ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர்

2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியைப் போன்ற மோசமான சேதத்தை ஒக்ஹி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டதில் இதுவரை 25பேர் இறந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. உயிர்ச்சேதம் எத்தனை என்று தெளிவாகத்தெரிய பல நாட்கள் ஆகும். ஆழ்கடலில் புயலினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தூத்தூர் பகுதி சார்ந்த சுமார் 250 படகுகளின் துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500ற்கும் அதிகமான மீனவர்கள் இருப்பார்கள். இதைவைத்து எளிதாகவே அவர்களை காப்பாற்ற முடியும். நமக்கு தேவை அதிமான கப்பல்களும், மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் மட்டுமே.
நவம்பர் 20 தியதி ஒக்ஹி புயலுக்கான தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலம் உருவானது. ஆனால், அதை யாரும் தொடர்ந்து கவனிக்கவில்லைபோலும். திடீரென்று நவம்பர் 30ம் தியதி மீனவர்களுக்கு கடலில் போகக்கூடாதென்று அறிவிப்பு வெளியானது. அனைத்து ஊர் கோயில்களிலும் கோயில்மணியடிக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாதென்று எச்சரிக்கப்பட்டார்கள். அதன் பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அப்படியென்றால் ஏன் இவ்வளவு பாதிப்பு என்று கேள்வி எழும்.
தென்மேற்கு கடற்கரையின் மீன்பிடிமுறைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.காலையில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மதியத்திற்கு பிறகு திரும்புவது. இதில், கட்டுமரம், பாய்மரம், வெளிப்பொருத்து விசைப்படகு அடக்கம். வெளிப்பொருத்து விசைப்படகுகள் வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டன்துறை கிராமங்களில் அதிகம். கோயில்களில் செய்யப்பட்ட அறிவிப்பு காரணமாக வெளிப்பொருத்து விசைப்படகுகளும், கட்டுமரங்களும், பாய்மரங்களும் தொழிலுக்குச் செல்லவில்லை. வள்ளவிளையிலிருந்து இரண்டு வெளிப்பொருத்து விசைப்படகுகள் சென்றன. அவை பத்திரமாக கரையேறிவிட்டன.
2.ஒரு வாரகாலம் கடலில் தங்கி தொழில் செய்யும் வள்ளம், மற்றும் வெளிப்பொருத்து விசைப்படகுகள். நீரோடி மற்றும் கேரள கொல்லங்கோடு கிராமங்களில் இவை அதிகம். இவர்களில் பலரும் புயல் அறிவிப்பிற்கு முன்பே கடலில் சென்றுவிட்டார்கள். இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தது புயல் கடந்துசென்ற பகுதி. நூற்றிற்கும் அதிகமான வள்ளங்களும், வெளிப்பொருத்து விசைப்படகுகளும் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. நீரோடி கிராமத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு.
3.ஆழ்கடல் விசைப்படகுகள். இவர்கள் 30லிருந்து 45நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பார்கள். தூத்தூர் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் இருக்கின்றன. தற்போது பல படகுகளை தொடர்புகொள்ள முடியவில்லை. பல விசைப்படகுகள் கோவா, குஜாராத் என்று பல துறைமுகங்களில் கரையேறியிருக்கின்றார்கள். பலவிசைப்படகுகளை இந்திய கடற்படையும், சைனா மற்றும் ஜப்பான் கப்பல்களும் காப்பாற்றியிருக்கின்றது. பல படகுகள் லட்சத்தீவின் கரையேறியிருக்கின்றது. பல படகுகள் ஆட்களற்ற வெற்று மணற்தீவுகளில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள். ஆழ்கடலில் அகப்பட்டிருக்கும் சுமார் 250 விசைப்படகுகளின் தகவல்கள் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் சுமார் 10-15 மீனவர்கள் இருக்கின்றார்கள். தானாக கரைக்குவந்த படகுகளையும் அரசு மீட்டதாகச்சொல்வதை மீனவர்கள் மிகவும் வருத்தத்துடன் சொல்கின்றார்கள். (வள்ளவிளையில் இதுவரை 5பேர் இறந்தாகச் சொல்லப்படுகின்றது. உண்மையான கணக்கிற்கு சில நாட்கள் ஆகும்.) பல விசைப்படகுகள் மூழ்கிக்கிடப்பதாக பலரும் சொல்கின்றார்கள்.
காப்பாற்றப்பட்டு கரையில் வந்துசேரும் பலரும் தங்கள் நண்பர்கள் நீந்தமுடியாமல் கடலில் மூழ்கிச்செல்வதை பார்த்திருக்கின்றார்கள். இனியும் நேரம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை அதிகரிக்கும். எனவே இந்திய  அரசு இதை ஒரு “போர்” எனக்கருதி மீனவர்களை காப்பாற்றவேண்டும்.
சுமார் 3000 மீனவர்கள் இன்னும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள். மொத்த இழப்புகள் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஒக்ஹி புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. ஒக்ஹி புயலை தேசியப்பேரிடராக அறிவிக்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இதைவிட கேவலமான மனிதாபிமானமற்ற செயல் எதுவுமில்லை. ஒக்ஹி புயலை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும். மீனவர்களை காப்பாற்றுவதற்கு மத்திய மாநில அரசுகள் துரிதமாகச் செயல்படவேண்டும். உண்மையான பாதிப்பும் இழப்பும் அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லையா அல்லது மீனவர்களை ஒருபொருட்டாக மதிக்கவில்லையா என்று தெரியவில்லை. 25கோடி ஒதுக்கீட்டுடன் இந்த பிரச்சனை முடிந்ததென்று கருதி தமிழ்நாடு அரசு ஒதுங்கிவிட்டது.
மத்திய மாநில அரசுகளிடம் நம்பிக்கை இழந்த கேரளமீனவர்கள் பெரிய விசைப்படகுகளை தங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். தூத்தூர் பகுதி மீனவர்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். நம் கண்ணில் காணும் சடலங்களையாவது கரைக்கு கொண்டுவந்து சேர்க்கலாம்.

துறைவன் – சில சில்லறைகள்

[சமீபத்தில் துறைவன் குறித்து நண்பர்களால் எழுப்பப்பட்ட சில விமர்சங்களுக்கான பதில்கள் இவை.]

கேள்வி: துறைவன் நாவல் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகச் சொல்கிறார்களே

பதில்: துறைவன் ஒரு நாவல். அதிலிருக்கும் வரலாற்று தகவல்கள் நாவல் கதாபாத்திரங்களின் விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஒரு கட்டுரையைப்போல் வெளிப்படையான தெளிவான தரவுகளை ஒரு நாவலில் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாவலில் வாசக இடைவெளி வேண்டுமென்பதால், துறைவனில் சில தகவல்கள் வெளிப்படையாக இல்லாமலிருக்கும்.

முக்குவர்கள் என்னும் “இனக்குழுவின் பெயர்” போர்ச்சுக்கீசியர்களின் வருகைப்பின் பரவலாக்கப்பட்டது. அதற்கு முன் அந்த இனக்குழுவின் உண்மையான பெயர் அரயர்கள் என்று மட்டுமே துறைவன் நாவல் சொல்கிறது. போர்ச்சுக்கீசியரின் வருகைக்கு முன்பிருந்தே மீனவர்கள் தற்போதை அவரவர் ஊர்கள், வேறெங்கிருந்தும் பெயந்துகொண்டு வராமல், அதேயிடங்களில் இருந்தது. ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதில் விற்பன்னர்களான அவர்களுக்கு படகோட்டிகள் என்னும் பெயருமிருந்தது. இதை இனயம் துறைமுகம் புத்தகத்தில் படகோட்டிகள் என்னும் அதிகாரத்தில் மிக விரிவாகவே பதிவுசெய்திருக்கிறேன். (https://thuraivan.wordpress.com/2017/11/24/படகோட்டிகள்/)

முக்குவர் மற்றும் அரயர்கள் பெயர் குறித்த சமீபத்திய வரலாற்று வாய்வழித்தகவல் ஒன்றுண்டு. ஒருமுறை திரு. கொட்டில்பாடு துரைசாமிக்கும் காலம்சென்ற முன்னாள் தமிழக மீனவளத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கும் இந்த பெயர்கள் குறித்த விவாதம் நடந்திருக்கிறது. திருமதி. லூர்தம்மாள் சைமனுக்கு முக்குவர் என்னும் பெயரை அரயர்கள் என்று மாற்றவேண்டுமென்று விருப்பம். ஆனால், திரு. கொட்டில்பாடு துரைசாமி அவர்களுக்கு தமிழக முக்குவர்களின் பெயரை அரயர்கள் என்று மாற்றினால், வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் இருக்கும் முக்குவர்களுக்கு உவப்பானதாக இருக்காது என்பதால் அரயர்கள் என்று மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

திருமதி. லூர்தம்மாள் சைமன் அரயர் என்பது அரசர் என்பதால் பெயர்மாற்றம் மேற்கொள்ளவிரும்பியதாக படித்த ஞாபகம். ஆனால் நான் தரவுகளுடன் துறைவன் நாவலில்  முக்குவர்கள் என்பவர்கள் அரயர்கள் என்பதை ஒரு விவாதப்பொருளாக சொல்கிறேன் அவ்வளவே. சங்க இலக்கியங்களிலும், நிகண்டு என்னும் பண்டைய அகராதிகளிலும் முக்குவர் என்னும் இனப்பெயர் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. பரதவர், அரையர், நுளையர் என்ற தற்போதைய இனப்பெயர்கள் அவற்றில் இடம்பெற்றிருக்கிறது.

நவீன ஆய்வுகளின் அடிப்படையிலேயே முக்குவன்/முக்குவர் என்னும் சொல் போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு பிந்தையது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறேன். இதுவரையிலான தரவுகள் இதை உண்மை என்றே நிறுவுகின்றது. துறைவன் நாவலில் சொல்லப்பட்டிருக்கும் மிகச்சிறிய செறிவான வலராற்றுத் தகவல்கள் ஐந்து வருட ஆய்வின் அடிப்படையில் எழுதியிருப்பதால் நேர்மையான விளக்கங்கள் தேவைப்படும்போது இன்னும் விரிவாக எழுத முயல்வேன். விரிவான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற தரவுகள் கிடைத்தால் இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதில் எந்தவித தயக்கமும் எனக்கில்லை.

கேள்வி: துறைவன் நாவல் முக்குவர்களை தவறாக சித்தரிப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்: இது துறைவன் நாவலை படிக்காதவர்கள் பிறரது பேச்சைக்கேட்டு சொல்வது. துறைவன் நாவல் முக்குவர்களை எந்தவிதத்திலும் தவறாகச் சித்தரிக்கவில்லை. அவர்களின் மீன்பிடிமுறை/வாழ்வியல்/நட்பு/குடும்பம் அனைத்தும் உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருக்கிறது.

தூவார்த்தே பர்போசா என்னும் போர்ச்சுக்கீய எழுத்தாளர் அவருடைய நூலில் மான்குவர் (monquers) என்னும் ஜாதியை தன்னுடைய புத்தகத்தில் மோசமாக சித்தரித்துள்ளார். இதை அண்ணல் டாக்டர். அம்பேத்தகரும் மேற்கோள் காட்டியிருக்கிறார். (http://drambedkarwritings.gov.in/upload/uploadfiles/files/Volume_03.pdf, பக்கம் 140). சில வரலாற்று ஆசிரியர்கள் மான்குவர் என்பதை முக்குவர்கள் என்று தவறாக புரிந்துகொள்வதுண்டு. மான்குவர் என்பதற்கும் முக்குவர்கள் என்பதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று துறைவனில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டும் வேறுவேறு ஜாதிகள்.

கேள்வி: மொசாம்பிக்கில் முக்வா இனம் கிடையாதாமே?

பதில்: வரலாறென்பது கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பதல்ல. “வரலாறு என்பது விசாரணை” என்று பிஷப் ராபர்ட் கால்ட்வெல் சொல்கிறார். வராற்றாய்வில் நியாயத்திற்கு மட்டுமே இடமிருக்கவேண்டும். மொசாம்பிக் மக்வா (https://en.wikipedia.org/wiki/Makua_people) இன மக்களை இனவரைவியாலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் மிக விரிவாகவே பதிவுசெய்திருக்கிறார்கள். மொசாம்பிக்கில் மட்டுமல்ல, மொசாம்பிக் நாட்டிற்கு பக்கத்திலிருக்கும் மடகாஸ்கரிலும் மகோவா இனம் உண்டு (https://en.wikipedia.org/wiki/Makoa). மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கர் முக்வா இன மக்கள் இன்னமும் மருமக்கத்தாய முறையை கடைபிடிப்பவர்கள். மடகாஸ்கர் மகோவா குறித்து கேரள பல்கலைக்கழகம் சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றது. மொசாம்பிக் மக்வா இன மக்களுக்கு அவர்களுக்கான தனிமொழியும் இருக்கிறது.

விரிவாக படிக்க கீழ்க்கண்ட புத்தகங்களை புரட்டவும்:

  1. A Complicated War: The Harrowing of Mozambique, By William Finnegan
  2. A History of Mozambique, By M. D. D. New-it
  3. The Origins of War in Mozambique: A History of Unity and Division

By Funada-Classen Sayaka

கேள்வி: மொசாம்பிக் முக்குவா இனத்தை அடிமைகளாக யாரும் எங்கும் கொண்டுசென்றதில்லையாமே?

பதில்: அனைத்து நாடுகளிலும் 16-ம் நூற்றாண்டிலிருந்து அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. இந்திய அடிமை சட்டம் 1843-ல் கொண்டுவரப்பட்டது. கிபி. 1749 வருடம் முதல் தொடர்ச்சியாக பலவருடங்கள் மொசாம்பிக் முக்வா இனத்திற்கும் அடிமை வியாபாரம் மேற்கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும், அடிமை வியாபாரத்தை ஆதரித்த வேறு இனக்குழுக்களுக்கு இடையே நடந்த யுத்தம் மிகவிரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் மட்டும் மொசாம்பிக் நாட்டிலிருந்து 10 லட்சம் மக்கள் அடிமைகளாக உலகம் முழுக்க கொண்டுசெல்லப்பட்டார்கள். மடகாஸ்கரில் அடிமைகளாக நாயர், முக்குவர் மற்றும் நாடர்களை அடிமைகளாக கொண்டுசென்றிருக்கின்றார்கள். குளச்சல் யுத்தத்தின் போதுகூட திருவிதாங்கூர் மக்களை டச்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள்.

கேள்வி: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே முக்குவன் விளை என்னும் சொல் நயினார்குறிச்சி கோயிலில் இருக்கும் கல்வெட்டில் இருக்கிறதே?

பதில்: நயினார்குறிச்சி கல்வெட்டில் முக்குவன் விளை என்றிருப்பது உண்மைதான். ஆனால் அந்த கல்வெட்டு, போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு 200 வருடங்கள் கழிந்து, 1706-ம் வருடம் எழுதப்பட்டது. இருந்தாலும்கூட நான் மீண்டும் அந்த கல்வெட்டை ஆய்வுசெய்ய விரும்புவேன்.

கேள்வி: கிழக்கு கடற்கரையில் முக்குவன் இருந்ததற்கான தடயம் எதுவுமில்லையல்லவா?

பதில்: மதராஸப்பட்டினத்தின் உருவாக்கத்தில் முக்குவர்கள் என்னும் படகோட்டிகளின் பங்களிப்பு அளப்பரியது. இதை ‘இனயம் துறைமுகம்’ புத்தகத்தில் மிகவிரிவாகவே எழுதியுள்ளேன். காரைக்காலிலும் முக்குவர்கள் குறித்த தரவுகள் இருக்கிறது. (https://thuraivan.wordpress.com/2017/11/24/படகோட்டிகள்/)

கேள்வி: முக்குவா என்னும் பெயர் போர்ச்சுக்கீசியர்களால் பரவலாகப்பட்டதென்றால் கிழக்கு கடற்கரையில் மதமாற்றம் செய்த புனித பிரான்சிஸ் சவேரியார் அவரது கடிதங்களில் முக்குவர்கள் குறித்து எதுவும் சொல்லவில்லையே

பதில்: புனித பிரான்சிஸ் சவேரியார் மச்சுகாஸ் (மீனவர்கள்) என்னும் சொல்லை மேற்கு கடற்கரையில்தான் முதன் முதலாக பயன்படுத்தியுள்ளார். மச்சுகாஸ் என்பது தான் முக்குவர்களா திரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது மாஹான் என்னும் சீனப்பயணி mu+kua (balanquine bearers) என்பது அனைத்து ஆவணங்களிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறிப்பை ‘இனயம் துறைமுகம்’ புத்தகத்தில் சொல்லியுள்ளேன். “புனித” பிரான்சிஸ் சேவியர் பரவர்கள் என்று கிழக்கு கடற்கரை மீனவர்களை குறிப்பிடுவதற்கு காரணம் பரவர்கள் போர்ச்சுக்கீசிய ஆட்சிபீடத்திடம், அவரளின் சூழ்நிலை கருதி, நேரடியாக பேசும் வாய்ப்பு கிடத்ததுதான். மேற்கு கடற்கரையில் அப்படியல்ல. மீனவர்கள் “அணாவிற்கு எல்லாம்” என்பதாக “சுளுவில்” கிடைத்தது. எனவே, ஜாதிக்கோ, இனத்திற்கோ இங்கே இடமில்லை. அங்கிருந்த மீனவர்களை என்னவிதமான பெயரிட்டும் நீங்கள் அழைக்கலாம். தப்பில்ல. காரணம், நாங்கள் எங்கள் அரசின் கட்டளைக்கு எதிராக ஒருபோதும் இருந்ததில்லை.

கேள்வி: கிழக்கு கடற்கரையிலிருக்கும் வேதாளையும் போர்ச்சுக்கீசியர்களின் காலனிதானே. அங்கு முகுவர்கள் குறித்து ஏதேனும் தடயம் இருக்கிறதா?

பதில்: வேதாளையில் இருந்தது ஒரு மிகச்சிறிய துறைமுகம் மட்டுமே. எனவே, மதராஸப்பட்டினம் அளவிற்கு வேதாளையில் படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் தேவை எதுவும் இருந்திருக்காது. இருப்பினும், ஆய்வு செய்தால் ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடுகள், போர்ச்சுக்கீசியர்கள் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ஆதார நூல்களை மீளாய்வு செய்தால் தெளிவான பதில் கிடைக்கும்.

கேள்வி: இலங்கையில் முக்குவர்களுக்கும் கரையர்களுக்கும் நடந்தமுக்குவர் யுத்தம்நடந்தது கி.பி. 1237 என்று முக்கார கத்தனா என்னும் ஓலைச்சுவடியில் தெளிவாகவே இருக்கிறதே? அதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்களே?

பதில்: முக்காரு யுத்த கதா என்னும் முக்கார கதனா என்னும் ஓலைச்சுவடி 17-ம் நூற்றாண்டில்  பிற்பகுதியில் எழுதப்பட்டது. முக்காரு படைகளுக்கும்  சிங்கள/கரையர்களுக்கும் நடந்த யுத்தம் கி.பி. 1237ம் வருடம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, யுத்தம் நடந்தது 1508ம் என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கி.பி. 1237 என்பது நகல்பிழையாக (copyist’s error) இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமென்று M.D.Raghavan எழுதிய “The Karava of Ceylon” நூலில் மிகத்தெளிவாகவே உள்ளது. ‘முக்காரு யுத்த கதா’ என்னும் கட்டுரையில் விரிவாகச் சொல்லியுள்ளேன். சிங்கள மொழியிலிருக்கும் முக்காரு என்பதன் வேர்ச்சொல் முக்குவர் என்பது ஆய்வுக்குரியது.

கேள்வி: முக்கார கத்தனாவில் சொல்லப்படும் மாணிக்கத்தலைவன், வக்கநாட்டு தேவரீர், குருகுல அடப்பன் போன்றவர்கள் சிங்கள அரசனால் கொல்லப்பட்ட முக்குவத்தலைவர்கள் தானே

பதில்: இன்று வரலாறு என்பது புனைவாகிவிட்டது. யார் எப்படிவேண்டுமானாலும் வரலாற்றை திரிக்கலாம். அது அவரவர் வசதியைப்பொறுத்தது. உண்மையில், மேற்சொன்ன படைத்தளபதிகள் சிங்கள அரசர் ஆறாம் பாராக்கிரம பாகுவால் காஞ்சி, கீழக்கரை மற்றும் காவேரிப்பட்டினம் நாடுகளிலிந்து முக்காரு படைகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டவர்கள்.

கேள்வி: இலங்கையில் நீண்ட காலமாகவே முக்குவர்கள் இருக்கின்றார்களே?

பதில்: நாம் நினைப்பதுபோல் முக்குவர் என்பது ஒரு ஜாதியல்ல. அது பல ஜாதிகளின் தொகுப்பு என்பது தற்போதைய என் நிலைப்பாடு. இலங்கையில் பலகட்டமாக பல இடங்களிலிருந்தும் முக்குவா இனத்திற்குட்பட்ட ஜாதிமக்கள் குடியேறியிருக்கின்றார்கள். குகனின் வழிவந்தவர்களாகச்சொல்லும் முற்குகர்கள் இலங்கையில் பலகாலமாக இருப்பதாகச்சொல்லப்படுகிறது. ஒரு பகுதி முக்குவர்கள் மலபாரிலிருந்து குடியேறியதாகச்சொல்லப்படுகிறது. முக்காரு என்பவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், அது “காக முக்காரு” என்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காக என்றால் காகதீயர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. ஒருகாலத்தில் காகதீயப்பேரரசின் தலைநகராக ஹனுமன்கொண்டா இருந்தது. முக்காரு கதனாவில் முக்காருக்களின் கொடியாக ஹனுமன் கொடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல், பெருங்கற்காலகட்டத்தைச் சார்ந்த மணிகள் கொண்ட முக்காரு மக்களின்  கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை முக்குவர்களின் வரலாற்றை ஆய்வுசெய்பவர்களுக்கானது. துறைவனில் மலபார்/கேரளக்கடற்கரை முக்குவர்கள் குறித்து சொல்லப்படுகிறது.

முக்காரு யுத்த கதா விரிவாக: https://thuraivan.wordpress.com/2017/11/24/முக்காரு-யுத்த-கதா/