ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 2

டிசம்பர் ஒன்றாம் நாள் அமெரிக்காவின் நாசா ஒகி புயல் குறித்த சில தகவல்களை வெளியிட்டது. தற்போது நம்முடைய மீனவர்கள் பாதிப்பிற்குள்ளான புயல் பகுதியை அமெரிக்காவின் அகுவா மற்றும் சுவோமி செயற்கைக்கோள்கள் கடந்துசென்றபோது மேகமூட்டத்தின் குளர் அளவு -63 டிகிரி பாரன்ஹீட் (-53 டிகிரி செல்சியஸ்). இந்த மேகங்கள் மழையாக கடலில் விழும்போது, குறைந்தபட்சம் குளிர் அளவு உறைநிலைக்கும் குறிவாகவே இருக்கும். இதை மீனவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதன் காரணமாக படகுகள் சேதமாகி, கடலில் விழுந்த பல மீனவர்கள் இறந்திருக்கின்றார்கள். முக்கியமாக சிறுவர்களும் இளைஞர்களும், இதுவரை நமக்கு தெரிந்தது 14-20 வரையில்லானவர்கள் இறந்திருக்கின்றார்கள். இதில் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக கடலுக்குச் சென்றவர்கள். உறைநிலை குளிரை பெரியவர்களால் கூட எதிர்கொள்ளமுடியாது. இந்த உறை குளிரையும் தாக்குப்பிடித்து பல மீனவர்கள் தப்பியிருக்கின்றார்கள்.

மீனவர்களுக்கு புயல் குறித்த தகவல் தெரிந்தது அக்டோபர் 29-ம் தியதிக்குப் பிறகுதான். தகவலறிந்ததும் யாரும் தொழிலுக்குச் செல்லவில்லை. கடலில் புயலால் பாதிப்படைந்தவர்கள் புயல் குறித்த தகவல் தெரியாதவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் கூட, புயல் வந்தபிறகுதான் தகவல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாட்டின் அமைப்புகளால் மீனவர்களுக்கு தெரியப்படுத்த முடியுமென்றால் உங்களை மனிதர்களாக கணக்கிலெடுக்கமுடியாது. ஒவ்வொரு நாடும், குறைந்த பட்சம் ஒருவாரத்திற்கான எதிர்வரும் வானிலையை துல்லியமாக கணித்து வெளியிடுகின்றது. இந்தியாவால் ஒரு நாள் முன்கூட்டியே வானிலையை கணிக்க முடியவில்லை. எங்கோ தவறிருக்கின்றது. அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் ஒகி புயலை கடந்துசென்றது பதிவாகியிருக்கிறது. இந்தியாவின் எத்தனை செயற்கைக்கோள்கள் ஒகி புயல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது? இந்தியா அனுப்பும் செயற்க்கைக்கோள்கள் யாருக்கு? யாருடைய லாபத்திற்கு?

மீட்புப்பணிகள் டிசம்பம் ஒன்றாம் தியதிக்குப்பிற்குதான் துவங்கியது. நவம்பர் 30-ம் தேதி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு யார் பொறுப்பேற்பது? ஆழ்கடலில் ஏராளம் பிணங்கள் மிதந்ததை தாங்கள் கண்தாக மீனவர்கள் சொல்கிறார்கள். படகு கவிழ்ந்து நீச்சலடித்து வந்த மூன்று வள்ளவிளை மீனவர்கள் இறந்துவிட்டார்கள். வள்ளவிளையில் இதுவரை 8, இரவிபுத்தன்துறையில் 6, நீரோடியில் 12 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

இப்போதைய கணக்குப்படி (5/12/2017 மாலை 8:00 மணி) வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 37 விசைப்படகுகள் குறித்த தகவலில்லை. 500 மீனவர்களுக்கும் அதிகம். இந்திய கடற்படை கப்பல்கள் 60 நாட்டிகல் மைல்களுக்குள்ளாகவே தற்போது தேடுதல் நடத்துவதாக புகார்கள் எழுகின்றது. 60 நாட்டிகல் மைல்களுக்குள் இந்த விசைப்படகுகள் இல்லை. 100 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் தேடவேண்டும். அரசு நிர்வாகத்திடம் விசைப்படகுகளின் மிகத்துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடங்களிலிருந்து தாங்களாகவே மீண்டுவரும் மீனவர்கள், இந்தியாவின் கப்பல்களோ, விமானங்களோ அந்த பகுதியில் இதுவரை செல்லவில்லையென்று சொல்கின்றார்கள். கப்பல்களும் விமானங்களும் எங்கே தேடுதல் நடத்துகின்றது?

மீனவர்களும் தேடுதலில் ஈடுபடலாம் என்னும் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சில மீனவர்கள் தூத்துக்குடிக்கு சென்றார்கள். ஆனால், தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரை வரைத்தான் தேடமுடிமென்று மீனவர்களிடம் அதிகாரைகள் சொல்லியிருக்கின்றார்கள். நீங்கள் கடலில் எதற்கு தேடவேண்டும், ஊட்டியில் தேடுங்கள். சில ஊட்டிகளாவது கிடைக்கும். கறிவைத்து சாப்பிடுங்கள்.

ஒன்று கவனித்தால் தெரியும். இந்திய கடற்படையும், விமானப்படையும் ஒன்றிரெண்டு மீனவர்களாக தொடர்ந்து மீட்கின்றார்கள். தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கின்றது. மீட்புப்படைக்கு நன்றி. ஆனால், தாங்களாகவே கரைசேரும் மீனவர்கள் 200, 600, 900 என்ற கணக்கில் பெருந்தொகையாக வருகின்றார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் அரசு மீட்டதாகச் சொல்வது வருத்தத்திற்குரியது.

தற்போது மீனவர்களிடம் படகுகள் இல்லை. அல்லது அவர்களே அவர்களின் நண்பர்களை, உறவினரை தேடச்செல்வார்கள். அரசை கெஞ்சமாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களுக்கில்லை. இனியும் அரசாங்கத்தை நம்புவதிலும் அர்த்தமில்லை. மீனவர்கள் தங்களுக்கான தொழிநுட்பத்தையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும், ஒரு இணை அரசாங்கமாக அவர்களே செய்தாலொழிய மீனவர்களுக்கு எதிர்காலமில்லை.

இனயம் துறைமுகம் – ஒரு தகவல்பிழை

இனயம் துறைமுகம்  புத்தகத்திலிருக்கும் ஒரு தகவல்பிழையை நண்பர் N.D. தினகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்களது இனயம் துறைமுகம் புத்தகத்தை பார்த்தேன். பக்கம் 125 ல் தவறான தகவல் இருந்ததாலயே இந்த பதிவு.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1948 ல் நடைபெற்ற தேர்தலில் மட்டுமே மீனவருக்கு தனித் தொகுதி தரப்பட்டிருந்தது. அகஸ்தீஸ்வரம் ( கத்தோலிக்கர்) என்பதே அந்த தொகுதியின் பெயர். இதில் பரதவர் சாதியைச் சேர்ந்த அம்புரோஸ் வெற்றிபெற்றார்.
1949 ல் திரு-கொச்சி மாநிலம் உருவான பிறகு 1952 ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் விளவங்கோடு தொகுதியில் சைமன் வெற்றி பெற்றார். விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிட்டதால் 1954 ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக கொல்லங்கோடு தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிட்ட சைமன் வெற்றிபெற்றார்.
சைமன் வெற்றிபெற்ற அந்த 2 தொகுதிகளும் பொதுத் தொகுதிகள் ஆகும். சைமனை எதிர்த்து துரைசாமி போட்டியிட்டதால் அது மீனவர் தொகுதி என்று பின்னாளில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.”
உண்மைதான். கொல்லங்கோடு தொகுதி பொதுத்தொகுதியாகவே இருந்தது. நான் மீனவர்களின் தனித்தொகுதி என்று எழுதியது தகவல்களை சரிபார்ப்பதில் நடந்த பிழை. 1954-ம் வருடம் நடந்த தேர்தல் அறிக்கையை வைத்து சரிபார்த்தேன். அதில் திரு. சைமன் அலெக்ஸாண்டர், அவருக்கு எதிராக போட்டியிட்ட திரு. கொட்டில்பாடு துரைசாமி ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றது. எனவே அது மீனவர்களின் தனித்தொகுதி என்று எண்ணவேண்டியிருந்தது. சிறைமீன்கள் அதிகாரத்தில் 1954-ம் வருட தேர்தல் அறிக்கையையே குறிப்பில் சுட்டியிருக்கிறேன். தவறை சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.

நேதாஜி விருது

*நேதாஜி விருது*

தூத்தூர் பகுதியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக  நேதாஜி விருதை ‘தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு’ புதிதாக அறிவித்திருக்கின்றது. மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு தொடர்ந்து எழுதுவதற்காக நேதாஜி விருதிற்கு என்னை தேர்வு செய்திருக்கின்றார்கள். நேதாஜி விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தொடந்து எழுத ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேதாஜி விருத்திற்கான மின்னஞ்சலை  என்னால் நம்ப முடியவில்லை. நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்தவேண்டியிருந்தது. காரணம், என்னைவிட சாதனையாளர்கள் அங்கே ஏராளம் இருக்கின்றார்கள். இது தூத்தூர்  பகுதியில் எழுத்தை ஊக்கப்படுத்துவதற்கானது என்பதை அறிந்துகொண்டேன். இதன் வழியாக புதிய எழுத்தாளர்கள் உருவாகட்டும். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு கால்பந்தாட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற ஒரு அமைப்பு. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தூத்தூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டப்போட்டிகளை ஈஸ்டர் தினத்தில் நடத்துகின்றார்கள். இதில் தமிழகம் மற்றும் கேரளா அணிகள் விளையாடும். வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்வதுண்டு. இந்த வருட விழாவில் முதன்மை விருந்தினராக இந்திய அணுசக்திக் கழகத்தின் துணைச் செயலாளர் திரு. மெர்வின் அலெக்சாண்டர் கலந்து கொண்டு விழாவை கௌரவிக்கவிருக்கின்றார். கால்பந்தாட்ட விழா மேடையில்வைத்து நேதாஜி விருது வழங்கப்படும்.

தூத்தூர் கிராமம் கால்பந்தாட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஊர். தற்போது தூத்தூர் பகுதியென்றால், பொழியூர் கொல்லங்கோட்டிலிருந்து, இறையும்மன்துறை வரையிலான இரண்டு பொழிமுகங்களுக்கு இடைப்பட்ட பகுதி. ஏவிஎம் கால்வாயை தூர்வாரினால், தூத்தூர் ஒரு  அழகிய தீவுப்பகுதி. ஆனால், எனக்கு தூத்தூரென்றால் தூத்தூர், சின்னத்துறை மற்றும் இரவிபுத்தன்துறை என்னும் மூன்று ஊர்களும் இணைந்த பகுதி. கடற்கரை கிராமங்களில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தம். கால்பந்தாட்ட குழுக்கள் அந்தந்த ஊரின் முகம்.

ஒவ்வொரு ஊரிலும் கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, தூத்தூர் KRYC (Kennedy Rural Youth Club) கால்பந்தாட்ட அணியை விஞ்ச யாருமில்லை. இறையுமன்துறையிலிருந்து இரவிபுத்தன்துறை வரை ஐந்து ஊர்கள் இணைந்த விளையாட்டுக்குழு. வள்ளவிளையிலும் கொல்லங்கோட்டிலும் சிறந்த குழுக்கள் உண்டு.  தூத்தூரை தோற்கடிக்க வேண்டுமென்றால், கேரளாவிலிருந்து விளையாட்டு வீரர்களை ‘கடனெடுத்து’ வரவேண்டும். KRYCயின் முக்கியமான வீரரான இரவிபுத்தன்துறை திரு.தீர்த்தூஸ் கன்னியாகுமரி மாவட்ட அணிக்கு நீண்டகாலமாக பயிற்சியாளராக இருக்கின்றார். தற்போது KRYC இல்லை. தூரத்தூர் பகுதியின் ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி குழுக்கள். தற்போது KRYC-யின் இடத்தை பிடித்திருப்பது தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு.
தற்போது அரசு நிறுவனக்களின் கால்பந்து வீரர்களாக பல நண்பர்கள் வேலை பார்க்கின்றார்கள். தமிழக கால்பந்தாட்ட அணியில் தூத்தூர் கிராமத்திற்கு முக்கிய இடமுண்டு.  ஒருமுறை தூத்தூர் பகுதி விளையாட்டு வீரர்கள் ஒரு குழுவாக தமிழ அணிக்கு எதிராக விளையாடி வென்றார்கள்.

தற்போது இந்திய அளவிலான சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணியில் தூத்தூர் ரீகன் கேப்டனாக இருக்கின்றார். அவருடன், வள்ளவிளை ஜாக்சன் தாஸ், கொல்லங்கோடு ஷினுவும் அணியில் இருக்கின்றார்கள். என்னுடைய நண்பர் தூத்தூர் ஆன்றணி சேவியர் 2000-ல் சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக இருந்தார் [என்று நம்புகின்றேன்]. உச்சமாக இந்திய தேசிய கால்பந்து லீக் போட்டியில் தூத்தூர் ஷெரின் விளையாடினார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் வெளிநாட்டு அணிகளுக்கா விளையாடவேண்டும். அதையும் சாதித்துவிடுவார்கள்.

[நண்பர்கள் தூத்தூர் ஜுட்ஸ், இரவிபுத்தன்துறை ஜெகன், ராபினின் தம்பி ஜெகன், சின்னத்துறை எட்வின் ராஜ் ஆகியோரும் சந்தோஷ் கோப்பை போட்டியில் விளையாடியிருக்கின்றார்கள். தூத்தூரிலிருந்து ரீகன், பிரிட்டோ, மற்றும் ஜோபின், கொல்லங்கோடு ஷாஜின், இரவிபுத்தன்துறை சூசை ஆகியோர் ஐந்து பேர் கடந்த வருடம் சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணிக்காக விளையாடினார்கள் . அதுபோல், சந்தோஷ் கோப்பைக்கான புதுச்சேரி அணிக்காக  தூத்தூர் டயர்வின் 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் விளையாடினார்.]

என்னுடைய சிறுவயதில், ஆண்கள் அணிக்கு இணையாக தூத்தூர் பெண்கள் கால்பந்தாட்ட அணியும் மிகப்பிரபலம். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது மேழ்சி டீச்சர் வகுப்பு ஆசிரியையாக வந்திருந்தார். அவரது முதல் மாணவர்கள் நாங்கள். அவர் அப்போது எங்களுக்கு மிகவும் அறிமுகமானவராக இருந்தார். தூத்தூர் கால்பந்தாட்டக்குழுவின் சிறந்த வீராங்கனை. அடுத்த வருடம் மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் பள்ளியிலிருந்து தூத்தூர் பயஸ் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அப்போது கடற்கரைகளில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டும் காலகட்டம். தூத்தூர் மட்டும் கல்வியிலும் விளையாட்டிலும் எப்படி சிறந்து விளங்குகின்றது என்ற கேள்வி எனக்கு எப்போதுமுண்டு.

நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரண்டு மூன்று நாட்கள அவகாசத்தில் துறைவன் நாவலை ஊரில் வெளியிடுவதற்காக தூத்தூர் பகுதியின் முக்கியமான பெரியவர்களையும், என்னுடைய ஆசிரியர்களையும் அழைப்பதாக முடிவெடுத்து புனித பயஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், திரு. பெனடிக்ட் சாரை பார்க்கச்சென்றிருந்தேன். அப்போது, பல வருடங்களுக்குப்பிறகு, மேழ்சி டீச்சரை பள்ளியில் வைத்துக்கண்டேன்.  அப்படியேதான் இருக்கின்றார். எனக்குத்தான் வயதாகிவிட்டது. அடுத்த வருடம் அவர் ஒய்வு பெறவிருப்பதை புன்னகையோடு சொன்னார்.

பள்ளியில் மணியடித்து ‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஒருசில மாணவர்கள் மெதுவாக வந்தார்கள். “கிரேசி டீச்சர் நல்ல வேள ரிடையர்டு ஆயாச்சு. இல்லண்ணா தெரியப்பாத்தது. அயாளுக்க விசிலு இப்போ யாரிட்ட இருக்கு?” சின்னத்துறை கிரேசி டீச்சர். தன் விசில் சத்தத்தால் ஒட்டுமொத்த பள்ளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உடற்கல்வி ஆசிரியை.

கடந்த வருடம் கனடாவில் ஐவி-லிண்டாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது கிரேசி டீச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. லிண்டாவின் அம்மா. அவரது பேரக்குழந்தையை பார்க்க வந்திருந்தார். அவரது கல்வி, பள்ளிக்கூடம் மற்றும்  விளையாட்டு சம்பந்தமான அவரது அனுபங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தூத்தூர் பள்ளி நீச்சலிலும் சிறந்து விளங்கியது. மாணவிகளுக்கு ஆற்றில் வைத்து நீச்சல் பயிற்சி கொடுத்து டெல்லி வரை அழைத்துச் சென்றிருக்கின்றார்.

தூத்தூர் மகளிர் கால்பந்தாட்ட அணி ஒரு வரலாறு. ஒருவார கால அவகாசத்தில் தூத்தூர் பெண்கள் முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கி பயிற்சி கொடுத்திருக்கின்றார். அதில் என்னுடைய ஆசிரியை மேழ்சி டீச்சரும் உண்டு. அப்போது அந்த அணியில் வயது குறைந்தவர் அவர்தான். உயரமோ, குள்ளமோ, குண்டோ, ஒல்லியோ அனைவருக்கும்  ஒரே அளவிலான ஜெர்சி. தனித்தனி அளவில் ஜெர்சி  தைக்க கால அவகாசமின்றி உருவானது அந்த அணி.

“பிள்ள, எல்லாம் எனக்க பிள்ளைங்க. நான் என்ன சொன்னாலும் கேக்கும். ராணி, மேழ்சி, பின்ன எனக்க தங்கச்சி… அவ இப்போ போலீஸ் இன்ஸ்பெக்டராட்டு இருக்கா. அதுபோல, புத்தன்துறை அமலோற்பவம். அவளும் இப்போ இன்ஸ்பெக்டர்தான்.”

“நான் ஒண்ணு சொன்னா நீ நம்பமாட்ட… நான் எனக்க மூத்த மகள பிரவிச்சு ஒரு மாசம் முடியுததுக்குள்ள, விளையாட்டுப்போட்டிக்கு ஸ்கூல் பிள்ளைகளையும் கொண்டு டெல்லிக்கு போனேன். எப்பவும் வெளியூருக்கு  வெளையாட்டுப்போட்டிக்கு கொழந்தைகளையும் கொண்டு போகணும். மூத்தவள கவனிச்சதெல்லாம் எனக்க தங்கச்சிதான்.”

அவ்வாறு உரம் போட்டு வளர்க்கப்பட்டது தூத்தூர் கிராமத்தின் விளையாட்டுத்திறன். இதே அர்ப்பணிப்பை இப்போதும் அனைவரிடமும் காணலாம். பெண்கள் கால்பந்து அணியை மீண்டும் உருவாக்கவேண்டுமென்று நேதாஜி நிர்வாகிகளிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கின்றேன். இந்தியாவின் பெண்கள் கால்பந்தாட்டத்திற்கான இடம் காலியாகவே இருக்கின்றது.

அதுபோல், கடலோர மக்கள் சங்கத்தை உருவாக்கிய திரு. சேவியர் சார், திரு. ரைமண்ட் சார், அதைப்போல், சிறந்த கால்பந்தாட்ட வீரரும், என்னுடைய கணித ஆசான் முனைவர் வில்பிரட் சார் போன்ற பலரும்   இருக்கின்றார்கள். இவர்களுக்கு முன் நான் ஒன்றுமில்லை. இவர்களை வைத்துக்கொண்டு எனக்கு விருது என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. எனவே பலமுறை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.

“இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜோஸ் அண்ணனுக்கும் உண்டு. இதுபோல வேற ஆட்களுக்கும் உண்டு. உங்களுக்கு சமுதாய அக்கறையோடு எழுதுவதில. வாழ்த்துக்கள்!” என்று நண்பர் சொன்னதும் திருப்திவந்தது. தூத்தூர் பகுதியின் சாதனையாளருக்கான 2017-ம் ஆண்டிற்கான நேதாஜி விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தூத்தூர் பகுதியின் சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்த அனைத்து பெரியவர்களையும் நேதாஜி நூலகம் வாழ்நாள் சாதனையாளர்கள் – அப்படியொரு விருதை இதுவரை அறிவிக்காத பட்சத்தில் – விருதளித்து கவுரவிக்க வேண்டுமென்று நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நேதாஜி விருதிற்கு என்னை தேர்தெடுத்ததற்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தூத்தூர் நேதாஜியின் ஒருநாள் கால்பந்தாட்டத் திருவிழா வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜல்லிக்கட்டு

*ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! இனயம் துறைமுகத்தை எதிர்ப்போம்!!*

2001-ம் வருடம் நமது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சுறாமீன் பிடிப்பதை ஒட்டுமொத்தமாக தடைசெய்தது. சுறாமீனினம் அழிந்துவிடும் என்று காரணம் சொல்லப்பட்டது. நமது மீனவர்கள் பாரம்பரிய முறையில் வெறும் கையினால் சுறாமீன் பிடிப்பவர்கள். எப்படிப்பிடித்தாலும், சுறாமீனின் உற்பத்திக்கு அதிகமாக நம்மால் அவற்றை பிடிக்க முடியாது. கேரளா மற்றும் தமிழக மீனவர்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக அந்த தடை மாற்றப்பட்டது. தற்போது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இனயம் துறைமுகம் என்னும் பெயரில் மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது.

அதைப்போல், மாடுகளுக்கு ஆபத்தானதென்று சொல்லிக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை என்னும் பெயரில் தமிழ் பாரம்பரியமான ஏறுதழுவுதலுக்கு தடைசெய்திருக்கின்றார்கள். இந்த தடையின் காரணமாக ஏராளமான நாட்டுமாடு இனங்கள் அழிந்துவிட்டதாக விவசாயிகள் சொல்கின்றார்கள். அழிந்த இனங்களின் வரிசையில் காறாம்பசுவும் இருக்கின்றது. காறாம்பசு எங்கள் பகுதியிலும் இருந்தது.  காறாம்பசுவின் இடத்தை தற்போது அநேகமாக ஜெர்ஸி பிடித்திருக்கும்.

பாரம்பரியம் என்பதற்கும் அதிகமாக, நமது நாட்டுமாடு இனங்கள் காக்கப்படவேண்டும். விவசாயிகளும், பாரம்பரிய மீனவர்களும் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக மட்டும் இருக்கட்டும்.

மாணவர்களின் அறவழிப்போராட்டம் வெல்லட்டும்!

 

நெய்தல் கலைச்சொற்கள்

நெய்தல் கலைச்சொற்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. துறைவன் (கிறிஸ்) மட்டுமல்லாது கொற்கை (ஜோ டி’குரூஸ்), ஆழிசூழ் உலகு(ஜோ டி’குரூஸ்), கண்ணீர் சமுத்திரம் (குறும்பனை சி பெர்லின்), நீந்திக்களித்த கடல்(குறும்பனை சி பெர்லின்), கடல் தண்ணி கரிக்குது(குறும்பனை சி பெர்லின்), கடல் நீர் நடுவே (கடிகை அருள்ராஜ்) ஆகிய நெய்தல் ஆக்கங்களிலுள்ள கலைச்சொற்களும் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நெய்தல் படைப்புகளில் ஏதேனும் வார்த்தைகள் புரியாமலிருந்தால் தெரியப்படுத்தவும். அந்த வார்த்தைகளின் அர்த்தங்களும் இங்கே தரப்படும்.

நெய்தல் கலைச்சொற்கள்

துறைவன் – புத்தகம் என் பார்வையில்

[மரிய ஜாண், பூத்துறை எழுதியது.]
நூலின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆண்டனிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படிக்கும்போத 20/25 வருடங்களுக்கு முன்பு அழைத்து செல்கிறது.    இரையுமன்துறை  முதல் நீரோடி வரை உள்ள 8 கிராமங்களும் தங்களது தனிதன்மை கொண்ட மொழியால் வேறுபட்டு உள்ளன. இதுபோல் வேறு எங்குமே காண முடியாது என எண்ணுகிறேன். நமது வட்டார மொழியை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். நமது அடுத்த தலைமுறை இந்த வட்டார மொழிகளை இது போன்ற ஒருசில புத்தகங்களில் மட்டும் தான் பார்த்து தெரிந்து கொள்ள இயலும் என நம்புகிறேன்.
=======================
ஆழிச்சுழி
=======================
ஆனியாடி இடிகரை மற்றும் மரம்புடி தொழிலை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

“போ…போ…”

“போ…ல…போ…ல…”

“கீளாட்டுபோ…கீளாட்டுபோ… ”

“மலத்துலே…மலத்துலே…”

“தொளா…தொளா…”

“தொளா…ல    தொளா…ல”

“கீளாட்டு தொளா…கீளாட்டு தொளா…”

இந்த சத்தத்தை வைத்தே வீட்டில் இருக்கும் பெண்களும், பெரியவர்களும் மரம் கடல் தாண்டி சென்றதையும், கடல் அடித்து கரை திரும்பியதையும் கூறுவார்கள்.

மரம்புடியாளி மரம் புறப்பட்ட பிறகு அடுத்த மரத்தை தேடி ஓடும் காட்சி, யுத்தகளத்தில் போர் வீரர்கள் ஓடுவதை போல தோன்றும். சிறு வயதில் கடற்கரையில் நின்று மரம் புறப்படும் காட்சியை பார்த்ததை,  இப்பொது நினைக்கும் போது ஆங்கில action திரைப்படம் பார்த்தது போல் ஒரு உணர்வு.

ஆனியாடி மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் முன்பே சீலாந்தி பட்டை போட்டு கொதிக்க கொதிக்க சுடு தண்ணி வீட்டின் முன்பு பெரிய பானைகளில் காச்சுவர்கள். இதற்காகவே எனது ஆத்தாவால்(பாட்டியால்) எங்களது வீட்டின் முன்பு ஒரு சீலாந்தி மரம் வளர்க்கபட்டது.
முழுவதும் படிக்க: http://www.mariajohnpoothurai.blogspot.com/2016/01/blog-post.html

துறைவன் – ஒரு வாசக அனுபவம்

துறைவனுக்கு நண்பர் காளி பிரசாத் எழுதிய மதிப்புரை.

//துறைவன் முழுக்க முழுக்க கடலும், கடல் சார்ந்த மனிதர்களும் கொண்ட ஒரு நெய்தல் நிலத்தின் வாழ்க்கை பதிவு என சொல்லலாம். பரதவன், துறைவன்என பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் சமுதாயத்தை சார்ந்த முக்குவர் என்றொரு பிரிவினரோடு இரு தலைமுறை காலம் பயணப்படும் நாவல் இது. நாவலை சுவாரசியமாக்குவது அதில் க்றிஸ் தரும் தகவல்கள். கலிங்க யுத்தம்,புனித சவேரியார் வருகை, கத்தோலிக்கம் மற்றும் லண்டன் மிஷனுக்கான உரசல்கள், குறிப்பாக வள்ளத்தை குறித்தான வர்ணனைகள் மற்றும் ஜிபிஎஸ், வயர்லெஸ் போன்ற உபகரணங்களை பரதவர் கையாளும் முறைகள், திசைகள் குறித்தான குழப்பம் , விளக்கம் என தகவல்களை வரவேற்பறை பன்னீர் போல் தெளிக்காமல் நன்றாக சுண்ணாம்பு தடவி, சீவல் வைத்து தாம்பூலமாகவே தருகிறார். இது இரு சிறுகதைகளுக்குப்பிறகான இவரின் முதல் நாவல் என்பது நம்புவதற்கு சிரமமாக உள்ளது.//