என்துறை – ஒரு கொண்டாட்டம்

என்துறை கூடுகைக்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 7, 2015) மாலை பென்சில்வேனியா மாகாணத்தின் ஈரி நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த விடுதியில் குடும்பத்துடன் வந்துசேர்ந்தோம். என்துறை கூடுகை ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கின்றது. இது எட்டாவது கூடுகை.

என்துறை என்பது கேரளக்கடற்கரையிலிருந்து புலம்பெயர்ந்து அல்லது தற்காலிகமாக வேலைசார்ந்து அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் அமைப்பு. பொதுவாக இதன் அங்கத்தினர்களாக இருப்பது தூத்தூர் Thoothoor பகுதி சார்ந்த மக்கள். தூத்தூர் என்று சொல்லும்போது நீரோடியிலிருந்து இரமன்துறைக்கு இடைப்பட்ட எட்டு ஊர்கள். என்துறை என்பது “எண் துறை”. எண் என்பதை எட்டு என்றும், ஆங்கில எழுத்தில் சொல்லும்போது EN என்றும் சொல்லலாம். E என்பது இரயும்மன்துறையின் முதலெழுத்து. N நீரோடியின் முதலெழுத்து. எனவே என்துறை என்பது தூத்தூர் பகுதிசார்ந்த மக்களின் அமைப்பு என்றும் பொருள் கொள்ளலாம். முதலில் இந்த அமைப்பிற்கு என்துறை என்று பெயர் வைத்த நமது மனம் கவர்ந்த பங்கி அச்சனுக்கு Erayumman Pankyநன்றி சொல்லவேண்டும். என்துறை ஒரு கலாபூர்வமான பெயர்.

எந்த அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி சார்ந்து குறுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே என்துறை என்பதை எட்டு துறைகளின், கடற்கரை ஊர்களின், அமைப்பு என்றோ தூத்தூர் பகுதி மக்களின் அமைப்பு என்றோ சுருக்கி பொருள்கொள்வதில் அர்த்தமில்லை. என்துறை என்பது என்னுடைய கடற்கரை ஊர்.

இப்போது என்துறை என்பதை “கன்னியாகுமாரி கடலோர நண்பர்களின் அமைப்பு” என்று பெயர் மாற்றியதாக அறிந்தேன். இது கொள்கை சார்ந்த முடிவு. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித அபிப்பிராய பேதங்களும் கிடையாது. தூத்தூர் பகுதி என்று மட்டும் சுருங்கி இருப்பதைவிட கன்னியாகுமாரி என்றிருப்பது இன்னும் சிறப்பானது. என்துறையின் நிர்வாகிகளும் கூடுகைக்கு செல்பவர்களும் இணைந்து எடுக்கும் முடிவு. நான் இப்போதுதான் முதல்முறையாக கலந்துகொண்டேன். எனவே என்துறையின் பெயர்மாற்றத்தை விமர்சனம் செய்ய எனக்கு எந்தவிதத்திலும் தார்மீக உரிமையும் கிடையாது. நான் எனது எண்ணவோட்டங்களை வெளிப்படையாக பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

என்துறை அமைப்பு குஜராத்தி அல்லது மலையாளிகளின் அமைப்புபோல் பொருளாதார ரீதியில் வலுவானதல்ல. நமது அமைப்பின் முக்கிய நோக்கமே வருடத்திற்கு ஒருமுறையாவது அமெரிக்காவிலிருக்கும் சொந்தங்களும் நண்பர்களும் ஒன்றாக இணைந்து மகிழ்க்கியாக இருப்பது மட்டுமே. பரந்துவிரிந்த அமெரிக்காவில் அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது நாம் நமது ஊரில் இருப்பதுபோன்ற உணர்வைத் தருகின்றது. பலவருடங்கள் காணாமல் போன நண்பர்களை கண்டடையலாம். கனடாவிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஐவியை Josephivy Vargheese நான் சந்தித்ததுபோல்.

பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போதுகூட, நாம் நம் கடற்கரை கிராமங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். ஆனால் எளிமையான திட்டங்களைக்கூட நேர்மையாக செய்துமுடிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு நம்மிடம் இல்லை என்பதே நான் இதுவரை கண்டது. சிறிய திட்டங்கள் கூட தோல்வியில் முடிந்ததை நான் கண்கூடாக கண்டிருக்கின்றேன். இதன் சிக்கல் என்பதே திட்டங்களை அனைத்து ஊர்களுக்கும் செயல்படுத்தவேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு தனிப்பட்ட ஊர் என்றால் எளிதாக இருக்கும். நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக “வள்ளவிளை வெல்பேர் அசோசியேஷன்” வாயிலாக எந்த சிக்கலுமில்லாமல் சில திட்டங்களை நிறைவேற்றுவதுபோல். ஆனால் என்துறை அமைப்பிற்கு அது எளிதானதல்ல. பணம் விரயமாவதுதான் மிச்சம். எனவே கூடுகை என்று இதன் செயல்பாட்டை குறுக்குவதுதான் சரியானதாக இருக்கும். நமது ஒவ்வொரு டாலரும் நமது கடின உழைப்பில் சேர்ப்பது. அது எந்தவித பலனுமில்லாமல் வீணாவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் வருங்காலத்தில் இது மாறலாம்.

நிலப்பரப்பு என்று பார்க்கும்போது எப்போதும் பொழியூர் கொல்லங்கோடு மற்றும் பருத்தியூரையும் தூத்தூர் பகுதியுடன் இணைத்து சொல்வதே சிறப்பானதாக இருக்கும். நாம் தூத்துர் என்பது தூத்தூர் பெரோனா. பொழியூரும் பருத்தியூரும் தூத்தூர் பெரோனாவின் ஒரு அங்கமாக இல்லாத காரணத்தால் அல்லது அது கேரளத்தில் இருப்பதால் அதை விட்டுவிட முடியாது. அதற்கு நாம் நமது வரலாற்றில் பின்னோக்கி சிறிது செல்லவேண்டும்.

நமக்கு தெரிந்தது சேர சோழ பாண்டியர்களை மட்டும்தான். நான்காவதாக ஒரு சிறிய சாம்ராஜ்யம் இருந்தது. ஆய் சாம்ராஜ்யம். இதன் தலைநகரம் விழிஞ்சம். நமது நிலப்பகுதி இதன் முக்கியமான ஒரு அங்கம். ஆய் சாம்ராஜ்யம் தனியாக செயல்பட்டு வந்தாலும் அதை சேரனோ பாண்டியனோ போரில் தோற்கடித்து அவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். மீண்டும் ஆயர்கள் போரில் வென்று தனியாக ஆட்சி செய்வார்கள். அப்போதிருந்தே நமது நிலப்பரப்பு கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையில் ஒரு இரண்டும்கெட்டானாகத்தான் இருந்துகொண்டிருக்கின்றது. பொழியூர் கேரளாவில். நாம் தமிழ்நாட்டில் இருந்தாலும் நமது பெரோனா கேரளாவில்.

இந்த வருட கூடுகைக்கு பதிமூன்று குடும்பங்கள் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. விடுதிக்கு நாங்கள் வந்து சேரும்போது ஏழுமணி தாண்டியிருந்தது. அப்போது நல்ல வெயில். விடுதியின் முன் பெரிய இரண்டு ஆப்பிள் மரங்கள். நாங்கள் தங்கும் விடுதிக்குப்பக்கத்தில் இன்னொரு பழைய விடுதி பயன்படுத்தப்படாமல் கிடந்தது. அதுற்கு முன்னால் ஏழு எட்டு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. எங்கள் காரையும் வரிசை தவறாமல் நிறுத்திவிட்டு வெளியில் வந்தபோது தங்கும் விடுதியின் வாசலில் இரண்டு தாய்மார்கள் குழந்தைகளோடு நின்றிருந்தார்கள்.

அங்கிருந்து “ஏய், ஈத்தன்” என்று சத்தம் கேட்டதும் நான் “ஹாய், ஈவா” என்று சொல்லிவிட்டு கையசைத்தேன். வெயிலில் பயணம் செய்ததால் நிழலில் நின்றவர்களை என்னால் தெளிவாக காணமுடியவில்லை. அதில் ஈவா இல்லை என்பதால் அவர்கள் உள்ளே சென்று ஈவாவை வெளியில் அனுப்பினார்கள். ஈத்தன் என்பது ஈவா மற்றும் பெனடிக்டின் Benadict Lazer குழந்தையின் பெயர்.

வெளியில் வந்த ஈவா எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அனில் Jesudas Jerome வந்தார். தெரிந்த முகம். அவரது அண்ணன் என்னுடைய நண்பர். அதைப்போல அவருடைய டீச்சர் அக்கா மார்த்தாண்டன்துறை பள்ளிநாட்களிலிருந்து எனக்கு நல்ல பழக்கம். எனவே அனிலுடன் எந்தவித தயக்கமுமில்லாமல் பேசமுடிந்தது. அனில் மட்டுமல்ல இந்த அமைப்பில் இருப்பவர்களில் பலரும் ஏதாவது ஒரு வழியில் சொந்தங்களாகத்தான் இருப்பார்கள்.

அனில் பேசும்போது மட்டும் வார்த்தைகளின் நடுவில், அசையில் ஒரு கிலோ கல்லைக் கட்டி தொங்கவிட்டது போல் ஒரு கனம் இருக்கும். “என்ன?” என்றால் “ன்ன” வெளியில் வர கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆள் ரொம்ப சுறுசுறுப்பு. விடுதியினுள் சென்றதும் பல புதிய முகங்கள். அனைத்தும் பெண்களும் குழந்தைகளும். ஆண்கள் அனைவரும் பொருட்கள் வாங்க வெளியில் சென்றிருந்தார்கள். அனில் மட்டும் அனைவருக்கும் காவலுக்கு இருப்பதாக விளையாட்டாகச் சொன்னார்.

விடுதி பனிக்காலத்தில் செயல்படும் பனிச்சறுக்கு பொழுதுபோக்கிடம். விடுதியின் வெளிப்பக்கம் பனிச்சறுக்குவதற்கு ஏற்றாற்போல் சாய்வாக பச்சைப்புல்வெளியாக விரிந்துகிடந்தது. இதுபோன்ற மரத்தாலான கட்டமைப்பை நான் பார்த்திருக்கின்றேன். ஞாபகத்திற்கு வரவில்லை. விடுதி முழுவதும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய பழைய ஆயுதங்களை பார்வைக்காக வைத்திருந்தார்கள். சுவரில் ஒட்டப்பட்டிருந்த பாடம் செய்யப்பட மானின் தலை பரிதாபமாக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது. ஞாபகம் வந்தது. விடுதி ஆரிகன் மாகாணத்தின் மவுண்ட் ஹூட் டிம்பர் லாட்ஜை நினைவூட்டியது. சிறந்த ஏற்பாடுகளை செய்த அமைப்பின் செயலாளர் மார்ட்டோ கிரேஷியர் Marto Gracious Vincent பாராட்டிற்குரியவர்.

சிறிது நேரத்தில் வெளியில் சென்றிருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். முதலில் ததேயூஸ் Tad Kamalappan வந்தார். என்னுடைய கணித ஆசான் டாக்டர் வில்பிரட் Vilfred Kamalappan சாரின் தம்பி. அவரைத்தொடர்ந்து அஜய் கோஷ், ஜஸ்டின், பெனடிக்ட் என்று வரிசையாக வந்தார்கள். ராபின்சன் Robinson Robert இன்னும் வீட்டிலிருந்தே வரவில்லை. மிகவும் இருட்டிவிட்டது. சிறிது பயமாகத்தான் இருந்தது. காரணம் ரோடு ரோலர்கோஸ்டர் போல இருந்தது. நான் வரும்போது எனது காரை ரோட்டின் நடுவில் பயத்தில் நிறுத்திவிட்டேன். தொடர்ச்சியாக இரண்டு மூன்று ரோலர் கோஸ்டர்கள். ரோடு குத்திட்டு கீழிறங்கி மேலேறியது. அதை தாண்டினால் கரடுமுரடான பாதை. எம்ஜியாரின் “என் கடமை” படமென்று ஞாபகம். அதில் காரின் டிக்கியில் கண்ணை கட்டிக்கொண்டு கிடந்து எம்ஜியார் வழிகாட்டுவாரே, அதுபோன்ற பாதை. ஆனாலும் ராபின்சன் தப்பி வந்துவிட்டான்.

இரவு வெகுநேரம் தாண்டி டோமியும் குடும்பமும் வந்து சேர்ந்தது. ததேயுஸ் மற்றும் டோமி Tomy Rhymond இருவரும் எங்கள் ஊர்களிலிருந்து முதன் முதலில் சாப்ட்வேர் வேலைக்காக அமெரிக்காவிற்கு வந்தவர்கள். இதே காலகட்டத்தில் (1996) ஐவியும் துபாயில் வேலையிலிருந்தான். வெளிநாடுகளில் நாங்களும் வேலை செய்யலாம் என்று நம்பிக்கையூட்டியவர்கள். எங்களின் வழிகாட்டிகள். இரவில் தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் Benjamine Franklin Leon உரையைத்தொடந்து அனைவரும் குடும்பம் குடும்பமாக தங்களை அறிமுகப்படுத்திகொண்டார்கள். அடுத்தநாள் ப்ரெஸ்க்யூ ஐலண்ட் பார்க்கில் செல்வதாக தீர்மானம்.

சனிக்கிழமை ப்ரெஸ்க்யூ ஐலண்ட் பார்கில் சென்று சேர மதியம் ஆகிவிட்டது. பலருக்கும் அங்கிருந்த எட்டு ஏரிக்கரைகளில் எந்த கரையில் செல்வதென்று சிக்கல். முடிவில் ஆறு என்று முடிவானது. ஆறு என்றால் ஈரி ஏரியின் ஆறாவது கரை.

கடலில் குளிக்கும் உற்சாகத்தை சொல்லவா வேண்டும். தண்ணீர் மட்டும் உப்புகரிக்கவில்லை. நான் செல்லும்போது செக்யூரிட்டி கார்டு விசிலடித்துக்கொண்டிருந்தார். நமது ஆட்கள் அபாய எல்லையை தாண்டிவிட்டார்களாம். தொடர்ந்து எல்லை தாண்டல்தான். அவர் விசில் ஊதுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு சாப்பாடு, சிறிது கிரிக்கெட், குளியல், கைப்பந்தாட்டம், தொடர்ந்து குளியல். ததேயுஸும் அனிலும் அவர்களின் கைகளை குறுக்காக பிடித்திருந்தார்கள். நான் அவர்களின் கைகளில் மீது எனது வயிறு படும்படி சாடியதும் என்னை மறித்துப்போட்டார்கள். நல்ல டைவ். ததேயூஸ் சிறந்த கால்பந்தாட்ட வீரர்.

மாலையில் விடுதிக்குச்சென்றதும் மீண்டும் கைப்பந்து விளையாட்டு. நான் டென்னிஸ் செர்வ் போல் கைப்பந்தை செர்வ் செய்தேன். மார்ட்டோ கிரேஷியஸ் சிறந்த டென்னிஸ் வீரரென்று அப்போது எனக்கு தெரியாது. நானடித்த பந்து முதலில் வலையை கடக்கவில்லை. காரணம், என்னை குழியில் நிறுத்தியிருந்தார்கள் பாவிகள். சிறிது நேரத்தில் படம் எடுக்க என்னை தேடிவந்தார்கள். விளையாட்டை விட்டுச்செல்ல விருப்பமில்லை. அங்கு சென்றபோது, விடுதியின் வெளியில் ஆப்பிள் மரத்தின் பக்கத்தில் க்ரில் செய்வதற்கு அடுப்பில் கரித்துண்டங்கள் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொரு இடத்தில் ஒரு பெரிய வட்டச் சட்டியில் தீ எரியவிடப்பட்டிருந்தது. அதில் சிறுவர்கள் மாஷ்மெல்லோவை நீண்ட கம்பியில் குத்தி தீயில் சூடாக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வைனும் கிழங்கும் மீன் கறியும் கிரில் செய்த சிக்கனும் சாப்பிட்டோம். சுவையான உணவை சமைத்த அனைவருக்கும் நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.

இரவில் தீச்சட்டியை ஆப்பிள் மரத்தின் பக்கத்தில் வைத்து அதைச்சுற்றி அனைவரும் உட்கார்ந்திருந்தோம். ததேயூஸ் “ஒவ்வொரு பூக்களுமே” பாடலை அழகாக பாடினார். ராபின்சன் மலையாளப்பாடல் பாடும்போது லயத்தில் அவனையறியாமல் கைவிரல்களால் காற்றில் அந்த பாடலை எழுதிக்கொண்டிருந்தான். கடைசியில் கையில் மை தீர்ந்தபோது பாடலை நிறுத்தினான். சசிகுமார், பிராங்கிளின் மற்றும் ஐவியின் மகன்கள் கையை தரையில் ஊன்றி இரண்டு காலையும் சுற்றிச்சுற்றி ஆடினார்கள். சசிகுமார் சிறந்த பூப்பந்து விளையாட்டு வீரர். இருபது வருடங்களுக்கு முன்பு எங்கள் அமைப்பு நடத்திய பூப்பந்து விளையாட்டில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சசிகுமாரும் அவரது அண்ணனும் வென்றார்கள். அனிலின் மகள் “லெட் இட் கோ” ப்ரோசன் படப்பாடலை பாடி நடனமாடினாள். பெனடிக்டின் மகன் பைபிள் கதையொன்று சொன்னான். சிறுவர் பட்டாளம் முழுவதும் கொண்டாட்டத்தின் உச்சத்திலிருந்தார்கள்.

அஜய் கோஷ் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “ஏசியன் ஏஜ்” பத்திரிகையின் பொறுப்பாசிரியர். அவரது வீட்டுக்கு சென்றபோது படிப்பதற்கு கொடுத்த இரண்டு பத்திரிகைகளை மிகவும் பத்திரமாக வைத்திருக்கின்றேன்.

முடிவில் ஜஸ்டின் மோசஸ் பைபிள் நாடகத்தை மோனோ ஆக்டாக “நான் மோசஸ்” என்று பாடி நடித்துக்காட்டினார். ஜஸ்டின் Thomas Justin நமது கடற்கரையின் முதல் ஐஐடியன். அடுத்த தலைமுறை ஐஐடியன் நண்பர் சாபு Sabu Nicholas இல்லையென்றால் ஐஐடி என்ற கல்வி நிறுவனம் இருப்பதென்பதே நமக்கு தெரியாமல் போயிருக்கும். ஜஸ்டின் நடித்துக்காட்டிய மோசஸ் நாடகம் மிகச்சிறந்த குறியீடு. நாம் அனைவரும் மோசஸ்தான். இஸ்ரவேலின் தேர்ந்தெடுத்த மக்களை வழிநடத்திச்சென்ற மோசஸ் போல் நாமும் சிறந்த தாய் தந்தையராக இருந்து நமது குடும்பங்களை வழிநடத்திகொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு அமைப்பாக நமது சமுதாயத்திற்கு நம்முடைய பங்களிப்பென்ன? என்னும் கேள்வி நமக்கு எழாமலில்லை. குறைந்த பட்சம் உயர்கல்விக்கான வழிகாட்டுதலையாவது செய்யவேண்டும்.

கடற்கரைகளிலிருந்து டோஃபல் மற்றும் கேட் நுழைவுத்தேர்வுகள் எழுதி வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகமிகக்குறைவு. ஐஐடி போன்ற உயர்கல்விக்கு செல்பவர்களும் மிகவும் குறைவு. நமது கவனத்தை சிறிது இதில் செலுத்துவதில் தவறில்லை. இதற்கு புனித யூதா கல்லூரியும் பொறுப்பேற்கவேண்டும். கல்லூரி நிர்வாகம் தமது கல்வியின் தரம் என்னவென்பதை சிறிது சுயபரிசோதனை செய்யவேண்டும்.

இரவு நெடுநேரம் வரை “கழுதை” சீட்டுவிளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். நானும் அனிலும் மட்டும் தோற்று தலையில் தொப்பி ஏற்றவில்லை. பிராங்கிற்கு கடைசிவரை விளையாட்டு பிடி கிடைக்கவில்லை.

அடுத்த நாள் ஞாயிறு வீடு திரும்புவதற்கான பரபரப்பு. அதனிடையில் ஒரு சிறு கூட்டம். அனைவரும் சேர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். புதிய தலைவர் அனில். துணைத்தலைவர் மார்ட்டோ. செயலாளர் செயலாளர் ராபின்சன். பொருளாளர் சுஜாதா ஜஸ்டின் Sujatha Justin. இவர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்கள்.

கூட்டம் முடிந்து அனைவரும் புகைப்படமெடுப்பதில் நெடுநேரம் செலவிட்டோம். பிரிந்து செல்ல மனமில்லை. அனைவரும் சென்றபிறகு நானும் ராபின்சனும் எங்கள் கார்களில் குடும்பங்களுடன் கிளம்பினோம். எங்களுக்குப்பின்னால் விடுதி பேச்சரவமற்று காட்டினுள் தனியாக ஆப்பிள் மர நிழலில் ஒரு யானைபோல் படுத்திருந்தது. எங்களுக்கு முன் செம்மண் பாதை நீண்டு வளைந்து சென்றது. வீட்டை அடைய இன்னும் ஏழு மணி நேரம் பயணம் செல்ல வேண்டும். அடுத்த முறை பத்து மணிநேர தொலைவென்றாலும் தயங்காமல் வரலாம்.

அன்னியப்படும் கடற்கரைகள் 1

உலகின் முதல் புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின்மீது அமெரிக்காவால் போடப்பட்டது. இந்த அணுகுண்டிற்கு தேவையான 6.2கிலோ புளூட்டோனியம் வாசிங்டன் மாகாணத்தின் ஹான்போர்ட் என்னும் நகரிலிருள்ள அணுவுலையிலிருந்து தயாரிக்கப்பட்டது.

ஹான்போர்ட் அணுவுலை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும்போது சில அடிப்படைகள் கடைபிடிக்கப்பட்டன. அதில் முக்கியமாக அணுவுலைக்கான இடத்தில் 1000-க்கும் அதிகமான மக்கள் இருக்கக்கூடாது. விவசாயம் நடைபெறாத பகுதியாக இருக்கவேண்டும். அணுவுலை 1000-ற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்திலிருந்து குறைந்தபட்சம் 20-மைல் தொலைவில் இருக்கவேண்டும். பக்கத்து நாட்டிலிருந்து குறைந்தது 200-மைல் தொலைவிற்குள் இருக்கவேண்டும். வருடம் முழுக்க அபரிமிதமான தண்ணீரும் மின்சாரமும் இருக்க வேண்டும்.

1943-ம் வருடம் ஹான்போர்டு அணுவுலை கட்டுவதற்கு முன்பு ஹான்போடு நகரில் மிகவும் குறைவான மக்களே வசித்திருந்தனர். அதற்கு அடுத்த சிறு நகரங்களான பாஸ்கோ, கென்னிவிக் மற்றும் ரிச்லண்ட் 20-மைல் தொலைவிற்கு அப்பாலும் கனடாவிலிருந்து 400-மைல் தொலைவிலும் இருக்கின்றது. அப்போது அங்கே சிறுவிவசாயம் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. இதற்குத்கேவையான மின்சாரம் அப்போதைய உலகின் மிகப்பெரிய அணைக்கட்டான க்ராண்ட் கூலி-யிலிருந்து பெறப்பட்டது. எனவே கொலம்பியா நதிக்கரையில் இருந்த ஹான்போர்ட் நகரை அணுவுலை கட்டுவதற்காக தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை.

பியர்ள் ஹார்பர் தாக்குதலுக்குபிறகு அமெரிக்கா இரண்டாம் உலக்கப்போரில் தன்னையும் இணைத்துக்கொண்டது. உலகப்போர் உசத்திலிருந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹான்போர்ட் நகரிலிருந்து மக்களை பக்கத்து நகரான ரிச்லாண்டிற்கு ஒரே இரவில் அப்புறப்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்கவில்லை.

மூன்று நதிகள் இணையும் முக்கியமான பகுதியான ஹான்போர்ட் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்த்துவந்த மீன்பிடிப்பத்தை முக்கியத்தொழிலாகக்கொண்ட பழங்குடி மக்கள் ரிசர்வடு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள்.

ஒருவருடத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஹார்ன்போர்டின் முதல் அணுவுலை இரண்டே மாதங்களில் இயற்கையாக அபரிமிதமாகக் கிடைக்கும் யுரேனியம் உலோகத்தாதுவிலிருந்து அணுகுண்டிற்குத்தேவையான, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உயர் கதிரியக்கத் தாதுவான புளூட்டோனியம்-239 -ஐ உற்பத்தி செய்யத்துவங்கியது.

இருபது வருட உற்பத்திக்குப்பிறகு 1964-லிருது படிப்படியாக ஏழுவருடங்களில் ஹான்போர்ட் சைற்றிலிருந்த எட்டு அணுவுலைகளின் பயன்பாடுகளும் நிறுத்தப்பட்டன. அதன் கடைசி அணுவுலை 1981-ல் பயன்பாட்டை முடித்துக்கொண்டது. ஹான்போர்ட் அணுவுலைகளிலிருந்து மொத்தம் 64 மெட்ரிக் டன் புளூட்டோனியம் தயாரிக்கப்பட்டது. அணுவுலைகள் செயல்பாட்டில் இருந்தபோது அணுலையை கொலம்பியாநதி நீரினால் குளிர்வித்து அந்த நீரை ஆறுமணிநேரம் தேக்கிவைத்து மீண்டும் அதை கொலம்பியா நதியில் கலக்கப்பட்டது. இந்த ஆறுமணிநேரத்தில் அணுவுலையிலிருந்து வெளியான கதிரியக்க தனிமங்களின் வீரியம் குறைந்தது. சில தனிமங்கள் முழுமையாக இல்லாமலாகியது. ஆனால் நீண்ட அரை ஆயுள் கொண்ட தனிமங்கள் கதிரியக்க சக்தியுடன் மீண்டும் ஆறில் கலந்தது.

இப்போது ஹான்போர்ட்-ல் நடப்பது சுத்திகரிப்பு வேலைகள் மட்டும். சுமார் 170 ஆழ்கிணறுகளில் உயர்கதிரியக்கமுள்ள கழிவுநீர் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றிலிருந்து கதிரியக்க கழிவுநீர் கசிந்ததாக பலமுறை செய்திகள் வந்தது. பலமுறை கழிவுநீர் கொலம்பியா ஆற்றில் கலந்து பல மைல் தூரத்திற்கு கதிரியக்கம் இருந்ததாகவும், கொலம்பியா ஆற்றில் அதிகமாகக்கிடைக்கும் சால்மன் மீன்கள் கதிரியக்கத்தால் பாதிக்கட்டதாக செய்திகள் பரவி அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. இந்த கதிரியக்கக்கழிவுகளால் அதிகமும் பாதித்தது ஆற்று ஓரத்தில் வசித்துவந்த பழங்குடிகள்தான்.

இப்போது அணுவுலைக்கழிவுகளை சுத்தப்படுத்துவதற்காக வருடத்திற்கு அரசாங்கம் செலவிடும் தொகை தோராயமாக 2பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பன்னிரெண்டாயிரம் கோடிகள். கூடங்குளம் அணுவுலை கட்டுவதற்கான தொகை. கூடன்குளம் அணுவுலைகள் கட்டுவதற்காக நாம் செலவிட்ட மொத்ததொகையை அமெரிக்க அரசு ஹான்போர்ட் சைற்றை தூய்மைப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் செலவிடுகின்றது. காற்று வழியாகவும் ஆறுவழியாகவும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலகோடி ரூபாய் நஷ்டஈடாகவும் பெற்றார்கள்.

நான் சுமார் ஐந்து வருடங்கள் ரிச்லாண்டில் வசித்திருந்தேன். அப்போது நான் பக்கத்து நகரான கென்னிவிக்கில், அணுவின் நியூக்கிளியஸிலிருந்து எலெக்ட்ரானை வெளியேற்றி டிஜிற்றல் பல்ஸ் டிடக்டர் உதவியுடன் அந்த அணுவின் தன்மையை ஆய்வு செய்ய உதவும் கருவியை தயாரிக்கும் கம்பெனியில் வேலைசெய்தேன். இந்த கருவியைக்கொண்டு உலோகக்கலவைகளின் சேர்மானங்களையும் அவற்றின் சதவிகிதங்களையும் எளிதில் கண்டறியலாம். ஒரு ஓவியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்ததென்பதை அந்த பெயின்றில் பயன்படுத்தியிருக்கும் உலோகத்தை கொண்டு கண்டறியலாம். இதைக்கொண்டு நமது இந்திய கலைச்சிற்பங்கள் எந்த நூற்றாண்டைச்சார்த்ததென்பதை எளிதில் துல்லியமாக கண்டறியலாம். ஆனால் இந்தியாவில் இந்த கருவியை போலி தங்கநகைகளை கண்டறிவதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்று சொல்லப்பட்டது.

அணுவிலிருந்து எலெக்ட்ரானை வெளியேற்ற மிகச்சிறிய அளவு, ஸ்மோக் டிடெக்டர் வெளிவிடும் கதிரியக்கத்திற்கும் குறைவான அளவு, எக்ஸ்-ரே கதிகள் பயன்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் வேலைசெய்த அனைவருக்கும் டோசிமீட்டார் என்னும் கருவி பொருத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டோஸ் கதிரியக்கம் எங்கள் உடம்பில் பெறப்படுகின்றது என்று கணக்கிடப்பட்டு அது அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவானதுதானா என்று உறுதிசெய்யப்பட்டது. அரசு அலுவலர்களால் ஒவ்வொரு வருடமும் கதிரியக்கம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டது.

இப்போது ரிச்லாண்ட் நகரிலும் அங்கிருக்கும் வாஷிங்க்டன் ஸ்டேட் யூனிவெர்சிடியிலும் ஹான்போர்ட் சார்ந்த பல ஆராய்ச்சிகள் நடக்கின்றது. இதில் அதிகமும் நமது இந்தியர்கள் தான். ஹான்போர்டிலிருக்கும் கழிவுகளை கண்ணாடி வில்லைகளாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

என்னுடைய ரிச்லான்ட் வீட்டிலிருந்து கொலம்பியா ஆற்றிற்கு செல்லும்போது ஆற்றை ஒட்டிய பகுதியில் துணியில் சுற்றப்பட்ட தன் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு மிக இளமையான ஒரு பழங்குடி தாய் நிற்பதுபோன்ற ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. அவள் பெயர் சக்கஜேவியா. என்னுடைய பக்கத்துத்தெருவின் பெயரும் அதுதான். என்னுடைய தெருவின் பெயர் மெரிவெதர் அவென்யு. இன்னொரு பக்கத்து தெருவின் பெயர் சார்போன்.

நம்மூர்போல் பெயரிலும் சில குளறுபடிகள் உண்டு. சக்கயேவியா, சக்ககேவியா, சக்கஜேவியா என்பதில் எது சரியென்பதில் இன்னும் தெளிவில்லை. சக்கஜேவியா என்றால் வள்ளம் செலுத்துபவள். ஸ்நேக் ஆறு கொலம்பியா ஆற்றுடன் கலக்கும் இடத்தில் சக்கஜேவியாவின் பெயரில் ஒரு பூங்காவும் இருக்கின்றது.

சக்கஜேவியா வாஷிங்டன் மாகாணத்திற்கு பக்கத்திலிருக்கும் இடாகோ மாகாணத்தில் அகைடியா இனக்குழுவை சார்ந்தவர். அவரது பன்னிரெண்டாவது வயதில் இன்னொரு இனக்குழுவான ஹிடஸ்டாவுடன் நடந்த போரின்போது அவர்களால் பலபெண்களுடன் சக்கஜேவியாவும் கைதியாக வடக்கு டக்கோட்டாவிற்கு கடத்திசெல்லப்பட்டார். அடுத்த வருடம் சார்போன் என்பவருக்கு மனைவியானார்.

1803-ம் வருடம் தாமஸ் ஜெபர்சன் ஜனாதிபதியாக இருந்தபோது, லூசியானா நிலப்பகுதியை ஒரு ஏக்கருக்கு 3 அமெரிக்க நயா பைசா (சென்ட்) வீதம் கொடுத்து 15மில்லியன் டாலருக்கு பிரான்சிடமிருந்து வாங்கியது. அமெரிக்காவின் இந்த மத்திய நிலப்பகுதி பத்து மாகாணங்களை உள்ளடகிய பெரும்பகுதி. இந்திய நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு.

இந்த பகுதியை ஆராய்வதற்காகவும், மிசிசிப்பி ஆற்றுப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவும் ஆற்று வழியாக லூசியானா நிலப்பரப்பை பசிப்பி கடலுடன் இணைக்க முடியுமா என்று அறிவதற்காகவும் லீவிஸ் மெரிவெதர் மற்றும் வில்லியம் கிளார்க் தலைமையில் இராணுவக் குழு ஒன்றை ஜெபர்சன் அமைக்கின்றார்.

இந்தக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி இளைஞர்களை இந்த பயணத்திற்காக தயார்படுத்துகின்றார்கள். லீவிஸும் கிளார்க்கும் சக்கஜேவியா தங்கியிருந்த ஹிடஸ்தா பழங்குடிகளின் பகுதியில் வரும்போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவளின் வயது 15-ற்கும் குறைவு. சக்கஜேவியாவிற்கு சோஷோன் மொழி தெரியுமென்பதால் சக்கஜேவியாவையும் சார்போனையும் மொழிபெயர்ப்பாளராக லீவிஸும் கிளார்க்கும் தங்கள் குழுவில் இணைத்துக்கொள்கின்றனர். சக்கஜேவியா தன் முதல் குழந்தையை பிரசவித்த இரண்டாவது மாதத்தில் குழந்தையை முதுகில் சுமந்து குழுவுடன் பயணத்தை துவங்குகின்றாள்.

ஸ்நேக் ஆறுவழியாக கென்னிவிக் வந்த பயணக்குழு அங்கிருந்து கொலம்பியா நதி வழியாக பசிபிக் கடலை அடைந்தது. ஒரு வருடத்தில் 5000-மைல்களை கடந்திருந்தார்கள். இதன் பிறகு மத்திய மாகாணங்களுக்கு மக்கள் ஆறுவழியாக குடியேறத்துவங்கினார்கள். காடுகளும், கன்னி நிலங்களும், புல்வெளிகளும் நகரங்களாக மாறியது. ஆனால ஆற்றோரங்களில் வசித்த பழங்குடிகள் மட்டும் ரிசர்வ்டு பகுதிகளுக்கு தள்ளப்பட்டார்கள்.

சக்கஜேவியா தனது 25-ம் வயதில் இறந்ததாக ஒரு தியரியும் 96-வது வயதில் இறந்ததாக இன்னொரு தியரியும் இருக்கின்றது.

வரும் வழிகளில் தாமஸ் ஜெபர்சனின் உருவம் பொறிக்கப்பட்ட மெடல்களை சமாதானம் என்னும் பெயரில் கொடுத்துகொண்டே வந்தார்கள். அதில் முக்கியமான ஒருவர் ஒக்லாலா சூஸ்.

நான் ஐந்து நாள் பயணமாக அமெரிக்காவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைக்கு எனது காரில் பயணம் செய்தேன். செல்லும் வழியில் மவுண்ட் ரஷ்மோர் இருக்கின்றது. இந்த மலையில்தான் ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவத்தை செதுக்கி வைத்திருக்கின்றார்கள். அங்கே என்னை கவர்ந்தது ஐந்து ஜனாதிபதிகளின் சிலைகளைவிட ஒரு ஒற்றைவரி குறிப்பு. அது “எங்கள் செவ்விந்தியர்களிலும் மாவீரர்கள் உண்டு என்று நானும் என் சக தளபதிகளும் வெள்ளையர்களுக்கு சொல்லவிரும்புகின்றோம்.” என்று மலையில் சிற்பம் செதுக்கும் நிபுணர் கோர்சாக் சியோல்கோவ்ஸ்கியை பார்த்துசொல்லும் ஒக்லாலா இனத்தலைவர் ஹென்றி ஸ்டாண்டிங் பியரின் பேச்சு.

இன்று மவுண்ட் ரஷ்மோருக்கு இணையாக அமெரிக்க இராணுவத்துடன் தன் இனத்திற்காக போரிட்டு மடிந்த கிரேசி ஹார்சின் சிலை ப்ளாக் ஹில்சில் செதுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. அது முடிவடையும்போது உலகின் மிகப்பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கும்.

நான் மேற்சொன்ன அனைத்திற்கும் இன்றைய இந்தியாவின் தென்கடற்கரைகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமையுண்டு.

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு, யுரேனியத்தை நியூட்ரான் கொண்டு பிளக்கும்போது புளூட்டோனியத்துடன் வேறுபல பெயர்தெரியாத, கண்டுபிடிக்க இயலாத கதிரியக்கத்தன்மையுள்ள தனிமங்கள் வெளிப்பட்ட காலகட்டத்தில்கூட, சக மனிதர்களின் பாதுகாப்பை ஹான்போர்ட் நிர்வாகம் உறுதிசெய்து கொண்டபின்னரே அணுவுலைகளை கட்ட ஆரம்பித்தது.

மக்கள் செறிவாக உள்ள பகுதியில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பு, கதிரியக்க கழிவுநீர் எவ்வாறு கடலில் கலக்கின்றது, கதிரியக்கத்தால் மீன்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றாதா குறிப்பாக பாறைகளில் ஒரே இடத்தில் ஒட்டியிருக்கும், நாம் விரும்பி உண்ணும் சிப்பிகளில் கதிரியக்கம் இருக்கின்றதா என்னும் கேள்விகள் காலம் கடந்தவையாகக்கூட இருக்கலாம். வல்லரசுகள் கதிரியக்கக் கழிவுகளை சுத்திகரிக்க விழிபிதுங்கும்போது நாம் எழுபது வருடங்களுக்கு முன்னாள் சென்று அணுவுலை கட்டுவதற்கு முஷ்டியை உயர்த்துகின்றோம்.

அதுபோல் மணவாளக்குறிச்சியில் தோண்டியெடுக்கப்படும் தோரியம் போன்ற கதிரியக்கத்தனிமங்களால் பாதிக்கப்படாத கிராமங்கள் இன்று அபூர்வம். கடற்கரை கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி ஒருவர் இருப்பார். அதற்கு இணையாக இன்று ஒவ்வொரு வீட்டிலும் புற்றுநோயால் பாத்திக்கப்பட்ட ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.

மணவாளக்குறிச்சியில் கனிமவள மண்ணை தோண்டுவதற்கும், பலமைல் தொலைவிலிருக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் என்ன சம்மந்தமென்று நமக்கு கேள்வி எழலாம்.

உறைந்திருக்கும் கனிம மணலை தொண்டிஎடுக்கும்போது ஆழத்திலிருக்கும் கதிர்வீச்சு கனிம மணல்கள் கடலின் நீர்ப்போக்கில் அடித்து செல்லப்பட்டு அனைத்து கடற்கரைகளையும் பாதிக்கின்றது. இப்போது கடற்கரை மீனவர்களால் அனைத்து புற்றுநோய் மருத்துவ மனைகளும் நிரம்பி வழிகின்றது. மணவாளக்குறிச்சியில் கனிம மணல் சுத்திகரிப்பை இந்திய தாது மணல் கம்பெனி செய்கின்றது. கடந்த வருடம் இவர்கள் புற்று நோய் பாதித்த மக்களுக்கு செலவிட்ட தொகை 2லட்சம் ரூபாய். இது ஒரு நபருக்கான தொகையல்ல. புற்றுநோயால் பாதித்த ஒட்டுமொத்த மக்களுக்கும் செலவிட்ட தொகை. இரண்டு லட்சம் ரூபாய்! இந்தியாவில் ஆயுள் காப்பீடு இல்லாத இரண்டு ஜந்துக்கள் மீனும் மீனவனும்தான்.

தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சனை சாராயம். சாராயத்தால் பாதிக்காத கடற்கரை கிராமங்கள் இல்லை. அன்று உடலுழைப்பின் வேதனை தெரியாமலிருக்க சாராயம் குடித்த மீனவர்கள் இன்று புற்றுநோயின் வேதனை தெரியாமலிக்க குடிக்கின்றார்கள். சாராயத்திர்க்கெதிராக போராடும் குரல்கள் புற்று நோயை உருவாக்கும் கனிமமணலுக்கு எதிராகவும் கொஞ்சம் உயரட்டும்.

விழிஞம் பன்னாட்டு துறைமுகம் என்னும் பெயரில் இப்போது புதிதாக ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கின்றது. தாமஸ் ஜெபர்சன் அமைத்த குழுபோல் அதானிகளின் குழு வந்துகொண்டிருக்கின்றது. துறைமுகம் விரிவாக்கத்தில் அனைவருக்கும் உடன்பாடுதான். ஆனால் துறைமுக நிர்வாகம் கையகப்படுத்தும் மீனவர்களின் பட்டா இல்லாத நிலங்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் யார் பொறுப்பு?

விழிஞம் துறைமுகம் விரிவாக்கம் அதோடு முடிந்துவிடாது. துறைமுகத்திற்கு கிழக்கிலிருக்கும் கடற்கரை கிராமங்களில் தற்போது இருப்பதை விட அலைகளும் கடலரிப்பும் அதிகமாகும். அதற்காக எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எப்போதும் மீனவர்களுக்கான சட்டங்களை இயற்றுபவர்கள் மீனவர்களின் மீது அக்கறையில்லாத கடல்குறித்த குறைந்தபட்ச அறிவில்லாத உயர்குடிகளாகத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் தான் இன்று மீனவர்களின் தலைவிதியை தங்கள் விரலிடுக்குகளில் குத்திப்பிடித்திருக்கின்றார்கள்.

சுனாமியால் பாதித்த மக்களுக்கு 45-ஆயிரம் பெறுமானமுள்ள பொருட்கள் இனாமாக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. மீனவர்கள் பொருட்கள் வேண்டாம் காசாக தந்தால் போதும் என்று சொன்னபோது மீனவர்களுக்களுக்கு எப்போதும் பேராசைதான் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அரசாங்கம் கொடுத்த பொருட்கள் என்னவென்றால் மீன் பிடிப்பதற்காக ஒருகிலோ வலை, பிடித்த மீனை கரையில் கொண்டுவருவதற்கு ஒரு ஐஸ் பெட்டி, கரையில் கொண்டுவந்த மீனை சந்தையில் கொண்டுசெல்ல ஒரு சைக்கிள், சந்தையிலிருந்து திரும்பி வரும் போது இருட்டில் பயன்படுத்த ஒரு டார்ச் லைட். இதில் லாபமும் பேராசையும் யாருக்கென்பது சிறு குழந்தைக்கும் புரியும்.

இதை செயல்படுத்த கண்டிப்பாக நமக்கு ஐ எ எஸ் மூளைகள்தான் வேண்டும். மீனவனுக்கு பேராசை கொஞ்சம் அதிகம்தான். இப்போதெல்லாம் சைக்கிள்களுக்கு டைனமோ கிடையாதா? மீன்விற்பனை செய்யும் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியாக ஜீன்ஸ் பேன்ட் ஒன்றும் கொடுத்திருக்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயன்பட்டிருக்கும். மொத்தத்தில் மீனவர்களுக்கு மிஞ்சியது சைக்கிள் மட்டும்தான். ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொருவலையுண்டு. அரசு கொடுத்த வலை நண்டுபிடிக்க பயன்பட்டதாகக் கேள்வி.

சிலமாதங்களுக்கு முன்பு கேரளக்கடர்கரை மீனவர்கள் 12-நாட்டிகல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஜோ டி குரூஸ் அவர்களால் கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் நமது எல்லையை தாண்டாமலிருக்க அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதையே எந்தவித அடிப்படை ஆராய்ச்சியும் செய்யாமல் கேரள கடற்கரைக்கும் 12-நாட்டிகல் மைல்கள் என்று நிர்ணயித்தது. இவர்களுக்கு இந்தியாவின் கடல் எல்லை 12-நாட்டிகல் மைல்கல்தான் போலும்.

ஆனால் இப்போது மீனவர்களின் போராட்டம் காரணமாக 12-நாட்டிகல் மைல்கள் என்பது ரத்துசெய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் அதே சட்டத்தில், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால், புதிதாக 2000 வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவை ரத்து செய்யப்பட்டனவா? மீனவர்களுக்கு 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்கக்கூடாதென்று தடையிருக்கின்றது. இந்தத் தடை வெளி நாட்டு கப்பல்களுக்கும் இருக்கின்றதா? வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் கடற்காவல் படை இவர்களை கண்காணிக்கின்றார்களா?

கடந்த வருடம் இந்தியாவில் கேரளக்கடற்கரை மீனவர்கள் 400-நாட்டிகல் மைல்கள் வரை விரட்டிப்பிடித்த மீன்களின் எடை 40ஆயிரம் டன்கள். வெளி நாட்டுக்கப்பல்களின் கணக்கு 9ஆயிரம் டன்கள். இதில் வெளினாட்டுக்கப்பல்களின் வரி ஏய்ப்பு எத்தனை கோடியென்பது யாருக்குத்தெரியும்? இப்போது நமது மீனவர்கள் இந்த வெளிநாட்டு கப்பல்களுடன் போட்டியிட்டு மீன் பிடிக்கவேண்டும்.

இந்திய மீனவர்களுடன் போட்டியிட்டு நமது மீனை வெளிநாட்டுக் கப்பல்கள் பிடிப்பதற்கு அந்த வெளிநாட்டு கப்பல்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 16ரூபாய் மட்டும் நமது அரசு வசூலிக்கின்றது. நமது மீனவர்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 50ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். இந்திய அரசு யாரை வாழவைக்கின்றது? வெளிநாட்டுக்கப்பல்கள் என்று சொல்லப்படுபவை இந்திய அதிகார வர்கத்தின் பினாமி பெயரால் செயல்படுபவை என்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடலில் பிடிக்கப்படும் மீனைவிட உள்நாட்டில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகம் என்று ஜோ டி குருஸ் அவர்களின் ஆய்வறிக்கை சொல்கின்றது. ஆனால் இறால் பண்ணைகளால் எவ்வளவு விவசாய நிலங்கள் பாழாக்கப்பட்டிருக்கின்றது என்னும் கணக்குகள் சொல்லப்படவில்லை. காட்டை அழித்து விட்டோம், வயல்வெளியிலும் ஏரியிலும் பிளாட்டுகள் கட்டினோம், கடைசியில் கடலை அழித்து மொட்டை மாடியில் மீன் வளர்ப்போம்.

பலவிதங்களில், கடலிலிருந்தும் கரையிலிருந்தும் மீனவர்களை இந்திய அரசு நெருக்கிக்கொண்டே வருகின்றது. இப்படிப்போனால் இன்னும் சில வருடங்களில் மீனவர்களை, சில விசித்திர மிருகங்கள் பறவைகள் போல், ரிசர்வ்டு பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்தியா தொழில் நுட்பத்தில் தன்னிறைவு அடையவேண்டும் என்பதிலும், வல்லரசாக வேண்டுமென்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த கனவை ஏழை எளிய மீனவ மக்களின் பிணங்களின்மீது கட்டியெழுப்புவது அராஜகம்.

 

நாள்: ஆகஸ்டு 3, 2015