நேதாஜி விருது

*நேதாஜி விருது*

தூத்தூர் பகுதியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக  நேதாஜி விருதை ‘தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு’ புதிதாக அறிவித்திருக்கின்றது. மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு தொடர்ந்து எழுதுவதற்காக நேதாஜி விருதிற்கு என்னை தேர்வு செய்திருக்கின்றார்கள். நேதாஜி விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தொடந்து எழுத ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேதாஜி விருத்திற்கான மின்னஞ்சலை  என்னால் நம்ப முடியவில்லை. நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்தவேண்டியிருந்தது. காரணம், என்னைவிட சாதனையாளர்கள் அங்கே ஏராளம் இருக்கின்றார்கள். இது தூத்தூர்  பகுதியில் எழுத்தை ஊக்கப்படுத்துவதற்கானது என்பதை அறிந்துகொண்டேன். இதன் வழியாக புதிய எழுத்தாளர்கள் உருவாகட்டும். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு கால்பந்தாட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற ஒரு அமைப்பு. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தூத்தூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டப்போட்டிகளை ஈஸ்டர் தினத்தில் நடத்துகின்றார்கள். இதில் தமிழகம் மற்றும் கேரளா அணிகள் விளையாடும். வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்வதுண்டு. இந்த வருட விழாவில் முதன்மை விருந்தினராக இந்திய அணுசக்திக் கழகத்தின் துணைச் செயலாளர் திரு. மெர்வின் அலெக்சாண்டர் கலந்து கொண்டு விழாவை கௌரவிக்கவிருக்கின்றார். கால்பந்தாட்ட விழா மேடையில்வைத்து நேதாஜி விருது வழங்கப்படும்.

தூத்தூர் கிராமம் கால்பந்தாட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஊர். தற்போது தூத்தூர் பகுதியென்றால், பொழியூர் கொல்லங்கோட்டிலிருந்து, இறையும்மன்துறை வரையிலான இரண்டு பொழிமுகங்களுக்கு இடைப்பட்ட பகுதி. ஏவிஎம் கால்வாயை தூர்வாரினால், தூத்தூர் ஒரு  அழகிய தீவுப்பகுதி. ஆனால், எனக்கு தூத்தூரென்றால் தூத்தூர், சின்னத்துறை மற்றும் இரவிபுத்தன்துறை என்னும் மூன்று ஊர்களும் இணைந்த பகுதி. கடற்கரை கிராமங்களில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தம். கால்பந்தாட்ட குழுக்கள் அந்தந்த ஊரின் முகம்.

ஒவ்வொரு ஊரிலும் கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, தூத்தூர் KRYC (Kennedy Rural Youth Club) கால்பந்தாட்ட அணியை விஞ்ச யாருமில்லை. இறையுமன்துறையிலிருந்து இரவிபுத்தன்துறை வரை ஐந்து ஊர்கள் இணைந்த விளையாட்டுக்குழு. வள்ளவிளையிலும் கொல்லங்கோட்டிலும் சிறந்த குழுக்கள் உண்டு.  தூத்தூரை தோற்கடிக்க வேண்டுமென்றால், கேரளாவிலிருந்து விளையாட்டு வீரர்களை ‘கடனெடுத்து’ வரவேண்டும். KRYCயின் முக்கியமான வீரரான இரவிபுத்தன்துறை திரு.தீர்த்தூஸ் கன்னியாகுமரி மாவட்ட அணிக்கு நீண்டகாலமாக பயிற்சியாளராக இருக்கின்றார். தற்போது KRYC இல்லை. தூரத்தூர் பகுதியின் ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி குழுக்கள். தற்போது KRYC-யின் இடத்தை பிடித்திருப்பது தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு.
தற்போது அரசு நிறுவனக்களின் கால்பந்து வீரர்களாக பல நண்பர்கள் வேலை பார்க்கின்றார்கள். தமிழக கால்பந்தாட்ட அணியில் தூத்தூர் கிராமத்திற்கு முக்கிய இடமுண்டு.  ஒருமுறை தூத்தூர் பகுதி விளையாட்டு வீரர்கள் ஒரு குழுவாக தமிழ அணிக்கு எதிராக விளையாடி வென்றார்கள்.

தற்போது இந்திய அளவிலான சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணியில் தூத்தூர் ரீகன் கேப்டனாக இருக்கின்றார். அவருடன், வள்ளவிளை ஜாக்சன் தாஸ், கொல்லங்கோடு ஷினுவும் அணியில் இருக்கின்றார்கள். என்னுடைய நண்பர் தூத்தூர் ஆன்றணி சேவியர் 2000-ல் சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக இருந்தார் [என்று நம்புகின்றேன்]. உச்சமாக இந்திய தேசிய கால்பந்து லீக் போட்டியில் தூத்தூர் ஷெரின் விளையாடினார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் வெளிநாட்டு அணிகளுக்கா விளையாடவேண்டும். அதையும் சாதித்துவிடுவார்கள்.

[நண்பர்கள் தூத்தூர் ஜுட்ஸ், இரவிபுத்தன்துறை ஜெகன், ராபினின் தம்பி ஜெகன், சின்னத்துறை எட்வின் ராஜ் ஆகியோரும் சந்தோஷ் கோப்பை போட்டியில் விளையாடியிருக்கின்றார்கள். தூத்தூரிலிருந்து ரீகன், பிரிட்டோ, மற்றும் ஜோபின், கொல்லங்கோடு ஷாஜின், இரவிபுத்தன்துறை சூசை ஆகியோர் ஐந்து பேர் கடந்த வருடம் சந்தோஷ் கோப்பைக்கான தமிழக அணிக்காக விளையாடினார்கள் . அதுபோல், சந்தோஷ் கோப்பைக்கான புதுச்சேரி அணிக்காக  தூத்தூர் டயர்வின் 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் விளையாடினார்.]

என்னுடைய சிறுவயதில், ஆண்கள் அணிக்கு இணையாக தூத்தூர் பெண்கள் கால்பந்தாட்ட அணியும் மிகப்பிரபலம். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது மேழ்சி டீச்சர் வகுப்பு ஆசிரியையாக வந்திருந்தார். அவரது முதல் மாணவர்கள் நாங்கள். அவர் அப்போது எங்களுக்கு மிகவும் அறிமுகமானவராக இருந்தார். தூத்தூர் கால்பந்தாட்டக்குழுவின் சிறந்த வீராங்கனை. அடுத்த வருடம் மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் பள்ளியிலிருந்து தூத்தூர் பயஸ் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அப்போது கடற்கரைகளில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டும் காலகட்டம். தூத்தூர் மட்டும் கல்வியிலும் விளையாட்டிலும் எப்படி சிறந்து விளங்குகின்றது என்ற கேள்வி எனக்கு எப்போதுமுண்டு.

நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரண்டு மூன்று நாட்கள அவகாசத்தில் துறைவன் நாவலை ஊரில் வெளியிடுவதற்காக தூத்தூர் பகுதியின் முக்கியமான பெரியவர்களையும், என்னுடைய ஆசிரியர்களையும் அழைப்பதாக முடிவெடுத்து புனித பயஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், திரு. பெனடிக்ட் சாரை பார்க்கச்சென்றிருந்தேன். அப்போது, பல வருடங்களுக்குப்பிறகு, மேழ்சி டீச்சரை பள்ளியில் வைத்துக்கண்டேன்.  அப்படியேதான் இருக்கின்றார். எனக்குத்தான் வயதாகிவிட்டது. அடுத்த வருடம் அவர் ஒய்வு பெறவிருப்பதை புன்னகையோடு சொன்னார்.

பள்ளியில் மணியடித்து ‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஒருசில மாணவர்கள் மெதுவாக வந்தார்கள். “கிரேசி டீச்சர் நல்ல வேள ரிடையர்டு ஆயாச்சு. இல்லண்ணா தெரியப்பாத்தது. அயாளுக்க விசிலு இப்போ யாரிட்ட இருக்கு?” சின்னத்துறை கிரேசி டீச்சர். தன் விசில் சத்தத்தால் ஒட்டுமொத்த பள்ளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உடற்கல்வி ஆசிரியை.

கடந்த வருடம் கனடாவில் ஐவி-லிண்டாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது கிரேசி டீச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. லிண்டாவின் அம்மா. அவரது பேரக்குழந்தையை பார்க்க வந்திருந்தார். அவரது கல்வி, பள்ளிக்கூடம் மற்றும்  விளையாட்டு சம்பந்தமான அவரது அனுபங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தூத்தூர் பள்ளி நீச்சலிலும் சிறந்து விளங்கியது. மாணவிகளுக்கு ஆற்றில் வைத்து நீச்சல் பயிற்சி கொடுத்து டெல்லி வரை அழைத்துச் சென்றிருக்கின்றார்.

தூத்தூர் மகளிர் கால்பந்தாட்ட அணி ஒரு வரலாறு. ஒருவார கால அவகாசத்தில் தூத்தூர் பெண்கள் முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கி பயிற்சி கொடுத்திருக்கின்றார். அதில் என்னுடைய ஆசிரியை மேழ்சி டீச்சரும் உண்டு. அப்போது அந்த அணியில் வயது குறைந்தவர் அவர்தான். உயரமோ, குள்ளமோ, குண்டோ, ஒல்லியோ அனைவருக்கும்  ஒரே அளவிலான ஜெர்சி. தனித்தனி அளவில் ஜெர்சி  தைக்க கால அவகாசமின்றி உருவானது அந்த அணி.

“பிள்ள, எல்லாம் எனக்க பிள்ளைங்க. நான் என்ன சொன்னாலும் கேக்கும். ராணி, மேழ்சி, பின்ன எனக்க தங்கச்சி… அவ இப்போ போலீஸ் இன்ஸ்பெக்டராட்டு இருக்கா. அதுபோல, புத்தன்துறை அமலோற்பவம். அவளும் இப்போ இன்ஸ்பெக்டர்தான்.”

“நான் ஒண்ணு சொன்னா நீ நம்பமாட்ட… நான் எனக்க மூத்த மகள பிரவிச்சு ஒரு மாசம் முடியுததுக்குள்ள, விளையாட்டுப்போட்டிக்கு ஸ்கூல் பிள்ளைகளையும் கொண்டு டெல்லிக்கு போனேன். எப்பவும் வெளியூருக்கு  வெளையாட்டுப்போட்டிக்கு கொழந்தைகளையும் கொண்டு போகணும். மூத்தவள கவனிச்சதெல்லாம் எனக்க தங்கச்சிதான்.”

அவ்வாறு உரம் போட்டு வளர்க்கப்பட்டது தூத்தூர் கிராமத்தின் விளையாட்டுத்திறன். இதே அர்ப்பணிப்பை இப்போதும் அனைவரிடமும் காணலாம். பெண்கள் கால்பந்து அணியை மீண்டும் உருவாக்கவேண்டுமென்று நேதாஜி நிர்வாகிகளிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கின்றேன். இந்தியாவின் பெண்கள் கால்பந்தாட்டத்திற்கான இடம் காலியாகவே இருக்கின்றது.

அதுபோல், கடலோர மக்கள் சங்கத்தை உருவாக்கிய திரு. சேவியர் சார், திரு. ரைமண்ட் சார், அதைப்போல், சிறந்த கால்பந்தாட்ட வீரரும், என்னுடைய கணித ஆசான் முனைவர் வில்பிரட் சார் போன்ற பலரும்   இருக்கின்றார்கள். இவர்களுக்கு முன் நான் ஒன்றுமில்லை. இவர்களை வைத்துக்கொண்டு எனக்கு விருது என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. எனவே பலமுறை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.

“இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜோஸ் அண்ணனுக்கும் உண்டு. இதுபோல வேற ஆட்களுக்கும் உண்டு. உங்களுக்கு சமுதாய அக்கறையோடு எழுதுவதில. வாழ்த்துக்கள்!” என்று நண்பர் சொன்னதும் திருப்திவந்தது. தூத்தூர் பகுதியின் சாதனையாளருக்கான 2017-ம் ஆண்டிற்கான நேதாஜி விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தூத்தூர் பகுதியின் சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்த அனைத்து பெரியவர்களையும் நேதாஜி நூலகம் வாழ்நாள் சாதனையாளர்கள் – அப்படியொரு விருதை இதுவரை அறிவிக்காத பட்சத்தில் – விருதளித்து கவுரவிக்க வேண்டுமென்று நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நேதாஜி விருதிற்கு என்னை தேர்தெடுத்ததற்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தூத்தூர் நேதாஜியின் ஒருநாள் கால்பந்தாட்டத் திருவிழா வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சுஜாதா விருது புனித சவேரியாருக்கு சமர்ப்பணம்

எழுத்துலகில் எனக்கும் துறைவனுக்கும் கிடைத்திருக்கும் என் முதல் இலக்கிய விருதான உயிர்மையின் சுஜாதா விருதை மீனவர்களின் ஞானத்தந்தை புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு சமர்ப்பிக்கின்றேன். புனித சவேரியாரின் கருணை எழுத்துலகிலும் தனிவாழ்க்கையிலும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தட்டும்.

Saint Francis XavierSujatha Award

துறைவனுக்கு சுஜாதா விருது

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைத்து வழங்கும் 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா விருதிற்கு துறைவன் நாவல் தேர்வாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளைக்கும்,  தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் என் நன்றி!

Sujatha Award 2016