சார்கள்

சார்கள் (சிறுகதை)

*

“திலீபு, இனியும் எனக்கு நடக்க முடியாலும்” மூச்சிரைக்க ஒவ்வொரு வார்த்தையாக பர்னாந்து சொன்னார். 

“ஒரு இன்கம் சர்ட்டிபிகேட் வாங்க இத்ற கஷ்டமா? அவன் அவனுக்க தோனியாசமும் காட்டிண்டு காலேஜுக்கு போயாச்சு. நான் கெடந்து சாவணும்” பர்னாந்திற்கு மூச்சு முட்டியது. நடக்க முடியவில்லை.

“கொறச்சு நேரம் இதில இரியுமி.” குழித்துறை கோர்ட்டிலிருந்து இடைவழியாக பஸ்டாப்புக்கு வரும் வழியிலிருந்த வயலோர தென்னைமர நிழலில் உடகார்ந்தார்கள். ஒவ்வொரு இருமலுக்கும் கபம் வெளிவந்தது. துப்பிக்கொண்டிருந்தார்.

“மருந்து இருக்குதா?”

“தின்னாச்சு. ஒரு நாளு ரெண்டுதான்.” சுவாசம் முட்டியது. வில்லேஜு ஆப்பீசர் எழுதி கையெழுத்திட்ட படிவத்தை கூர்ந்து நோக்கினார். 

“ஏன், மத்தவ, அந்த தாசில்சாறு இதில ஒப்பு தருதாளில்ல.”

“அது நாம அவளுக்கு வல்லதும் கொடுக்கணும்”

“நான் எனக்க கையிலிருந்த காசெல்லாம் அவளுக்கு நீட்டினேன். தூக்கி எறிஞ்சா” இருமல் சற்று அடங்கியிருந்தது.

“அந்த பேப்பற தருமி.” திலீப் அதை வாங்கி பார்த்தான். “இதில செவப்பு மசிவெச்சு ஏதோ எளுதியிருக்கு. நம்ம  படிச்சவன் வல்லதும் குண்டாமண்டித்தனம் காட்டிக்காணும்”

“ஒள்ளதுதான் பிள்ள. அவன் இந்த வில்லேஜாப்பீசறுக்கிட்ட செறிய தர்க்கமாம். இவனிட்ட பைசா கேட்டானாம். இவன் ஒரு நயா பைசா தரமாட்டேன்னு சொல்லியிருக்கு”

“பிச்சக்காறனுக்கு வல்லதும் கொடுத்து விடவேண்டியது. நாம இப்படி அலயவேண்டிய தேவயில்ல.”

“இனியும் இருந்தா பத்தாது. நாம நடக்கலாம். அவ காஞ்சாம்பொறத்தணும் எடம் கடருததுக்கொள்ள போயி பிடிச்சலாம். பைசா கொடுத்து சர்ட்டிபிகேட்டு வாங்கண்டாணு அவன் சொன்னான். அந்த பைசாச்சு மருந்துவாங்கி தின்னச்சொன்னான்.”

இருவரும் நடந்தார்கள். தாசில்தார் கையொப்பமிடாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருந்தார். காரணம் எதுவென்று தெரியவில்லை. மகனுக்கு இன்னும் ஒருவாரத்தில் இன்கம் சர்டிபிகேட் கல்லூரியில் கொடுத்தால்தான் பீஸ் கன்சஷன் கிடைக்கும். குழித்துறையில் வந்திருந்த தாசில்தார் காஞ்சாம்புறம் ரேஷன்கடையில் அவசர வேலையிருப்பதாக அங்கு வரச்சொல்லியிருந்தாள்.

“நீங்க இந்த ரோகத்துக்கு ஆஸ்பத்திரியில போகவேண்டியதுதானே”

“இல்ல பிள்ள, நான் போகாத ஆசுபத்திரியில்ல. சாரயத்த நிறுத்தி இருவது கொல்லம் ஆவுது. தீந்தபாடில்ல”

“நாட்டுவைச்சியர பாத்திருக்கலாம்”

“அது மட்டுந்தான் கொறவு. ஒரு தடவ ஒரு வைச்சியன பக்கப்போனேன்.” வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு தொடர்ந்தார். “அப்பத்தான், வைச்சியன் வடிச்செடுத்த எண்ணைய குடிச்சத்தந்தான். இனியும் இந்த ரோகம் இருந்த எடம் தெரியாதெண்ணு சொன்னான். அப்பத்தான் எனக்கு உயிரு வந்தது.”

“அது எந்த எண்ண? வெளி மார்க்கட்டில கிட்டுமா?”

“அதுவா? நானும் வைச்சியருக்ககிட்ட கேட்டேன். எண்ண உருக்குத எடத்தில என்னய கூட்டிப்போயி காட்டினான்” சிறிது நேரம் பர்னாந்து பேசவில்லை. “ஒரு சாக்கு நெறய ஏதோ செடிவேரு மாதிரி இருந்தது. அதக்கொண்டு கொதிச்சித எண்ணயில கொண்டு தட்டினான்.”

“வேரு தானா?”

“வேரா? நான் அவிடத்தான் சர்த்திச்சு தொளிச்சு போட்டேன். எரப்பாம்பு”

“எரப்பாம்பா?”

“ஓம் பிள்ள, எரப்பாம்பு. வெளியில் சாக்கு நெறய பொங்கிளி தள்ளி, மெணஞ்சிண்டு கெடந்தது. அத எண்ணியில வதக்கி, அரிச்செடுத்து குப்பியில பிடிச்செடுத்தான்”

“ரோகம் தீந்ததா?”

“பின்னல்லாம. எரப்பாம்புக்க ரோகம் தீந்தது. எனக்கு கூடிப்போச்சு” என்று சொன்னபோது மூச்சு முட்டியது. சிறிது நேரம் இருவரும் அம்மன் கோயில் மர நிழலில் நின்றார்கள்.

குழித்துறை பஸ் டாப் வந்து காஞ்சாம்புறம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். பர்னாந்திற்கு உட்கார முடியவில்லை. வியர்த்துக்கொட்டியது. மூச்சு வானக்கும் மண்ணுக்கும் மேலும் கீழுமாக இழுத்தது. “இனியும் கொறச்சு தூரம்தான்” திலீப் ஆறுதல் சொன்னான். வண்டியில் இருந்தவர்கள் தங்கள் மூச்சை மெதுவாகவிட்டார்கள். அவர்களுக்கும் பரவுமென்ற சந்தேகம். “இதென்ன இளுப்பு. வல்லதும் ஆசுபத்திரியில எறக்கி விடடே”  வண்டியிலிருந்த ஒரு பயில்வான் பக்கிறி சொன்னான்.

“லேய், வாயணும் ஒண்ணும் வேண்டாத இரியில அவிட. நிங்கம்மைக்க வண்டி. நிக்க நொய்ய எடுத்துக்களயுவேன், சும்மா இருந்துக்கோ. இனி இந்த வண்டியில ஒரு மூச்சு மட்டுந்தான் கேக்கணும். ரெண்டாமத்த மூச்சுச்சத்தம் எனக்கு கேட்டா, அந்த மூச்ச அடச்சுப்போடுவேன், அடச்சு.” திலீப் சத்தமிட்டுச்சொன்னான். வண்டி பயத்தில் பம்மிச்சென்றது. “ஆசுபத்திரியும் மயிரும். மத்தவள எங்க வீட்டில வந்து சைனுபோடச்சொல்லு, நாங்க ஆசுபத்திரியில போறோம்”. வண்டி தன் கடைசி மூச்சை காஞ்சாம்புறத்தில் நிறுத்தியது.

வண்டியிலிருந்து இறங்கி அவள் சொன்ன இடத்திற்கு நடந்தார்கள். பர்னாந்துக்கு மூச்சு முட்டியது. அவரால் இருமவும் முடியவில்லை. தீலீபின் தோளைப்பிடித்து நடந்தார். “நீங்க இங்க இரியுமி. நான் அவள பாத்திட்டு வாறேன்”

“இல்ல பிள்ள, நானும் வாறேன். நான் படுத பாட அவ பாக்கணும்”

ரேஷன் கடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்திருந்தாள். இருவரும் அவள் முன் சென்று நின்றார்கள். “ஏய் சயரோகம், வெளியில போ நில்லுடே. உயிர எடுக்காம.”

“மேடம், ஒரு சைனு தந்தா உங்கள எதுக்கு தொந்தரவு பண்ணப்போறோம்”

“நீ யாருடே. உங்க அண்ணனா ததேயூஸ்? அவனுக்க திமிருக்கு எனக்க கையிலிருந்து ஒண்ணும் கெடைக்காது. நீங்க வீட்டுக்கு போங்க”

“எனக்க பிரண்டு மேடம், நாங்க பஞ்சோரு பாவங்க. இதில போட்டிருக்க மாசம் 1000 ரூபாயும் எங்களுக்கு வருமானமா கிட்டாது. இந்த சர்ட்டிபிகேட்டு தருததில உங்களுக்கு என்ன பிரச்சன?”

“அவன் எங்க படிக்கான்?”

“செயின்ட் சேவியர் காலேஜ், திருநெல்வேலி.”

“வல்லிய காலேஜ். அங்க படிக்க இந்த சர்ட்டிபிகேட்டு ஒண்ணும் தேவயில்ல. அவிங்களுக்கு தெரியும். அங்க படிக்க எல்லாரும் உங்கள மாதிரியான ஆளுங்கதான். இந்த காலத்தில 1000 ரூபாவ வெச்சு ஜீவிக்க முடியுமா?”

“அப்போ நீங்க தரமாட்டீங்க?” என்று திலீப் கேட்டபோது பர்னாந்து சுவாசமுட்டலுடன் குந்தி உட்கார்ந்திருந்தார்.

“இல்ல, கனவிலும் நெனச்சு பாக்காதீங்க. வல்லதும் நோய பரப்பாம இங்கிருந்து போங்க. யோவ், அந்தப்பக்கமா போயி எச்சில் துப்பையா.”

இனியும் கெஞ்சி பலனில்லை. இருவரும் அடுத்த பஸ்சிலேறி வீட்டிற்கு வந்தார்கள். இந்த சர்ட்டிபிகேட் கிடைக்கவில்லையென்றால், வீட்டிற்கு திரும்பி வருதாக ததேயூஸ் சொல்லியிருந்தான். ஆனால், அடுத்த கடிதத்தில் ததேயூஸ் இனியும் இந்த சர்ட்டிபிகேட்டிற்கு அலயவேண்டாமென்று சொல்லிவிட்டான். நாட்கள் பிந்திவிட்டது. இனியும் கொடுத்தும் பலனில்லை. அவனுக்கு கல்விக்கட்டணத்திலும் ஹாஸ்டில் பீசிலும் சலுகைகள் அளிக்கப்பட்டதாகச் சொல்லியிருந்தான். 

சில நாட்களுக்குப்பிறகு, தாசில்தாரும் வில்லேஜ் ஆப்பீசரும் இடைப்பாடு ரேஷன் கடையில் வந்திருந்தார்கள். பர்னாந்து கட்டுமரம் கரையிலணைந்து வீட்டில் வந்தபோது, தீலீப் ஓடிவந்தான்.  “பெட்டெந்நு வருமி. மத்த ரெண்டுபேரும் நம்ம ரேசன் கடயில வந்திருக்கு”. 

“பிள்ள, ததேயூசு இந்த சர்ட்டிபிகேட்டு வேணாமெண்ணு சொன்னான். நமக்கு வேண்டாம் பிள்ள. இனியும் எதுக்கு அவனுவள கெஞ்சிக்கொண்டு.”

“அதுக்கில்ல, இது நம்ம உரிமையாக்கும். அவுங்க நமக்கு இத தந்தாவணும். நம்மளமாதிரி எத்ற பாவங்களுக்க வைத்தில அடிச்சிருப்பானுவ. நீங்க அந்த பேப்பற எனக்க கையில தந்தாமதி. மிச்சத்த நான் பாக்குதேன்”

இருவரும் இன்கம் சர்ட்டிபிகேட் படிவத்தை எடுத்துக்கொண்டு விரைந்து சென்றார்கள். ஆபீசர்கள் இருவரும் ரேஷன்கடையினுள் உட்கார்ந்திருந்தார்கள். திலீப் அந்த படிவத்தை அவர்கள் முன்னால் தூக்கி வீசினான். “இந்த ஆளுவள தெரியுமா? இதில சைனு போடாத நீங்க ரெண்டெண்ணமும் வெளியில போவமுடியாது.” என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்து ரேசன்கடை கதவை மூடினான். “ஏய், கதவத்திற” தாசில்தார் சத்தமிட்டாள்.

“ஆத்தியம் சைனப்போடுங்கடே.” என்று திலீப் சொல்லிக்கொண்டு, “எதுக்கும் நீங்க அந்த பக்கெட்டில, அன்னா கெடக்குத சாணாங்கிய கலக்குமி. இந்த ஊப்பிசாறுமார சும்மாவிடப்பணி. இண்ணு இவளுக்கு சாணாங்கி குளியல்தான்.” என்று பர்னாந்திடம் சார்கள் கேட்கும்படியாக சத்தமாகச் சொல்லிவிட்டு, பர்னாந்தையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

ரேஷன்கடையின் உள்ளிருந்து “சார், சார், கதவத்தெறங்க, சார். சைன் போட்டாச்சு, சார்” என்று அவர்கள் இருவரும் வாழ்நாளில் வாங்கிய சார்கள் அனைத்தும் வாய்வழியாக தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.

*

எரப்பாம்பு – மண்புழு

திலேப்பியா

இடைப்பாடு கிராமத்தில் கடற்காற்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. கடலிருக்குமிடம் தெற்கு! சூரியன் உச்சியில் நிலைத்து மெதுவான அதிர்வுகளோடு தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கடலில்குளித்து கரையேறிய சிறுவர்கள் சுடுமணலில் உட்கார்ந்து தொடையிடுக்கில் சுடுமணலை வாரிவாரி வைத்து புதைந்தார்கள். கட்டுமரங்கள் மெதுவாக ஆழ்கடலிலிருந்து கரைநோக்கி உடைந்து சிதறிய கண்ணாடிச் சில்லுகளின்மேல் சேதாரமின்றி வழுவி வந்துகொண்டிருந்தது. சில வள்ளங்களை தலை நிமிர்ந்து மீனவர்கள் கடலில் நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.
ஒருசிறுவன் மயக்கம் தெளிந்து, “லேய், ராயூ வருதாம் பாரு”, என்று கூவியபடி பயந்து கடல் நோக்கி ஓடினான்.
மற்ற சிறுவர்கள் கண்திறப்பதற்க்குள், ராஜு அருகில் வந்துவிட்டிருந்தான். வந்தவன் முகத்திற்கும் ஓடிய சிறுவனின் அலறலுக்கும் எந்தவித சம்மந்தமும் இருக்கவில்லை. ராஜு சிறுவர்களைப் பார்த்து பல்காட்டி சிரித்தான். பல் முழுக்க பச்சைமஞ்சள். ஒரு சிறுவன் வந்தவனை வடக்குப்பக்கம் வந்து உட்காரச்சொல்வதற்கு சைகையால் மன்றாடினான். சிறுவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை. கையால் மூக்கை பொத்திக்கொண்டார்கள்.
ராஜு வந்து உட்கார்ந்ததும், கடற்கரையை ஒட்டியிருந்த முத்தம்மாளின் வீட்டின் முன் நின்றிருந்த தென்னை மரத்தில் உட்கார்ந்திருந்த காக்கை ஒன்று கலவரமாக கரைந்துவிட்டு ஓலை மாறி உட்கார்ந்தது. ஓலையில் கால்வழுக்கியதால் கரைந்து மீண்டும் ஓலை மாறியது.
வீட்டுத்திண்ணையில் நூல்முடித்துக்கொண்டிருந்த முத்தம்மை, காக்கைச் சத்தம்கேட்டு, “யாரு, புதிய விருந்து…?” என்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கடற்காற்று அதற்கேயுரிய வெம்மையோடு மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. ராஜுவைக் கண்டதும், வீட்டுமூலையில் வைத்திருந்த அலுமினிய சருவத்தை சும்மாட்டுத்துணியால் துடைத்துவைத்துவிட்டு, நேற்று சந்தையில் யாருக்காகவோ வாங்கிய ஒரு மாங்காயை சருவத்தில் எடுத்துப்போட்டுவிட்டு, கட்டுமரம் கரைக்கு பக்கத்தில் வருவதை மீண்டும் உறுதிசெய்துகொண்டு அது வரும் திசை நோக்கி, சும்மாட்டுத்துணியை சருவத்தில் போட்டுவிட்டு அதை இடுப்பில் அணைத்துக்கொண்டு நடந்தாள்.
ராஜு கடற்கரையின் எந்தப்பகுதியில் சென்று உட்கார்கின்றானோ அங்கே ஏதேனும் கட்டுமரம் கரையில் அணையவருகின்றது என்று அர்த்தம். கட்டுமரம் இல்லையென்றால் எங்கும் உட்காரமாட்டன். ஒன்று நடந்துகொண்டேயிருப்பான் அல்லது ஆற்றில் சென்று மீன்பிடிப்பான். இப்போதும்கூட தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டி இங்கே வந்து சேர்ந்திருந்தான்.
ராஜு சட்டை போட்டு நான் பார்த்ததில்லை. கறுத்த மிக மெல்லிய தேகம். உடல் முழுக்க வெள்ளை உப்புப் பொருக்கை பரவியிருந்தது. உடுத்தியிருக்கும் ஒரே லுங்கிதான் எப்போதும் அவனது மீன்போட்டுவைக்கும் கூடை.
ஒருசிறுவன் லுங்கியின் “கக்குமடியில்” மீன் இருக்கின்றதா என்று சைகையில் கேட்டான். இல்லையென்று கைமலர்த்தி தலையசைத்துச் சிரித்தபோது ஈறு சிவந்திருந்தது. நேற்றைய மீனின் செதில்கள் லுங்கி முழுக்க ஒட்டியிருந்தது. லுங்கி கறுப்பு மற்றும் மஞ்சளுக்கு இடைப்பட்ட அனைத்து நிறங்களையும் தாங்கி, இனிமேலும் அழுக்கை வாங்கும் திராணி இல்லாமலிருந்தது. கக்குமடியில் மீனில்லையென்றால் கட்டுமரமெதுவும் கரைக்கு வரவில்லை என்று அர்த்தம்.
கட்டுமரங்களின் மீன் விற்பனை செய்வதற்கு முன் தனக்குப் பிடித்தமான மீனை எடுத்துக்கொள்வான். அனைத்து கட்டுமரங்களும் அவனுக்குச் சொந்தமானதல்லவா!
பதின்ம வயது. சிறுவயதில் ராஜூ நன்றாகத்தானிருந்தான். வயது ஏற ஏற அவனில் சில மாற்றங்கள். தண்ணீரைக்கண்டால் அவ்வளவு எரிச்சல். ஆனால் மழையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்றுகொண்டிருப்பான்.
முத்தம்மா சிறுவர்களின் பக்கதில் சென்று, “லேய், ராயு…” என்றழைத்துவிட்டு சருவத்திலிருந்து மாங்காயை எடுத்துக் காட்டினாள். ராஜு “ஓ…” வென்று கத்திவிட்டு மாங்காயைத்தேடி எம்பிக்குதிதான். முத்தம்மை கராறாக, “ஆத்தியம் பல்லுதீட்டு. அப்பந்தான் மாங்காயத் தருவேன்”, என்றாள். ஒரு நாள் முத்தம்மை ராஜுவின் பின்பக்கமாக வந்து அவனது தலையில் கையில் கொண்டுவந்த தேங்காய் எண்ணையை தேய்த்த அன்றிலிருந்து சிறிது நாட்கள் இந்தப் பக்கம் வராமலிருந்தான்.
ராஜுவும் ஆர்வமாக உட்கார்ந்து, உலர்ந்த மணலை நீவி அதற்கு கீழிருந்த ஈரமான வண்டல் மண்ணை எடுத்து வாயில் போட்டு விரலால் பல்தீட்டினான். சிறிது நேரத்தில் வாய் முழுக்க சகதியில்லாத வெத்திலை பாக்கு. துப்பியபோது சிவப்பு நூல் வழிந்தது. கையால் துடைத்துவிட்டு மாங்காயை வாங்கி அதை சாப்பிட்டுக்கொண்டே கட்டுமரம் நோக்கி சிறுவர்களுடன் முத்தம்மையை பின்தொடர்ந்து சென்றான். வேறு சில வியாபாரிகளும் பெண்களும் அணைந்த கட்டுமரத்தின் பக்கதில் கூடினர்.
கட்டுமரத்திலிருந்து விற்பனைக்கு எடுத்துபோட்ட மீனைச் சுற்றி நின்றிருந்தவர்களைத் தள்ளிவிட்டு மீனைத்தேடி முன்னேறியபோது யாரோ ஒருவர் ஈரமணலை அவனது தலையில் வாரிப்போட்டார். அவனது சத்தத்தின் எதிரொலியில் கூட்டம் சற்று சிதறியது. பயத்தில் ஓடிய சிறுவர்களை விரட்டிக்கொண்டு ஓடினான். சிறுவர்கள் சிறிது தூரம் ஓடியதும் கடலில் குதித்தார்கள். சிறுவர்களைப் பார்த்து கோபத்தில் சத்தம் போட்டவனை கடல் அலை தன்னை தரையில் அறைந்து அவனை திருப்பித் திட்டியது. இவனும் விடவில்லை. இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டிருந்தார்காள். கோபம் தலைக்கேறிய அலை முடிவில் இவனது லுங்கியை நனைத்து இழுத்தது. இவன் பயத்தில் கத்திவிட்டு விலகி ஓடினான். கோபத்தின் உச்சியில் கையிலிருந்த மாங்காயை அலையை நோக்கி எறிந்தான். அது லாவகமாக அதனை வாங்கி அதிலிருந்து ரத்தத்தை உறுஞ்சிவிட்டு கரையில் மிச்சத்தை துப்பிவிட்டுச் சென்றது. ராஜுவின் சுயமரியாதை ஒப்புக்கொள்ளாததனால் அதை எடுக்க மனமின்றி மீன் விற்பனை செய்யும் இடத்தை நோக்கி திரும்பி நடந்தான்.
கூட்டதை வந்ததடைந்தபோது மீன் ஏலத்தில் முத்தம்மைக்கு கட்டுப்படியாகும் விலையில் மொத்த மீனும் கிடைக்கும் சாத்தியக்கூறு அதிகமாக இருந்தது. வந்தவன் கூட்டத்தை விலக்கி தனக்கான மீனை எடுத்தபோது “ஒருதரம்….ரெண்டுதரம்….மூணுதரம்” என்று ஏலம் போட்டவர் முத்தம்மை மீன் வாங்கியதான அத்தாட்சியைக் கொடுத்தார்.
ராஜு எடுத்தது ஒரு பெரிய “வேளாக்குட்டி கார” மீன். மொத்த விற்பனைத் தொகையில் ஐந்தில் ஒருபங்கு. “ஐயோ எனக்க செல்ல மோன அதத்தா.” என்று முத்தம்மை கெஞ்சினாள். ராஜுவுக்கு அலையோடுள்ள கோபம் மூக்கின் நுனில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. முத்தம்மையும் மற்றும் சிலரும் அந்த மீனை அவனிடமிருந்து பிடுங்க முயன்றபோது, பக்கதில் நின்ற முத்தம்மையின் இடது விலாவில் தனது வலது உலக்கையை இறக்கினான். முத்தம்மைக்கு முப்பது வருடம் கழிந்து மீண்டும் பிரசவ வலி. மூச்சுமுட்டி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உட்கார்திருந்தாள். கடல் அலை தன் சத்தத்தை பயத்தில் அடக்கியது.
முத்தம்மையின் பக்கத்தில் நின்றிருந்த ராஜு, மீனை அவளிடம் நீட்டியபோது அதை வாங்கிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தாள்.
கடலிலிருந்து ஒரு 200மீட்டர் தள்ளி வடக்குப்பக்கம் அனந்த விக்டோரியா மார்த்தாண்டம் கால்வாய் ஓடுகின்றது. இது மார்த்தாண்டவர்மாவினால் திருவனந்தபுரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் நீர்வழிப்போக்குவரத்திற்காக இருபதாம் நூற்றாண்டின் முடிவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த ஆறு திருவனந்தபுரத்திலிருந்து தேங்காய்ப்பட்டணம் வரை ஓடி பின்னர் தேங்காய்ப்பட்டணத்திலிருந்து கல்வீடுகளுக்கு கீழ் சில மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் வழியாக கன்னியாகுமரிவரை ஓடி உயிர்தப்புகின்றது என்ற நம்பிக்கையுமுண்டு!
எங்களூர் ஆற்றில் சுலோப்பியா என்று நாங்கள் அழைக்கும் திலேப்பியா என்னும் நன்னீர் மீன் அதிகமாக கிடைக்கும்.  முதுகில் முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிருக்கும். இந்த மீனின் பிறப்பிடம் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மீன்பிடித்த கலீலியக்கடல். அப்படியென்றால் கலீலியக்கடல் கடலில்லையா? அங்கிருந்து இந்தமீன் எவ்வாறு, புனித தோமா போல், மலபார் கரையை வந்தடைந்தது? அல்லது இந்தியாவில் இரண்டாவதாக வந்ததாகக் கருதப்படும், தோலுரிக்கப்பட்ட அப்போஸ்தலர் புனித பர்த்தலோமியோ என்னும் நத்தானியேல் கொண்டுவந்ததா? கிறிஸ்து இரண்டு மீனையும் இரண்டு அப்பத்தையும் பதினையாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள் ஒன்று. அந்த இரண்டு மீன்களும் உலர்ந்த அல்லது உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட திலேப்பியாக்கள் தானா? திலேப்பியாவை புனித பீட்டர் மீன் என்பார்கள் சிலர்.
ராஜு முத்தம்மாள் கொடுத்த காசில் சில தூண்டில்கள் மற்றும் கங்கூஸ் என்னும் நைலான் ரோளும் வாங்கிக்கொண்டு மிச்சத்தை தன்னுடன் வந்த சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களையும் கூட்டிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தான். கையில் ஒரு சிரு பிளாஸ்டிக் பையை எடுத்து வைத்துக்கொண்டான்.
போகும் வழியில் அத்துலுவாப்பாவின் சாயக்கடையின் பின்பக்கத்தில் சாக்கடை நீர் தேங்கிய பகுதியில் சென்று ஒரு சிறு கம்பினால் தோண்டி கையினால் நெழியும் மண்புழுவை எடுத்து பையில் போட்டான். ராஜுவின் பையிலிருந்த இடியாப்பத்திற்கு உயிரிருந்தது.
“லேய், மதி. பெண்ணுங்க குளிச்ச வருததுக்க முன்ன போலாம்”, ஒரு சிறுவன் சற்று தள்ளி நின்று ராஜுவிடம் சொன்னான்.
“ங்..ங்க்..” என்று இளித்து சிரித்துவிட்டு எழும்பி கையை உதறிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தான்.
சிறுவர்கள் ஆற்றை வந்தடைந்ததும் ஒரு பெண் கத்தினாள், “லேய், லேய்… போங்கல அங்ஙன. ஆத்திலி மீனிபிடிச்ச வருதானுவ. நிங்க அமமமாரு பெறேஞ்சா?”
திலேப்பியா மீன் குழந்தை பெற்ற பெண்களின் பத்திய உணவில் முக்கியமானதாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ராஜு சிரித்துவிட்டு கத்தினான், “நீ…நீ….பெத்…த.. ஓ….ஓ….”
மார்புக்கு மேல் லுங்கியை தூக்கிக்கட்டிய பெண்கள் சிறுவர்களை தாங்கள் குளிக்கும் துறையிலிருந்து விரட்டியடித்தனர்.
சிறுவர்கள் பெண்கள் குளிக்கும் துறைதாண்டி சிறிது தூரம் நீங்கிச் சென்றனர். பெண்கள் குளிக்கும் பகுதி தாண்டி ஆறு மிக சகதியாக இருந்தது. ஆற்றின் இரண்டு கரையிலும் தென்னைந்தொண்டுகள் பெரிய வலையில் போடப்பட்டு ஊறவைக்கப்பட்டிருந்தது. நன்கு ஊறியபிறகு இதனை அடித்து அதன் நாரை தனியாகப்பிரிது கயிறாக திரிப்பார்கள். இது பலகாலமாக ஒரு குறிப்பிட்ட இனமக்களால் செய்யப்படும் தொழில். இதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.
ஆற்றின் இருபக்கங்களிலும் தென்னை மரங்கள் நெருக்கமாக ஓங்கி வளர்ந்திருந்தது. சூரிய ஒளிக்கீற்றுகள் தென்னையின் இடைவெளி வழியாக ஊடுருவி வந்தது.
சிறுவர்கள் இருந்த பகுதியில் ஆறு கறுப்பாக ஓடியது. அவர்கள் அங்கே உட்கார்ந்து தூண்டிலை நைலான் ரோளின் நுனியில் கட்டி, தூண்டிலில் மண்புழுவை பிய்த்து கொருத்து ஆற்றில் வீசி மீன்பிடிக்கத் தொடிங்கினார்கள். கிடைக்கும் மீன்களை நுனியில் கட்டிட்ட ஈர்க்கிலை மீனின் வாயில் நுழைத்து செவுள்வழியாக கொருத்தெடுத்து மீன்மேல் மீனாக மாலைபோல் ஆக்கிக்கொண்டார்கள். திலேப்பியா மீன் மிகவும் கறுப்பாக வழுவழுப்பாக சேணி நாற்றத்துடனிருந்தது.
இரண்டு மூன்று மாலை மீன்கள் கிடைத்ததும் சிறுவர்கள் அதனை விற்பதற்காக பக்கத்து ஊர் மீன் கடைக்கு எடுத்துச் செல்வதை சந்தையிலிருந்து திரும்பி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முத்தம்மை கண்டாள். ராஜுவைக் காணாமல் திரும்பிப் பார்த்தபோது அவன் தனியாக மீன்பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வேறு யாரும் அவனுடன் இல்லை.
முத்தம்மாள் குளித்து கரையேறியபோது சில தவளைகள் சத்தமிட்டு உயிருக்குப் பயந்து சற்று தள்ளி கரையேறியது.
முத்தம்மாள் துணிமாற்றி சுத்தமாகக் கழுவிய ஒற்றைக்குரிசு வரைந்த சருவத்தை இடுப்பில் வைத்து நடக்கத் துவங்கியபோது ராஜுவின் “ம்..ம்ம்…மா…” என்ற அலறல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜு தேள் கொட்டியது போல், அலறலிட்டு ஓடினான். ஓடியவேகத்தில் தென்னையில் இடித்து விழுந்துவிட்டு மீண்டும் மீண்டும் எழும்பி உடலை வளைத்து ஓடினான். எம்பி எம்பிக் குதித்தான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் ஓடி தென்னையில் இடித்து கீழே விழுந்து மண்புழுபோல் ஊர்ந்தும் கடைசியில் எழும்பி ஓட சக்தியற்று தலையை மண்ணில் புதைத்து உருண்டுகொண்டிருந்தான்.
“எனக்க ஏசுவே, ஏனக்க ஏசுவே…” என்று பயத்தில் செய்வதறியாது முத்தம்மாள் முனகிக்கொண்டு பின்னர் வெறிவந்தவளாக, சருவத்தையும் பணத்தையும் தூரவீசிவிட்டு, ராஜுவை நோக்கி ஓடினாள். முந்தானை அவிழ அவிழ அதைப் பிடித்துக்கொண்டு ஓடி ராஜுவின் பக்கத்தில் சென்றபோது அவன் பேச்சில்லாமல் கிடந்தான். தலையிலிருந்தும் வாயிலிலுந்தும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. உடல் முழுக்க சிராய்ப்பு.
முத்தம்மாள் சுருண்டு அடங்கிய ராஜுவின் தலையை தன் மடியில் தூக்கிவைத்து, வாயில் கையிட்டு எதையோ தேடினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, திலேப்பியாவின் சில சதைத் துண்டுகள் இரத்தத்தோடு கையில் வந்தது.

கண்டாலறியும்புள்ளி

“சித்தியே, இந்த உச்ச வெயிலிலி எங்கு போறீ? ரேசங்கடயிலயா?” வீட்டுத்திண்ணையில் எட்டிப்பார்த்து எலிசபெத் கேட்டார்.

“ஆ, உனக்க துண்டு இருக்கேது?” கிளாரா கண்களை கூர்ந்து பார்த்து கேட்டார். இடைப்பாடு கிராமத்தில் எப்போதும் வெயில் சற்று அதிகம்தான். அவருக்கு கூன்விழுந்த முதுகு. வயது அறுபதுக்கும் மேலிருக்கும்.

“ரெண்டு கார்டு இருக்கிது. விமலாளுக்க கார்ட மண்ணெண்ண வேண்ட அவ தந்தா.”

“எனக்கு இந்த நாலு துண்டுக்கொள்ள சாதனங்கள தூக்கவா முடியும்? மண்ணெண்ணச்சு கன்னாசெங்கு?”

“ஐயோ சித்தியே, நீங்க ரேசங்கடையில போமி. நான் பொடியவன சொல்லிவிடுதேன். கன்னாச அவன் கொண்டுவருவான்.”

“அவன சட்டணும் சொல்லிவிடு. எனக்கு அரி அடுப்பிலி போடணும். இப்போ கரமடி ஏறும்.”

“நீங்க போமி. நான் கடப்புறத்தில போயி அவன சொல்லி விடுதேன்”

“அவன் வந்தில்லேங்கி நான் எனக்க அரிய மட்டும் வாங்கிண்டு வருவேன்.”

“ஐயோ சித்தியே, விளிஞ்சத்தில கெடக்க வள்ளத்தில மண்ணெண்ண இல்லையாம். இந்த ரேசன் மண்ணெண்ணையும் கிட்டினா கொள்ளாம். வள்ளத்துக்கு சீசனொண்டு. மண்ணெண்ண இல்லெங்கி தொளிலுக்கும் போவ முடியாலும்.”

“மோளே, நான் ரேசங்கடச்ச கிட்ட இருக்குவேன். அவன பெட்டெந்து வரச்சொல்லு”

“எல்லா கார்டுக்கும் அரியும் பருப்பும் மண்ணெண்ணையும் வாங்குமி.”

“சோப்பு இருக்கிதா மக்கா?”

“ஆ, இருக்கு” என்று சொல்லிக்கொண்டு எலிசபெத் கடற்கரைக்கு சென்றார். ஒரு கரமடியில் மீன்களை ஏலமிட்டுக்கொண்டிருந்தார்கள். பல கட்டுமரங்களும் பாய்மரங்களும் கரை நோக்கி வந்துகொண்டிருந்தன. சிறுவர்கள் உடைந்த கட்டுமரத்தின் துண்டுகள் வைத்து கடலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கிளாரா பாட்டி நான்கு ரேஷன் கார்டுகளையும் கொண்டு ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்றார். கூன்விழுந்த முதுகு. செம்மண்ரோடு புழுதிபடிந்து கிடந்தது. பைக்குகள் இரண்டு திசைகளிலும் விரைந்து சென்றது. “பொழியூர், பொழியூர்” என்று ஒருவேனில் ஆட்களை திணித்துக்கொண்டிருந்தார்கள். “போட்டே, போட்டே” என்று வேனின் மேல்பகுதியில் கையால் தட்டிக்கொண்டு கிளி சொன்னான். உள்ளே இடமில்லாத பலர் வெளியில் தொங்கிக்கிடந்தார்கள்.

“க்ளாறா, வீட்டிலி கெடக்கப்பணியா? இந்த பிராயத்திலயும் இவளுக்கு கையும் காலும் சும்மா இருக்கில்ல” பேருந்திற்கு காத்திருந்த ஒரு பெண் சொன்னாள்.

“வேய் இதாரு?” வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பிக்கொண்டு கிறாரா கேட்டார்.

“கண்ணும் காணல்லயா?”

“வே நீயா? கொல்லங்கோட்டியாறி…டக்கறிலி போவாட்ட?”

“இந்த நெருக்கத்திலயா? நீரோடி வண்டி இப்போ வரும்.”

“ரேசங்கடையில போறேன். போட்டா?”

“பாத்து போமி…ஆளுபிடிக்காறம்மாரு எறங்கியிருக்கு”

“தூப்பம் கொள்ளம், கெளவியயும் பிடிச்சவா செய்வான்?”

கிளாரா ரோட்டைக்கடந்தபோது ஒரு பைக் கிரீச்சிட்டு நின்றது.

“கெள்வி, கெள்வி, ரோட்ல பாத்போ…”

“வாரியனிச்ச மோனுவள. கொறச்சு பெல்லப்போனா என்ன? நிங்க அம்மாமாருக்கு வல்லதும் ஸ்ரீதனம் வேண்டிக்கொடுக்குவி. சுனாமியா வருதில, இப்படி வெரன்டடிச்சு ஓடுதி.”

கிளாரா பாட்டி ரேஷன் கடைக்குச்சென்றபோது கூட்டம் அதிகமில்லை. இரண்டுபேர் அரிசிசாக்கை தூக்கி அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். திராசுத்தட்டைப்பிடித்துக்கொண்டு ஒருவர் சர்க்கரைக்கு எடைபார்த்துக்கொண்டிருந்தார். காகங்கள் மண்ணில் அரிசியை கொத்தியெடுத்தும் கரைந்துகொண்டும் பறந்துகொண்டுமிருந்தது. சில கோழிகள் மண்ணை கிளறிக்கொண்டிருந்தது. ஒரு நாய் தரையை மோந்துபார்த்தது. பின்னர் சிறிது விலகிச்சென்று சுவரில் சிறுநீர் கழித்தது.

“கீள வல்லதும் இரும்போ காந்தமோ இருக்கேது? தட்டு அசங்குதில்ல?” வரிசையில் முன்னாள் நின்ற மணியன் கேட்டார்.

“இதா கீளப்பாருவில.” என்று சொல்லிக்கொண்டு எடைபோட்டவர் தட்டை தூக்கிக்காட்டினார்.

“குமாறு நீ பேசாதல.” ரேஷன்கடைக்காரர் சொன்னார்.

“நேத்து வாங்கிட்டுப்போனதில அரக்கிலோ கொறஞ்சிருந்தது.”

“லேய் நீ வெல்லதும் பேசாதல. இங்க தெவசமும் ஆர்டிஓ வந்து செக்கு செஞ்சிட்டு போறாரு. இதில இவனுக்கு அரக்கிலோ மயிரு கொறயுதாம்.”

“நீ முள்ளணும் நிக்க வெரல எடுல.” குமார் விரலை எடுத்ததும் எடையிருந்த தட்டு சற்று கீழிறங்கியது. “இதென்னதில… நிக்க கொட்டயப்போல ஒண்ணு கீள எறங்கிக்கெடக்கு. நீயெல்லாம் வெளங்கமாண்ட.”

“அவன் எடை போடுததுக்கு முன்ன கையெடுக்கச்சொன்னா எப்படி? அவன நீ வேலை செய்ய விடு. மொத்தம் எத்ற சாக்கு அரி?”

“கெவெர்மெண்ட் உத்தியோகஸ்தன். நாங்க இவன ஜோலி செய்ய விடல்ல. எனக்கு இண்ணு மூணு சாக்கு மதி” மணியன் சொன்னார்.

“டேய்… செண்டக்கையா மூணுசாக்க வெளியிலெடு.” என்று சொல்லிக்கொண்டு கடைக்காரர் தன் செல்போனை பார்த்துச்சொன்னார்.

“இதா மணியா… உனக்க ரேஷன்கார்டு” என்று ஒரு கட்டு ரேஷன் கார்டுகளை மணியனிடம் கடைகாரர் கொடுத்தார். மணியன் ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை மற்றும் வேறுசாதனங்களுடன் ரோட்டோரத்தில் நின்றிருந்தார்.

“அடுத்து யாரு?”

“இதா நாலு சீட்டு” என்று கிளாரா ரேஷன் கார்டுகளை குமாரிடம் கொடுத்தார்.

“எதற எண்ண?”

“நாலுக்கும் தா”

“அப்போ இருவது லிட்டறு. கன்னாசெங்கு?”

“இதா, எனக்க பேரன் கொண்டுவருதான். ரூபா, மக்கா கொண்டு ஓடிவா மக்கா”
“இது இருவது லிட்டரு கன்னாசுதானா?”
“பிள்ள ஓம்.”

ரூபன் தான் கொண்டுவந்த கண்ணாசை பெரிய மண்ணெண்ணை பேரலின் பக்கத்தில் வைத்தான். செண்டக்கையன் பேரலில் கொழுத்திப்போட்டிருந்த நீண்ட வெள்ளை குழாயை பேரலில் போட்டுக்கொண்டு மறுமுனையை தன் வாயில் வைத்து உறிஞ்சினார். நீலநிற மண்ணெண்னை குழாய் வழியாக வாயைத்தேடி வந்தது. வாயின் பக்கத்தில் மண்ணெண்ணை வந்ததும் பெருவிரலால் குழாயின் முனையை அடைத்துக்கொண்டு அந்த முனையை கன்னாசின் வாய்வழியாக உள்ளேவிட்டார். மண்ணெண்ணை பேரலிலிந்து கன்னாசில் சீறிப்பாய்ந்து கன்னாசை நிரப்பியது. சரியான அளவு வந்ததும் பேரலிலிருந்த குழாயை தூக்கியெடுத்தார்.

“தூக்கி எடு மக்கா. தூக்குவாயா?”

“ஆத்தா இதா பாருமி, நான் எனக்க குட்டி வெரலுவெச்சு தூக்குதத.”

“வெளயாடாத மக்கா. செல்லம்போல தூக்கியெடு.” ரூபன் கண்ணாசை மூடிக்கொண்டு தூக்கியெடுத்தான். கிளாரா பாட்டிக்கு உச்சி வெயிலில் வியர்த்துக்கொட்டியது. “மக்கா இத வெச்சிட்டு அந்த கடையனும் கொறச்சு வெள்ளம் வேங்கிட்டு வா.”

“அவன் வெள்ளம் தரமாண்டான். போஞ்சு வெள்ளம் வேங்கிண்டு வருதேன். பைசாயோ?”

“இதா மக்கா பைசா. இந்த ரேசன் துண்டும் உனக்க கையிலதான் இருக்கட்டு.” என்று தன் கையிலிருந்த ரேஷன் கார்டுகளையும் ரூபனிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அவன் ரோட்டைக்கடந்ததும் திரும்பிப்பார்த்து “ஆத்தா கள்ளன்…கள்ளன்” என்று சத்தமிட்டான்.

திடீரென்று பாட்டியின் பக்கத்தில் “தமிழ்நாடு அரசு” என்று எழுதப்பட்ட ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கி மணியனிடமிருந்து அரிசிச்சாக்குப்பைகளை எடுத்து ஜீப்பில் தூக்கிபோட்டார்கள். முன்று அரிசிச்சாக்குகளும் மூன்று பிணங்கள் போல் ஜீப்பினுள் போய் விழுந்தது.

“ஐயோ, சாறே சாறே இதெனக்க ஜீவிதமாக்கும்” மணியன் கெஞ்சினார். அவரைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. “சாறெ, சாறே, இந்தா, இந்தா” என்று வலதுகையை சட்டை பாக்கட்டின்மீது வைத்துக்கொண்டு இடதுகையை ஜீப்பின் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றார்.

“உனக்க ரேஷன் கார்டையும் கொண்டு போலிஸ் ஸ்டேஷன்ல வந்து கணக்கு காட்டி அரிசிய வேங்கிட்டுப்போவில. நமக்கு அவன் லஞ்சம் தரப்பாக்கான். எங்கள என்னண்ணில நெனச்சிருக்க?” என்று சொன்னவனின் கண்ணில் கிளாரா பாட்டியின் பக்கத்திலிருந்த கன்னாசும் மண்ணெண்ணையும் கண்ணில் பட்டது. பாட்டிக்கு வெயிலில் தலைசுற்றி மயக்கம் வருவதுபோலிருந்தது. நடப்பதெதுவும் அவருக்கு தெரியவில்லை. கிளாரா பாட்டியின் கன்னாசையும் மண்ணெண்ணையையும் எடுத்துக்கொண்டு ஜீப் விரைந்து சென்றது.

“கள்ளா, டோய் கள்ளா” ரூபன் சத்தம் போட்டுக்கொண்டு ஜீப்பை துரத்திக்கொண்டு ஓடினான். சிறிது தூரம் சென்றதும் மூச்சிரைக்க திரும்பி வந்தான். “இவனுவளுக்கு இதுவொரு தொளிலு. சாராயத்த பிடிச்சிதானுவளில்ல. மண்ணெண்ணயத்தேடியாக்கும் இவம்மாரு இப்போ எறங்கியிருக்கு.”

“ஐயோ, வாரியனிச்ச மோனுவள, சோறவுடிச்சி தாந்து நரங்கி போவ. எனக்க அரிச்சாக்கையும் எடுத்திண்டு போறான். எனக்க மாப்பிள காலத்த ஒண்ணும் தின்னாத மடிவளச்ச போச்சு. ஐயோ இப்போ அயாளு தளந்துவரும். நான் என்னத்தய கொடுக்க. நசியா…நசியம்பயிலுவள நீயெல்லாம் நசிச்சு போவ. இந்த பைசா உனக்க வயித்திலி கெடக்காலும் பேதியாட்டு போவும். ஐயோ எனக்க ஏசுவே, இது இந்த எடப்பாட்டில மட்டுந்தானா?” கிளாரா ஒப்பாரிவைத்தார்.

“இப்போ எல்லா எடத்திலயும் இப்படித்தான். நெறய பேரு ரேசன் கடயணும் மண்ணெண்ணையையும் அரியையும் கொறஞ்ச வெலச்சு வேங்கிண்டு கள்ளத்தனமாட்டு கேரளத்தில கொண்டு விக்கதாக்கும் தொளிலு. அத தடுக்கவேண்டியாக்கும் தாசில்சாறும் ஆர்டியோவும் போறது.” குமார் விளக்கினார். ரோட்டில் ஆட்கள் கூடினார்கள். மணியன் ஒரு ஆட்டோ பிடித்து ஜீப்பை பின் தொடர்ந்து சென்றார்.

“இதினியும் கிட்டாதா?” கிளாரா கண்ணைத்துடைத்துக்கொண்டு கேட்டார்.

“நீங்க இனியும் போலீஸ்ஸ்டேஷன்ல போய்த்தான் வாங்கணும்”

“டேசன்லயா…ஐயோ எனக்கு பூதனாட்டு கலங்குது. நாங்க பட்டணி கெடந்து சாவுதோம். அங்க போனா எங்கள கள்ளனணும் பிடிச்சு ஜெயில்ல போடவா? எனக்ககிட்ட நாலு துண்டிருக்கு. அதுக்கு அரியும் மண்ணெண்ணையும் பைசாகுடுத்து வேண்டினேன். பைசாயும் போச்சு சாதனமும் போச்சு. பட்டணி மட்டும் மிச்சம்.”

“போன ரெண்டு மூணு மாசமாட்டு இப்படித்தான் நடந்திட்டிருக்கு. ஸ்டேசன்ல போனா அதக்குறிச்சு அவுங்களுக்கு ஒண்ணும் தெரியாதாம்.”

“இதுக்க முன்னம இருந்த பெண்ணாப்பெறந்த ஆர்டிஓ இருந்தப்போ இப்படி நடக்கல்ல. அவுங்க பிடிச்சா அடுத்த நாளு பேப்பறில வரும். இப்போ இங்கிருந்து பஞ்சோரு பாவங்களுக்க அரியையும் மண்ணெண்ணையையும் எடுத்திட்டு போறானுவ. போலீஸ் ஸ்டேஷன்லயும் கணக்கு காட்டல்ல, பேப்பறிலயும் நூஸ் வரல்ல. அப்போ இதுக்க அர்த்தம் என்னவாக்கும்?”

“அர்த்தம் என்னவாக்கும்?”

“வெல்ல எடங்களிலயும் விக்குதானுவளாட்டிருக்கும்”

“அப்படி சொல்லாத. அரசாங்க அதிகாரிகளாக்கும்”

“பின்ன கணக்கு காட்டாதிருந்தா எப்படி? இந்த ரெண்டு மாசம் எடுத்திட்டுபோன மண்ணெண்ணச்ச கணக்கெங்கு?”

“போய் கேளு”

“ஆரிட்ட?”

“கலட்டறுகிட்ட”

“அங்கு ஆரு போவ?”

“நாம எல்லாரும் போலாம்”

“எங்களுக்கு வேற வேலையும் சோலியுமில்ல. கலட்டறும் போலீசும். போங்கல போக்கத்த பைலுவளா” கூட்டம் கலைந்து சென்றது. கிளாரா பாட்டியை ரூபன் தன்ச் தோளோடு அணைத்து வீட்டிற்கு கொண்டுசென்றான்.

“அம்மா, மண்ணெண்ணையையும் அரியையும் கள்ளம்மாரு கட்டிண்டு போனாவுவ” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பிளாஸ்டிக் நாற்காலியிலிருந்த அலைபேசி ஒலித்தது.

“ஐயோ ஒள்ளதா மக்களே, போணிலி ஆரெண்ணு கேளு” திண்ணையில் தேங்காய் துருவிக்கொண்டிருந்த எலிசபெத் சொன்னார்.

“அப்பா…ஹலோ”

“ரூபா மண்ணெண்ண ரெடியா?”

“மண்ணெண்ணைய கள்ளன் கட்டிண்டு போனான்.”

“லேய் எனக்க கும்பி எரியிது. நீ அம்மகிட்ட குடில”

“இந்தா அம்மா, அப்பாவுக்கு நிங்ககிட்ட பேசணுமாம்.”

“ஹலோ”

“ஹலோ”

“என்ன ஹலோ… மண்ணெண்ண இருக்கா? எனக்கு தொளிலுக்கு போணும். ஹலோ சொன்னா பத்தாது.”

“இதென்ன பேச்சு. பின்ன ஹலோ சொல்லாத எப்படி?”

“சேட்டா சொகந்தன்னயோ? அப்படின்னு கேளம்ப. அவளுக்க தமாசு. இங்க பாரு, மண்ணெண்ண களவு போச்சாம். எனக்கு இண்ணு மண்ணெண்ண வேணும்.”

“இருவது லிட்டறு ரேசங்கட மண்ணெண்ணைய மத்தவம்மாரு தூக்கிண்டு போயிருக்கு. நம்ம இந்தமாசத்த சப்சீடி மண்ணெண்ண இருக்கு. அத ஆட்டோவில கொடுத்துவிடட்டா?”

“ஐயோ வேண்டாம். அதையும் அவனுவ பிடிச்சா?”

“இது கணக்கொள்ளது. வெள்ள மண்ணெண்ண”

“கொள்ளாம், அப்போ ரேசங்கட நீலக்களறு மண்ணெண்ணச்சு கணக்கில்லையா?”

“அதுக்கும் கணக்கு ஒண்டு” எலிசபெத் உதட்டை சுளித்துக்கொண்டு சொன்னார்.

“ம்பே, நீ எனக்க குடும்பத்த நசிப்பிச்சுவ. அத நீ வீட்டில வெச்சிரி. இந்த சனியாச்ச நான் வந்து எடுத்திட்டுபோறேன்.”

“செரி”

“ம்பே, மண்ணெண்ணைய வீட்டுக்குள்ள வெச்சுக்கோ.”

“தீ பிடிச்சா?”

“கன்னாசும் மண்ணெண்ணையையும் விடாத ஒறப்பாட்டு கெட்டிப்பிடிச்சுக்கோ”

“ஓய்…” எலிசபெத் கண்ணை முந்தானையால் துடைத்தாள். துருவிய பாதி தேங்காய் கையிலிருந்தது. நெற்றியில் வழிந்த வியர்வையை இடதுகை பெருவிரலால் வடித்தெடுத்தாள். திருக்குடும்பம் ஸ்தாபல் படத்தின் கீழ் வல்லார்பாடம் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது வாங்கிய மின்சார விளக்கு மின்னிமின்னி எரிந்துகொண்டிருந்தது. விளக்கினுள் இரண்டு எரியும் இலைகள் இருந்தன. ஒன்று எரிய இன்னொன்று அணையும். தன் மனைவிக்கு தீயோன்சு ஆசையாக வாங்கிவந்தது.

“சும்மா வெளயாடினேன். தங்கமெண்ணாலும் வெலகொடுத்தெங்கிலும் வேங்கலாம் பிள்ள. மண்ணெண்ண நம்ம ஜீவனாக்கும். நம்ம பணிய மொடக்கிப்போடும்.”

“அப்போ இண்ணு தொளிலுக்கு போவ மண்ணெண்ண எங்க?”

“மத்தவன், உச்சக்கடக்காறன் லிட்டறு எளுவத்தஞ்சு ரூவாலுக்கு எத்ற லிட்டறு வேணுமெண்ணாலும் தரலாமெண்ணு நம்ம லிபறாத்தூசுகிட்ட சொல்லியிருக்கு. வெள்ள மண்ணெண்ண. அவனுவ இங்கு கொண்டுவந்துதாருவானுவ.”

“வெள்ள மண்ணெண்ணயா? அது நம்ம வள்ளங்களுக்கு அரசாங்கம் சப்சீடில தாறதல்ல?”

“அதுக்கிப்ப என்ன? நமக்கு அர்ஜன்றாட்டு மண்ணெண்ண வேணும். அருமையோ மலிவோ அவசரத்துக்கு கிட்டின வெலைச்சு வேங்கலாம். ஒரு கொளப்பமுமில்ல”

“அதில்ல, மத்தவனுக்கு நம்ம கடப்புறத்து சப்சீடி மண்ணெண்ண எங்கிருந்து கிட்டுது?”

விழிஞ்சத்தில் தீயோன்சு போனை காதில் வைத்துக்கொண்டு தன் வெளிப்பொருத்து விசைப்படகில் நின்றிருந்தார். வெளிப்பொருத்து எஞ்சினின் நெற்றியில் இடதுகையை வைத்துக்கொண்டு எஞ்சினின் மூக்கை இழுத்தெடுத்தார். வெள்ளைக்கயிறு சளிபோல் ஓடிவந்துவிட்டு பின் எஞ்சினின் கழுத்தினுள் சுற்றியது. தீயோன்சு மீண்டும் மூக்குக்கயிற்றை இழுத்ததும் எஞ்சின் “டிர்ர்ர்…டிர்ர்ர்ர்…” என்றது. தீயோன்சு படகை மெதுவாக நகர்த்தினார்.

“ம்பே, நீ சீபிஐ ஆப்பீசறுமாதிரி பேசாத போணவை. நான் ஒரோட்டம் போயிட்டு வாறேன்.” என்று சொல்லிக்கொண்டு விசைப்படகை ஓட்டிச்சென்றார்.

“செரி” என்று அலைபேசியை அணைத்துக்கொண்டு “மக்களே, அந்த மண்ணெண்ணைய ஒவ்வொர கன்னாசாட்டு வீட்டில எடுத்து வை” எலிசபெத் சொன்னார்.

“நீங்க சும்மாயிரிமி. அயாளுக்கு கிறுக்கு. மண்ணெண்ண வெளியிலத்தான் இருக்கட்டு. இந்த கடப்புறத்தில வந்து எவன் கட்டெடுக்க. தீவெல்லதும் பிடிச்சா வசளாவும். இருனூத்தம்பது லிட்டரு இருக்கு.”

“ஐயோ இருனூத்தம்பதெண்ணு செத்தம்போட்டு சொல்லாத மக்கா.”

“ஏன்? நாம கட்டா வெச்சிருக்கோம். வெலகொடுத்து வேங்கினதுதானே. அரசாங்கம் நமக்கு ஒவ்வொரு மாசமும் தருத கொறஞ்ச வெல வெள்ளக்களறு மண்ணெண்ண. இதுக்குப்போயி எதுக்கு பேடிச்ச? வெளியிலத்தான் இருக்கட்டு.”

“மக்களே நிக்க அப்பன உனக்கு தெரியாலும். அயாளுக்க தொளிலு மொடங்கினா என்னைய கொன்னுகளையும். நீ எடுத்து வை. எனக்க கையில நூறுபவுனுக்கு உருப்படி இருந்தாலும் இத்ற பேடியில்ல மக்கா. மண்ணெண்ண அயாளுக்க ரெத்தமாம்.”

“செரிதான். வெள்ளரெத்தமும், நீலரெத்தமும். சிங்குச்சா களறு ரெத்தங்களு. பின்ன நீங்க ரெண்டு கன்னாசு மண்ணெண்ணைய தலைச்சு வெச்சிண்டு ஒறங்குமி. மிச்சமொள்ளதெல்லாம் வெளியிலத்தான் இருக்கட்டு. நான் போயி பட்டிச்ச களுத்தில கெட்டுத சங்கிலிய வாங்கிட்டு வருதேன். நம்ம வீட்டு ஜாளியில கன்னாச கெட்டியிடலாம்.”

“மோனே, அப்படி சொல்லாத. அவம்மாரு சங்கிலிய பொட்டிச்செங்கிலும் மண்ணெண்ணைய கொண்டுபோவானுவ. இதா, இந்த அயன்பாக்ச கறண்டிலி குத்திவெச்சண்டாணு எத்றபிறாவசியம் சொல்லியாச்சு? அத உருவி எடு.”

“ஓம், அவனுவ இங்கு வந்தா இனி ரெண்டு கொண்டுண்டுதான் போவானுவ.” என்று ரூபன் சொன்னபோது கிளாரா கையில் மீனுடன் வந்தார்.

“ஆளுகண்டா நண்டு. அவனுக்க தேச்சியத்தப்பாரு. மக்களே, ஐயா கடப்புறத்தணும் வந்தது. நான் சோறு காச்சல்ல. இங்கு சோறு வெந்ததா? இதா இந்த வாளய காச்சு.”

“சித்தி, அரி அடுப்பிலி இருக்கிது. நேத்தத்த கஞ்சியும் சம்மந்தியும் இருக்கிது. ஐயாவுக்கு கொண்டுபோமி.”

“ஆ, எடு மக்களே. உப்பமீனும் இருக்கிது. நான் சுட்டு கொடுக்கிதேன். மண்ணெண்ண களவுபோனதில ஐயாவுக்கு நல்ல வெசமம்.”

“போனது போட்டு சித்தி. இப்போ என்னெய்ய?”

“வேய் பண்டு பண்ணி கள்ளம்மாரக்கண்டு நமக்கு கெடயில்ல. எந்த ராத்திரி எந்த இடுக்கணும் கள்ளன் வருவானெண்ணு நமக்கு தெரியாலும். சைக்கிளிலி வருவானுவ, பண்ணிச்ச பெறக்கத்த ரெண்டு காலைப்பிடிச்சு தூக்குவானுவ. பின்ன காலையும் வாயையும் கெட்டிண்டு சைக்கிளு கடவத்திலி எடுத்திட்டிண்டு ஓடுவாவனுவ. கடப்புறத்தில ஒறங்கித நமக்கு அவன வெரட்டி பிடிச்சவா முடியும்? இப்போ பண்ணிகளில்லாட்ட சமயத்தில மண்ணெண்ண கக்கவருதானுவ. கன்னாச முந்தியில முடிச்சிட்டிண்டா கெடக்கமுடியும்?” கிளாரா பாட்டி பெருமூச்சுவிட்டார்.

ரூபன் இரண்டு கன்னாசை மட்டும் வீட்டினுள் எடுத்து வைத்துக்கொண்டு ரோட்டோரம் சென்றான். ஆட்கள் கூட்டமாக சத்தமாக பேசிக்கொண்டு நின்றார்கள்.

“என்ன ரூவா? போலீஸ் ஸ்டேஷன்ல போவாட்ட. மண்ணெண்ண கிட்டப்பாத்ததே?” ஜான்சன் சொன்னார்.

“ம்ம்…போனா நல்லா கிட்டும். நான் களியக்காவெள வைத்தியசாலையில பாளயிலத்தான் கெடக்கணும். போனது வெறும் இருவது லிட்டறுதான்.”

“அப்படி சொல்லாதல பிள்ள. இப்போ எல்லா வீட்டிலயும் மண்ணெண்ண களவுதான்.”

“களவுபோறதெல்லாம் நம்ம இந்த எடப்பாடு சவேரியாரு கோயிலுக்க கிட்டத்தான்.” வேறு பலரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

“ஒள்ளதுதான். புத்தந்துறயணும் நேரவந்தா நம்ம ஊருதான். வேற செறுப்பொண்ணும் இல்லையே.”

“நம்ம ஊரில எவனோ நாம மண்ணெண்ணய கள்ளத்தனமாட்டு வெச்சிருக்கெண்ணு போணில சொல்லிக்கொடுக்கானுவ. வேற ஊருகளில இப்படி ஒருத்தனும் செய்யமாண்டானுவ. நான் போன முப்பத்தொண்ணாம் தேதி அந்த மாசாத்த 250 லிட்டறும் அதுக்க அடுத்த நாளு ஒண்ணாந்தெயதி இந்த மாசத்துக்க 250 லிட்டறுமாட்டு மொத்தம் 500 லிட்டறு எனக்க வீட்டில வெச்சிருந்தேன். எனக்க போட்டில கொடுத்துவிடுததுக்கு முந்தினநாளு அத காணயில்ல. ஜீப்பில ஆரோ ராத்திரி வந்து தூக்கிண்டு போனதாட்டு கண்டவன் சொன்னான்.” தலையில் கட்டியிருந்த துவர்த்தை எடுத்து முகம் துடைத்துகொண்டு ஒருவர் சொன்னார்.

“உனக்க வீட்டில மட்டுமா? எல்லாவனுக்க வீட்டிலயும் களவுதான் போறு. இதில உள்ளறிஞ்ச கள்ளனுக்க கூட்டுகெட்டுமுண்டு.”

“இத இனியும் விடப்பிடாது. கள்ளம்மார கையோட பிடிச்சணும்.”

“நீ எதுக்கு பிடிச்சப்போற. போலீசு அவம்மார பிடிச்சட்டு. சட்டத்த நாம கையிலெடுக்கப்பிடாது. நல்ல வெயிலடிக்கிதென்ன. வருங்க, கோயிலுக்க படியில இருக்கலாம்” ஜான்சன் சொல்லிக்கொண்டு தன் வேஷ்டியின் நுனியை பிடித்துக்கொண்டு புனித சவேரியார் கோயிலை நோக்கி நடந்தார். அனைவரும் அவரை பின்தொடர்ந்து சென்று படியில் உட்கார்ந்தார்கள். புனித சவேரியார் அனைவரையும் ஆசீர்வதித்துக்கொண்டு கடல்நோக்கி கோபுரத்தில் நின்றிருந்தார்.

“நாம களவுபோறெண்ணு பொலீசில கம்ப்ளைன்ட் கொடுப்போம். உங்களுக்கு தெனமும் களவு போறெண்ணா கன்னாசையும் மண்ணெண்ணையையும் வீட்டுக்குள்ள வெச்சா என்ன? தப்ப உங்கபேரில வெச்சிண்டு கள்ளனும் போலீசும் வெளயாடினா எப்படி?”

“நீங்க விசயம் தெரியாத பேசப்பிடாது. நாங்க வெளுப்பாங்காலத்த ரெண்டுமணி மூணுமணிச்சு கடல்ல தொளிலுக்கு போணும். நூறு நூத்தம்பது லிட்டறு எண்ண ஒருநாளு நாங்க பிளைவுட்டில ஏத்தணும். வெளியில இருந்தாத்தான் ஓடிவந்து எடுக்கமுடியும். அதிருக்கட்டும், தீ பிடிச்சா? அத எதுக்குச்சொல்ல. எங்க மக்க குட்டிங்க தீயில எரிஞ்சு செத்தா ஆருக்கு என்ன கவல? நாங்க வெலயில்லாத்த ஆக்கிறி சாதனங்க தானே. அண்ணா, நீங்க இனியும் உங்க வேலையும் பாத்திண்டு போமி. போலீசெல்லாம் எங்களுக்கு செரிப்படாது.”

“அப்போ, போலீசுக்கு உங்களையும் செரிப்படாது. உங்க செவியத்தூக்கி எடுப்பானுவ. எனக்ககூட ஒரு ரெண்டுமூணுபேரு வந்தாமதி.”

“இல்லண்ணா நீங்க மட்டும் போமி.”

“அது செரி. எனக்க சாதனமா களவுபோச்சு. போலீசு நீ யாரெண்ணு என்னைய கேட்டா? நான் என்ன வக்கீலா?” ஜான்சன் தொடையிலிருந்து நழுவிய வேஷ்டியை தொடையிடுக்கில் சொருவினார்.

“ஜாண்சண்ணா, போலீசில வேண்டாம். எம்பி எம்மெல்லே கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்.”

“அதுவும் ஞாயம்தான். நமக்கு அரசாங்கம் மொத்தமா இந்த மண்ணெண்ணைய தாறதாலத்தானே இந்த களவு பிரச்சன. நமக்கு தேவயான நேரத்தில கிட்டுததுமாதிரி ஒரு பெட்ரோல் பங்கு நம்ம இந்த கடப்புறத்தில வைக்கலாமெண்ணு அவுங்ககிட்ட கேக்கலாம். பின்ன ஒண்ணு… லேய், நான் சும்மா அவுங்ககிட்ட கையையும் வீசிண்டா போவமுடியும்.”

“பின்ன?”

“எனக்கு ஒரு நூறு ஓட்டெங்கிலும் வேணும். அப்பத்தான் நான் தைரியமாட்டு அவுங்ககிட்ட பேசமுடியும்.”

“அப்போ அண்ணனுக்கு நூறு ஓட்டும் இல்லையா? நிங்களுக்கு நூறு ஒட்டு ஒண்டெண்ணா நீங்க எதுக்கு அவனுவள பாக்கபோவ. அவனுவ உங்கள பாக்க வருவானுவளே. அயாளுக்க தூப்பத்த கண்டில்லயா? இண்ணுதொட்டு நாம ராத்திரி காவலுக்கிருக்கலாம். கள்ளன செந்தூக்கிலி தூக்கி எடுக்கலாம். என்னோ எல்லாருக்கும் சம்மதமா?” பெரியவர்கள் பேசுவதை ரூபன் கேட்டுக்கொண்டு நின்றான்.

“நான் கடசியாட்டு சொல்லுதேன். இனியும் உங்க இஷ்டம். அப்படி நீங்க வல்ல வண்டியயோ ஜீப்பயோ பிடிச்சா ஒடனத்தான போலீச விளிச்சணும். மண்ணுலாறி ஆள ஏத்திக்கொல்லுததுமாதிரி இவம்மாரும் நம்ம மேல வண்டிய ஏத்துவானுவ. கெவனமாட்டிருக்கணும் பாத்துக்கோ” ஜான்சன் சொன்னார்.

“அதும் ஞாயந்தான். வண்டிய பிடிச்சிண்டு, போலிச விளிச்சலாம். போலீசுக்க நம்பரு ஒண்டா?”

“இதா, இந்த நம்பற உனக்க போனிலி அடிச்சு வை. எனக்கு வேற வேலையிருக்கு. இண்ணு நான் கொச்சியில போட்டில போகணும்.”

கூட்டம் பிரிந்து சென்றது. இன்று இரவு அனைவரும் காவலுக்கு இருக்கவேண்டும். திருடன் எத்தனை மணிக்கு எப்படி வருவானென்று யாருக்குத்தெரியும்? இரவு உணவு முடிந்து இடைப்பாடு புனித சவேரியார் கோயிலுக்குப்பக்கத்தில் அனைவரும் கூடினார்கள். மொத்தம் எட்டுபேரிருக்கும். மெல்லியதாக அலையோசை கேட்டுக்கொண்டிருந்தது. கடைசி பஸ்ஸும் போய்விட்டது. புனித சவேரியார் இவர்களுக்கு காவலுக்கிருந்தார். இரண்டு மணிவரை சீட்டு விளையாடினார்கள். அசதியில் சிலர் தூங்கிவிட்டார்கள். இருவர் மட்டும் வெத்திலை பாக்கை மென்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன விட்டறு, நீ இப்போ மண்ணெண்ன வாங்குததில்லயா?”

“நான் எதுக்கு வேண்ட? எனக்க வீட்டிலி ரெண்டுதடவ மண்ணெண்ண களவு போயாச்சு. சப்சீடி மண்ணெண்ண இருவத்தஞ்சு ரூவா. நல்ல மலிவுதான்.”

“பின்ன என்னோ?”

“ஒரு கணக்கு போட்டுபாரு. வெளி மார்க்கட்டில மண்ணெண்ண எத்ற ரூவா?”

“அறுவது எளுவது மிஞ்சிமிஞ்சிப்போனா எளுவத்தஞ்சு”

“நான் எனக்க அவசரத்துக்கு எளுவத்தஞ்சு கொடுத்தாக்கும் வாங்குதது. நம்ம வெள்ளக்களறு மண்ணெண்ண.”

“மனசிலாவல்ல.”

“நாம இருவத்தஞ்சு ரூவாலுக்கு சப்சீடி மண்ணெண்ண வாங்குதோம். அது களவுபோறு. அந்த களவுபோன மண்ணெண்ணய எளுவத்தஞ்சு ரூவாலாட்டு நமக்கு அவனுவ விக்குதானுவ. அப்போ ஆக மொத்தம் ஒரு லிட்டறுக்கு நாம நூறு ரூவாலாக்கும் கொடுக்கது. இப்போ மனசிலாச்சா?”

“லேய் ஓமிலெ. நான் இப்படி யோசிக்கல்ல. ஒரு லிட்டறு மண்ணெண்ண நூறு ரூவா.” வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பிக்கொண்டு சொன்னார்.

“நீயெல்லாம் எப்போ யோசிச்ச?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது “கள்ளன் வந்தாச்சு, கள்ளன் வந்தாச்சு” என்று ரூபன் ஓடிவந்தான்.

“எங்கு? செத்தமிடாத, ஓடிக்களயுவானுவ”

“தோ, அந்த இடுக்கிலி ஜீப்பு நிக்கிது.”

“டோய், எல்லாரும் எளும்பு. தாட்டாம்மாரு வந்தாச்சு”

“எங்கு, விடாதா, பிடி, பிடி” என்று அனைவரும் எழும்பி ஜீப்பைத்தேடி ஓடினார்கள். ஜீப்பினுள் ஆறுபேர் பம்மியிருந்தார்கள்.

“டேய் எறன்குங்கடா வெளியில.” ஜிப்பை தட்டிக்கொண்டு சொன்னார்கள்.

“அங்க நில்லுங்கடா. எங்கள தொட்டா காரியம் வேற” ஜீப்பிலிருந்தவர் சொன்னார்.

“கக்க வந்தவனுக்க தன்றேடத்தப்பாரு. எறங்குங்கல ஜீப்பணும். அவுங்க தமிளக அரசு. வாயிலி வேற ஒண்ணும் வரல்ல.”

“நாங்க அரசதிகாரிகளாக்கும். இந்த பக்கத்தில திருட்டு மண்ணெண்ண இருக்கெண்ணு தகவல் வந்தது.”

“எறங்கி வாடா. எந்தவீட்டில? தகவலு சொன்னதாரு?”

“அது உங்களுக்கெதுக்கு?”

“நீ யாரடா?”

“நான் ஆர்டிஓ. இவரு வில்லேஜாபீசர்”

“நீயெல்லாம் கள்ளம்மாரு. சும்மா தமிளக அரசெண்ணு ஜீப்பில பேர ஒட்டிவெச்சிட்டு வந்திருக்க.”

“எங்கள தொட்டா நாங்க போலிச கூப்பிடுவோம்.”

“போலிச விளியடா. தைரியமிருந்தா விளியடா. செரி நீங்க ரெண்டுபேரும் ஆப்பீசறுமாரு. இதா பெறக்க இருக்க இவனுவ மூணுபேரும் ஆரு? அவனுவள எறக்கடா வெளியில. எறக்கடா வெளியில” ஜீப்பினுள் மூன்று பேர் குனிந்து பதுங்கியிருந்தார்கள். இருட்டில் அவர்களை தெளிவாக தெரியவில்லை.

“டோய், இது கள்ளம்மாருதான். போலிச விளி. போலிச விளி.”

“இதா போணு, நீதான் போலீச விளி”

“எனக்க கை வெறச்சுது. நான் விளிக்கல்ல. நீதான் விளி” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது டிரைவர் ஜீப்பை ஸ்டார்ட் செய்து அதி விரைவில் வண்டியை பின்னோக்கி எடுத்தான்.

“டேய், ஆளு ஆளு. தூர வெலவுங்கல.” பின்னால் நின்றவர்கள் விலகியதும் ஜீப் சுவரில் உரசிச்சென்றது. ரோட்டில் சென்றதும் முன்னோக்கி விரைந்தது.

“டோய், விடாதல பிடி பிடி” ஓடிக்கொண்டிருந்த ஜீப்பை ஒரு சிறுவன் எட்டிப்பிடித்தான். அனைவரும் வண்டியின் பின்னால் ஓடினார்கள்.

“அமுக்கி… நீ வண்டிய விடுல, விடுல” சிறுவன் விடவில்லை. ஜீப் அங்குமிங்குமாக ஓடியது. ரோட்டோரத்திலிருந்த கல்லில் மோதியதும், டிரைவர் வண்டியை திருப்பிக்கொண்டுவந்தான். சிறுவன் தொங்கிக்கிடந்தான். அவன் ஜீப்பை பலமுள்ளமட்டும் பிடித்தான். ஜீப் அவனது பிடிக்கு நிற்குமென்றே அவன் நம்பினான். ஆனால் அவனது கால் ஜீப்பின் படிக்கட்டில் இருந்தது.

“அமுக்கி லேய், விடு, விடு. எல்லாவனும் மாறுங்கல. நம்ம மேல ஏத்துவான்.” ஒராள் வசமாக சிறுவனின் இடுப்பைப்பிடித்து தூக்கியெடுத்தார். ஜீப் விரைந்துசென்று மறைந்தது. மூச்சிரைக்க அனைவரும் ஓடி வந்தார்கள்.

“நாம அவனுவள விட்டிருக்கப்பிடாது”

“பின்னல்லாம, போலிச விளிச்சிருக்கணும்.”

“இதா இந்த சட்டம்பிகிட்ட சொல்லு. போலீசெண்ணா அவனுக்க கை வெறச்சுதாம்.”

“இண்ணு போட்டு. இனியும் ஒருநாளு இவனுவள பிடிகிட்டாதையா இருக்கும். நான் நெரிச்சு வெச்சுவேன். செரி, என்னசெய்ய? நமக்கு தொளிலுக்கு நேரமாச்சு கடப்புறத்து போலாம்.”

நெடுநேரம் மீன்விற்பதுபோல் சத்தமிட்டு ஞாயம் பேசிவிட்டு கூட்டம் கலைந்து சென்றது. அடுத்த நாள் செய்தித்தாளில் மண்ணெண்ணை ரெய்டு சென்ற ஆர்டிஓ மற்றும் தாசில்தாரை தாக்கிய மீனவ கும்பல். ஆறுபேர் மீது கொலை முயற்ச்சி, பணிசெய்ய மறுத்தல், கடத்தல் ஆகிய அனைத்து செக்ஸன்களிலும் வழக்குகள் போடப்பட்டிருந்தது. இதில் ஒன்பதுபேர் கண்டாலறியும் புள்ளிகள். இந்த கண்டாலறியும்புள்ளியாக யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம். அதன்பிறகு இடைப்பாடு கிராமத்தில் இளைஞர்களும் பெரியவர்களும் தலைமறைவாக இருந்தார்கள். பகலில் யாரும் வெளியில் வருவதில்லை. இரவில் மட்டும் கடலோரத்தில் பதுங்கியிருந்தார்கள். போலீஸ் எப்போது வேண்டுமென்றாலும் ஊரினுள் வந்து யாரை வேண்டுமென்றாலும் கைதுசெய்யலாம். சிறுவர்களும் பெண்களும் விதிவிலக்கல்ல.

இரவு நேர சாப்பாட்டிற்கும் ஆண்கள் வீட்டினுள் வரவில்லை. பெண்கள் கடற்கரையில் உணவை கொண்டுசென்று கொடுத்தார்கள். உறக்கமில்லாத இரவுகள். சிறைச்சாலையிலிருந்து தப்பிய கொலைக்குற்றவாளிகள், தூக்குத்தணடனை கைதிகள்கூட இவ்வளவு பதற்றத்தில் இருக்கமாட்டாகள். இடைப்பாடு கிராமமே பதட்டத்தின் உச்சிநுனியிலிருந்தது.

திடீரென்று “போலீஸ், போலீஸ்” என்று தூரத்திலிருந்து ஒரு கதறல் கேட்டது. சிலுவையில் தொங்கும் ஏசுவின் கடைசி விளி. “போலீஸ், போலீஸ்” கிராமம் முழுவதும் எதிரொலித்தது. பின்னால் பார்க்காமல் ஆணும் பெண்ணும் கடலில் சென்று விழுந்தார்கள். சுனாமியைக்கண்டு கரையைத்தேடி ஓடிய மக்கள் அதேயளவு உயிர் பயத்துடன் கடலில் சென்று விழுகின்றார்கள். மனித மீன்களை லத்தித்தூண்டில்கொண்டு பிடிக்கவரும் போலீஸ். நாதியற்றவர்கள், நாதனில்லாதவர்கள். தங்களுக்கென்று குரலில்லாதவர்கள். கடற்கரை முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. யுத்தத்தில் தோல்வியுற்று மிஞ்சிய மக்களின் மனநிலை. இந்த அரபிக்கடலை நீந்தி மறுபக்கம் கடந்துவிடவேண்டும். சிலர் நீந்தினார்கள். துரத்தில் கிடந்த கட்டுமரத்திலும் வள்ளத்திலும் ஏறி உட்கார்ந்தார்கள். பெண்களும் குழந்தைகளும்?

“டோய், நான் ஒண்ணு சொல்லுதேன். தப்பாட்டெடுக்கப்பணி. கரமடி வள்ளங்கள கடலில எறக்கலாம்.”

“இதில என்ன தப்பிருக்கு? ஆணும் பெண்ணும் வள்ளத்தில ஏறி கடல்ல கெடக்கலாம். ஆனா பெண்ணுங்களையும் கொளந்தமக்களயும் புதிய வள்ளத்தில ஏத்தணும்.” என்று ஒருவர் சொன்னபோது தூரத்தில் ஒரு வள்ளம் கடலில் புறப்பட்டுச்சென்றது.

“இந்த நேரத்தில அவனுக்க சேலப்பாரு. புதிய வள்ளவும், பளய வள்ளவும். கடப்புறத்தில இருக்குதத எறக்கிவிடு”

“வள்ளம் மறியப்பிடாது. ஒரு வள்ளத்தில இருவது ஆளுக்கு கூடுதலாட்டு ஏத்தாத. குடும்பம் குடும்பமாட்டு ஏத்து.”

“நீ சும்மா இரியில. அவனுக்க பேச்சக்கண்டில்லயா. குடும்பம் குடும்பம். எடப்பாடு முச்சூடும் ஒரு குடும்பம்தாம்பில.” பலரும் பலவிதங்களில் தங்கள் அபிப்ராயங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இடைப்பாடு கிராமம் முழுவதும் கடலின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. சிலர் கடலில் இறங்கி நின்றார்கள். சுனாமி வந்தால்? பிரச்சனையில்லை. இப்போது சுனாமியின் பயம் கட்டெறும்பாக சுருங்கிவிட்டது.

ரூபன் எலிசபத்தின் பக்கத்தில் நின்றிருந்தான். அவனது உடல் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தது. அதிரடிப்படை பூட்ஸ்களின் சத்தம் நெருங்கி வந்தது. ஒரு வள்ளம் கடலில் சென்றது. தூரத்தில் இரண்டு உருவங்கள் இரண்டு கன்னாசுகளை இழுத்துக்கொண்டு வந்தது.

“அம்மா அங்கப்பாரு, ஆத்தாளும் போத்தியும்”

“ஐயோ, எனக்க மாதாவே” என்று எலிசபத் தன் மார்பில் இரண்டு கைகளாலும் அடித்துக்கொண்டு அழுதாள்.

“ஐயோ சித்தியே, நீங்க கன்னாச விட்டிண்டு ஓடுமி. அத அவனுவ கொண்டுபோட்டு. நீங்க ஓடி ரெச்சப்படுமி.”

“கிளாறா, நீ விடாத. இழுத்திண்டு போ.” பெரியவர் சொன்னார். கிளாரா கன்னாசை தரதவென்று இழுத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினார்.

“டேய் ஓடாத நில்லுல” அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள். பல நாய்கள் குரைத்தது. கோழிகள் வீட்டுக்கூரைமீது கூவிக்கொண்டு பறந்தேறின. ஒரு பன்றி அங்குமிங்கும் பதறி ஓடி கடைசியில் ஒரு இடுக்கில் குறுக்காக பாய்ந்து சென்றது. இருட்டில் எத்தனைபேரென்று தெளிவாகத் தெரியவில்லை. எலிசபத்தின் வீட்டிலிருந்த கடைசி கன்னாசையும் தூக்கிக்கொண்டு பெரியவர் கடற்கரை நோக்கி ஓடினார். மீதி கன்னாசுகளை கடற்கரையில் ஒரு கட்டுமரத்தில் ஏற்றியிருந்தார். அப்போது தூரத்திலிருந்து லத்தியொன்று பெரியவரின் முழங்கால்களை குறிபார்த்து இருட்டையும் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்து வந்தது.

[இந்த கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே.]

கடலாழம்

தைமாசி சீசன். கடலில் அலை அதிகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் ஆறுபோல் கிடந்தது. இன்று காலை பத்து மணிவரை தாக்குப் பிடிக்கவேண்டும். பத்துமணி என்பது ஒரு நம்பிக்கை. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம். நான் அவர்கள் மூவரையும் பார்ப்பதையே தவிர்த்திருந்தேன். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.

பிளைவுட் எனக்குச்சொந்தமானது. மொத்தம் மூன்று லட்சம் செல்வானது. சுசுகி 9.9 ஹார்ஸ்பவர் வெளிப்பொருத்து என்ஜின். எஞ்சின் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. மீனவர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டும். மாதாமாதம் மிகக் குறைவான எண்ணிக்கையில் சிறிது சப்சிடியுடனான எஞ்சினை அரசாங்கம் மீனவர் சங்கம் வழியாக வினியோகிக்கும். நான் வாங்கும்போது நாற்பதாயிரம். அதன் உண்மையான தொகை இதைவிட அதிகம். நாம் நினைத்த நேரத்தில் என்ஜின் வேண்டுமென்றால் வெளி மார்கெடில் தான் வாங்கவேண்டும். அதன் உண்மையான தொகையைவிடவும் அதிகமாகக் கொடுத்து. அவ்வாறு வாங்கினால் குறைந்தவிலை மண்ணெண்ணெய் கிடைக்காது. எனவே யாரும் வெளிமார்கெட்டில் வாங்குவதில்லை.

பிளைவுட்டும் என்ஜினும் வாங்குவதற்கான மொத்த பணமும் நான் கடன் வாங்கியது. இரண்டு ரூபாய் வட்டிக்கு. பாதியளவிற்கு கடன் தீர்த்துவிட்டேன். பிளைவுட் வாங்க கண்ணனாகம் ஸ்டேட் பேங்கில் லோன் கிடைக்குமா என்று அப்பா விசாரிக்கச்சென்றிருந்தார். ஆனால் மீனவர்களுக்கு பிளைவுட்/விசைப்படகு வாங்க எந்த வங்கியும் லோன் கொடுப்பதில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். திருப்பிக் கட்டமாட்டார்கள் என்ற பயம். ஆனால் அப்பா பல வருடங்களுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் வலை லோன் எடுத்து அதை முழுவதும் திருப்பி கட்டியிருக்கின்றார். அந்த அக்கவுண்டு புத்தகத்தை காட்டியபிறகும் லோன் கிடைக்காதென்று மறுத்துவிட்டார்கள். அப்பாவிற்கு லோன் கிடைத்தபோது ஆயிரம் ரூபாய் பிடித்தம் போக ஒன்பதாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள். அப்பா அந்த காசில் வலை வாங்கவில்லை. அண்ணனின் மேற்படிப்பிற்கு செலவிட்டார். அண்ணா இப்போது பாம்பேயில் சிறு வேலையிலிருக்கின்றார். அவருக்குக்கிடைக்கும் வரதட்சிணையில் தான் தங்கையை திருமணம் செய்து கொடுக்கவேண்டும்.

நேற்று மதியம் எங்கள் பிளைவுட் கரையில் அணைந்தபோது நானே டெக்கைத் திறந்து மீன்கள் உலராமலிருப்பதற்காக ஊற்றி வைத்த தண்ணீரை வாரி வெளியில் இறைத்து துணியால் துடைத்தெடுத்தேன். பிளைவுட்டின் அடிப்பகுதியில் ஏதேனும் லீக் இருந்தால் தண்ணீரின் அளவை வைத்தே கண்டுபிடுத்துவிடுவேன். அதுபோல் என்ஜினை வீட்டில் கொண்டுவந்தபிறகு ப்ளக்கை மாற்றி சுத்தம் செய்துவிட்டு கிணற்றுத்தண்ணீர் நிரப்பிய மண்ணெண்ணை பேரலில் என்ஜினை இணைத்து அதன்

மூடியை கழற்றி அரைமணி நேரம் ஓடவிடுவேன். என்ஜினின் சத்தத்தை வைத்தே அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கணித்து விடுவேன். சிறிய பிரச்சனையை நானே சரிசெய்வேன். முடியாவிட்டால் விழிஞ்சம் ஒர்க் ஷாப்பிர்க்கு கொண்டுசெல்வேன். தினமும் என்ஜினின் உட்பகுதியை மண்ணெண்ணையாலும் வெளிப்பகுதியை குடிதண்ணீராலும் கழுவி சுத்தம் செய்து வைப்பேன்.

நாங்கள் இன்று அதிகாலை நான்கு மணிக்கே மீன்பிடிக்கக் கிளம்பிவிட்டோம். எஞ்சின் ஓட்டுவது நான் தான். எங்கே செல்லவேண்டுமென்று முடிவெடுப்பதும் நான்தான். கடலில் சில இடங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து வளர்வதற்கு ஏதுவாக சில பாறைகள் அடியாழத்தில் இருக்கும். அது போன்ற இடங்களுக்கு நாங்கள் பெயர் வைத்திருப்போம். முக்கியமாக மஞ்சப்பாரு, தம்பான்கெட்டு, பரலுப்பாரு, மோதப்பாரு. இதுபோல் பலதுண்டு. [தம்பான், பரலு, மோதை என்பவை மீன்வகைகள்.] இந்த இடங்களை அடையாளம் கண்டுபிடிப்பது ஆழம் மற்றும் வெள்ளி அடையாளம் வைத்து. வெள்ளி அடையாளம் வைத்துச்செல்லும்போது வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இரண்டு மூன்று வாரங்கள் மட்டுமே சரியான இடத்திற்குச்செல்லமுடியும். அதன் பிறகு வெள்ளி அடையாளம் மாறிவிடும். அடுத்த வருடம்வரை காத்திருக்கவேண்டும். வெள்ளி அடையாளங்களை எனக்குச்சொல்லிக்கொடுத்தது அப்பாதான். ஆனால் நாங்கள் இப்போது இந்த இடங்களைத் தாண்டி நீண்ட தொலைவில் வந்தாகிவிட்டது.

அப்பா விசைப்படகில் வந்ததில்லை. கட்டுமரம்தான். என்னையும் அண்ணனையும் படிக்கவைக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். நான் எப்படியோ தப்பி வந்துவிட்டேன். அண்ணாவை ஒரு நாள் அவராகவே மீன்பிடிக்க கொண்டுசென்றுவிட்டு ஆழ்கடல் வந்ததும் துளவாயை ஒளித்து வைத்துவிட்டு அது கைநழுவிச்சென்றதாக பொய்சொல்லி கரைக்குதிரும்பமுடியாதென்று பயம் காட்டியிருக்கின்றார். அன்று அண்ணா கடலிலிருந்து பயந்து ஓடியவர்தான். இப்போது அவர் கடலுக்குள் சென்றால் வாந்தி மயக்கம் தான். அப்பா இறந்து இரண்டுவருடமாகின்றது.

“லேய் மத்தியாஸ், என்ன ஒத்தத்தூண்ட போடுவோமா?” – பத்றோஸ் சத்தமிட்டார்.

சூரியன் கடலிலிருந்து உதித்து மேலெழும்பிக்கொண்டிருந்தது. கரை கண்ணில் படவில்லை. மீனவர்களுக்கு கண்பார்வை சற்று அதிகம். நான் இப்போதுதான் கவனித்தேன் சூரியன் சற்று அதிர்ந்துகொண்டிருந்தது. இதை நான் சிறுவயதில் கவனித்திருக்கின்றேன். எங்கள் வீட்டுக் கூரை நிழல் திண்ணையில் விழும் அளவை வைத்துத்தான் நான் நேரம் கணித்து பள்ளிக்குச்செல்வது. திண்ணையில் ஒன்பது மணிக்கு அடையாளமாக ஒரு கோடு ஒன்றை ஆணியால் வரைந்திருப்பேன். அவ்வாறு திண்ணையில் அந்த கோடு அடையாளத்தில் நெருங்கிவரும் நிழலை கூர்ந்து பார்த்தால் நிழல் சூரிய ஒளியில் இணையும் பகுதி மென்மையாக அதிரும்.

படகு சூரியனிலிருந்து விலகி சென்றுகொண்டிருந்தது.

“போடுமி. எர அறுத்தாச்சா?” – நான் மறுகுரல் கொடுத்தேன் கண்ணைக்கசக்கிக்கொண்டு.

படகிலிருந்த எங்கள் நான்கு பேரில் மூத்தவர் பத்றோஸ். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுண்டு. பெரிய விசைப்படகில்தான் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்றுகொண்டிருந்தார். இருபது முப்பது நாட்கள் தொடர்ந்து ஆழ்கடலில் தங்கி சுறா, கேரைச்சூரை, நெய்மீன் போன்ற பெரிய மீன்கள் பிடிப்பது வழக்கம். அவரது உயரம் ஆறடியை விட அதிகம். உடல் திண்ணென்றிருக்கும். கறுத்த தேகம். வயிற்றில் வரை வரையாக இருக்கும். அதிகமும் சுறா பிடிப்பது கையால்தான்.

அதெற்கென்று “மட்டு” என்ற மீன்பிடி சாதனத்தை பயன்படுத்துவர்கள். இரண்டு மீட்டர் நீளமுள்ள நைலான் கயிற்றுத்துண்டுகளின் ஒருமுனையில் மிகப்பெரிய 15/0 அளவு அல்லது அதைவிட பெரிய தூண்டிலை இணைத்து மறுமுனையை பத்து பதினைந்து கிலோமீட்டர் நீளமுள்ள குட்டிவிரல் அளவு தடிமனுள்ள நைலான் கயிற்றில் நான்கு அல்லது ஐந்து மீட்டர் இடைவெளியில் தோரணம் போல் கட்டித் தொங்கவிடுவார்கள். நீண்ட நைலான் கயிற்றின் இடையிடையே பிடிக்கப்படும் மீனை கருத்தில்கொண்டு விதவிதமான எடைகொண்ட இரும்புத் துண்டுகளை கட்டியிருப்பார்கள். அனைத்து தூண்டிலிலும் சிறிய இரையை கொளுவி மொத்த தூண்டில்களையும் நீளமாக, விசைப்படகை மெதுவாக நகர்த்தி, கடலில் இறக்குவார்கள். நீண்ட நைலான் கயிற்றின் ஒருமுனை விசைப்படகிலிருக்கும். மறுமுனையில் ஒரு பெரிய மிதப்பானை கட்டியிருப்பார்கள். அது பத்துப் பதினைந்து கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் அனாதையாக மிதந்துகொண்டிருக்கும்.

மறுநாள் கையால் “மட்டை” ஐந்தாறுபேர் சேர்ந்து இழுப்பார்கள். படகில் பத்திற்க்கும் அதிகமானபேர் இருப்பார்கள். விசைப்படகும் மெதுவாக ஓடி ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ மீன்கள் தூண்டில்களில் சிக்கியிருக்கும். சுறாபோன்ற பெரிய மீன்களை அடித்துக் கொல்வதற்கு குறுந்தடியும், கொழுவி எடுப்பதற்கு கொக்கியும் உண்டு. சுறாவை தூக்கி மேலே கொண்டுவரும்போது அதன் தலையில் குறுந்தடியால் அடித்து அதன் இறப்பை உறுதி செய்துவிட்டு அதன் கழுத்துப்பகுதியில் கொழுவி, அதன் வால்பகுதியை இன்னொரு சுருக்குக்கயிற்றால் கட்டி அதை குறுக்காக விசைப்படகினுள் தூக்கிப்போடவேண்டும். மீன்களை போட்டுவைக்க விசைப்படகில் பெரிய ஐஸ் ரூம் உண்டு. விசைப்படகின் மப்ளரில் வலை அல்லது மட்டு அகப்பட்டால் பத்றோஸ்தான் கடலில் குதித்து அதை மப்ளரிலிருந்து அறுத்து விடுவார்.

விசைப்படகில் மீன்பிடிப்பதன் முக்கிய பிரச்சனையே இரவு நேரத்தில் அவ்வழியாகச்செல்லும் கப்பல்கள் விசைப்படகு மீது மோதிவிடும் அபாயம்தான். எனவே பொதுவாக அவ்வழியாகக் கப்பல்கள் கடக்கும் நேரத்தை ஓரளவிற்கு கணித்து வைத்திருப்பார்கள்.

பத்றோஸ் ஒரு நாள் ஒரு பெரிய சுறாவை மற்றவர்களுடன் சேர்ந்து தூக்கியபோது மயங்கி விழுத்திருக்கின்றார். அவரை கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த இன்னொரு விசைப்படகை ஒயர்லெஸ் வாயிலாக கண்டுபிடித்து கரைக்கு அனுப்பியிருக்கின்றார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றபோது அவருக்கு வந்திருப்பது ஒருவித வாதநோய். அளவுக்கதிகமாக சோகமாகவோ அல்லது சந்தோசமாகவோ இருக்கும்போது உடல் முழுவது வியர்த்து கைகால் தூக்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவார். இதை சரிசெய்ய முடியாது. இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் தியானம் செய்ய வேண்டும்.

எனவே எங்கள் ஊர் பங்குத் தந்தையின் சிபாரிசின் பேரில் கொச்சிக்குப் பக்கத்திலுள்ள சாலக்குடியில் பல மாதங்கள் தியானம் செய்துவிட்டு கடந்த வாரம்தான் எனது படகில் மீன்பிடிக்க வந்தார். வாதநோய் கட்டுப்பாட்டிலிருந்தது. எங்கள் படகின் வசதி என்னவென்றால் காலையில் மீன்பிடிக்கச்சென்றுவிட்டு மதிய நேரமே கரைக்கு திரும்பிவிடுவோம். இந்த தொழில்தான் அவருக்கும் வசதியாகப் பட்டது.

அவருக்கு இப்போதும் “மட்டு” போன்ற ஒன்றால் மீன்பிடிப்பதில்தான் மிகுந்த விருப்பம். ஆனால் எங்களது படகு சிறிதாகையால் நாங்கள் ஒற்றைத் தூண்டில் மட்டும் பயன்படுத்துவதுதான் வழக்கம். நீண்ட நைலான் கயிற்றில் ஒரு பெரிய தூண்டில் மட்டுமே இணைத்து அதில் சிறு மீனை இரையாக கொழுவி கடலில் தூக்கி எறிய வேண்டும். தூண்டில் பக்கத்தில் ஒரு இரும்புத்துண்டும் கட்டப்பட்டிருக்கும். மறுமுனையை படகின் குறுக்குப்படியில் கட்டிவைத்துவிட்டு நாம் போகும் திசையில் படகை ஓட்ட வேண்டும். இந்த தூண்டிலில் பெரிய மீன்கள்தான் சிக்கும். மீன் சிக்கியதா இல்லையா என்பது படகு ஓட்டத்தின் விசைமாற்றத்திலிருந்தே நான் தெரிந்துகொள்வேன். அதுபோல் நைலான் கயிற்றின் இழுவிசையிலிருந்தும்.

“ஆ…அறுத்தாச்சு…லேய் கிளீடா தூக்கி எறியிலே.” பத்றோஸ் குரல் கொடுத்தார்.

கிளீடன் தூண்டிலை எனக்குப் படாதவாறு படகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தான்.

கிளீடன் எனது சிறு வயது நண்பன். எனக்கும் கிளீடனுக்கும் திருமணமாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஒன்றாகத்தான் படித்தோம். அதன் பிறகு கடலுக்கு வந்துவிட்டோம். கிளீடனின் அப்பாவிற்க்கு சொந்தமாக கரமடி உண்டு. இந்த மீன்பிடி உத்தி போர்சுக்கீசியர்களால் இந்திய கடற்கரைப்பகுதிக்கு

கொண்டுவரப்பட்டது. இதை எனக்குச்சொன்னது என் அப்பாதான்.

கரமடி என்பது சுமார் ஐம்பதடி நீளமும் இருபதடி அகலத்திற்க்கு பெட்டிபோல் தலைகீழ் ‘ப’ வடிவில் பட்டு நூல் அல்லது பஞ்சு நூலால் செய்த வலையால் பின்னியிருப்பார்கள். வாய்பகுதி மட்டும் திறந்திருக்கும். இதனுன் ஒரு சிறு சுருக்கும் உண்டு. மடி என்பது ஆயிரம் மனிதர்களை ஒரே நேரம் உண்ணும் திமிங்கலம். சுருக்கு அதன் தொண்டை. மடியின் உள் செல்லும் மீன்கள் சுருக்கு காரணமாக வெளியில் வரமுடியாது. மடியின் வாய் பகுதியின் இரண்டு பக்கமும் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சிறு நீள் வலையை இணைத்திருப்பார்கள். நீள் வலையின் இடையிடையே மிதப்பானும் சிறு கற்களும் கட்டியிருப்பார்கள். கடலில் கிடக்கும் மிதப்பான்கள் முத்து மாலைபோல் வளைந்து கிடக்கும். வலைகளின் மறுமுனையை ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரிலிருந்து செய்யப்பட்ட வடத்தை இணைத்திருப்பார்கள். மடியின் வாய் பகுதியின் இரண்டு பக்கமும் இணைக்கப்பட்ட நீள் வலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வடமும் ஒரே நீளமுள்ளதாக இருக்கும். கடலில் மீன் மண்டலிடும் தூரத்திற்குத் தகுந்ததுபோல் நீள்வலை மற்றும் வடத்தின் நீளம் மாறுபடும்.

மடியை நீள் வலை மற்றும் வடத்தோடு இணைத்து அதை ஒரு பெரிய வள்ளத்தில் ஏற்றி கரையிலிருப்பவர்களிடம் வடத்தின் ஒரு முனையை கொடுத்துவிட்டு, வள்ளத்தை ஆழ்கடல் நோக்கி தண்டுவலித்துச்செல்வார்கள். இந்த வடத்தின் முனையை பதினைந்திலிந்து இருபத்தைந்து பேர் பிடித்திருப்பார்கள். வள்ளத்தின் நடுவில் இரண்டுபேர் நின்று வடத்தை தூக்கி எறிந்துகொண்டிருப்பார்கள். வடம் தீர்ந்தபிறகு சிறு நீள் வலையை வள்ளத்திலிருந்து வெளியில் வீசிக்கொண்டிருப்பார்கள். வலையும் தீர்ந்து மடியை கடலில் போடும்போது வள்ளம் கரையிலிருந்து விலகி ஆழ்கடலில் வந்துவிட்டிருக்கும். மடியை கடலில் வீசியதும் வள்ளத்தை மீண்டும் கரை நோக்கி தண்டுவலித்து நகர்த்திக்கொண்டு வருவார்கள். வள்ளம் கரையில் அணையும்போது வடத்தின் ஒரு பகுதி மட்டுமிருக்கும். இதன் முனையையும் பதினைந்திலிந்து இருபத்தைந்து பேர் பிடித்திருப்பார்கள்.

கரமடி பார்ப்பதற்கு பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் மிகப் பெரிய அட்டியல் அல்லது ஒற்றைக் குரிசுள்ள தங்கச்சங்கிலிபோலவும், அதை அவள் கழுத்திலிருந்து பல எறும்புகள் வரிசையாக நின்று கழுத்து நோக்கி இழுப்பது போலவுமிருக்கும். அல்லது, மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள நார் இணைக்கப் படாத மிகப்பெரிய பூமாலையை கடலிலிருந்து அதன் இரண்டு நார் பகுதியையும் கரையிலிருந்து இழுப்பதுபோல்.

கரைப்பகுதியில் இருக்கும் இரண்டு வடத்தின் முனைகளுக்கும் குறைந்தது 500மீட்டர் இடைவெளியாவது இருக்கும். அப்போது தான் அதிகமான மீன் கிடைக்க ஏதுவாக இருக்கும். இரண்டு பக்க வடத்தையும் கரையிலிருந்து ஓரே வேகத்தில்

இழுக்கவேண்டும். அது மடி கரை நோக்கி வந்துகொண்டிருப்பதிலிருந்தே தெரியும்.

கிளீடன் வடம் இழுத்திழுத்து அவனது கைகள் காப்புகாஞ்ச்சிருக்கும். மஞ்சள் நிறத்தில். கையை விரித்தால் பலகைபோலிருக்கும். வடம் முடிந்து நீள்வலை கரையில் வரத்துவங்கியதும் கிளீடன் கடலினுள் நீந்தி மடி நோக்கிச்செல்வான். அவன் மடியின் மேல்பகுதில் அது கரைசேர்வதுவரை நீந்திக்கிடந்து மடியினுள் மீன்கள் செல்கின்றதா என்று கவனமாக நீரினுள் பார்த்து கரையிலிருப்பவர்களுக்கு தன் தலையில் கட்டியிருக்கும் துவர்த்துத்துண்டை எடுத்து கையால் ஆட்டி சைகை செய்வான். இவன் சைகையின் பொருளறிந்து சிலர் இரண்டு நீள்வலைகளுக்கும் இடையில் கடலில் குத்தித்து சத்தமாக இரண்டு கைகளாலும் பேய்பிடித்தவர்கள்போல் “ஓம்…ஓம்” என்று அசுரத்தனமாக கடலை அறைவார்கள். இந்த சத்தம் கேட்டு மடியினுள் செல்லாமல் தயங்கி நிற்கும் மீன்கள் மடியினுள் செல்லும். உள் சென்றால் உட்பகுதியிலிருக்கும் சுருக்கு காரணமாக மீன்களுக்கு வெளிவரமுடியாது. மடியில் ஏதேனும் பிரச்சனை என்றால் கிளீடனே மடியின் வெளிப்பக்கத்தில் குளித்துச்சென்று அதை சரிசெய்வான். தவறுதலாக மடியினுள் அகப்பட்டு வெளிவர முடியாமல் இறந்தவர்களுமுண்டு. நான் அவனோடு செல்ல முயன்றால் கூட மறுத்துவிடுவான். எனக்கு ஏதாவது விபரீதம் நடக்குமோ என்று அவனுக்கு பயம்.

இப்போது மென்மையான கரைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. படகு எதிர்கொண்ட சிறு அலைகளை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்த்துகொண்டிருந்தது. நேரம்செல்லச்செல்ல படகின் ஓட்டம் தடைபட்டது. கிளீடன் வந்து தூண்டில் கயிற்றை தொட்டுப்பார்த்தன். மீன் அகப்பட்டதன் அறிகுறியில்லை. நான் எஞ்சினை பயத்தில் நிறுத்திவிட்டேன்.

ஸ்டெபின் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். ஸ்டெபினிற்கு பதினைந்து வயதிருக்கும். மஞ்சள் நிறம். கடலுக்கு வந்த பிறகு நிறம் மங்கியிருத்தது. நெற்றியில் சிறு தழும்புண்டு. இரண்டு மூத்த சகோதரிகள். வீட்டில் ஓரே பையன். இவனது வருவாயில் தான் அவர்களிருவருக்கும் சீட்டு பிடித்து திருமணம் நடத்த வேண்டும்.

பத்றோஸ் “எனக்க ஏசுவே” என்றலறிக்கொண்டு படகின் இரண்டு பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தர். அவருக்கு பிடிகிடைத்தது. டெக்கைத்திறந்து பார்த்தபோது நீர் முழுக்க நிரம்பியிருந்தது.

“கிளீடா இது தப்பாது பாத்துக்கோ. வெள்ளம் மொத்தமும் முங்கியாச்சு.” பத்றோஸின் தொண்டையடைத்தது. எனக்கு கைகால் ஓடவில்லை.

கிளீடன் குறுக்குப்படியில் கட்டியிருந்த தூண்டில் கயிறை அவிழ்த்து கடலில் எறிந்து

விட்டு ஸ்டெபினின் பக்கத்தில் நின்றுகொடிருந்தான்.

“ஸ்பீடக் கூட்டி கரயப்பாத்து ஓடு.” பத்றோஸ் சத்தமிட்டார்.

சிறிது தூரம் ஓட்டினேன்.

“ஓய், வள்ளம் இனியும் ஓடாது. வள்ளத்த மறிச்சிலாமா?” என்றேன்.

படகை மறித்துவிட்டால் அதன்மேல் அனைவரும் உட்கார்ந்திருக்கலாம். பத்றோஸ் என்னைத் தேடி பின்னோக்கி வந்து மண்ணெண்ணை இருந்த கன்னாசைத் திறந்து மண்ணெண்ணையை வெளியில் கொட்டினார். கிளீடனும் ஓடிவந்து டீசலிருந்த கன்னாசைத் திறந்து அதையும் வெளியில் ஊற்றினான். மண்ணெண்ணை கன்னாசை விடவும் டீசலிருந்த கன்னாஸ் சற்று சிறிது.

படகை கவிழ்த்துவதற்காக அனைவரும் ஒருபக்கம் சாய்ந்ததும்தான் தாமதம் படகு நீரினுள் மூழ்கிச்சென்றது.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது தண்ணீர் இருந்த கன்னாசை நான் எடுத்திருக்கலாம். அது டெக்கினுள் இருந்தது. ஆனால் அதற்கு நேரமில்லை. அனைத்தும் ஒன்றிரெண்டு நிமிடங்களிலேயே நடந்து விட்டது.

படகிலிருந்து குதித்த நான் மூழ்கி மேலெழும்பியபோது ஸ்டெபின் நீந்திக்கொண்டிருந்தான். பத்றோஸிடமும் கிளீடனிடமும் மண்ணெண்ணையும் டீசலுமிருந்த கன்னாசுகள் கையிலிருந்தது. படகு தரை நோக்கி ஓடி மறைந்தது. எவ்வாறு படகின் அடிப்பகுதில் சேதம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. நேற்று படகை கடற்கரையில் இழுத்து மேலேற்றியபோது அடியில் பெரிய கல் ஏதாவது கிடந்திருக்கும். அது உரைந்து சேதமாகியிருக்கும். அதுதான் ஒரே காரணமாகப்பட்டது. பயத்தில் யோசிக்கமுடியவில்லை.

நாங்கள் நான்குபேரும் வட்டமாக நீந்திக் கொண்டிருந்தோம். வானம் தெளிவாக இருந்தது. கடல் தங்கம்போல் மின்னிக்கொண்டிருந்தது.

கிளீடன் என்னை கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தான்.

“லேய் பேசாதேல…உயிரு தப்புதேக்கொள்ள வளியப்பாருல” – பத்றோஸ் அவனை இடைமறித்தார்.

“பின்ன…, ஓய் கரயத்தேடி நீஞ்சலாமா?” கிளீடன் பத்றோஸைப் பார்த்துக் கேட்டான்.

எனக்கு அதுதான் சரியென்று பட்டது. ஆனால் எந்த கரையைத் தேடி. கரை எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்குத் தெரியும் எங்கள் உள்ளுணர்வு கரை எங்கே என்று சொல்லிவிடும். எல்லாம் முடிந்தது. சுறாமீன் வந்து எப்போது வேண்டுமானாலும் காலைக் கடித்து இழுத்துச்செல்லலாம். எத்தனை சுறாக்களையும் அதன் குஞ்சுகளையும் கொன்றிருப்போம். என் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. என்னைக்கண்டு ஸ்டெபினும் அழுதுகொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நீந்துவது?

எனக்கு பல பல எண்ணங்கள் ஓடி மறைந்தது. கட்டுமரத்தில் அப்பாவிடம் தேம்பியழும் அண்ணா, தலைவிரி கோலமாக ஒப்பாரிவைக்கும் அம்மா, அடுக்களையில் படுத்திருக்கும் தங்கை. அப்பா கரையிலிருந்து நீந்தி வந்து என்னை காப்பாறுவது போல், நாங்கள் நீந்திக்கொண்டிருக்கும் கடல் வற்றுவதுபோல், ஒரு பெரிய அலைவந்து எங்களை கரைக்கு கொண்டுசெல்வதுபோல், டால்பின் எங்களை அதன் முதுகில் ஏற்றிச்செல்வதுபோல், ஹெலிகாப்டர் வந்து காப்பாற்றுவது போல், ஏசு தண்ணீரில் நடந்து வருவதுபோல், இளனீரும் தண்ணீரும் நிரம்பிய விசைப்படகுகள் எங்களைக் காப்பாற்ற வருவதுபோல். ஏதேதோ நினைவுகள்.

கிளீடனும் பத்றோஸும் கன்னாசில் படுத்திருந்தனர். நானும் ஸ்டெபினும் நீந்திக் கொண்டிருந்தோம்.

“ஆ…நீந்துவோம். கிளீடா, நாள புதனாழ்ச்ச. காலத்த அந்த வளியாட்டு ஒண்ணுரெண்டு கப்பலு போவும். கப்பலில்லேங்கி வேற ஏதாவது வள்ளம் வரும். இந்த ரெண்டு கன்னாசையும் பிடிச்சிண்டு ரெண்டு மூணு நாளு கெடக்கலாம்” பத்றோஸ் நிதானமாகவே சொன்னார்.

அவர் கப்பலென்று சொன்னதும்தான் எனக்கு சிறிது உயிர்தப்புவேன் என்ற நம்பிக்கை வந்தது.

“ஓய், சிறாவு காலக் கடிச்சாதா?” எனது பயம் வெளிப்பட்டது. கடலில் நீந்தும்போது கால்பாதம் வெளுத்திருக்கும். அதை மீனென்று கருதி சுறா வந்து கடிக்கும். அப்படியென்றால் நான் அணிந்திருக்கும் சட்டையை கிழித்து காலில் கட்டிக்கொள்ளலாம்.

“இல்ல பிள்ள, ரெத்த வாட உண்டெங்கித்தான் வரும். இண்ணு நெலவுண்டு. நம்ம காலு வெளிச்சம் அதுக்கு தெரியாது. அதனால பேடியில்ல.” பத்றோஸ் விளக்கினார்.

பத்றோஸ் அவரிடமிருந்த கன்னாசை ஸ்டெபினிற்குக் கொடுத்துவிட்டு அவன் பக்கத்திலிருந்தார். நான் கிளீடனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரியும்.

“இந்தால, சோறு, சோறு, வயிறா இந்தால” என்று சொல்லிவிட்டு கிளீடன் கன்னாசை என்னைப்பார்த்து தள்ளிவிட்டான். நான் பழய சோறு நிறயச்சாப்பிடுவேன். அதனால் என்வயிறும் சற்று பருத்திரிக்கும். அதனால் என்னை ஒத்த வயதுடைய நண்பர்கள் என்னை சோறு அல்லது வயிறன் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.

நான் கன்னாசில் ஏறியதும் எனது வயிறு கலங்கியது. நான் சிறிது தூரம் கன்னாசில் நீந்திச்சென்று அதிலிருந்து இறங்கி கன்னாசைப்பிடித்துக்கொண்டு கழுத்தளவு நீரில் நின்றேன். சிறிது நேரத்தில் என்னைச்சுற்றி சிறுசிறு மீன்கள். அவற்றின் தேவை முடிந்ததும் அவை ஓடி மறைந்தன. என் இடது கையை பின்னாலிருந்து எடுத்து கன்னாசில் ஏறி அவர்கள் பக்கதில் நீந்திச்சென்றேன்.

சிறு அலைகள் கன்னாசில் மோதும் “சக்..சக்…” சத்தத்தைத் தவிர நிசப்தம். எல்லையில்லாது பரந்த வெள்ளிப் பளிங்குத் தரையில் நான்கு தலை சிற்ப்பங்கள் மட்டும் ஒற்றை ஒன்று பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் உயிரிருந்தது. வெள்ளைத் தரையுள்ள மிகப்பெரிய மாதாக்கோயிலின் தலைவாசலில் பீடம் நோக்கி நிற்கும் நான்கு எறும்புத் தலைகள். பச்சைச்சேலை உடுத்திய மாதா. என்னை நோக்கி கைவிரித்து நின்றாள். என்னை அழைப்பதுபோல். நான் சிறுவனாக, மொட்டையடித்து தலையில் வட்டவடிவில் பட்டம் வைத்திருந்தேன். என் கழுத்தில் ஜெபமாலையுண்டு. நான் அவளை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது கிளீடன் என் முகத்தில் தண்ணீரை உள்ளங்கையை குவித்து அடித்தான். என் தலைமுடி முழுக்க தண்ணீரில் நனந்து, தண்ணீர் முகம் வழி வடிந்தது. திடுக்கிட்டு நெற்றியில் படர்ந்திருந்த முடியை மேல் நோக்கி நீவிவிட்டேன். இரண்டு மாதங்கள் வெட்டாத முடி. கண் எரிந்தது.

கிளீடன் என்னோடு நீந்தி வந்துகொண்டிருந்தான். கரை நோக்கி மெதுவாக நீந்திக்கொண்டிருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துறை கிராமத்தில் மூன்று பேர் நீந்தி கரைசேர்ந்த ஞாபகம் வந்தது. நீந்தி கரை சேர்ந்துவிடலாம். நம்பிக்கை கடல்தொடும் வானம்போல் எங்கள் முன் நகர்ந்துகொண்டிருந்தது. இல்லை, நகராமல் அது அங்கேயே நிலைத்திருந்தது.

சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. கடலைப்பார்க்கும் போது என் கண்கள் கூசியது. கண்ணை மூடி என்னைக் கடக்கும் அலைகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மீனவர்கள் கடலலையை எண்ணுவது அவர்களது பாலபாடம். கடலலை அதிகமாக இருக்கும் ஆனியாடி காலத்தில் கட்டுமரத்தை சேதமின்றி கடலுக்குள் செலுத்தவேண்டுமென்றால் அலைகளின் இடைவெளியை சரியாக கணிக்கவேண்டும். சில நேரங்களில் இரண்டு அலைகளின் இடைவெளி நீண்டிருக்கும். அந்த நேரம் பார்த்து கட்டுமரத்தை கடலில் செலுத்தவேண்டும். அந்த நேரத்தை சரியாக கணிக்க அலைகளை எண்ணவேண்டும்.

எனக்கு முன்னிருந்த வானம் வெளிர்நீலமாக இருந்தது. கன்னாசின்மேல்படுத்து என் நெஞ்சு சிவந்திருந்தது. சற்று எரிச்சலிருந்தது. எனது முழுக்கை சட்டையக் கழற்றி, சட்டையின் ஒரு கை நுனியை கன்னாசின் கைப்பிடியிலும் மறுகையை என் இடுப்பைச்சுற்றி கட்டிவிட்டு நீந்தினேன். என்முன்னால் இரண்டு தோள்பகுதியோடு சேர்ந்த தலைகள் எந்த அசைவுமின்றி முன்னகர்ந்துகொண்டிருந்தது. தலைகளின் நடுவே சிறிய கன்னாசில் ஸ்டெபின். ஒரு சிறிய கறுத்த மீன்போல் கன்னாஸ் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அது எப்போது வேண்டுமென்றாலும் என்னை விழுங்கலாம். சில நேரம் கன்னாஸ் என்னை முந்தியது. அதிலிருந்து காற்றின் திசையை யூகித்துக்கொண்டேன். சரியான திசையில் தான் நீந்திக்கொண்டிருக்கின்றோம்.

சூரியன் எங்கள் பின்னாலிருந்தது. அம்மாவின் ஞாபகம் வந்தது. நான் இறந்துகொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா? தெரியும். அழுகையாக வந்தது. இப்போது அடுப்பில் விறகு வைத்து சோறு சமைக்கும் நேரம். இப்போது அவள் வைக்கும் விறகில் தீபிடிக்காது. ஆமாம் அடுப்பெரியாது. அதிலிருந்தே அவள் புரிந்துகொள்வாள். இதைப்போல் இதுக்கு முன் நடந்ததுண்டு. என்னுடைய மூன்று மாமாக்கள் விழிஞ்சம் துறைமுகத்தில் அவர்களுக்குச்சொந்தமான விசைப்படகு வைத்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். சனிக்கிழமை சாயங்காலம் வீட்டுக்கு வந்து விட்டு ஞாயிறு மாலையில் மீண்டும் விழிஞ்சம் செல்வார்கள். அவர்கள் வரும்போது பூவார் வரை பேருந்தில் வந்துவிட்டு, பூவாறிலிருந்து பொழியூர் கொல்லங்க்கோட்டுக்கு வள்ளத்திலோ, பொழி ஓடவில்லையென்றால் நடந்தோ வருவார்கள். அங்கிருந்து எங்களூர் ஐந்தாறு கிலோமீட்டர்தான்.

ஒரு நாள் அவர்கள் பூவார் வந்து சேரும்போது இருட்டிவிட்டிருந்தது. பொழி ஓடிக்கொண்டிருந்தது. நெய்யாறு கடலில் இரைச்சலோடு கலந்துகொண்டிருந்தது. அப்போது ஆற்றில் வள்ளம் இல்லை. எனவே பொழியைக் கடக்க மூவரும் சேர்ந்து நீந்தியிருக்கின்றார்கள். பொழியின் மையத்தில் சென்றவுடன் ஒரு மாமா சுழியில் சிக்கி பொழியில் அடித்துச்செல்லப்பட்டார். பொழியின் சுழியில் அகப்பட்டு கடலில் அடித்துச்செல்லப்பட்டால் சாவு உறுதி. மற்ற இருவரும் பொழிகடந்து கடற்கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும்போது இவர்களைத்தேடி இறந்தவர் நடந்து வந்துகொண்டிருந்தார். வந்தவர் இவர்களின் சகோதரர்தான் என்று உறுதிசெய்துகொண்டு ஆச்சரியத்தில் அவரை விசாரித்தபோது அவர் சொன்னார்:

“லேய், நான் சுழியில சிக்கினதும் பொழிச்ச போக்கில போனேன். கடலப்பாத்து நீஞ்சினேன். பொழி கடலில சேருத இடம் வந்ததும் எனக்க மூச்ச பிடிச்சிண்டி குளிச்சு போயி மண்ணப்பிடிச்சு காலால சவுட்டி, மண்ணோட சேந்து மூச்சிருக்கித வர உந்தி போனேன். மூச்சு முட்டி மேலவந்து பாத்தா சுழியெல்லாங் களிஞ்சு கடலுக்க வெலங்க வந்தாச்சு. வெள்ளத்த குடிச்சு பாத்தேன். நல்ல வெள்ளம். இப்படி ஒரு வெள்ளத்த நான் இதுவர குடிச்சதில்ல.”

“இப்பிடி நீந்த ஆரு சொல்லித்தந்தா? நானெங்கி செத்தேன்.”

“யாரு சொல்லித்தர. அந்த நேரம் பாத்து தோணிச்சு.”

“லேய், அதுக்கு பொழிச்ச நடுக்க ஒரு பாற உண்டுல. அது இடிச்சங்கி….”

“இப்பம் அந்த பேச்ச விடு. வா..நம்ம லூசியாளுக்க வீட்டில போயி ஆளுக்கு ஒவ்வொர குப்பி சூடு சாராயம் அடிச்சிலாம்ல.”

இது நடக்கும்போது அம்மா மாமாக்களுக்கு சமைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அடுப்பில் தீ அணைந்தது. சிரமப்பட்டுதான் அடுப்பு ஊதி ஊதி பத்தவைக்கவேண்டியிருந்தது. மாமாக்கள் வர நேரமாவதனால் அவர்களுக்கு ஏதோ விபரீதம் நடப்பதாக அப்போது என்னிடம் அம்மா சொன்னாள்.

இப்போதும் அம்மா அதே அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். ஊதி ஊதி கண்களில் நீர்வடிந்து இருமிக்கிகொண்டிருந்தாள். வானம் இருட்டியிருந்தது. நிலவு மேலெழுந்து வந்தது. எனக்கு இப்போது கை சற்று தளர்ந்திருந்தது. காற்று திசைமாறியடித்தது. ஒரு இனம்புரியாத நாற்றம். ஸ்டெபின் வாந்தியெடுத்தான். மஞ்சள் நீரும் அதோடு கொஞ்சம் கபமும் வந்தது. பத்றோஸும் கிளீடனும் அவன் பக்கத்திலிருந்தனர். என்னை அவர்கள் பக்கத்தில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். எனக்கும் வாந்திவருமென்று. எனக்கு வாந்தி வருவதன் அறிகுறியில்லை. ஸ்டெபினுக்கு கன்னாசில் கிடக்க முடியவில்லை. தளர்ந்திருந்தான். அவனை அவர்கள் இருவரும் கன்னாசை அவன் நெஞ்சுப்பகுதியில் அமிழ்த்தி வைத்து அவனை மெதுவாகப் பிடித்திருந்தனர். இப்போது கிளீடன் மற்றும் பத்றோஸின் புஜங்கள் நீரில் அமிழ்ந்து கழுத்து வரை, தாடைக்குக் கீழ்வரை, நீரிருந்தது. நான் சிறிது நேரம் கன்னாசை கிளீடனுக்கு கொடுத்தபோது வேண்டாமென்று சொல்லிவிட்டான். நேரம் செல்லச்செல்ல அவன் என் பக்கத்தில் வருவதை தவிர்த்தான்.

எனது தலைவலிக்க ஆரம்பித்தது. இப்போது இந்த கடல் வற்றாதா? வானத்தில் எங்கோ தொலைவில் ஊர்ந்து செல்லும் மேகங்கள். பல வடிவங்களில். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு யானை. தும்பிக்கை நீண்டிருந்தது. அது கடல் நீரை தொடுவானத்தில் கீழிறக்கி உறிந்து குடித்துக்கொண்டிருந்தது. இப்போது வானம் முழுக்க யானைகள். துதிக்கையை நீட்டி கீழிறெங்கி வந்துகொண்டிருக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் கடல் நீர் முழுவதையும் குடித்துவிடும். தப்பிவிடலாம்.

யானைக்கூட்டத்தின் நடுவில் ஒரு வெள்ளை யானை. என்னது வெள்ளையானையா? என் மனம் அதிர்ந்தது. இந்த வெள்ளையானையை எனக்குத் தெரியும். மிக நெருக்கத்தில். தாத்தா கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“கேட்டியா மக்கா…புனித சவுரியாரிக்க கதை சொன்னேனிலே. அவரு ஆளு கொறச்சு பொக்கம் கொறவு. நம்ம பொக்கந்தான் வரும். ஒரு குட்டி ஆனயப்போல…பின்ன ஆளு நல்ல செவப்பாக்கும்”

“பின்ன நீங்க வெள்ள ஆனயெண்ணு சொன்னி? அப்போ செவப்பானயா?” நான் சற்று சந்தேகத்தோடு கேட்டேன். எனக்கு கதையின் துவக்கம் சரியாகப்படவில்லை.

அப்பாவின் பக்கத்தில் படுத்திருந்தேன். என் தலையை தடவிவிட்டு தொடர்ந்தார்.

“மக்கா அது வெள்ளயான தாம்பில.”

“யாரு, சவரியாரா?”

“சும்மாயிரி மக்கா. சரியாட்டு சொன்னா…பரிசுத்த சவரியாரு இந்தியாவில வந்து கிறுத்தியமாட்டு ஒரு பத்து வர்ஷம் கழிஞ்சாக்கும் இந்த சம்பவம் நடந்தது. சத்தியமாட்டு நடந்ததாக்கும்.

அப்பமெல்லாம் போர்ச்சுகீசணும் நம்ம இந்தியாவுக்கு வர கொறஞ்சது பந்த்ரெண்டு பதிமூணு மாசமாகும். இப்பம் உள்ளதுபோல வலிய கப்பலொண்ணும் இல்ல. தோணியாக்கும். வலிய தோணி. பதினஞ்சு இருவது வலிய ஆனய அதில ஏத்தி கொண்டுபோலாம்.

போர்ச்சுகீசிலி ஆன இல்ல. ஆனய பாக்க அங்குள்ள ராஜாவுக்கு ஆச. ராஜா ஆசிச்சா பின்ன வேற பேச்சொண்டா? இந்தியாவணும் ஒரு ஆனய கொண்டுபோக அவரு ஆடறிட்டாரு.

ஒடனத்தானே இங்கு ஒரு ஆனய ரெடி பண்ணியாச்சு. ஒரு குட்டியான. வெள்ளக் களறாக்கும். முயலுக்க களறு. அதுக்க கூட அத பாத்துக்க ரெண்டு பாகம்மாரும் உண்டு.”

“அப்போ அதுக்க தள்ள யான?”

“இல்ல மக்கா, குட்டிய மட்டுந்தான் கொண்டுபோனானுவ.”

எனக்கு அழுகையாக வந்தது. நான் அப்பா அம்மாவைப் பிரிந்து அனாதையாக செல்வதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

“அதுக்க பேரெனுத்த?”

“ஓம்…அத மறந்தேன். அதுக்க பேரு ராஜா.”

“பேரு கொள்ளாம். பெறவு?”

“பின்ன ஒரு நாளு, நல்ல நேரம்பாத்து, பூசவச்சு, ஆனச்ச நெத்தியில குறுக்காட்டு மூணு வரையிட்டு, தோணியில ஏத்தி யாத்ற தொடங்கினானுவ.”

“கடலில போனா அதுக்கு சர்த்தலு வராதா?”

“வராதா பின்ன…அத கெவனிச்சத்தானே பாகம்மாரு. பின்ன அதச்சொல்லெண்டாம்…அவம்மாரு ரெண்டுபேருக்கும் சர்த்தலும் பேதியும். வெள்ளக்காறம்மாராக்கும் பாகம்மாருக்க பீய அள்ளுதது. எப்படியும் ஆன போய் சேரணுமில்ல. அல்லங்கி ராஜாவுக்கு ஆரு பதிலு சொல்ல. இருந்தாலும் சர்த்தலும் பேதிக்கும் மருந்துண்டு. எப்படியோ ஒருவளியாட்டு ஒரு வருஷம் கழிஞ்சு போர்ச்சுகீசிலி ஆன போய் சேந்தாச்சு. அங்கு போனா இதப்பாக்க வலிய கூட்டம். ரோட்டில ஆளு நிக்க எடமில்ல. இந்த ராஜா ஆனயப் பாத்தபெறவு ஸ்பெயினு ராஜாவுக்கு இந்த ஆனயப் பாக்க ஒரு கொதி. அது இந்த ராஜாவுக்க சொந்தக்காறனாக்கும்.”

“எந்த ராஜாவுக்க சொந்தக்காறன்? நம்ம ஆன ராஜாவுக்க சொந்தக்காறனா?”

“இல்ல மக்கா போர்ச்சுகீசு ராஜாவுக்க சொந்தக்காறன். பின்ன யானய ஒரு தேரில வச்சு அந்த தேர அம்பது அறுவது குதிர இளுத்துக்கொண்டு ஸ்பெயினுக்கு போச்சு. அது ஒரு டிசம்பர் மாசமாக்கும். ஏசு பெறக்குத மாசம். நல்ல குளிரு. தறையெல்லாம் வெறும் ஐசாட்டாக்கும் கெடக்கும். அது நம்ம ஆன ராஜாவுக்கு சரிபெட்டில்ல. அதுக்கு நல்ல அசுகம். பின்ன போற வளியெல்லாம் நல்ல கூட்டமாக்கும். கொறச்சு நாளு ஆனய ஒரு ஹோட்டலுக்க கிட்ட நிறுத்தி வைத்தியம் பாத்திட்டிருந்தானுவ நம்ம பாகம்மாரு. அந்த ஹோட்டலுக்கு நல்ல வருமானம். ஒடனத்தானே ஹோட்டலுக்க பேர ‘இங்கிளீசிலி ஆன’ – யெண்ணு மாத்தினானுவ.”

“இங்கிளீசிலி ஆனச்ச பேரு எலிபண்டு.”

“மண்ணிட்டா மண்ணு கீள விளாது மக்கா. அப்படி ஆனயப்பாக்க ஆளு கூட்டம். ஆனச்ச ரோகம் கொறச்சு சரியானப்பம் ஸ்பெயினுக்கு யாத்திர தொடங்கியாச்சு. போற வளியில ஒரு தள்ள அவளுக்க கையில கொழந்தையையும் வச்சுக்கொண்டு கூட்டதில யானய பாக்க வந்தா. அவ நிண்ணது கொறச்சு ஒயரத்திலயாக்கும். யான இவளுக்க கிட்ட வந்ததும் இவளுக்க கையிலிருந்த குழந்த கீழ விழுந்தது. தறயில விழுந்தா கொழந்த பெளச்சாது. இவ ஓரே கூப்பாடு. இதக்கண்ட ஆன அதுக்க

தும்பிக்கைய வச்சு கொளந்தயப் பிடிச்சது. ஆனச்ச கண்ணில தண்ணி வடியிது.”

“எதுக்கு ஆன கரயுது?”

“பின்ன, அதும் ஒரு குட்டிதானே. அதுக்க தள்ள ஆனச்ச ஓர்ம வராதா?.”

எனக்கு அழுகையாக வந்தது.

“பெறவு?”

“குளந்தய மூணு சுத்து சுத்தி ஆசீர்வதிச்சு பாகனுக்க கையில குடுத்தது. இது நடந்த அடுத்த வர்ஷம் அதுக்கு இனியும் ரோகம் வந்து செத்துப்போச்சு. அது மரிச்சது செரியாட்டு பரிசுத்த சவரியாரு மரிச்ச ஒரு வருசம் களிஞ்சு. ஒரேபோல டிசம்பர் மாசம். பரிசுத்த சவரியாரப்போல நம்ம ஆனயயும் இப்பொளும் ஒரு இடத்தில பாடம் பண்ணி வச்சிருக்குதாம்.”

“எந்த இடத்தில?”

“அது செரியாட்டு தெரியெல்ல மக்கா.”

“அப்போ அந்த ரெண்டு ஆனப்பாகம்மாரும்?”

“அங்க வல்லதும் வெள்ளக்காரிய கல்லியாணங்கெட்டிக்காணும். இப்போ அவுங்க ரெண்டுபேருக்க சந்ததிகளும் வெள்ளக்காறங்கதான்.”

இப்போது கடலில் தண்ணீர் எதுவும் வற்றியிருக்கவில்லை. வானத்தில் யானைகள் ஒன்றுமில்லை. நன்கு இருட்டிவிட்டிருந்தது. என்னால் கண்திறந்து பார்க்க முடியவில்லை. வானத்தில் சோத்துமீனும், ஆறாமீனும், கப்பல்வெள்ளியும், குரிசுவெள்ளியும், விடிவெள்ளியும் ஒவ்வொன்றாக எங்களைக் கடந்து வானத்தில் மறைந்தது.

நேரம் விடிந்திருந்தது. எனது கால்கள் தளர்ந்திருந்தது. நான் கன்னாசின் கைப்பிடியைப் பிடித்திருந்தேன். என்னால் கன்னாசின் மேல் ஏற முடியவில்லை. உடல் பாரமாக இருந்தது. கை நடுங்கிக்கொண்டிருந்தது. நான் கன்னாசின் பிடியை விட்டால் தண்ணீரில் மூழ்கிவிடுவேன். நேற்று நான் மூழ்கி மூழ்கிப் பார்த்தேன். என்னால் மூழ்க முடியவில்லை. ஸ்டெபின் என்னைப்போல் கன்னாசைப் பிடித்துக்கொண்டிருந்தான். பத்றோஸும் கிளீடனும் வாயிலேறும் தண்ணீரை துப்பிக்கொண்டிருந்தனர். பத்றோஸின் கண்களில் எந்தவித பயமுமில்லை. ஆனால் கிளீடன் அழுதுகொண்டிருந்தான். பத்துமணிவரை அவர்கள் இருவரும் தாக்குபிடிக்க

முடியுமா? இன்னும் இரண்டு மூன்று மணி நேரங்கள். இன்னும் ஒரு பத்து நிமிடம் அவர்களால் நீந்த முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

கிழக்கிலிருந்து ஒரு கறுத்த எறும்பு ஊர்ந்து வந்தது. தூத்துக்குடியிலிருந்து கொச்சிக்கு செல்லும் சரக்குக் கப்பல். சரியாக அதன் பாதையில் வந்திருக்கின்றோம். அது எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் இன்னும் மூன்று மணி நேரெமென்ன கப்பல் வரும் நம்பிக்கையில் இன்று முழுவதும் கன்னாசைப் பிடித்துக் கொண்டிருப்பேன். அது இன்னும் எங்கள் பக்கம் வர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும்.

திரும்பி கிளீடனின் கண்களைப் பார்தேன். என்னிடம் ஏதோ சொல்லவருவதுபோல். என்னிடம் பிரியாவிடை கேட்பதுபோல். அழுகையோடு மூக்கிலிருந்து சளியும் நீர்போல் வடிந்துகொண்டிருந்தது. கை தூக்கித் துடைக்க அவனுக்கு சக்தியில்லை. தலையை அசைக்கின்றான். மெதுவாக இமைக்கின்றான். அவன் கண்ணை மூடிக்கொண்டால் கீழே சென்றுவிடுவான். இதோ எல்லாம் முடிந்ததென்கின்றான். கடைசி கணம். என் சக்தி முழுவதையும் திரட்டி கன்னாசை கிளீடனிடம் தள்ளி விட்டுக்கொண்டு நான் கடலின் ஆழத்தில் மூழ்கிச்சென்றேன்.

(முற்றும்)

=================

சில வட்டார வழக்குச்சொற்கள்:

1. கன்னாஸ் – போத்தல்

2. துளவா – மூங்கிலை இரண்டாக கிழித்து செய்த துடுப்பு. ஏழு அல்லது எட்டடி நீளமிருக்கும்

3. வெலங்க – தொலை தூரத்தில்

4. தூண்ட – தூண்டில்

5. போடுமி – போடுங்கள்

6. எர – இரை மீன்

7. கரயப்பாத்து – கரையைத் தேடி

8. வளியாட்டு – வழியாக

9. பிடிச்சிண்டு – பிடித்துக்கொண்டு

10. சிறாவு – சுறாமீன் 11. வாட – மணம்

12. பேடி – பயம்

13. பொழி – பொழிமுகம். ஆறு கடலில் சேருமிடம்

14. பொக்கம் – உயரம்

15. தள்ள – தாய்

16. களறு – நிறம்

17. சர்த்தல் – வாந்தி