்கள். மகாத்மா காந்தியின் இயக்கத்தின் வலிமையைக் காட்டும் இந்த கதையின் சுவாரஸ்யமான விஷயம் இதுதான்: இந்த போராட்டத்தின் யோசனையைத் தோற்றுவித்த இளம் தலைவர், திருவிதாங்கூரில் உள்ள பண்டைய சிரியன் சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் – ஜார்ஜ் ஜோசப் என்ற இளம் பேரறிஞர். அவர் காந்தியின் தீவிர சீடர், மட்டுமன்றிதிருவிதாங்கூரில் ஒரு முக்கிய தேசபக்தி கொண்ட தொழிலாளி. போராட்டம் தொடங்கிய நேரத்தில் மகாத்மா காந்தி ஏறக்குறைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், பம்பாய்க்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் நான் அவருடன் இருந்தேன். அங்கு அவர் மிகுந்த பலவீனப்பட்டு கிடந்தார். ஜார்ஜ் ஜோசப் காந்தியை சந்திக்க வந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. எப்படியிருந்தாலும், காந்தியின் படுக்கையறையிலிருந்து முழு செயல் திட்டமும் வரைபடமாக்கப்பட்டு, போராட்டம் தொடங்கியது.

மகாத்மா காந்தியின் சீடர்கள், தாங்கள் ஆதரிக்கும் “தீண்டத்தகாத” நண்பர்களையும் அழைத்துக்கொண்டு பிராமணர்களின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தனர். அவர்கள் உடனடியாக தாக்கப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். திருவாங்கூர் மாநில காவல்துறையினர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் அவரது ஆதரவாளர்களை அத்துமீறலை ஊக்குவித்ததற்காக கைது செய்தனர். அவர்களுக்கு ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் இடத்தை நிரப்புவதற்காக நாட்டின் பல இடங்களிலிருந்தும் தன்னார்வலர்கள்  ஒரே நேரத்தில் அணிதிரண்டனர். அதன்பிறகு, யாரையும் கைது செய்யப்படக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டது. காந்தியின் ஆதரவாளர்கள் சாலையில் நுழைவதை காவல்துறையினர் பலத்துடன் தடுத்தார்கள். அவர்கள் சாலையின் குறுக்கே தடுப்புவேலி ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது காந்தியின் சீடர்கள் அவரது அறிவுரையைக் கேட்டார்கள். காவல்துறை வழிவிடும் வரை, காவல்துறை  அமைத்த தடுப்புவேலிக்கு எதிரே நிற்குமாறு அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் மனப்பான்மையுடன் அந்த போராட்டத்தை தங்களின் புனிதமான மதக் கடமையாகக் கருதினார்கள். காந்தியின் இளம் சீடர்கள் கிராமத்திற்கு அருகில் ஆஸ்ரமம் ஒன்றை அமைத்து, அனைத்தையும் மத அடிப்படையில் ஏற்பாடு செய்ததுடன், ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து முடித்தனர். போராட்டத்தில் எந்த விதத்திலும் வன்முறைக்கு இடங்கொடுக்காமல், அவர்கள் இறைபாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலிவரை சென்றார்கள். எவ்வளவு காலம் நீட்டிக்கமுடியுமோ, அதுவரை போராட்டதை தொடர்ந்து நடத்த மகாத்மா காந்தி அவர்களை வலியுறுத்தினார். அனைத்து ஏற்பாடுகளும் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செயலற்றிருக்கும் எதிர்ப்பாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு உதவிசெய்வதற்கும், நடப்பவற்றை அவருக்கு தெரியப்படுத்தவும், காந்தி என்னை அங்கு அனுப்பினார். பின்வருபவற்றை நான் என் கண்களால் கண்டேன்.

அந்த இடம் மிகவும் தட்டையான தாழ்வான பகுதி. அந்த இடத்தை அடைய, நான் பல படகுகள் மாறி,நீர்வழிகளைக் கடக்கவேண்டியிருந்தது. அனைத்து இடங்களிலும் தென்னை மரங்கள் ஆடம்பரமாக வளர்ந்திருந்தன. அது தென்னை மரங்களின் நிலம். அவை தண்ணீரில் பிரதிபலித்தது. காந்தியின் சீடர்களின் ஆஸ்ரமம் தென்னை ஓலையால் அடர்த்தியாக வேயப்பட்டிருந்தது. ஆஸ்ரமத்தில் அதிகாலை நான்குமணிக்கு பிராத்தனை துவங்கியது. அதிகாலையில் அவர்கள் தங்கள் அரிசி உணவை விரைவாக சமைத்தார்கள். ஐந்து மணிக்குப் பிறகு, தன்னார்வலர்கள் தடுப்புவேலியை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். கிராமத்தின் மத்தியப் பகுதிக்குச் செல்வதற்கு, தென்னைமரங்களுக்கு இடையினூடாக, கொடூரமான குறுகிய பாதைகள் இருந்தன. சத்தியாகிரகிகள் கடந்து செல்வதைக்காண கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் சாலையோரத்தில் வரிசையாக நின்றார்கள். அவர்கள் வெள்ளியாடை உடுத்தி இறைதுதிப்பாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலி நோக்கிச் சென்றார்கள். அவர்கள் பிரார்த்தனை மனநிலையில், பறையர்களுடன் தடுப்புவேலியருகே நின்றனர். மகாத்மா காந்தியின் கதர் இயக்கத்தின் அடையாளமாக ஒருவர் ராட்டைச் சக்கரத்தில் அமர்ந்து முழு நேரமும் அமைதியாக ராட்டையை சுற்றிக்கொண்டிருந்தார்.

கிராமவாசிகள் காந்தியின் போராட்டக்காரர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருக்கும்போது பிராமணர்களுடன் பலமுறை கலந்து பேசினேன். அவர்கள் நிலையற்றிருந்ததை காணமுடிந்தது. ஆனாலும் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் நீண்டகால சலுகையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. நற்பண்புகளின் மீதான நம்பிக்கையைவிடவும், பழமைவாதத்தின் மீது அவர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

தன்னார்வலர்களின் வெவ்வேறு குழுக்கள் ஆறு மணி நேரம் இடைவெளி இல்லாமல் தடுப்புவேலியில் நின்றார்கள. ஒவ்வொரு குழுவும் நண்பகலில் மீண்டு இன்னொரு குழு அவர்களிடத்தில் வந்தது. மாலை ஆறு மணிக்கு அன்றைய நாள் போராட்டம் முடிவுற்றது. பின்னர் தொண்டர்கள் தங்கள் மாலை நேரத்து கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி திரும்பிச் சென்றனர். முழு ஆசிரமமும், அரிசி சாதம் சாப்பிட்ட பிறகு, எட்டு முதல் ஒன்பது மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஓய்வெடுக்கச்சென்றது.

தென்மேற்கு பருவமழையின் போது உச்சகட்ட நிகழ்வு நடந்தது. அந்த நேரத்தில் கடல் மட்டத்திற்கு மிக அருகில் இருந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த போராட்டம் நடந்த வருடத்தில், வெள்ள நீர் தடுப்புவேலியில் நின்றவர்களின் இடுப்பு வரை சென்றது. வெள்ளப்பெருக்கின் போது தட்டையான படகுகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். படகுகள் சாலையின் குறுக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது. அவற்றை கயிற்றால் கட்டி தூண்களில் இணைத்திருந்தார்கள். அவ்வாறு, காவலர்கள் தண்ணீரில் நனையாமல் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். சிலநேரங்களில் தொண்டர்களில் தோள் அளவிற்கு தண்ணிர் இருந்தது. அவர்களின் சிரமத்தை கணக்கில்கொண்டு, தொண்டர்களின் போராட்ட நேரம் ஆறுமணியிலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு சமயத்தில் முகாமில் அதிக நோய் இருந்தது. முகாம் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கியிருந்தது. ஒரு காலகட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கடுமையாக இருந்தது. ஆனால், இந்த கொடிய நிலமையை தாங்கிக்கொண்ட துணிச்சலால், போராட்டக்காரர்களின் மீதான பொதுமக்களின் அனுதாபம் இயற்கையாகவே அதிகரித்தது.

அனேகமாக, மற்ற எதையும்விட, இந்த துணிச்சல்தான் பிராமணர்களின் எதிர்ப்பை உடைத்தது. முடிவில், சுமார் ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, போராட்டம் முடிவடைந்து, சாலை திறக்கப்பட்டது. பிராமணர்கள் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பறையர்களை கோயில் மற்றும் பிராமண வாழ்விடப்பகுதிகள் வழியாக நடக்க அனுமதித்தனர். “அவர்களின் வேண்டுதலை நாங்கள் இனியும் எதிர்க்கமுடியாது. நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர்கள் [பிராமணர்கள்] சொன்னார்கள்.

மேற்குலகின் ஆயுதங்களைப் போலல்லாமல், தனது சொந்த சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இந்தியாவின் இந்த சுதேச ஆயுதங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விளக்கத்திலிருந்து எளிதாகக் காணலாம். இந்த வைக்கம் போராட்டம் வாயிலாக, பறையர்களுக்கு ஒரே ஒரு நெடுஞ்சாலையைத் திறப்பதை, அல்லது இதுபோன்ற பல சாலைகளைப் பயன்படுத்துவதற்கான மனித உரிமையை வென்றெடுப்பதைவிட, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பழமைவாத சமூகங்களின் பார்வையிலும் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த போராட்டத்தின் வெற்றியின் மகுடமாக இருக்கும். ஐந்து கோடிக்கும் அதிகமான இந்த ஏழை “தீண்டத்தகாத” மக்கள் இருக்கும் நாட்டில், இதன் பொருளை அரிதாகவே மிகைப்படுத்த முடியும். பல நூற்றாண்டுகளாக, ஆழமாக வேரூன்றிய இந்த தீமை வெல்லப்படாமல் நடந்து வருகிறது. இப்போது இந்த தீமை அதன் உயிர் சக்தியை அழித்து பூமியிலிருந்து முழுமையாக அகற்றப்படும் என்று தோன்றுகிறது.

[Young India Throws Its Pebble, C.F. Andrews, The Survey, March 1, 1929]

கணவாய் மீன்கள்

*கணவாய் மீன்கள்*

மத்திய கடல்வள ஆய்வு நிறுவனம் (Central Marine Fisheries Research Institute) சமீபத்தில் கடலில் செயற்கையான வெளிச்சத்தைக்கொண்டு மீன்பிடிப்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கின்றது. இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பில், 13°N/71°E, 11°N/72°E and 10°N/71°E  பகுதிகளில், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4.2 முதல் 92.8 டன் என்ற விகிதத்தில் மொத்தம் 25.2 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

அதுபோல், வருடத்திற்கு 6.3 லட்சம் டன் கணவாய்மீன்களை இந்த பகுதிகளிலிருந்து பிடிக்கமுடியுமென்றும், இந்த பகுதிகளுக்கு கொச்சி, மங்கலாபுரம் மற்றும் கோவா துறைமுகளை தங்குதளமாகக்கொண்டு அந்தந்த மாநிலங்கள் கணவாய் மீன்களை பிடிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்றும் இந்த ஆய்வு சொல்கின்றது.

முக்கியமாக, செயற்கை விளக்கொளியை பயன்படுத்தி, கணவாய்மீன் பிடிப்பதை இந்த ஆய்வுகட்டுரை ஊக்கப்படுத்துகின்றது. ஆனால், செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதால் ஏற்படும் கடலியல் சுற்றுச்சூழல்கேடு குறித்து எந்தவிதமான விரிவான தகவலும் இதில் சொல்லப்படவில்லை என்பதால், இந்த ஆய்வு முழுமையானதல்ல என்று நம்பலாம். எனவே, செயற்கையான விளக்கொளியை பயன்படுத்துவதானால் ஏற்படும் சூழியல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை   CMFRI மேற்கொள்ளவேண்டும். அதுபோல், மேற்சொன்ன புள்ளிகளில் கணவாய் மீன்கள் இருப்பதை மீனவர்கள் உறுதிப்படுத்தலாம். 

இந்த ஆய்வு, செயற்கை விளக்கொளியில் மீன்பிடிப்பதை ஊக்கப்படுத்தினாலும்கூட, சில முக்கியமான பரிந்துரைகளையும் சொல்லியிருக்கின்றது.

 1. 12 நாட்டிகல் மைல்களுக்குள் செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.
 2. இழுவை மடிகளில் விளக்கொளியை பயன்படுத்தக்கூடாது.
 3. மீன் திரட்டு சாதனங்களில் (drifting Fish Aggregating Devices, DFAD) விளக்குகள் பயன்படுத்தக்கூடாது.
 4. 12 நாட்டிகல் மைல்களுக்கு வெளியில் சில கட்டுப்பாடுகளுடன்   செயற்கை  விளக்கொளியை பயன்படுத்தலாம். முக்கியமாக, 45மிமீ அதிகமான கண்ணிகள் கொண்ட வலைகளை தவிர்க்கவேண்டும். 25கிவாட்டிற்கு அதிகமான விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. நீருக்கடியில் விளக்கொளியை பயன்படுத்தக்கூடாது.
 5. விளக்கொளியில் மீன்பிடிப்பதை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
 6. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளக்கொளி பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்.

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், விளக்கொளி பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான வரைமுறைகளோ, சட்டதிட்டங்களோ எதுவும் இந்திய மற்றும் மாநில அரசுகளிடம் இதுவரை கிடையாது. கடல்சார்ந்த சட்டதிட்டங்கங்கள், வரைமுறைகள், தொழில்நுட்பங்கள் அனைத்திலும் இந்தியாக ஏழ்மையாகவே இன்னும் இருக்கின்றது. விளக்கொளியில் மீன்பிடிப்பதை கண்காணிக்கும் அமைப்புகள் எதுவும் இந்தியாவில் இல்லை. எனவே, குறிப்பிட்ட மீன்வகைகளை பிடிப்பதை கட்டுப்படுத்துவதுவதும், விளக்கொளிக்கான கட்டுப்பாடுகளை மேற்கொள்வதும் இயலாதகாரியம்.

செயற்கை விளக்கொளியை பயன்படுத்தி மீன்களை அதிகப்படியாக அறுவடைசெய்யமுடிந்தாலும்கூட, இதனால் கடல் சூழியலுக்கு பெரும்பாதிப்பு என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

செயற்கை விளக்கொளியை பயன்படுத்துவதால்:

 1. மீன்களின் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
 2. இனப்பெருக்கத்தில் மாற்றம் ஏற்படும்.
 3. பவளப்பாறைகளுக்கு மிகுந்த சேதத்தை உருவாக்கும்.
 4. மடிவலைகள் கொண்டு மீன்களை மொத்தமாக பிடிப்பதனால், மீன்குஞ்சுகள் அதிகமாக பிடிக்கப்பட்டு, மீன்வளம் வெகுவாக குறையும்.
 5. கணவாய் மீனிற்கென்று தனியான விளக்கொளி எதுவுமில்லை. விளக்கொளியில் அனைத்து மீன்வகைகளும் கூட்டம் சேரும். அதிகப்படியான மீன்களை ஒட்டுமொத்தமாக அள்ளியெடுப்பதால் மீன்வளம் வெகுவாக குறையும்.

நம்முடைய பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் முக்கியமாக சூரை, கேரை, சுறா, இறால் மற்றும் கணவாய் மீன்களை பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அதுபோல், கணவாய் மீன்பிடிப்பதற்கான தொழில்நுட்பம் நம்முடைய மீனவர்களிடம் இருக்கின்றது. பலநாடுகள் கணவாய் மீன்பிடிப்பதற்காக பேலாஜிக் (Pelagic) என்னும் இழுவை வலைகளை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் நீண்டகாலமாக நமது மீனவர்களிடம் இருக்கின்றது. 

இன்னொரு தொழில்நுட்பம், கடலில் விளக்கொளியில் மீன்பிடிப்பது. இரவு நேரங்களில் கணவாய் மற்றும் “கண்ணன் கொழுவாளை” மீன்களை பிடிப்பதற்காக மண்ணெண்ணை விளக்குகளை கட்டுமர மீனவர்கள், என்னுடைய அப்பா உட்பட, பலர் பயன்படுத்துவார்கள். நம்முடைய விசைப்படகு மீனவர்கள் மின்சார விளக்குகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தியாவில் விளக்கொளியில் மீன்பிடிப்பதற்கு தடையிருக்கின்றது. பலநாடுகள் அண்மைக்கடல் பகுதியில் விளக்கொளியில் மீன்பிடிப்பதை தடைசெய்திருக்கின்றது. ஆனால், கோவா போன்ற ஒருசில மாநிலங்கள் விளக்கொளியில் மீன்பிடிப்பதை அனுமதிக்கவும் செய்கின்றது. 

அதுபோல், நம்முடைய மீனவர்கள் கணவாய் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஓலை/தென்னைமட்டைகளைக் கொண்டு இயற்கையான புதர்களை உருவாக்கி, கணவாய் மீன்களை பெருமளவில் பிடிக்கின்றார்கள். இது அரசிற்கு தெரிந்திருக்குமா என்பது தெளிவில்லை. இது போன்ற சுற்றுச்சூழலுக்கு சீர்கேடில்லாத மீன்பிடிமுறைகளே நமக்கு தேவையானது.

நமது மீனவர்களிடம் கணவாய்மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லையென்பதனால், மீன்வள ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் கணவாய்மீன்களை பிடிப்பதற்காக வெளிநாட்டு கப்பல்களை நமது கடல்பகுதியில் அனுமதிப்பதற்கான விவாதங்களும் நடக்கின்றது. இது முட்டாள்தனமானதும், அப்பட்டமாக நமது வளத்தை வெளிநாட்டுக்கு தாரைவார்ப்பதுமாகும். ஏற்கெனவே வெளிநாட்டுகப்பல்கள் நமது கடல்பரப்பில் LoP(Letter of Permit) முறையில் மீன்பிடிப்பதற்கு தடையிருக்கின்றது. இதை நிரந்தர சட்டமாக்கவேண்டுமென்பது மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

கணவாய்மீன் பிடிப்பதற்காக நம்மிடம் இல்லாத தொழில்நுட்பமாக சொல்லப்படுவது, பேலாஜிக் வலை, ஸ்குயிட் ஜிக்கிங் மற்றும் விளக்கொளியில் மீன்பிடிப்பது. இவற்றை பயன்படுத்தி நமது மீனவர்களே மீன்பிடிக்கும்போது, இந்த தொழில்நுட்பம் நம்மிடம் இல்லயென்பதால் வெளிநாட்டிற்கு மீன்பிடிக்க அனுமதிப்பது, நம்முடைய மீனவர்களை முட்டாள்களாக்கி, வியாபார இடைத்தரகர்களின் லாபத்திற்காகு உதவுவது மட்டுமே. 

கணவாய்மீன்கள் மிகக்குறைவான ஆயுட்காலம் கொண்டவை. அவை அதிகபட்சம் இரண்டுவருடங்கள் மட்டுமே உயிர்வாழும். அதுபோல், கணவாய்மீன்கள் கடல்சீதோஷணத்திற்கு தங்களை மிக எளிதாக தங்களை தவமைத்துக்கொள்பவை. எனவே, கடல்வெப்பநிலை உயர்வு கணவாய்மீன்களுக்கு சாதகனாதாக இருக்கின்றது. இதன்காரணமாக கணவாய்மீன்கள் ஒவ்வொருவருடம், கடல்வெப்பநிலை உயர உயர, அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. எனவே, கணவாய்மீன்களை கூடுமானவரை அறுவடைசெய்வதே நல்லது. அதற்காக, வெளிநாடுகளை நம்பியிருப்பதென்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. 

நம்முடைய மீனவர்களுக்கு அதன் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். விருப்பமான மீனவர்களின் விசைபப்டகுகளை கணவாய்மீன் பிடிப்பதற்கானமுறையில் மறுவடிவமைப்புசெய்ய அரசு உதவவேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மீனவர்களுக்கு விசைப்படகுகளை ஒருசில விதிமுறைகளுடன் மானியவிலையில் அரசியல் உள்ளீடற்ற முறையில் கொடுக்கலாம். இது அன்னிய நாட்டுகப்பல்கள் நமது கடல்வளத்தை சுரண்டுவதை தடுக்கும். மீனவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

தற்போது கணவாய்மீன்களை விளக்கொளியை பயன்படுத்தி அதிக அளவில் அறுவடை செய்யும் ஜப்பான், நார்வே, கொரியா மற்றும் ஸ்பெயின் விளக்கொளியில் மீன்பிடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றது. டுகளஆனால், இந்தியாவில் அதுபோல் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இதுவரை இல்லை. எனவே, நமது கடற்பரப்பில் கணவாய்மீன் பிடிக்கவரும் வெளிநாட்டுகப்பல்கள் நமது வளங்களை, சுற்றுச்சூழல்கேடுகளை ஒருபொருட்டாக மதிக்காமல் வாரிச்செல்லும். இது திருப்பியெடுக்கமுடியாத சூழல்கேட்டிற்கே இட்டுச்செல்லும்.

கணவாய்மீன்கள் குறித்த ஆய்வுகள் 2016 நடந்திருக்கின்றது. அதுபோல், ஜனவரி 13, 2017ம் நாள் வெளியிடப்பட்டிருக்கின்றது. கணவாய்மீன்களின் ஆயுட்காலம் 2 வருடங்கள் என்று கொண்டாலும் 2019 ஜனவரி மாதத்துடன் அந்த இடங்களிலிருந்த கணவாய்மீன்கள் முதிர்ச்சியடைந்திருக்கும். கடல் நீரோட்டத்தில் அவை இடம்பெயராமல் அதே இடத்தில்தான் நிலைகொண்டிருக்கின்றதா? கடல்நீரோட்டம் இந்த கணவாய் பெருமடையை இடம்மாற்றி கொண்டுசெல்லவில்லையா? புதிய இடங்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லையா? 

மீனவர்களுக்கு இந்த ஆய்வு குறித்த செய்திகள், இரண்டுவருடங்களுக்குப்பிறகு இப்போதுதான் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். இதுவரை அந்த இடங்களிலிருந்து கணவாய்மீன்களை வேறுயாரேனும் பிடிக்கவில்லையா? இந்திய கடல்வள ஆய்வுநிறுவனத்தின் 2016-17ற்கான ஆண்டு அறிக்கையில் இந்த பெருவாரியான கணவாய்மீன்கள் குறித்த எந்த தகவலும் இல்லையே, ஏன்? மீனவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பெருமுதலாளிகளின் லாபத்திற்காக மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும்  கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பாணை 2018லிருந்து மீனவர்களின் பார்வையை திசைதிருப்பவா? 

கணவாய்மீன்கள் இருக்கும் ஜிபிஎஸ் புள்ளிகள் இன்னும் மீனவர்களுக்கு உரியமுறையில் கொடுக்கப்படவுமில்லை, அவர்களை அந்த இடங்களுக்குச்சென்று மீன்பிடிக்க அரசு இதுவரை அறிவுறுத்தமில்லை. எனவே, 13°N/71°E, 11°N/72°E and 10°N/71°E பகுதிகளில் உண்மையிலேயே கணவாய்மீன்கள் இருந்தால், அவற்றை நமது மீனவர்கள், அவர்களிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைகொண்டு ஒரு கணவாயையும் விடாமல் பிடித்தெடுக்கவேண்டும். அப்படியாவது இந்தியாவின் அந்நியசெலவாணியாவது பெருகட்டும்.

Reference:

 1. Fishing Using Lights: How should India handle this new development, K. Sunil Mohamed, CMFRI
 1. Fishing with Light: Ecological Consequences for Coastal Habitats, Ogunola Oluniyi Solomon, Onada Olawale Ahmed
 1. ANNUAL REPORT 2016 – 17, FISHERY SURVEY OF INDIA, Dept. of Animal Husbandry, Dairying & Fisheries, Mumbai Ministry of Agriculture & Farmers’ Welfare
 1. Attracting Fish with Light, M. Ben-Yami, Food and Agriculture Organization of the United Nations
 1. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=186875

கனிமப்புற்று

மணவாளக்குறிச்சியை மையமாகக்கொண்டு கடற்கரையில் கனிமமண் அகழ்வு கடந்த நூறுவருடங்களாக நடைபெற்றுவருகின்றது. ‘கனிம மணல் கடற்கரையில் இருப்பதால் மீனவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடுவதால், குறிப்பாக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால், அந்த கனிம மணலை கடற்கரையிலிருந்து முற்றிலுமாக அகற்றி, கடற்கரையிலிருந்து புற்றுநோயை முழுமையாக அகற்றி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்துடன் இந்திய கனிமாவள நிறுவனம் கடற்கரையிலிருந்து கனிம மணலை தோண்டியெடுக்கும் வேலையை செய்துவருவதாக’ நக்கலாகச் சொல்லப்படுகின்றது.

ஆனாலும், கடந்த நூறு வருடங்களுக்கும் அதிகமாக புற்றுநோய் பலமடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கடற்கரைகளில் புற்றுநோய் தாக்கம், பிறபகுதிகளை ஒப்பிடும்போது, சற்று அதிகம்.  பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக மணவாளக்குறிச்சி மண்ணள்ளு நிலையம் அதன் சேவையை நிறுத்தியது. கடந்த 2018 ஏப்ரல் மாதம் மணவாளக்குறிச்சி சார்த்த இரண்டு இடங்களில் புதிதாக மண்ணகழ்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்திருக்கின்றது. இந்த சுற்றுச்சூழலுக்கான ஆவணங்களை இலக்கிய நயத்துடன் படிக்கலாம்.

அதில் முக்கியமானது, மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவனம், அவர்கள் கடற்கரையில் தொடர்ச்சியாக செய்துவரும் மருத்துவ சேவையை சொல்லுமிடத்து, கடந்த 2004வருட சுனாமியின்போது, இலவச மருத்துவ சேவையை பெருமையுடன் சொல்கின்றார்கள். அதன்பிறகு இவர்களின் சேவை என்னவென்று தெரியவில்லை. [2002முதல் 2012வரை சுமார் 60லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கனிமமணல் ஊழலும் நடந்திருக்கின்றது என்பது வேறுவிஷயம். இந்திய கனிமவள நிறுவனத்தின் கடந்தவருட வருவாய் துச்சமான 58கோடிகள்.] அதுபோல் கதிர்வீச்சு குறித்த உயர்கல்வி  ஆய்வு  ஆய்வறிக்கைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. 

கனிமவள நிறுவனம் பயன்படுத்தியிருக்கும் கடற்கரை மண்ட மேலாண்மை வரைவு (CZMP) வரைபடம் பழையது. புதிதாக சுற்றுக்கு விடப்பட்டிருக்கும் தமிழகத்தின் CZMP வரைபடத்தில் கனிம வளங்களின் இருப்பிடங்கள் ஒட்டுமொத்தமாக விடுபட்டிருக்கின்றது. இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழகத்தின் CZMP வரைபடத்தை நிராகரிக்க வேண்டும். அதுபோல் புதிய CZMP வரைவு நிறைவேறும் வரை கடற்கரைகளில் புதிதாக எந்தவித திட்டங்களுக்கும் அனுமதியளிக்கக்கூடாது. அதுபோல்  2017 நவம்பர் மாதம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிப்பாணையில் (notification) செய்யப்பட்டிருக்கும் திருத்தமும் கூட மீனவர்களில் கருத்தைக் கேட்காமல் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே முதலில் அந்த திருத்தங்களை ரத்துசெய்யவேண்டும். CRZ, CZMP மற்றும் மணவாளக்குறிச்சி மண்ணள்ளும் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி அனைத்திற்கும் தொடர்புண்டு.

மணவாளக்குறிச்சி கனிம வள நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்காக 2013ம் வருடம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தின் நிகழ்வின் நகல் இந்திய சுற்றுச்சூழல் மாற்றும் வனத்துறையின் வலைத்தளத்தில் இருக்கின்றது. படிக்க படு சுவாரஸ்யமானது. “புற்றுநோய் டெல்லியில் இருக்கின்றது. ஜார்ஜ்கண்டில் இருக்கின்றது கேரளாவில் இருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கின்றது புற்றுநோய். அங்கெல்லாம் இந்த மணவாளக்குறிச்சி மண்ணு காத்தில பறந்துபோயி புற்றுநோயை உண்டாக்கிச்சா? அதனால, அனுமதியை கண்டிப்பா கொடுத்தாகணும்” என்பதுபோன்ற அதிபயங்கர ஏழ்மையான கருத்துக்களும் உண்டு. கூட்டத்திற்கு வந்த பொதுமக்களில் 99% பேரை கனிமவள நிறுவனம் காசுகொடுத்து அழைத்து வந்தது என்னும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றது.

கதிர்வீச்சு எங்கும் நிறைந்திருக்கின்றது. எந்தவித கதிர்வீச்சும் இல்லாத இடத்தில் நாம் நடமாடினால்கூட நமக்கு  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம் உடலில் தங்கும். இந்தியாவின் சராசரி இயற்கை கதிர்வீச்சு 2.4msV/year. இதுவே கேரளக்கடற்கரையில் 12.5msV/year. இது இந்திய அணுசக்தி கழகத்தின் புள்ளிவிவரம். 

மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவத்தின் எல்லைக்கு உட்பட்ட மிடாலம் கிராமத்தில் வருடாந்திர கதிர்வீச்சு 8.23 msV/year இருப்பதாக அந்த நிறுவத்தின் ஆய்வு சொல்கின்றது. சூற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கான ஆவணத்தில் 1-4மைக்ரோ சீவெர்ட் என்று மணவாளக்குறிச்சி கனிமவள நிறுவம் சொல்கின்றது. இதை வருடக்கணக்காக மாற்றினால் 8.7msV/year முதல் 35.04msV/year. மேற்சொன்ன ஆய்வு/அளவுகளில் எதை நம்புவது? கதிவீச்சின் அளவு இதை விட அதிகமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

500 mSv அளவிற்கு அதிகமான கதிர்வீச்சை நமது உடல் உட்கொள்ளும்போது புற்றுநோய் காரணமாக உயிர்ழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக,  25msV/year கதிர்வீச்சளவு கொண்ட இடத்தில் ஒருவர் தொடர்ந்து 20 வருடங்கள் வசித்துவந்தால் அவருக்கு 500 mSv கதிர்வீச்சு அவரது உடலில் படியும். அவருக்கு தீவிரமான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைவிட குறைந்த அளவு கதிர்வீச்சும் உடலுறுப்புகளை சேதப்படுத்தும் வல்லமை கொண்டது.

அரசு சாரா கல்விநிறுவனம் மணவாளக்குறிச்சி பகுதியில் கதிர்வீச்சின் ஆய்வை வெளிப்படையாக ஆய்வுசெய்யவேண்டும். அல்லது, குறைந்தபட்சம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் சட்டைப்பாக்கெட்டுகளிலும் தங்கள் உடலில் படியும் கதிவீச்சு அளவை கணக்கிடும் டொசிமீட்டர் (Dosimeter) கருவி பொருத்த அனுமதிக்கவேண்டும். டொசிமீட்டரின் பதிவாகும் கதிர்வீச்சளவை நடுநிலை அரசுசாரா நிறுவனம் கண்காணிக்கவேண்டும். அதுபோல் கனிம மணல் குவாரிகளை மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் அனுமதிக்கக்கக்கூடாது.

கடற்கரையை தோண்டிக்கொண்டே இருக்கின்றார்கள். தோண்டிய இடங்கள் அனைத்திலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து  எதற்கும் பயன்படாமல் கிடக்கின்றது. நிலத்தடிநீர் குறித்து சொல்லவேண்டாம், உப்புநீர்தான். எத்தனை  மீட்டர் ஆழம் வரை கனிம மணல் இருக்கின்றது என்னும் ஆய்வு இதுவரை அந்த அரசு நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. கனிமமணலை தோண்டியெடுப்பதால் கதிர்வீச்சளவு குறைந்ததாக ஆய்வுகள் எதையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனாலும் புற்றுநோய் காரணமான இறப்புவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கனிமமண் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிமென்றே வெளிநாட்டு ஆய்வுகள் சொல்கின்றது. உள்நாட்டில் கொல்லம் சாவறா பகுதி இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம்.

இன்று இரண்டு இடங்களில் கனிம மண் அகழ்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. கடியப்பட்டினம் கிராமத்தில் மட்டும் 20 வருடங்களில் புற்றுநோயால் இறந்தவர்கள் சுமார் 850 பேர். இதில் 250 பேர் ஆறு வயதுமுதல் 18வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றது. தென்மேற்கு கடற்கரை முழுக்க இதே நிலைதான். தென்மேற்கு கடற்கரையில் கனிம மணலை அகழ்வதற்கு நிரந்தரமாக தடைவிதிப்பதே இதற்கான நிரந்தர தீர்வு.

References:

 1. http://environmentclearance.nic.in/writereaddata/Public%20Hearing/2712201713WN7GNAAnnexureDocumentofPublichearing.pdf
 2. http://environmentclearance.nic.in/writereaddata/EIA/27122017319N0QM2AnnexureDocumentofEIAEMP.pdf
 3. http://www.moef.nic.in/sites/default/files/CRZ%20AMENDMENT%206-11-2017.pdf
 4. https://en.wikipedia.org/wiki/Background_radiation
 5. https://www.aerb.gov.in/index.php/english/background-natural-radiation
 6. http://www.irel.co.in/WriteReadData/userfiles/file/AREPORT20171.pdf
 7. https://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/bio-effects-radiation.html

இனயம் காக்க இணைவோம்

[குறும்பனை சி. பெர்லின் அவர்களின் *இனயம் காக்க இணைவோம்* என்னும் புத்தகத்திற்க்கு நான் எழுதிய அணிந்துரை]

“குளச்சல் வர்த்தக துறைமுகம்” என்னும் பெயரில் துவங்கி “இனயம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம்” என்று பெயர்மாற்றப்பட்டு, பின்னர் மீனவர்களின் நேர்மையான காந்திய அறவழிப்போராட்டங்களின் காரணமாக தற்போது “கோவளம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம்” என்னும் பெயரில் கோவளம் மற்றும் கீழமணக்குடி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம் பெயர்ந்திருக்கின்றது. ஆனாலும், குளச்சல், இனயம், கோவளம் என்று எந்த கடற்கரையிலும் வெளிக்கடல் பெருந்துறைமுகங்கள் அமைந்தாலும் கடல்வளம், கடல்சூழியல் மற்றும் மீனவர்களுக்கான பாதிப்புகள் ஒன்றுதான்.  மீனவர்களின் அறவழிப் போராட்டம் காரணமாக இனயம் துறைமுகம் கோவளம் பகுத்திக்கு இடம் மாற்றம் செய்திருப்பதால் அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் நிகர லாபம் சுமார் பத்தாயிரம் கோடிகள். இனயம் துறைமுகம் சுமார் 30,000கோடிக்கான திட்டம். ஆனால், இதே துறைமுகத்தை இப்போது கோவளம் பகுதியில் 20,000கோடிக்கு கட்டமுடியுமென்று மறுமதிப்பீடு செய்யமுடியுமென்றால், இந்த திட்டங்களுக்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே சொல்லவேண்டும். ஆனால், 10,000கோடி ரூபாயை அரசின் கருவூலத்தில் கொண்டுசேர்த்த மீனவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கப்படுவது வருத்தத்திற்குரியது.

இனயம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனயத் திட்டம் கைவிடப்படதாக பெயரளவில் சொல்லப்பட்டலும் கூட, எதிர்காலத்தில் இனயம் இந்த திட்டம் உயிர்பெற்றெழுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை. கடந்த மார்ச் மாதம்  கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) வரைமுறையில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கின்றது. இதனடிப்படையில்,  சுற்றுச்சூழல் அனுமதி கிடத்த ஐந்து வருடங்களில் கட்டுமானத்தை துவங்கி ஏழுவருடங்களுக்குள் கட்டுமானப்பணிகளை முடிக்கவேண்டும். தேவைப்பட்டால் மூன்றுவருடங்கள் நீட்டிக்கபடலாம். ஆகமொத்தம் சுற்றுச்சூழல் அனுமதிகிடைத்த 10 வருடங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்கவேண்டும். இதற்கு முன்னர் நடப்பிலிருந்த சுற்றுச்சூழல் அனுமதிக்குப் பிறகான கண்காணிப்பு நடவடிக்கைகள் இந்த சட்டத்திருத்தத்தில் கைவிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு முறை கிடைத்த அனுமதியை வைத்து 10 வருடங்களில் கட்டுமானத்தை முடிக்கலால். அனுமதி கிடைத்ததிலிருந்து 10 வருடங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களோ, கடல்நீர்மட்ட உயர்வோ, கடற்கோள், சுனாமி, மக்கட்பெருக்கம், தொழில்பாதிப்பு, கடல்வளம்  போன்ற எதுவும் கவனத்தில்  எடுத்துக்கொள்ளப்படமாட்டது. இந்த சட்டத் திருத்தம் பெருமுதலாளிகளுக்கு சாதமானதாக உருவாக்கப்பட்டது மட்டுமே. இந்த திருத்தத்திற்கு மீனவர்களிடம்   கருத்துக்கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை.

தென்மேற்கு கடற்கரைகள் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகள். இதில் பெருந்துறைமுகம் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு துறைமுகத்தின் எல்லை அந்த துறைமுக விளிம்பிலிருந்து 15 கிலோமீட்டர் வான்வெளி தொலைவு சுற்றுவட்டாரம். இதனடிப்படையில் பார்த்தால் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் கோவளம் துறைமுகப்பகுதியிலிருந்து நாகர்கோவில் நகரம் 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே துறைமுகப்பகுதியில் பால்வினை நோய்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்பது வெளிப்படையானது. ஒருவருடத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான கனரக வாகனங்கள் துறைமுகத்தில் வந்துபோகுமென்றும் சொல்லப்படுகின்றது. இனயம் துறைமுகத்தின் மூன்று சரக்கு இறக்கு தளங்களில் ஒன்று நிலக்கரிக்கானது என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.  கோவளம் துறைமுகத்தின் ஆய்வறிக்கை இன்னும் வெளியாகவில்லையென்றாலும், கோவளம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று நம்பலாம். ஏற்கெனவே, புற்றுநோய் கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக கடற்கரைகளில், பெருமளவில் இருக்கின்றது. எனவே, புதிய பெருந்துறைமுகங்கள் புதிய நோய்களின் உற்பத்தி ஆலைகள் போல் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை.

தென்மேற்கு கடற்கரையில், இயற்கையான தீவுகள், பெரிய பொழிமுகங்கள் இல்லாத பகுதிகளில் அனைத்து பருவகாலத்திலும் செயல்படும் பெருந்துறைமுகங்களுக்கு சாத்தியமில்லை என்பதை, தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் ஏற்படும் கடல்கொந்தளிப்புகளை அடிப்படையாக வைத்து எளிதில் சொல்லிவிடலாம். தற்போது துறைமுக கட்டுமானப் பணிகளில் பின்னிடைவு ஏற்பட்டிருக்கும் விழிஞ்ஞம் பன்னாட்டு துறைமுகம் இதற்கு சிறந்த ஒரு சாட்சி. ஆய்வாளர்கள் சொன்னதைவிட பல லட்சம் டன் பாறைகள் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு அதிகமாக தேவைப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம், அலை நீரோட்ட வேகம் இன்னும் துல்லியமாக ஆய்வு செய்யப்படவில்லை. பல டன் எடைகொண்ட பாறைகளை ஓரிடத்தில் போட்டதும், நீரோட்டம் அந்த பாறைகளை தரைப்பகுதியை சென்றடைவதற்குள் பல நூறு மீட்டர் தூரத்திற்கு அடித்துசென்றது. பொதுவாக கடற்கரை ஆய்வுகள் சுனாமி போன்ற பேரழிவுகளை கணக்கில் கொள்வதே இல்லை. இது இனயம், கோவளம் துறைமுகங்களுக்கும் பொருந்தும். தற்போது கோவளம் துறைமுகத்தின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆரம்பகட்ட சாத்தியக்கூறு அறிக்கையில்கூட 2008-2011 வருடங்களுக்கு இடைப்பட்ட ஆய்வுகளும், 2013-ம் வருடம் விழிஞ்சம் துறைமுகத்திற்கான நிலவியல் தொழில்நுட்ப தரவுகளுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  விழிஞ்ஞம் மற்றும் கோவளத்திற்கு இடைப்பட்ட வான்வெளி தொலைவு சுமார் 65 கிலோமீட்டர்கள். அதுபோல், தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டம் இன்னும் செயல்முறைப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு நாம் துறைமுக கட்டுமான ஆய்வில் தன்னிறைவு அடையும்வரை தமிழகத்தில் பெருந்துறைமுக கட்டுமானங்களை நிறுத்தவேண்டும். கடல்சார்ந்த ஆய்வுகளை வெளிநாடுகளுக்கு அயலாக்கம் செய்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக இனயம் பன்னாட்டு சரக்குபெட்டக மாற்று முனையம் கன்னியாகுமரி கோவளம் மற்றும் கீழ்மணக்குடி கடற்கரை கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனயம் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், அரசு நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள், இனயம் துறைமுகத்தினால் ஏற்படவிருந்த பாதிப்புகள் என்று விரிவாக இந்த புத்தகம் பேசுகின்றது. எழுத்தாளர் குறும்பனை. சி. பெர்லின் ஒரு களப்பணியாளர். இனயம் போராட்டம், அவரது செயல்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் அவரது பங்களைப்பை மிக விரிவாக  இந்த புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருக்கின்றார். இனயம் காக்க இணைவோம் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம் மட்டுமல்ல ஒரு வரலாற்று ஆவணம். மீனவர்களின் வாழ்வியல் போராட்டங்களை ஆவணப்படுத்தும் நண்பர் குறும்பனை சி. பெர்லின் போற்றுதலுக்குரியவர். அரசியலில் கைவிடப்பட்ட குரலற்றவர்களின் குரல் அவர். குறும்பனை சி. பெர்லின் அவர்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்!

References:

 1. http://environmentclearance.nic.in/writereaddata/Online/TOR/30_Nov_2017_1321095371U7ZUX3ZAnnexure-Pre-feasibilityReport(PFR)File.pdf
 2. http://envfor.nic.in/sites/default/files/CRZ%20AMENDMENT%206-11-2017.pdf

406 மெகா ஹெர்ட்ஸ்

2009ம் வருடம் நவம்பர் மாதம் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா கடற்கரையை பியான் புயல் தாக்கியது. இதில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தூத்தூர் பகுதி மீனவர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த புயலில் சிக்கி சின்னத்துறை கிராமத்தைச் சார்ந்த ஒன்பது மீனவர்கள் இறந்தார்கள். தூத்தூர் பகுதி மீனவர்கள் அதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சூறாவளிப் புயல் பியான் மட்டுமே. எப்போதும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரையில் தொடர்பு கொள்வதாற்கான தொழில்நுட்பம் இருந்ததில்லை. நம்முடைய மத்திய மாநில அரசுகளும் அதில் அக்கறை கொள்ளவில்லை.

பியான் புயுலுக்குப்பிறகு தூத்தூர் பகுதி மீனவர்களுக்கு DAT (Distress Alert System) என்னும் இடர்பாடு எச்சரிக்கை கருவி கொடுக்கப்பட்டது. தூத்தூர் பகுதியின் எட்டு கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திற்கு இரண்டு கருவிகள் என்று மொத்தம் 16 விசைப்படகுகளுக்கு இந்த கருவிகள் கொடுக்கப்பட்டது. இந்த கருவிகள் வழங்கப்பட்ட விசைப்படகு மற்றும் உரிமையாளரின் தகவல்கள், அலைபேசி உட்பட, மீனவளத்துறையிடம் பதிவுசெய்யப்பட்டது.

இந்த கருவியிலிருக்கும் பொத்தானை அழுத்தினால், இந்த தகவல் விசைப்படகிற்கு பக்கத்திலிருக்கும் கடற்படை கப்பலுக்குச்சென்றுவிடும். கடற்படை கப்பல்கள் ஒரு சில நிமிடங்களில் மீனவர்களை காப்பாற்றுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், தவறுதலாக பொத்தானை அழுத்தினால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால், ஆழ்கடல் மீனவர்கள் ஆபத்து காலங்களில் இந்த கருவியை பயனபடுத்தியபோதும் உதவிக்காக யாரும் வந்ததில்லை. எனவே, இந்த கருவியை ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் பொதுவாக பயன்படுத்துவதில்லை.

தூத்தூர் பகுதி ஆழ்கடல் மீனவர்கள் அவர்களிடமிருக்கும் அதிநவீன ஒயர்லெஸ் கருவிகளை பயன்படுத்தி மெஷ் நெட்வொர்க் (mesh network) என்னும் தொலைதொடர்பு வலைப்பின்னலை  ஆழ்கடலில் உருவாக்குவார்கள். கரையிலிருந்து ஒரு தகவலை 600 நாட்டிகல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் விசைப்படகுகளுக்கு எளிதாக பரிமாறமுடியும். தினமும் கரையிலிருந்து படகுகள் ஆழ்கடலுக்கு சென்றுகொண்டிருக்கும், சில படகுகள் ஆழ்கடலிலிருந்து கரைக்கு வந்துகொண்டிருக்கும். கரையிலிருந்து செல்லும் படகுகள் தகவல்களை ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்லும். அவர்கள் ஒயர்லெஸ் வழியாக தகவலை அடுத்த படகிற்கு சொல்வார்கள். தகவலை பெற்றவர் அடுத்த தூரத்து படகிற்கு தகவலை பரிமாறுவார்.

சாதாரணமாக ஒயர்லெஸ் வழியாக நூறிலிருந்து இருநூறு கடல்மைல் தொலைவு வரை தொடர்புகொள்ள முடியும். நூறு கடல்மைல் தொலிவிலிருக்கும் படகுகளை கடல் சாந்தமாக இருக்கும் காலகட்டங்களில் வீட்டிலிருந்தே தொடர்புகொள்ள முடியும். ஆனால், கடற்கோள் மற்றும் சூறாவளி காலங்களில் ஓரிரு கடல் மைல் தொலைவு மட்டுமே ஒயர்லெஸ் சிக்னல் கிடைக்கும். இந்த காலகட்டங்களில் ஆழ்கடல் மீனவர்களுக்கு  சேட்டலைட் போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒக்கி சூறாவளியின் போது மீனவர்களிடமிருந்த ஒயர்லெஸ் கருவிகள் வேலைசெய்யவில்லை. எனவே, அவர்களின் ஒயர்லெஸ் வலைப்பின்னல் முற்றிலுமாக செயலிழந்து யாரும் யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஒக்கி புயலுக்கான தகவல் 24 மணிநேரத்திற்கு முன்னர் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், ஆழ்கடல் மீனவர்களுக்கு இந்த தகவலை எளிதாக பரிமாறியிருக்கமுடியும். அதுபோல், கரைக்கடலிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது. கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் மேற்கொண்ட மீட்புப்பணிகள் 60 கடல்மைல் தொலைவிற்குள் மட்டுமே இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.

ஆனால், ஒக்கி புயலின் போது ஆழ்கடலில் பாதிப்பிற்குள்ளான மீனவர்கள் தங்கள் ஒயர்லெஸ் கருவிகள் வேலைசெய்யாமல் போனபோது, தங்கள் விசைப்படகிலிருந்த DAT கருவியை பயன்படுத்தினார்கள். ஆனால், அவர்களை கடற்படையோ, கடலோர காவல்படையோ காப்பாற்றவில்லை என்று தாங்களாகவே கரைசேர்ந்த மீனவர்கள் சொல்கின்றார்கள். அப்படியென்றால் இந்த DAT கருவியின் பயன்தான் என்ன? சிறிது விரிவாகப்பார்க்கவேண்டும்.

ஒருமுறை ஆழ்கடலில் ஆபத்திற்குள்ளான விசைப்படகிலிருந்தவர்கள்  DAT கருவியின் பொத்தானை அழுத்தியபோது, வீட்டிலிருந்த படகு உரிமையாளரின் அலைபேசிக்கு மீனவளத்துறையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்கள் விசைப்படகு ஆபத்திலிருப்பது உண்மையா என்று கேட்டபோது கதிகலங்கிவிட்டார். வேறு படகுகளை தொடர்புகொண்டு விசாரித்ததில் அவரது படகு ஆபத்திலிருப்பது உணமைதான் என்பது தெரிவந்தது. அதை மீன்ளத்துறைகு தெரியப்படுத்தினார். சிலமணி நேரங்களுக்குப்பிறகு மீன்வளத்துறையை தொடர்புகொண்டபோது, அவ்வளது தூரத்திற்கு ஆழ்கடலில் சென்று எங்களால் காப்பாற்றமுடியாது. நீங்கள் தொடர்பு கொண்ட விசைப்படகையே உங்கள் விசைப்படகை காப்பாற்றச்சொல்லுங்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டது.

இந்திய கடல் எல்லைக்கு வெளியில், 400 முதல் 600 கடல்மைல் தொலைவில் மீன்பிடிக்கச்செல்லும் ஆழ்கடல் விசைப்படகுகளுக்கு DAT எந்த விதத்திலும் பயனில்லாதது. கரைககடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கரையை தொடர்புகொள்ளும் வசதியின்றி DAT கருவியை மட்டும் வைத்துக்கொண்டு எதுவு செய்யமுடியாது. அவர்கள் நீந்தி கரைசேருவார்கள் என்னும் நம்பிக்கையைத்தவிர, அவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதவுமில்லை. ஒக்கி புயலில் பாதித்த பல விசைப்படகிலிருந்த மீனவர்கள் DATயின் அபாய பொத்தானை அழுத்தியிருக்கின்றார்கள். அவர்களை கடற்படையோ, கடலோர காவல்படையோ காப்பாற்றவில்லையென்று தாங்களாகவே கரையேறிய மீனவர்கள் சொல்கின்றார்கள். சரி, மீனவர்கள் தவறுதலாக DAT கருவியை பயன்படுத்தியிருந்தால் அதை எப்படி மீன்வளத்துறைக்கோ, கடற்படைக்கோ தெரியப்படுத்துவது? மீனவர்களைத்தான் எப்படி தொடர்புகொள்வது?

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது, DAT கருவியின் சிக்னல் கரையிலிருக்கும் கட்டுப்பாடு அறைக்குச் செல்லுமா? எப்படி ஒட்டுமொத்த மீனவர்களின் DAT அழைப்புகளும் நிராகரிக்கப்பட்டது? கட்டுப்பாடு அறையிலிருக்கும் அலுவலர்கள் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்துவார்களா? பொருட்படுத்தினாலும், ஆழ்கடலில் சென்று மீட்பதற்கான கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் தான் இருக்கின்றதா? தயார் நிலையில் இருந்தாலும், மீனவர்களை இந்திய அரசு பொருட்படுத்துகின்றதா? அவர்களை மீட்பதில் அக்கறை காட்டுகின்றதா? 600 கடல்மைல் தொலைவுவரை சென்று நமது கடற்படையால் மீட்க முடியுமா? ISRO வடிவமைத்த இந்த DAT கருவிகளை தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த கருவிகள் சரியான முறையில் வேலைசெய்கின்றதா? என்று பல கேள்விகள் எழுகின்றது.

-2-

ஆழ்கடல் மீனவர்களைப் பொறுத்தவரை, DAT கருவி என்பது அரசாங்கத்தின் ஒரு கண்துடைப்பு மட்டுமே. உலக நாடுகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் 406 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் இயங்கும் Emergency Position Indicating Radio Beacon (EPIRB) என்னும் DATக்கு இணையான கருவியை கொடுத்திருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் EPIRB கருவியின் சிக்னல் அனைத்து நாடுகளின் கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று விடும். பின்னர், அந்த அபாயத்தகவல், அந்த சிக்னல் பெறப்பட்ட EPIRB கருவி பதிவு செய்யப்பட்ட நாட்டின் கட்டுப்பாட்டு அறைக்கும், அல்லது அந்த குறிப்பிட்ட ஆபத்திலிருக்கும் விசைப்படகிற்கு பக்கத்திலிருக்கும் கப்பல்களுக்கும் தகவல்கள் பரிமாறப்படும். [EPIRB குறித்து வள்ளவிளை ஆல்பர்ட் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பலமுறை குறிப்பிட்டிருக்கின்றார்]

EPIRB கருவிகள் INMARSAT மற்றும் COSPAS என்னும் இரண்டு விண்கலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் விண்கலங்களுடன் தொடர்புகொள்ளும் அலைவரிசை 406MHz. EPIRB கருவியை பயன்படுத்தும் விசைப்படகுகள் காப்பாற்றப்படாமலிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. காரணம் பாதுகாப்பு நடவடிக்கை உலக நாடுகளுக்கும் பொதுவானது. இதில் இந்தியாவும் அங்கம் வகிக்கின்றது. ஆனால், தூத்தூர் பகுதி ஆழ்கடல் மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் DAT கருவி INSAT 3A விண்கலத்தின் உதவியுடன் இயங்குகின்றது. ஏற்கெனவே, INSAT 3A விண்கலத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. தற்போதைய DAT கருவிகள் INSAT 3D விண்கலத்தின் உதவியுடன் தனி அலைவரிசையில் இயங்குகின்றன. INSAT 3D இந்திய வானிலை  தகவலுக்காகவும், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மற்றும் மீட்புக்கான தகவல் பரிமாற்றத்திற்கு 406 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், DAT கருவியின் அலைவரிசை 402.75 MHz என்று இந்த கருவியை தயாரித்த Komoline Aerospace Ltd நிறுவனம் சொல்கின்றது.  DAT கருவிகளுக்கும் EPIRB கருவிகளுக்கும் எந்த வித தொடர்புமில்லை. DAT கருவிகளின் சமிக்ஞைகள் இந்திய கட்டுப்பாட்டு அறைகளுக்கே செல்லும். DAT கருவிகளிலிருந்து பெறப்படும் அபாயத்தகவல்களுக்கோ அந்த தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டு மீன்வர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறித்தோ, வெளிப்படைத்தன்மையோ, உண்மைத்தன்மையோ இருப்பதாகத்தெரியவில்லை.

தற்போதைய ஒக்கி புயலில் ஏராளமான ஆழ்கடல் விசைப்படகுகள் DAT கருவியை பயன்படுத்தியும் அவர்களை மீட்பதற்காக கடற்படை கப்பல்கள் எதுவும் வரவில்லை என்று மீனவர்கள் சொல்வது மீனவர்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் அதன் பாதுகாப்பு சம்பந்தமானது. எனவே, DAT கருவியிலிருந்து பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் அரசு வெளியிடவேண்டும். எத்தனை ஆபத்து அழைப்புகள் பெறப்பட்டது, எத்தனை அழைப்புகளுக்கு மீட்பதற்கான நடவடிக்கைகள், எவ்வளவு நேரக்கெடுவில் எடுக்கப்பட்டது என்பது உட்பட. இது இராணுவம் சம்பந்தமான இரகசியமான தகவல்களல்ல. பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தமான பொதுத்தகவல் மட்டுமே.

ஆழ்கடல் மீனவர்களுக்குத் தேவையானது DAT கருவியல்ல. அவர்களுக்குத் தேவையானது உலக நாடுகளின் மீனவர்கள் பயன்படுத்தும் 406 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும் EPIRB கருவிகள் மட்டுமே.  EPIRB கருவிகள் நமது ஆழ்கடல் மீனவர்களிடம் இருந்திருந்தால், உயிரிழப்புகள் பாதியாக குறைந்திருக்கும்.  குறிப்பாக மீனவர்கள் ஆழ்கடலில் ஆபத்திற்குள்ளாகியிருப்பது உலக நாடுகளின் கவனித்திற்காவது சென்றிருக்கும். வெற்றிகரமாக பயன்பாட்டிலிருக்கும் EPIRB கருவிக்கு பதிலாக இந்திய மீனவர்களுக்கு பயன்படாத DAT கருவியை கொடுப்பதற்கான காரணம் என்ன?

நான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மென்பொருள் துறையில் இருக்கின்றேன். 10 வருடங்களுக்கும் மேலாக உட்பொதி கட்டமைப்பு (Embedded Systems) துறையிலும், கடந்த நான்கு வருடங்களாக அதிநவீன பொழுதுபோக்கு விசைப்படகுகளுக்கான மென்பொருட்களை வடிவமைக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் மீனவர்களுக்குத் தேவையான தொலைதொடர்பு தொழில்நுட்பமும் கல்லூரி மாணவர்களுக்கான ப்ராஜக்ட் மட்டுமே. ஓரிரு மாதகாலத்தில் செய்து முடிக்கலாம். நமக்குத் தேவையானது இரண்டுவழி தொலைதொடர்புக்கான சேட்டலைட் மோடம் மட்டுமே.

கடந்த 2010ம் வருடம் INCOIS (Indian National Center for Ocean Information Services) மத்திய அரசு நிறுவனத்தை தொடர்புகொண்டு மீனவர்களுக்கு ஆபத்து காலங்களில் பயன்படுத்துவதற்கான ஒரு கருவியை வடிமைப்பதற்கான அனுமதியை கேட்டிருந்தேன். அவர்கள் DAT கருவியை ஒருசில மாற்றங்களுடன், ISROவின் உதவியுடன் செய்வதாகச் சொன்னார்கள். அந்த திட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் பொறியாளருடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார்கள். என்னிடம் அவர் அந்த கருவியை வடிவமைப்பதற்கான ஆலோசனையை கேட்டார். அவர்களே அதனை வடிவமைப்பதாகவும் சொன்னார்கள். 2011 ஜனவரி மாதத்திற்குப் பிறகு அவரிமிருந்து எதவித தகவலுமில்லை. அந்த கருவியை அவர்கள் உருவாக்கியிருந்தால் ஒக்கி புயலில் இந்தளவிற்கான சேதங்கள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளில்லை. மிகச்சிறியதொரு வடிவமைப்பு மட்டுமே. [இதை, பியான் புயலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய துறைவன் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் சொல்லியிருக்கின்றேன்.] தற்போதும் மீனவர்களுக்கு 2010ம் வருடம் வழங்கப்பட்ட அதே DAT கருவிகள் தான் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கரையில் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்திக்கொடுக்காம், DATயை மட்டும் ஆழ்கடல் மீனவர்களுக்கு கொடுப்பது முட்டாள்தனமானது, அவர்களை ஏமாற்றும் செயல்.

சில நாட்களுக்கு முன்பு, கரையிலிருந்து ஆழ்கடல் மீனவர்களுக்கு வானிலை அறிப்பை தெரியப்படுத்துவதற்காக நேவிக் என்னும் இந்தியாவின் ஏழு விண்கலங்களின் உதவியுடன் ஒரு புதிய கருவியை ISRO தயாரித்திருக்கின்றது. ஆனால், இந்த கருவியை பயன்படுத்தி மீனவர்கள் கரையில் தொடர்புகொள்ளமுடியாது. எனவே, இதுவும் ஆழ்கடல் மீனவர்களுக்கு முழுமையான பயனைத் தராது.  ஆழ்கடல் மீனவர்களுக்கு ஒக்கி புயல் ஏற்படுத்திய பேரழிவு மீண்டும் ஏற்படாமலிருக்க, தொழில்நுட்பம் சார்ந்து அரசு செய்யவேண்டியது:

i) மீனவர்களுக்கு தேவையானது 406 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும் EPIRB கருவிகள். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றது. ஒன்று விசைப்படகில் பயன்படுத்தும் EPIRB கருவி. இன்னொன்று கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தனிமனிதர்கள் பயன்படுத்தும் PLB (Personal Locator Beacon) என்னும் கருவி. மத்திய மாநில அரசுகள் இலவசமாக இவற்றை மீனவர்களுக்கு அளிக்கலாம். பொதுவெளியில் இவற்றின் விலை சுமார் 250 டாலர்கள். இந்த கருவிகளை உலகின், இந்தியா உட்பட, அனைத்து மீனவர்களும் பயன்படுத்தலாம். EPIRB கருவிகள் மத்திய அரசிடம் முறையாக பதிவு செய்யப்படவேண்டும். இதை பயன்படுத்துவோர் மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றவேண்டும். பதிவு செய்யாமல் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தும். EPIRB கருவிகளை உலகதரத்தில் இந்தியா வடிவமைத்திருந்தால், அதை இந்திய ஆழ்கடல் மீனவர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கலாம்.

ii) ஆழ்கடல் மீனவர்கள் சேட்டலைட் போன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சேட்டலைட் போன்கள் சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கிய பரிந்துரையாகவே இருக்கின்றது. பயன்பாட்டிலிருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேட்டலைட் போன் சேவையை விரிவுபடுத்தி ஆழ்கடல் மீனவர்கள் 200 கடல்மைல் தொலைவிற்கும் அப்பால் பயன்படுவதுபோல் செய்யலாம். அல்லது, 200 கடல்மைல் தொலைவுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேட்டலைட் போன் சேவையையும், அதற்கு அப்பால் பன்னாட்டு சேட்டலைட் போன் சேவையையும் மீனவர்களுக்கு, ஒரு சில நிபந்தனையுடன் இலவசமாக கொடுக்கலாம்.

iii) சேட்டலைட் உதவியுடன் இயங்கும் S-AIS (Sattelite-based Automatic Identification System) கருவியை ஆழ்கடல் மீனவர்களுக்கு கிடைக்கச்செய்யலாம். ஆழ்கடல் விசைப்படகின் பாதுகாப்பிற்கு இந்த கருவியே போதுமானது. பொதுவாக S-AIS கருவிகள் கப்பல்களில் பயன்படுத்தப்படுவது. நம்முடைய ஆழ்கடல் விசைப்படகுகளை கப்பல்ளாக கணக்கில் கொண்டு S-AIS கருவியை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். S-AIS கருவியின் தவகல்பரிமாற்றத்திற்காகவும், இந்தியப்பெருங்கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்காக resourcesat-2 என்னும்  செயற்கைகோளை இந்தியாவின் வான்வெளி ஆய்வு நிறுவனமான ISRO ஏற்கெனவே விண்ணில் ஏவியிருக்கின்றது. எனவே, S-AIS கருவியை மிக எளிதாகவே ஆழ்கடல் மீனவர்களுக்கு மத்திய அரசு மானிய விலையிலோ, இலவசமாகவோ கொடுக்கலாம்.

iv) இந்தியா தகவல் தொழில் நுட்பம் மற்றும் வான்வெளி ஆராய்ச்சியில் முதிர்ச்சியடைந்து விட்டது. பிரச்சனை கட்டமைப்புகள் மட்டுமே. வெளிநாடுகளின் தேவையில்லை, நம்முடைய மீனவர்களை நாமே பாதுகாத்து மீட்போம் என்று கருதினால், ஆழ்கடல் மீனவர்களின் தேவைக்கு மட்டுமேயான INSAT 3Dக்கு இணையான இன்னொரு விண்கலத்தை பயன்படுத்தலாம். விலை அதிகமில்லை. 200 கோடிக்கும் குறைவுதான். ஒக்கி புயலுக்கான இழப்பீடாக தமிழகம் மத்திய அரசிடம் கேட்டிருப்பது சுமார் 10,000 கோடி. கடந்தவருடம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மீன்களின் மதிப்பு 38,781 கோடி. எனவே, துச்சமான 200 கோடியை தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதொன்றும் பெரியவிசயமல்ல.

v) இந்த செயற்கைகோளை பயன்படுத்தி நம்முடைய ஆழ்கடல் விசைப்படகுகளுக்காக தனியான தொலைதொடர்பு வலைப்பின்னலை உருவாக்க முடியும். விபத்திற்குள்ளாகும் விசைப்படகுகளை அவர்களுக்கு பக்கத்திலிருக்கும் விசைப்படகுகளைக்கொண்டே மீட்பு முயற்சியிலும் ஈடுபடமுடியும். கரையிலிருந்து கடற்படை கப்பல்களோ ஹெலிகாப்டர்களோ , 400 கடல்மைல் தொலைவிற்கு அப்பால் சென்று காப்பாற்றுவதொன்றும் எளிதானதல்ல. ஒடிசாவில் கரைக்கடலுக்கான ஆம்புலன்ஸ் கட்டமைப்பு இருக்கின்றது. அதையே ஆழ்கடல் ஆம்புலன்ஸ் சேவையாக (Deep Sea Marine Ambulance Service) மாற்றமுடியும். இதை மத்திய அரசு முன்னெடுக்கலாம். தொலைதொடர்பு வசதிகள் இருப்பின் மீனவர்கள் தங்களிடமிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி இதை மிக எளிதாக செயல்படுத்த முடியும். ஏற்கெனவே நமது மீனவர்கள் கடற்படையுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதுபோல், பத்திற்கும் அதிகமான படகுகளில் ஆழ்கடலில் சென்று தேடுதல் வேட்டையை நடத்தி, சுமார் ஐம்பது மீனவர்களை மீட்டிருக்கின்றார்கள். மீட்புப்படை சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மையின் ஒரு முக்கிய பரிந்துரையாக இருக்கின்றது.

-3-

ஒரு பேரிடரை எதிர்கொள்வதற்கான எந்தவிதமான அடிப்படை கட்டமைப்புகளும் நம்மிடம் இல்லை என்பதை ஒக்கி புயல் சொல்லிச்சென்றிருக்கின்றது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, மீட்பு உட்பட. ஒக்கி பேரழிவு மனிதத்தவறுகளினாலும், மீனவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகளை அவர்களுக்கு உருவாக்கிக்கொடுக்காத காரணத்தினாலும்,  மீட்புப்பணிகளின் தொய்வினாலும், மக்கள் மீது அக்கரையில்லாத அரசு நிர்வாகங்களினாலும் செயற்கையாக ஏற்பட்ட பேரழிவு என்றே சொல்லமுடியும். இந்த தவறுகள் நூற்றுக்கணக்கான விதவைகளை உருவாக்கியிருக்கின்றது. அவர்களின் குழந்தைகளின், குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது.கேரளா அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொன்னதுபோல் நிவாரணங்களை வழங்கிகிட்டது. ஆனால், தமிழக அரசு இழப்பீடுகளுக்காக இதுவரை எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு இயற்கைப் பேரிடரை தேசியப்பேரிடராக அறிவிப்பதற்கு எந்தவித வரைமுறைகளும் இல்லை. அந்தந்த பேரிடர்களினால் ஏற்படும் பேரழிவு, அதன் தீவிரம், அந்த பேரழிவை சமாளிப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் திறன் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடரை தேசியப் பேரிடாராக அறிவிக்கமுடியுமென்று உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. எனவே, மனிதாபிமானம் சார்ந்தும் ஒக்கி புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழியையும் கருத்தில் கொண்டும், ஒக்கி புயலை தேசியப்பேரிடராக அறிவிக்காதது மீனவர்களின் மீதான அரசின் அக்கரையின்மையையே காட்டுகின்றது. காப்பீடு செய்யப்படாத தங்கள் உயிர்களை துச்சமென நினைத்து, வங்கிக்கடன் பெறாத, தங்கள் சொந்த உழைப்பில் உருவாக்கிய விசைப்படகுகளுடன், கடலில் சிறுதுரும்பு முதலீட்டையும் செய்யாத அரசாங்கத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை தொடர்ந்து ஈட்டித்தந்த, கடலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு  வாழ்வதற்கான எதிர்கால நம்பிக்கையை அளிக்கும் பொறுப்பு மத்திய மாநில அரசிற்கு இருக்கின்றது.

கடல்சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எளிதானதல்ல. காரணம், நம்மிடமிருக்கும் கடல்சார்ந்த சட்டதிட்டங்களும், தொழில்நுட்பங்களும் காலாவதியானவை. அதுபோல், கடலறிவு ஏதுமில்லாத, மீனவர்களின் மீது அக்கறையில்லாத, அவர்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளாதவர்களால் கடல்சார்ந்த திட்டங்களை தீட்டப்படுகின்றது. இது புதுப்புது சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். கடல்வளத்தை ஒரு முக்கியமான வருவாய்துறையாகக் கொண்டு, மீனவளத்துறையை தனியாக கையாளவேண்டும். அதுபோல் கடல்சார்ந்த சட்டதிட்ட உருவாக்கங்களிலும் மீட்பு பணிகளிலும் மீனவர்களின் பங்களிப்பும் இருக்கச்செய்யவேண்டும். அரசியல் பங்களிப்பும் மீனவர்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். இந்த கோரிக்கைகள் இப்போது புதிதாக சொல்வதல்ல, நீண்டகாலமாக மீனவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மீனவர்களின் குரலை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பாக பல்லாயிரம் கோடிகளை தந்துகொண்டிருக்கும் மீனவர்களின் மீது மத்திய மாநில அரசுகள் சிறிது அக்கறை காட்டவேண்டும். அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டும். அல்லது, மீனவர்களைவிட பேரிழப்பு இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.

References:

 1. https://www.isro.gov.in/Spacecraft/resourcesat-2
 2. https://en.wikipedia.org/wiki/Emergency_position-indicating_radiobeacon_station#Digital_mode:_406_MHz_beacons
 3. https://inmcc.istrac.org/Registration_406_MHz.html
 4. https://inmcc.istrac.org/brochurehtml/Images/Brochure.pdf
 5. http://www.imo.org/en/OurWork/Safety/RadioCommunicationsAndSearchAndRescue/Radiocommunications/Pages/Introduction-history.aspx
 6. http://www.sarsat.noaa.gov/emerbcns.html
 7. http://www.incois.gov.in/documents/tender_document_for_fat.pdf
 8. http://www.vssc.gov.in/VSSC_V4/images/TT/ttrnsfr2009/Distress_Alert_Transmitter.pdf
 9. http://www.sac.gov.in/SAC_Industry_Portal/publication/media/mediapublication/DATDECU.pdf
 10. https://www.isro.gov.in/insat-3d/insat-3d-advanced-weather-satellite-completes-two-years-orbit
 11. http://satellite.imd.gov.in/dynamic/INSAT3D_Catalog.pdf
 12. .http://www.komoline.com/memberfiles/Catalog/distress-alert-transmitter-brochure-kdat02-pct1-162.pdf
 13. https://www.isro.gov.in/applications/satellite-aided-search-and-rescue
 14. https://en.wikipedia.org/wiki/Automatic_identification_system

டெக்னோபோபியா

-1-

ஒவ்வொரு நாடும் நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனுக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் விதிவிலக்காக நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கு கேடுவிளைவிக்குமென்று கருதி தடைசெய்திருப்பது கேவலமானது, முட்டாள்தனமானது. அதாவது, கணினியில் ஹேக்கர்கள் ஊடுருவுவார்கள் என்பதால் நாட்டில் கணினியே பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதைப்போன்றது இது. எவ்வளவு வெட்கக்கேடானது? ஆங்கிலத்தில் டெக்னோபோபியா (Technophobia) என்று ஒரு வார்த்தை இருக்கின்றது. இதன் பொருள் நவீன தொழில் நுட்பங்களைக் கண்ட பயம். இந்தியாவிற்கு டெக்னோபோபியா என்னும் சொல் சாலப்பொருந்தும்.

ஆழ்கடல் மீன்பிடித்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வெளிநாட்டு கப்பல்கள் எதுவும் ஒக்கி புயலில் சிக்கவில்லை. காரணம், அவகளிடம் நவீன தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் இருக்கின்றன.  ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கின்றதென்றால், அது கரையை தொடர்புகொள்வதற்கும், கரையிலிருந்து கப்பலை தொடர்புகொள்வதற்குமான வசதி அந்த கப்பலில் இருக்கவேண்டும்.

இந்தியாவின் எல்லையில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கப்பல்களுக்கு இந்த தொலைதொடர்பு (சேட்டலைட் போன் உட்பட) வசதிகள் இருக்குமென்றால், இந்தியாவின் மீன்பிடி விசைப்படகுகளுக்கும் இந்த வசதிகள் இருந்தாகவேண்டும். இதற்கு தடையாக இருப்பது, ஒரு படகு கப்பலாக கணக்கில் கொள்ளவேண்டுமென்றால் அதற்கு குறைந்த பட்சம் 20 மீட்டர் நீளம் இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய படகுகள் 15 முதல் 20 மீட்டர் நீளம் கொண்டவை. எனவே இந்த படகுகளில் நவீன தொலைதொடர்பு வசதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றது. இதற்கு தீர்வு, பாரம்பரியமுறையில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நம்முடைய விசைப்படகுகள் அனைத்தையும் மீன்பிடி கப்பல்கள் என்று கணக்கில் கொள்ளவேண்டும். இதற்கு மீன்வளத்துறையின் ஒரு சிறிய உத்தரவே போதுமானது. எந்த சட்டத்திருத்தமும் தேவையிருப்பதாகத் தெரியவில்லை. இது சிக்கல் என்னவென்றால், மீன்பிடி கப்பல்கள் மத்திய அரசிடமிருந்து மீன்பிடி உரிமம் (Letter of Permit) பெறவேண்டும்.  பாரம்பரியமுறையில் மீன்பிடிக்கும் நமது விசைப்படகுகளுக்கு LoPயிலிந்து விலக்களிக்கலாம். இந்த மாற்றங்கள் ஓரிரு நாட்களிலேயே செய்துவிடமுடியும். நவீன தொலைதொடர்பு வசதிகளை நம்முடைய படகுகளில் எளிதாக பயன்படுத்தாமென்றும் நம்புகின்றேன். (கப்பல் மாலுமிகள் அதிகம்கொண்ட நம்முடைய தூத்தூர் பகுதி மீன்வர்கள் இதை ஒரு விவாதப்பொருளாக எடுக்கலாம்.)

ஏற்கெனவே, இந்தியாவில் செயல்பாட்டிலுள்ள திட்டமான, சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்தை தென்மேற்கு கடற்கரையில் செயல்படுத்தாதன் காரணமாக, இருநூற்றிற்கும் அதிகமான உயிர்கள் பலியாயிருக்கின்றது.  சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்திலிருக்கும் வழிகாட்டுதல்களை கடற்கரைகளில் செயல்படுத்துவதற்கான எந்தமுயற்சியையும் அரசு இதுவரை செய்யவில்லை. இந்த நிலையில் வரும் ஜனவரி ஒன்றாம் நாளிலிருந்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லவிருக்கின்றார்கள். மத்திய மாநில அரசுகள் ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் அளித்திருக்கின்றது? குறைந்தபட்சமான நவீன தொலைதொடர்பு வசதிகளையாவது செய்து கொடுத்திருக்கின்றதா?  சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்தை செயல்படுத்தாமைக்காக இதுவரை யாராவது போறுப்பேற்றிருக்கின்றார்களா?

-2-

இந்திய பொருளாதார பிரத்தியேக மண்டல (EEZ) கடல் எல்லை 200 நாட்டிகல் மைல்கள் வரை. அதற்கு அப்பால் பன்னாட்டு கடல். தென்தமிழகத்தின் தூத்தூர் பகுதியின் எட்டு ஊர்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் ஆழ்கடலில், 200 நாட்டிகல் மைல்களுக்கு வெளியில், மீன்பிடிக்கின்றன. ஒக்கி புயலில் பாதிப்பிற்குள்ளானவர்களில் 100ற்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்து கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்கள்.  ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்த ஆயிரக்கணக்கான படகுகளை கருத்தில் கொள்ளாமல், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திறமை இந்தியாவில் இல்லையென்று சொல்லி இந்திய பொருளாதார பிரத்தியேக மண்டல (EEZ) கடல் எல்லைக்குள் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் (Letter of Permit) கொடுக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டு கப்பல்களுக்கான உரிமத்தை ரத்துசெய்யவேண்டுமென்று மீனவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த வருடம் 2017 ஜனவரி மாதத்திலிருந்து வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கான உரிமத்தை ரத்துசெய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. வெளிநாட்டு கப்பல்களின் மீன்பிடிஉரிமத்தை ரத்துசெய்திருப்பதன் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளைவிட இந்தவருடம் 18.86% அதிகமாக மீன் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வருடம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மீன்பொருட்களின் மதிப்பு ரூபாய் 37,871 கோடிகள். நம் நாட்டிலிருந்து அதிகமான அளவு மீன்பொருட்கள் ஏற்றுமதியானது இந்த வருடம்தான். வெளிநாட்டுக்கப்பல்கள் திருடிச்சென்ற மீனவளங்கள் இப்போது நம்நாட்டு கஜானாவை நிரப்பத்தொடங்கியிருக்கின்றது. இது, எந்தவிதமான நவீன தொழில்நுட்ப வசதியுமற்ற நமது பாரம்பரிய ஆழ்கடல் மீனவர்களின் உழைப்பு.

ஆனால் மத்திய அரசு எப்போது வேண்டுமென்றாலும் இந்த தடையை எப்போது வேண்டுமென்றாலும் மாற்றி மீண்டும் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதியளிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, இதற்கு நிரந்தரமான சட்டத்திருத்தம்தான் ஒரே வழி. வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்காக The Maritime zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி, இந்திய பிரஜை இந்திய அரசின் அனுமதியைப்பெற்று வெளிநாட்டுகப்பல்களைக் கொண்டு இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கலாம். ஆனால், பொதுவாக இந்த வெளிநாட்டு கப்பல்கள்இந்தியருக்கு ஒரு சிறிய தொகையை கமிஷனாக கொடுத்துக்கொண்டு இந்திய மீன்வளம் அனைத்தையும் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச்செல்கின்றது. இந்த கப்பல்களுக்கு நம்முடைய மீனவர்களுக்கு கிடைப்பதைவிடவும் மிகக்குறைந்த விலைவில் டீசல் வேறு கிடைக்கின்றது. கடந்த 2015ம் வருடம் வரை 800 வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. [வள்ளவிளை விசைபடகுகள் மட்டும் கொச்சி துறைமுகத்திலிந்து ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு லட்சம் லிட்டர் டீசலை எந்தவித சலுகை விலையுமின்றி வாங்குகின்றார்கள் என்று நண்பர் சொல்கின்றார். இந்த டீசலுக்கு சாலைவரியும் கொடுக்கின்றார்களாம். எப்படியெல்லாம் மீனவர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள் பாருங்கள்!]

அதைப்போல வெளிநாட்டுக்கப்பல்கள் பயன்படுத்துவது இழுவைமடிகளை. இதனால், பவளப்பாறைகளும் மீன்குஞ்சுகளுக்கும் அழிந்து கடல்வளத்தை ஒட்டுமொத்தமாக சூறையாடுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக நமது ஆழ்கடல் மீனவர்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கின்றார்கள். எனவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக இருப்பதாலும், வெளிநாட்டு கப்பல்களுக்கான உரிமங்களை நிரந்தரமாக தடைசெய்யவேண்டும். அதற்கு ஒரேவழி, The Maritime zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். அல்லது இந்த வெளிநாட்டுகப்பல்களுக்கு போட்டியாக ஆழ்கடலின் தொலைதூரத்திற்கு, ஆஸ்திரேலியாவரை, எந்தவித நவீன தொலைதொடர்பு வசதிகளுமின்றி சென்றுகொண்டேயிருக்கவேண்டும். ஒருசில சட்டதிருத்தங்களைச்செய்து, 200 நாட்டிகல் மைல்களுக்குள்ளாகவே மீன்வளத்தை பெருக்கி, நம்முடைய ஆழ்கடல் மீனவர்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசாங்கம் கொண்டுவரவேண்டும். இல்லையேல், இழப்புகள் அனைத்தும் மீனவர்களுக்குத்தான். பொருளாதார இழப்புகுறித்து அரசாங்கத்திற்கு கவலையில்லை. அவர்களுக்கு கடனளிக்க உலகவங்கி காத்திருக்கின்றது. மீனவர்களின் உயிர்?

References:

 1. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=173699
 2. http://dahd.nic.in/acts-rules/maritime-zones-india-regulation-fishing-foreign-vessels-act-1981
 3. http://www.downtoearth.org.in/news/how-foreign-vessels-exploit-indias-loopholes-in-fishing-laws–37779
 4. https://www.researchgate.net/publication/301603388_DEEP_SEA_FISHING_POLICIES_IN_INDIA_FROM_1981_TO_2014-_AN_ANALYSIS
 5. http://medcraveonline.com/JAMB/JAMB-05-00112.php
 6. http://www.ndma.gov.in/images/guidelines/cyclones.pdf

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 5

ஒரு இயற்கைப் பேரிடரை தேசியப்பேரிடராக அறிவிப்பதற்கு எந்தவித வரைமுறைகளும் இல்லை. அந்தந்த பேரிடர்களினால் ஏற்படும் பேரழிவு, அதன் தீவிரம், அந்த பேரழிவை சமாளிப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் திறன் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடரை தேசியப் பேரிடாராக அறிவிக்கமுடியுமென்று உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது.

மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இந்திய விவசாத்துறையின் கீழ் இயங்குகின்றது.  கால்நடைகளுக்கான தேசிய பேரிடர் மேலாண்மை திட்டதை தேசிய பேரிடர் மேலாண்மை மையம் மற்றும்  கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையும் இணைந்து கடந்த வருடம் (2016) வெளியிடப்பட்டது. ஆனால் , கடல் மற்றும் மீனவர்களுக்கான தனியான இயற்கை பேரிடர் திட்டங்கள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. இருப்பினும், புயல் மற்றும் காற்று, வெப்பமண்டல சூறாவளிப் புயல்கள் ஆகியவை தேசிய பேரிடர் மேலாண்மையின் கீழ் வருகின்றது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட தேசிய மேலாண்மை திட்டத்தின் படி, சூறாவளியை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்வதற்கான தொழில்நுட்பம், உலக வங்கியின் உதவியுடன் நிறுவப்படும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

தேசிய மேலாண்மை வழிகாட்டுதல்களில் சூறாவளிகளை கையாள்வதுகுறித்து மிகத்தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் முக்கிய அம்சங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவற்றில் சில கீழே:

 1. சூறாவளியை கண்டறிவதற்கான அதிநவீன தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கவேண்டும். [2011ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.]
 2. சூறாவளியை மேற்பாற்வையிடுவதற்கான (probing) ஆகாய விமாங்கள் வேண்டும். சூறாவளியின் மீது ஒரு விமானம் பறந்து பெறப்படும் உண்மையான தரவுகளைக்கொண்டு சூறாவளியின் போக்கை தவறுகளின்றி கணிக்கமுடியும். [2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 3. அதிநவீன தேசிய பேரிடர் தகவல்தொடர்பு உள்கட்டமைப்புகளை, சூறாவளி அபாயம் கொண்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நிறுவவேண்டும். [2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 4. சூறாவளி குறித்த எச்சரிக்கை பரப்புதலின் எல்லையை விரிவுபடுத்தவேண்டும். அதற்காக, DTH வசதியை பயன்படுத்தலாம். இல்லாதபட்சத்தில், கடலோர ரேடியோ நிலையங்களையும், சேட்டலைட் ரேடியோவையும், VHF நெட்வொர்க்கையும் பயன்படுத்தவேண்டும். [2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 5. சூறாவளி முகாம் அமைக்க வேண்டும். கடற்கரையிலிருந்து முகாமிற்குச் செல்வதற்காக அனைத்து பருவகாலத்திற்குமான சாலைவசதிகள் இருக்கவேண்டும். [2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 6. சமூகம் சார்ந்த பேரிடர் மேலாண்மை செயல்பாடுகளை உருவாக்கவேண்டும். 2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
 7. சூறாவளியின் போதான தயார்நிலை, மட்டுப்படுத்தல், பதிலிறுப்பு, மறுவாழ்வு மற்றும் மீட்சி செயல்பாடுகளில் உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பை பெறவேண்டும். [2010ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 8. சூறாவளி பேரிடர் மேலாண்மைக்கான அவசர செயல்பாடுகளின் திட்டத்தை வகுக்க வேண்டும். [2012ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.]
 9. தேசிய பேரிடர் மீட்புப்படை உருவாக்கவேண்டும்.
 10. விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை மீட்புப்பணியில் உடனடியாக ஈடுபடவேண்டும்.
 11. சூறாவளி பேரிடர் மேலாண்மையில் முக்கியமானது, சரியான நேரத்தில் சூறாவளி குறித்த எச்சரிக்கையை செய்வது. அதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவேண்டும். EDUSAT, HAM Radio, DTH, Sattelite Phone, Community Radio, Battery-less Hand Radio and etc
 12. கிராம தகவல் மையங்களை உருவாக்க வேண்டும்.
 13. ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கிராம அறிவு மையங்கள் உருவாக்கவேண்டும்

இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மேற்சொன்னவற்றில் ஒன்றுகூட செயல்படுத்தப்படவில்லை. சூறாவளிக்கான தேசிய மேலாண்மை திட்டம் குறித்து மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. அதற்கான காரணமாக நான் நினைப்பது, தென்மேற்கு கடற்கரை சூறாவளியின் குறைந்த அழிவு ஆபத்து மண்டலமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரையில் பியான் புயலுக்குப்பிறகு ஒக்கி புயல் இரண்டாவது வெப்பமண்டலபுயல். இனியும் தொடர்ந்து தென்மேற்கு கடற்கரையில் ஒக்கி போன்ற வெப்பமண்டல சூறாவளி வீசுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, தென்மேற்கு கடற்கரையை மிக உயர்ந்த அழிவு ஆபத்து மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதைப்போல, ஒக்கி  சூறாவளியின்  உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அப்போதுதான், நிவாரணம், நேரடியாகவும், விரைவாகவும் மீனவர்களுக்கு கிடைக்கும்.

1. http://mha1.nic.in/par2013/par2013-pdfs/ls-060813/365.pdf

2. http://nidm.gov.in/pdf/monthly/2016/March.pdf

3. http://ndma.gov.in/images/policyplan/dmplan/National%20Disaster%20Management%20Plan%20May%202016.pdf

4. http://www.ndma.gov.in/images/guidelines/cyclones.pdf

5. http://nidm.gov.in/pdf/guidelines/new/cyclones.pdf