அன்னியப்படும் கடற்கரைகள் – 2

வரும் மார்ச் பதினொன்றாம் நாள் ஜப்பானின் ஃபுகுஷிமா அணுவுலையின்  ஐந்தாவது நினைவுதினம். ஃபுகுஷிமா அணுவுலை தன் கல்லறைத்தோட்டத்தில் கதிர்வீச்சை பரப்பிக்கொண்டு உருகிக்கிடக்கின்றது. ஃகுஷிமாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த பூகம்பத்தினால் ஏழு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகி ஃபுகுஷிமா அணுவுலையை தாக்கியதில் அந்த அணுவுலை வெடித்து அதிலிருந்து ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சினால் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து இப்போது ஃபுகுஷிமா அணுவுலையைச் சுற்றிலும் 25 கிலோமிட்டர் சுற்றளவிற்கு மக்கள் நடமாட்டமில்லாத கதிர்வீச்சுப்பாலைவனமாகக் கிடக்கின்றது.

ஊர்விட்டுச்சென்றவர்கள் அரசாங்கள் திருப்பி அழைத்தும் கதிரிவீச்சிற்குப் பயந்து யாரும் திரும்பி வரவில்லை. சென்றுசேர்ந்த இடங்களில் வேர்பரப்பத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பிறகும் பல குழந்தைகளுக்கு தைராய்டு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மரம்செடிகளில் காற்றினால் பரவிய கதிவீச்சு தனிமங்கள் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது இயங்காத அணுவுலைக்குப்பக்கத்தில் வெற்றுடலுடன் நாம் நின்றால் ஒரு மணி நேரத்தில் இறந்துவிடுவோம் என்றுசொன்னால் அதன் விபரீதம் எளிதில் புரியும். ஒரு சில நிமிடம் நின்றால் புற்றுநோய் உறுதி. எனவே அணுவுலையை பிரித்தெடுக்க ரோபோவை பயன்படுத்துகின்றார்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கதிரியக்கக்கழிவுநீர் கடலில் கலந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் கனடா வரை ஃபுகுஷிமா தன் கதிரியக்க எல்லையை விரிவுபடுத்திவிட்டது. அணுவுலை செயல்பட்டபோது அதிலிருந்து உபரியாகக்கிடைத்த கதிவீச்சு கழிவுநீரையும் தற்போது அணுவுலையை சுத்தம்செய்யும் கதிவீச்சு கழிவுநீரையும், கடலில் கலப்பது போக, பெரிய தொட்டிகளில் அடைத்து பூமிக்கடியில் சேமித்துவைக்கப்பட்டிருக்கின்றது. பலமாதங்களுக்கு முன்பு அவற்றில் கசிவு ஏற்பட்டு நிலப்பரப்பெங்கும் அணுக்கதிர்வீசிக்கிடக்கின்றது.   தற்போதைய நிலவரப்படி ஃபுகுஷிமா கதிரியக்க கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த இன்னும் நாற்பது வருடங்களாகும் என்று கணிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விபத்தினால் ஏற்பட்ட இழப்பு 40 டிரில்லியன் யென், இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. கோடி கோடி கைக்கெட்டும் தூரம்தான். இது நமது கூடங்குளம் அணுவுலைகளை நிறுவுவதற்கு ஆகும் செலவை விட சுமார் 100 மடங்கு அதிகம்.

அணுவுலையை விட அணுவுலைக்கழிவுகளை அப்புறப்படுத்துவதுதான் மிகவும் சவாலானது. ஆபத்தும் அதிகம். ஃபுகுஷிமாவில் திர்வீச்சு கழிவுகளை அணுவுலைக்குப்பக்கத்தில் தொட்டிகளில் அடைத்தும் புதைத்தும் வைக்காமலிருந்திருந்தால் கதிர்விச்சு விபத்தின் தாக்கம் சற்று குறைவாக இருந்திருக்கும் என்று யோசிப்பதற்கு இயற்கை இடம்கொடுக்கவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக, தற்போது பயன்பாட்டில் இல்லாத அமெரிக்காவின் ஹான்ஃபோடு அணுவுலை நமக்கு யோசிப்பதற்கு சிறிது சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது.

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு ஹான்ஃபோடு அணுவுலையின் பங்களிப்பு என்னவென்பதையும், கதிர்வீச்சு நீரை சேமித்துவைத்த தொட்டிகளில் ஏற்பட்ட கசிவின் பாதிப்பு ஆகியவற்றை முந்தைய கட்டுரையில் கண்டோம். ஹான்ஃபோடு அணுவுலை வளாகத்தை தூய்மைப்படுத்தும் வேலைகள் 2060-ல் தான் முடியுமென்று கணிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான செலவு  கூடங்குளம் அணுவுலைகளை நிறுவுவதற்கு ஆகும் செலவை விட சுமார் 50 மடங்கு அதிகம்.

ஹான்ஃபோடு அணுவுலை வளாகத்தில் இரண்டு கல்லறைத்தோட்டங்கள் இருக்கின்றது. இறந்தவர்களை புதைப்பதற்காக அல்ல. கதிர்வீச்சு நீர் தொட்டிகளை புதைக்குமிடங்கள். ஹான்ஃபோடு வளாகம் ஆள்நடமாட்டமில்லாத 1500 கிலோமிட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடக்கும் பாலைவனத்தின் மத்தியில் இருக்கின்றது. தற்போது அண்டவெளியிலிருந்து கிராவிட்டேஷனல் வேவ்ஸ் என்னும் ஈர்ப்பு அலைகளை பெற்றுக்கொண்டிருக்கும் லைகோ ஆய்கவம் ஹான்ஃபோடு வளாகத்தின் ஓரத்தில் இருக்கின்றது. ஒரு ஒப்புமைக்காக, கூடங்குளத்தை சுற்றி வெறும் 16 கிலோமிட்டர் சுற்றளவிற்குள் சுமார் 70,000 (எழுபதாயிரம்) மக்கள் வசித்து வருகின்றார்கள்!

2013-ல் ஹான்ஃபோடு லைகோ ஆய்வகம் ஈர்ப்பு அலைகளை பெறத்தொடங்கிவிட்டது என்னும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. சிக்னல்கள் வந்தடைந்தது உண்மை. ஆனால் இதையொத்த சிக்னல்கள் 1900 மைல் தொலைவிலிருக்கும் லிவிங்க்ஸ்டன் லைகோ ஆய்வகத்திலும் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வந்து சேரவில்லை. எனவே அந்த சிக்னல் ஈர்ப்பு அலைகள் இல்லையென்று முடிவுசெய்யப்பட்டது. ஹான்ஃபோடு லைகோ ஆய்வகத்தில் பெறப்பட்ட சிக்னலுக்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டது. முடிவில் பலமைல் தொலைவிலிருந்த ஒரு சாலையில் ஏற்பட்ட லாரிவிபத்து என்று சொல்லப்பட்டது. எனவே அந்த சாலையை மூடிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த அளவிற்கு லைகோ ஆய்வாகவும்  அணுவுலை வளாகவும் நகரிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

2015 நவம்பர் மாதம் ஹான்ஃபோடு பகுதியில் சூறாவளிக்காற்று வீசியது. அப்போது ஹான்ஃபோடு அணுவுலை வளாகத்தின் ஒரு பகுதியில் கதிர்வீச்சு நீர்படிந்த மணலையும் வேறு கழிவுகளையும் கல்லறைத்தோட்டத்தில் புதைப்பதற்காக கருப்புநிற பாலித்தீன் பைகளில் திறந்த வெளியில்  கட்டிவைத்திருந்தார்கள். சூறாவளிக்காற்று கருப்பு பாலித்தீன் பைகளை தூக்கியெடுத்து பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்த ரூட்-4 நெடுஞ்சாலையில் கொண்டுபோட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக எவ்வளவு கதிர்வீச்சு கழிவுகள் பொதுவெளியில் பரவியது என்பது இன்னும் தெரியவில்லை.

அணுவுலைகளின் கதிர்வீச்சு நச்சுக்கழிவுகள் காற்றினால் பரவும் அபாயம் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக ஐயோடின்-131 மற்றும் சீசியம்-137 ஆகியவை காற்றினாலும் நீரினாலும் எளிதில் பரவக்கூடியவை. ஐயோடின்-131-ன் கதிர்வீச்சு அளவு எட்டு நாட்களில் பாதியாக குறைந்துவிடும். ஆனால் சீசியம்-137-ன் அரைஆயுள், கதிர்வீச்சு அளவு பாதியாக குறையும் கால அளவு, 30 வருடங்கள். முழுமையாக இல்லாமலாக பல நூறு வருடங்களாகும். ஆற்றல் அழிவற்றது. அவை பலதலைமுறைக்கும் தொடர்ந்து புற்றுநோயை பரப்பிக்கொண்டிருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு  ஹான்ஃபோடு வளாக கதிர்வீச்சுக்கழிவு கல்லறைத்தோட்டங்களினால் நேரடியான பாதிப்பு மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகளினால் கதிர்வீச்சுக்கழிவுகள் எவ்வாறு பரவுகின்றது என்பதற்கான அறிக்கையையும் கேட்டிருக்கின்றது.

ஹான்ஃபோடு அணுவுலை வளாகம் கொலம்பியா ஆற்றின் ஓரத்தில் இருப்பதால் சுனாமி குறித்தான பயமில்லை. அதுபோல் எனக்குத்தெரிந்து இதுவரை நிலநடுக்கமும் பதிவானதாத ஞாபகமில்லை. இருப்பினும் இயற்கையை யாரால் கட்டுப்படுத்தமுடியும்? இயறகைக்கு கூடங்குளமும் விதிவிலக்கல்ல.

கூடங்குளம் அணுவுலை ஃபுகுஷிமா அணுவுலை வெடிப்பிற்கு பின்னரான வடிவமைப்பென்பதால் அந்த குறைபாடுகள் அனைத்தும் கூடங்குளம் அணுவுலை நிர்மாணத்தில் சரிசெய்யப்பட்டிருப்பதாக அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. பாபா அணு ஆய்வு மையம் டிசம்பர் 2011-ல் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கூடங்குளம் அணுவுலைக்கு பக்கத்திலிருக்கும், சுனாமியை உருவாக்கவல்ல பூகம்ப வெடிப்புக்கோடு (சுமத்ரா வெடிப்புக்கோடு) கூடங்குளத்திருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. எனவே  ஃபுகுஷிமாவில் ஏற்பட்டதைப் போல் சுனாமியும் பூகம்பமும் ஒரே நேரத்தில் வருவதற்கான வாய்ப்பில்லை” என்றும் “கூடங்குளம் பகுதியில் சுனாமி அல்லது புயலினால் ஏற்படும் அலைகளின்  அதிகபட்ச உயரம் கடல் பரப்பிலிருந்து 5.44 மீட்டர்கள். முக்கியமான கட்டுமாங்களும், அவசரகால மின்வினியோக கருவிகளும்  2மீட்டர் அதிக அளவில் 7.44 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.” என்றும் சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

நிலநடுக்கமும் எட்டு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகளும் ஒரே நேரத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்பது நம்பக்கூடியதாகவே இருக்கட்டும். ஆனால் ஹான்போடில் நடந்ததுபோல் கழிவுநீர்கசிவிற்கும் சூறாவளிக்காற்றின் பாதிப்பிற்கும் அப்பாற்பட்டு கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதையும் சிறிது கருத்தில்கொள்ள வேண்டியிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது ஞாபகமிருக்கலாம். ஆனால் அதுகுறித்து யாரும் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். மக்கள் செறிவுள்ள கூடங்குளம் பகுதியில் அணுவுலை விபத்து நடந்தால் நஷ்டஈட்டுத்தொகையை இந்திய அரசு கொடுத்தாலென்ன வெளிநாடு கொடுத்தாலென்ன. அவனவன் எரியுடலுடனும் குற்றுயிருடன் புற்றுநோயுடனும் போராடுவதற்கே நேரம் சரியாக இருக்கும். தற்போது மணவாளக்குறிச்சி மணல் ஆலையினால் தென்மேற்கு கடற்கரை கிராம மக்கள் அதிக அளவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக்கூட இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களும் எந்தவித இழப்பீடும் இல்லாமல்தான் புற்றுநோயுடன் போராடுகின்றார்கள்.

ஆனால் அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தில் கையெழுத்திட்டபோது உலக அணுசக்தி கழகத்திடம் இந்தியா கையளித்த “இந்தியாவின் அணுசக்தி மின்சாரம்” என்னும் அறிக்கை இணையதில் கிடைக்கின்றது. அதில், அணுவுலைகளிலிருந்தும் மறுசுழற்சி நிலையங்களிலிருந்தும் பெறப்படும் கதிரியக்கக் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு அந்ததந்த அணுவுலை வளாகங்களில் சேமித்து வைக்கப்படும். இந்த களஞ்சியங்களிலிருந்து அதிக அளவு கதிரியக்கமும் அதிக ஆயுட்காலம் கொண்ட கழிவுகளை இறுதியில் எவ்வாறு அகற்றவேண்டும் என்னும் ஆராய்ச்சி பாபா அணுசக்தி மையத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஆராய்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் பல பதிற்றாண்டுகளாக நடந்துக்கொண்டிருக்கின்றது. எந்தவித தீர்வும் இதுவரை கண்டடையப்படவில்லை. ஃபுகுஷிமா மற்றும் ஹான்போடு போல் அனைத்து அணுவுலை  வளாகங்களிலும் கழிவுகளை கொள்கலன்களில் சேமித்தும் புதைத்தும்தான் வைத்திருக்கின்றார்கள். கூடங்குளத்திலும் தொட்டியில் சேமித்தும் பாதுகாப்பு குழிதோண்டி புதைத்தும் வைப்பார்கள். கசிவையும் காற்றையும் யார் கட்டுப்படுத்துவது?

இந்தியாவின் அறிவுஜீவிகளும், மேட்டிமைவாதிகளும் கூடங்குளம் அணுவுலைப்பூங்கா  இந்தியாவின் வளர்ச்சியின் மைல்கல் என்று பிரகடனப்படுத்திவிட்டார்கள். கூடங்குளம் அணுவுலைப்பூங்கா நிஜத்தில் ஒரு கல்லறைப்பூங்கா. இந்த கல்லறைத்தோட்டம்  மீனவர்களுக்கு மட்டுமானதல்ல, நம் அனைவருக்கும் நமது சந்ததிகளுக்கும் சொந்தமானது. இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் ஒரு எளிய நினைவுச்சின்னம்.

நாள்: மார்ச் 2, 2016
References:

1. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-g-n/india.aspx

8. http://www.tri-cityherald.com/news/local/hanford/article61710052.html

9. http://www.livescience.com/38844-fukushima-radioactive-water-leaks.html

10. http://www.world-nuclear.org/information-library/safety-and-security/safety-of-plants/fukushima-accident.aspx

11. http://archive.tehelka.com/story_main31.asp?filename=Ne230607home_next_SR.asp

அன்னியப்படும் கடற்கரைகள் 1

உலகின் முதல் புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின்மீது அமெரிக்காவால் போடப்பட்டது. இந்த அணுகுண்டிற்கு தேவையான 6.2கிலோ புளூட்டோனியம் வாசிங்டன் மாகாணத்தின் ஹான்போர்ட் என்னும் நகரிலிருள்ள அணுவுலையிலிருந்து தயாரிக்கப்பட்டது.

ஹான்போர்ட் அணுவுலை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும்போது சில அடிப்படைகள் கடைபிடிக்கப்பட்டன. அதில் முக்கியமாக அணுவுலைக்கான இடத்தில் 1000-க்கும் அதிகமான மக்கள் இருக்கக்கூடாது. விவசாயம் நடைபெறாத பகுதியாக இருக்கவேண்டும். அணுவுலை 1000-ற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்திலிருந்து குறைந்தபட்சம் 20-மைல் தொலைவில் இருக்கவேண்டும். பக்கத்து நாட்டிலிருந்து குறைந்தது 200-மைல் தொலைவிற்குள் இருக்கவேண்டும். வருடம் முழுக்க அபரிமிதமான தண்ணீரும் மின்சாரமும் இருக்க வேண்டும்.

1943-ம் வருடம் ஹான்போர்டு அணுவுலை கட்டுவதற்கு முன்பு ஹான்போடு நகரில் மிகவும் குறைவான மக்களே வசித்திருந்தனர். அதற்கு அடுத்த சிறு நகரங்களான பாஸ்கோ, கென்னிவிக் மற்றும் ரிச்லண்ட் 20-மைல் தொலைவிற்கு அப்பாலும் கனடாவிலிருந்து 400-மைல் தொலைவிலும் இருக்கின்றது. அப்போது அங்கே சிறுவிவசாயம் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. இதற்குத்கேவையான மின்சாரம் அப்போதைய உலகின் மிகப்பெரிய அணைக்கட்டான க்ராண்ட் கூலி-யிலிருந்து பெறப்பட்டது. எனவே கொலம்பியா நதிக்கரையில் இருந்த ஹான்போர்ட் நகரை அணுவுலை கட்டுவதற்காக தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை.

பியர்ள் ஹார்பர் தாக்குதலுக்குபிறகு அமெரிக்கா இரண்டாம் உலக்கப்போரில் தன்னையும் இணைத்துக்கொண்டது. உலகப்போர் உசத்திலிருந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹான்போர்ட் நகரிலிருந்து மக்களை பக்கத்து நகரான ரிச்லாண்டிற்கு ஒரே இரவில் அப்புறப்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்கவில்லை.

மூன்று நதிகள் இணையும் முக்கியமான பகுதியான ஹான்போர்ட் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்த்துவந்த மீன்பிடிப்பத்தை முக்கியத்தொழிலாகக்கொண்ட பழங்குடி மக்கள் ரிசர்வடு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள்.

ஒருவருடத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஹார்ன்போர்டின் முதல் அணுவுலை இரண்டே மாதங்களில் இயற்கையாக அபரிமிதமாகக் கிடைக்கும் யுரேனியம் உலோகத்தாதுவிலிருந்து அணுகுண்டிற்குத்தேவையான, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உயர் கதிரியக்கத் தாதுவான புளூட்டோனியம்-239 -ஐ உற்பத்தி செய்யத்துவங்கியது.

இருபது வருட உற்பத்திக்குப்பிறகு 1964-லிருது படிப்படியாக ஏழுவருடங்களில் ஹான்போர்ட் சைற்றிலிருந்த எட்டு அணுவுலைகளின் பயன்பாடுகளும் நிறுத்தப்பட்டன. அதன் கடைசி அணுவுலை 1981-ல் பயன்பாட்டை முடித்துக்கொண்டது. ஹான்போர்ட் அணுவுலைகளிலிருந்து மொத்தம் 64 மெட்ரிக் டன் புளூட்டோனியம் தயாரிக்கப்பட்டது. அணுவுலைகள் செயல்பாட்டில் இருந்தபோது அணுலையை கொலம்பியாநதி நீரினால் குளிர்வித்து அந்த நீரை ஆறுமணிநேரம் தேக்கிவைத்து மீண்டும் அதை கொலம்பியா நதியில் கலக்கப்பட்டது. இந்த ஆறுமணிநேரத்தில் அணுவுலையிலிருந்து வெளியான கதிரியக்க தனிமங்களின் வீரியம் குறைந்தது. சில தனிமங்கள் முழுமையாக இல்லாமலாகியது. ஆனால் நீண்ட அரை ஆயுள் கொண்ட தனிமங்கள் கதிரியக்க சக்தியுடன் மீண்டும் ஆறில் கலந்தது.

இப்போது ஹான்போர்ட்-ல் நடப்பது சுத்திகரிப்பு வேலைகள் மட்டும். சுமார் 170 ஆழ்கிணறுகளில் உயர்கதிரியக்கமுள்ள கழிவுநீர் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றிலிருந்து கதிரியக்க கழிவுநீர் கசிந்ததாக பலமுறை செய்திகள் வந்தது. பலமுறை கழிவுநீர் கொலம்பியா ஆற்றில் கலந்து பல மைல் தூரத்திற்கு கதிரியக்கம் இருந்ததாகவும், கொலம்பியா ஆற்றில் அதிகமாகக்கிடைக்கும் சால்மன் மீன்கள் கதிரியக்கத்தால் பாதிக்கட்டதாக செய்திகள் பரவி அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. இந்த கதிரியக்கக்கழிவுகளால் அதிகமும் பாதித்தது ஆற்று ஓரத்தில் வசித்துவந்த பழங்குடிகள்தான்.

இப்போது அணுவுலைக்கழிவுகளை சுத்தப்படுத்துவதற்காக வருடத்திற்கு அரசாங்கம் செலவிடும் தொகை தோராயமாக 2பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பன்னிரெண்டாயிரம் கோடிகள். கூடங்குளம் அணுவுலை கட்டுவதற்கான தொகை. கூடன்குளம் அணுவுலைகள் கட்டுவதற்காக நாம் செலவிட்ட மொத்ததொகையை அமெரிக்க அரசு ஹான்போர்ட் சைற்றை தூய்மைப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் செலவிடுகின்றது. காற்று வழியாகவும் ஆறுவழியாகவும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலகோடி ரூபாய் நஷ்டஈடாகவும் பெற்றார்கள்.

நான் சுமார் ஐந்து வருடங்கள் ரிச்லாண்டில் வசித்திருந்தேன். அப்போது நான் பக்கத்து நகரான கென்னிவிக்கில், அணுவின் நியூக்கிளியஸிலிருந்து எலெக்ட்ரானை வெளியேற்றி டிஜிற்றல் பல்ஸ் டிடக்டர் உதவியுடன் அந்த அணுவின் தன்மையை ஆய்வு செய்ய உதவும் கருவியை தயாரிக்கும் கம்பெனியில் வேலைசெய்தேன். இந்த கருவியைக்கொண்டு உலோகக்கலவைகளின் சேர்மானங்களையும் அவற்றின் சதவிகிதங்களையும் எளிதில் கண்டறியலாம். ஒரு ஓவியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்ததென்பதை அந்த பெயின்றில் பயன்படுத்தியிருக்கும் உலோகத்தை கொண்டு கண்டறியலாம். இதைக்கொண்டு நமது இந்திய கலைச்சிற்பங்கள் எந்த நூற்றாண்டைச்சார்த்ததென்பதை எளிதில் துல்லியமாக கண்டறியலாம். ஆனால் இந்தியாவில் இந்த கருவியை போலி தங்கநகைகளை கண்டறிவதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்று சொல்லப்பட்டது.

அணுவிலிருந்து எலெக்ட்ரானை வெளியேற்ற மிகச்சிறிய அளவு, ஸ்மோக் டிடெக்டர் வெளிவிடும் கதிரியக்கத்திற்கும் குறைவான அளவு, எக்ஸ்-ரே கதிகள் பயன்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் வேலைசெய்த அனைவருக்கும் டோசிமீட்டார் என்னும் கருவி பொருத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டோஸ் கதிரியக்கம் எங்கள் உடம்பில் பெறப்படுகின்றது என்று கணக்கிடப்பட்டு அது அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவானதுதானா என்று உறுதிசெய்யப்பட்டது. அரசு அலுவலர்களால் ஒவ்வொரு வருடமும் கதிரியக்கம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டது.

இப்போது ரிச்லாண்ட் நகரிலும் அங்கிருக்கும் வாஷிங்க்டன் ஸ்டேட் யூனிவெர்சிடியிலும் ஹான்போர்ட் சார்ந்த பல ஆராய்ச்சிகள் நடக்கின்றது. இதில் அதிகமும் நமது இந்தியர்கள் தான். ஹான்போர்டிலிருக்கும் கழிவுகளை கண்ணாடி வில்லைகளாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

என்னுடைய ரிச்லான்ட் வீட்டிலிருந்து கொலம்பியா ஆற்றிற்கு செல்லும்போது ஆற்றை ஒட்டிய பகுதியில் துணியில் சுற்றப்பட்ட தன் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு மிக இளமையான ஒரு பழங்குடி தாய் நிற்பதுபோன்ற ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. அவள் பெயர் சக்கஜேவியா. என்னுடைய பக்கத்துத்தெருவின் பெயரும் அதுதான். என்னுடைய தெருவின் பெயர் மெரிவெதர் அவென்யு. இன்னொரு பக்கத்து தெருவின் பெயர் சார்போன்.

நம்மூர்போல் பெயரிலும் சில குளறுபடிகள் உண்டு. சக்கயேவியா, சக்ககேவியா, சக்கஜேவியா என்பதில் எது சரியென்பதில் இன்னும் தெளிவில்லை. சக்கஜேவியா என்றால் வள்ளம் செலுத்துபவள். ஸ்நேக் ஆறு கொலம்பியா ஆற்றுடன் கலக்கும் இடத்தில் சக்கஜேவியாவின் பெயரில் ஒரு பூங்காவும் இருக்கின்றது.

சக்கஜேவியா வாஷிங்டன் மாகாணத்திற்கு பக்கத்திலிருக்கும் இடாகோ மாகாணத்தில் அகைடியா இனக்குழுவை சார்ந்தவர். அவரது பன்னிரெண்டாவது வயதில் இன்னொரு இனக்குழுவான ஹிடஸ்டாவுடன் நடந்த போரின்போது அவர்களால் பலபெண்களுடன் சக்கஜேவியாவும் கைதியாக வடக்கு டக்கோட்டாவிற்கு கடத்திசெல்லப்பட்டார். அடுத்த வருடம் சார்போன் என்பவருக்கு மனைவியானார்.

1803-ம் வருடம் தாமஸ் ஜெபர்சன் ஜனாதிபதியாக இருந்தபோது, லூசியானா நிலப்பகுதியை ஒரு ஏக்கருக்கு 3 அமெரிக்க நயா பைசா (சென்ட்) வீதம் கொடுத்து 15மில்லியன் டாலருக்கு பிரான்சிடமிருந்து வாங்கியது. அமெரிக்காவின் இந்த மத்திய நிலப்பகுதி பத்து மாகாணங்களை உள்ளடகிய பெரும்பகுதி. இந்திய நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு.

இந்த பகுதியை ஆராய்வதற்காகவும், மிசிசிப்பி ஆற்றுப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவும் ஆற்று வழியாக லூசியானா நிலப்பரப்பை பசிப்பி கடலுடன் இணைக்க முடியுமா என்று அறிவதற்காகவும் லீவிஸ் மெரிவெதர் மற்றும் வில்லியம் கிளார்க் தலைமையில் இராணுவக் குழு ஒன்றை ஜெபர்சன் அமைக்கின்றார்.

இந்தக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி இளைஞர்களை இந்த பயணத்திற்காக தயார்படுத்துகின்றார்கள். லீவிஸும் கிளார்க்கும் சக்கஜேவியா தங்கியிருந்த ஹிடஸ்தா பழங்குடிகளின் பகுதியில் வரும்போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவளின் வயது 15-ற்கும் குறைவு. சக்கஜேவியாவிற்கு சோஷோன் மொழி தெரியுமென்பதால் சக்கஜேவியாவையும் சார்போனையும் மொழிபெயர்ப்பாளராக லீவிஸும் கிளார்க்கும் தங்கள் குழுவில் இணைத்துக்கொள்கின்றனர். சக்கஜேவியா தன் முதல் குழந்தையை பிரசவித்த இரண்டாவது மாதத்தில் குழந்தையை முதுகில் சுமந்து குழுவுடன் பயணத்தை துவங்குகின்றாள்.

ஸ்நேக் ஆறுவழியாக கென்னிவிக் வந்த பயணக்குழு அங்கிருந்து கொலம்பியா நதி வழியாக பசிபிக் கடலை அடைந்தது. ஒரு வருடத்தில் 5000-மைல்களை கடந்திருந்தார்கள். இதன் பிறகு மத்திய மாகாணங்களுக்கு மக்கள் ஆறுவழியாக குடியேறத்துவங்கினார்கள். காடுகளும், கன்னி நிலங்களும், புல்வெளிகளும் நகரங்களாக மாறியது. ஆனால ஆற்றோரங்களில் வசித்த பழங்குடிகள் மட்டும் ரிசர்வ்டு பகுதிகளுக்கு தள்ளப்பட்டார்கள்.

சக்கஜேவியா தனது 25-ம் வயதில் இறந்ததாக ஒரு தியரியும் 96-வது வயதில் இறந்ததாக இன்னொரு தியரியும் இருக்கின்றது.

வரும் வழிகளில் தாமஸ் ஜெபர்சனின் உருவம் பொறிக்கப்பட்ட மெடல்களை சமாதானம் என்னும் பெயரில் கொடுத்துகொண்டே வந்தார்கள். அதில் முக்கியமான ஒருவர் ஒக்லாலா சூஸ்.

நான் ஐந்து நாள் பயணமாக அமெரிக்காவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைக்கு எனது காரில் பயணம் செய்தேன். செல்லும் வழியில் மவுண்ட் ரஷ்மோர் இருக்கின்றது. இந்த மலையில்தான் ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவத்தை செதுக்கி வைத்திருக்கின்றார்கள். அங்கே என்னை கவர்ந்தது ஐந்து ஜனாதிபதிகளின் சிலைகளைவிட ஒரு ஒற்றைவரி குறிப்பு. அது “எங்கள் செவ்விந்தியர்களிலும் மாவீரர்கள் உண்டு என்று நானும் என் சக தளபதிகளும் வெள்ளையர்களுக்கு சொல்லவிரும்புகின்றோம்.” என்று மலையில் சிற்பம் செதுக்கும் நிபுணர் கோர்சாக் சியோல்கோவ்ஸ்கியை பார்த்துசொல்லும் ஒக்லாலா இனத்தலைவர் ஹென்றி ஸ்டாண்டிங் பியரின் பேச்சு.

இன்று மவுண்ட் ரஷ்மோருக்கு இணையாக அமெரிக்க இராணுவத்துடன் தன் இனத்திற்காக போரிட்டு மடிந்த கிரேசி ஹார்சின் சிலை ப்ளாக் ஹில்சில் செதுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. அது முடிவடையும்போது உலகின் மிகப்பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கும்.

நான் மேற்சொன்ன அனைத்திற்கும் இன்றைய இந்தியாவின் தென்கடற்கரைகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமையுண்டு.

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு, யுரேனியத்தை நியூட்ரான் கொண்டு பிளக்கும்போது புளூட்டோனியத்துடன் வேறுபல பெயர்தெரியாத, கண்டுபிடிக்க இயலாத கதிரியக்கத்தன்மையுள்ள தனிமங்கள் வெளிப்பட்ட காலகட்டத்தில்கூட, சக மனிதர்களின் பாதுகாப்பை ஹான்போர்ட் நிர்வாகம் உறுதிசெய்து கொண்டபின்னரே அணுவுலைகளை கட்ட ஆரம்பித்தது.

மக்கள் செறிவாக உள்ள பகுதியில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பு, கதிரியக்க கழிவுநீர் எவ்வாறு கடலில் கலக்கின்றது, கதிரியக்கத்தால் மீன்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றாதா குறிப்பாக பாறைகளில் ஒரே இடத்தில் ஒட்டியிருக்கும், நாம் விரும்பி உண்ணும் சிப்பிகளில் கதிரியக்கம் இருக்கின்றதா என்னும் கேள்விகள் காலம் கடந்தவையாகக்கூட இருக்கலாம். வல்லரசுகள் கதிரியக்கக் கழிவுகளை சுத்திகரிக்க விழிபிதுங்கும்போது நாம் எழுபது வருடங்களுக்கு முன்னாள் சென்று அணுவுலை கட்டுவதற்கு முஷ்டியை உயர்த்துகின்றோம்.

அதுபோல் மணவாளக்குறிச்சியில் தோண்டியெடுக்கப்படும் தோரியம் போன்ற கதிரியக்கத்தனிமங்களால் பாதிக்கப்படாத கிராமங்கள் இன்று அபூர்வம். கடற்கரை கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி ஒருவர் இருப்பார். அதற்கு இணையாக இன்று ஒவ்வொரு வீட்டிலும் புற்றுநோயால் பாத்திக்கப்பட்ட ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.

மணவாளக்குறிச்சியில் கனிமவள மண்ணை தோண்டுவதற்கும், பலமைல் தொலைவிலிருக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் என்ன சம்மந்தமென்று நமக்கு கேள்வி எழலாம்.

உறைந்திருக்கும் கனிம மணலை தொண்டிஎடுக்கும்போது ஆழத்திலிருக்கும் கதிர்வீச்சு கனிம மணல்கள் கடலின் நீர்ப்போக்கில் அடித்து செல்லப்பட்டு அனைத்து கடற்கரைகளையும் பாதிக்கின்றது. இப்போது கடற்கரை மீனவர்களால் அனைத்து புற்றுநோய் மருத்துவ மனைகளும் நிரம்பி வழிகின்றது. மணவாளக்குறிச்சியில் கனிம மணல் சுத்திகரிப்பை இந்திய தாது மணல் கம்பெனி செய்கின்றது. கடந்த வருடம் இவர்கள் புற்று நோய் பாதித்த மக்களுக்கு செலவிட்ட தொகை 2லட்சம் ரூபாய். இது ஒரு நபருக்கான தொகையல்ல. புற்றுநோயால் பாதித்த ஒட்டுமொத்த மக்களுக்கும் செலவிட்ட தொகை. இரண்டு லட்சம் ரூபாய்! இந்தியாவில் ஆயுள் காப்பீடு இல்லாத இரண்டு ஜந்துக்கள் மீனும் மீனவனும்தான்.

தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சனை சாராயம். சாராயத்தால் பாதிக்காத கடற்கரை கிராமங்கள் இல்லை. அன்று உடலுழைப்பின் வேதனை தெரியாமலிருக்க சாராயம் குடித்த மீனவர்கள் இன்று புற்றுநோயின் வேதனை தெரியாமலிக்க குடிக்கின்றார்கள். சாராயத்திர்க்கெதிராக போராடும் குரல்கள் புற்று நோயை உருவாக்கும் கனிமமணலுக்கு எதிராகவும் கொஞ்சம் உயரட்டும்.

விழிஞம் பன்னாட்டு துறைமுகம் என்னும் பெயரில் இப்போது புதிதாக ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கின்றது. தாமஸ் ஜெபர்சன் அமைத்த குழுபோல் அதானிகளின் குழு வந்துகொண்டிருக்கின்றது. துறைமுகம் விரிவாக்கத்தில் அனைவருக்கும் உடன்பாடுதான். ஆனால் துறைமுக நிர்வாகம் கையகப்படுத்தும் மீனவர்களின் பட்டா இல்லாத நிலங்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் யார் பொறுப்பு?

விழிஞம் துறைமுகம் விரிவாக்கம் அதோடு முடிந்துவிடாது. துறைமுகத்திற்கு கிழக்கிலிருக்கும் கடற்கரை கிராமங்களில் தற்போது இருப்பதை விட அலைகளும் கடலரிப்பும் அதிகமாகும். அதற்காக எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எப்போதும் மீனவர்களுக்கான சட்டங்களை இயற்றுபவர்கள் மீனவர்களின் மீது அக்கறையில்லாத கடல்குறித்த குறைந்தபட்ச அறிவில்லாத உயர்குடிகளாகத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் தான் இன்று மீனவர்களின் தலைவிதியை தங்கள் விரலிடுக்குகளில் குத்திப்பிடித்திருக்கின்றார்கள்.

சுனாமியால் பாதித்த மக்களுக்கு 45-ஆயிரம் பெறுமானமுள்ள பொருட்கள் இனாமாக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. மீனவர்கள் பொருட்கள் வேண்டாம் காசாக தந்தால் போதும் என்று சொன்னபோது மீனவர்களுக்களுக்கு எப்போதும் பேராசைதான் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அரசாங்கம் கொடுத்த பொருட்கள் என்னவென்றால் மீன் பிடிப்பதற்காக ஒருகிலோ வலை, பிடித்த மீனை கரையில் கொண்டுவருவதற்கு ஒரு ஐஸ் பெட்டி, கரையில் கொண்டுவந்த மீனை சந்தையில் கொண்டுசெல்ல ஒரு சைக்கிள், சந்தையிலிருந்து திரும்பி வரும் போது இருட்டில் பயன்படுத்த ஒரு டார்ச் லைட். இதில் லாபமும் பேராசையும் யாருக்கென்பது சிறு குழந்தைக்கும் புரியும்.

இதை செயல்படுத்த கண்டிப்பாக நமக்கு ஐ எ எஸ் மூளைகள்தான் வேண்டும். மீனவனுக்கு பேராசை கொஞ்சம் அதிகம்தான். இப்போதெல்லாம் சைக்கிள்களுக்கு டைனமோ கிடையாதா? மீன்விற்பனை செய்யும் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியாக ஜீன்ஸ் பேன்ட் ஒன்றும் கொடுத்திருக்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயன்பட்டிருக்கும். மொத்தத்தில் மீனவர்களுக்கு மிஞ்சியது சைக்கிள் மட்டும்தான். ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொருவலையுண்டு. அரசு கொடுத்த வலை நண்டுபிடிக்க பயன்பட்டதாகக் கேள்வி.

சிலமாதங்களுக்கு முன்பு கேரளக்கடர்கரை மீனவர்கள் 12-நாட்டிகல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஜோ டி குரூஸ் அவர்களால் கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் நமது எல்லையை தாண்டாமலிருக்க அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதையே எந்தவித அடிப்படை ஆராய்ச்சியும் செய்யாமல் கேரள கடற்கரைக்கும் 12-நாட்டிகல் மைல்கள் என்று நிர்ணயித்தது. இவர்களுக்கு இந்தியாவின் கடல் எல்லை 12-நாட்டிகல் மைல்கல்தான் போலும்.

ஆனால் இப்போது மீனவர்களின் போராட்டம் காரணமாக 12-நாட்டிகல் மைல்கள் என்பது ரத்துசெய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் அதே சட்டத்தில், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால், புதிதாக 2000 வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவை ரத்து செய்யப்பட்டனவா? மீனவர்களுக்கு 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்கக்கூடாதென்று தடையிருக்கின்றது. இந்தத் தடை வெளி நாட்டு கப்பல்களுக்கும் இருக்கின்றதா? வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் கடற்காவல் படை இவர்களை கண்காணிக்கின்றார்களா?

கடந்த வருடம் இந்தியாவில் கேரளக்கடற்கரை மீனவர்கள் 400-நாட்டிகல் மைல்கள் வரை விரட்டிப்பிடித்த மீன்களின் எடை 40ஆயிரம் டன்கள். வெளி நாட்டுக்கப்பல்களின் கணக்கு 9ஆயிரம் டன்கள். இதில் வெளினாட்டுக்கப்பல்களின் வரி ஏய்ப்பு எத்தனை கோடியென்பது யாருக்குத்தெரியும்? இப்போது நமது மீனவர்கள் இந்த வெளிநாட்டு கப்பல்களுடன் போட்டியிட்டு மீன் பிடிக்கவேண்டும்.

இந்திய மீனவர்களுடன் போட்டியிட்டு நமது மீனை வெளிநாட்டுக் கப்பல்கள் பிடிப்பதற்கு அந்த வெளிநாட்டு கப்பல்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 16ரூபாய் மட்டும் நமது அரசு வசூலிக்கின்றது. நமது மீனவர்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 50ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். இந்திய அரசு யாரை வாழவைக்கின்றது? வெளிநாட்டுக்கப்பல்கள் என்று சொல்லப்படுபவை இந்திய அதிகார வர்கத்தின் பினாமி பெயரால் செயல்படுபவை என்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடலில் பிடிக்கப்படும் மீனைவிட உள்நாட்டில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகம் என்று ஜோ டி குருஸ் அவர்களின் ஆய்வறிக்கை சொல்கின்றது. ஆனால் இறால் பண்ணைகளால் எவ்வளவு விவசாய நிலங்கள் பாழாக்கப்பட்டிருக்கின்றது என்னும் கணக்குகள் சொல்லப்படவில்லை. காட்டை அழித்து விட்டோம், வயல்வெளியிலும் ஏரியிலும் பிளாட்டுகள் கட்டினோம், கடைசியில் கடலை அழித்து மொட்டை மாடியில் மீன் வளர்ப்போம்.

பலவிதங்களில், கடலிலிருந்தும் கரையிலிருந்தும் மீனவர்களை இந்திய அரசு நெருக்கிக்கொண்டே வருகின்றது. இப்படிப்போனால் இன்னும் சில வருடங்களில் மீனவர்களை, சில விசித்திர மிருகங்கள் பறவைகள் போல், ரிசர்வ்டு பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்தியா தொழில் நுட்பத்தில் தன்னிறைவு அடையவேண்டும் என்பதிலும், வல்லரசாக வேண்டுமென்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த கனவை ஏழை எளிய மீனவ மக்களின் பிணங்களின்மீது கட்டியெழுப்புவது அராஜகம்.

 

நாள்: ஆகஸ்டு 3, 2015