கேள்விகளைச் சுமந்தலையும் கடற்பறவை – சிறில் அலெக்ஸ்

அரபிக் கடலில் பின்னோக்கி நீந்திக் கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் தொடங்குகிறது கிறிஸ்டோபர் ஆன்டணியின் ‘துறைவன்’ நாவல். ஒரு கடற்கரைக் கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தைத் தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது.

ஆனால் இன்று நெய்தல் நிலப் படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டுத் தீவிர இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் பெறுவதென்பது கனவுகளின் ஈடேற்றமே. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும், சோற்றை நல்ல மீன்குழம்புடன் சேர்த்து உருட்டி சின்ன மீன் துண்டு ஒன்றை அதில் சேர்த்து ஊட்டுவதுபோல 13 அத்தியாயங்களில் நமக்கு அளிக்கிறது ‘துறைவன்’. பெருங்கடலை அலைகளைக்கொண்டு அளக்க முடிவதில்லை என்றாலும் அவையே நம் அனுபவங்களுக்கு அணுக்கமானவை.

கடல் பாடு

படத்துலோமி என்றழைக்கப்படும் பர்த்தலோமி ஆனி – ஆடி சீசன் என்றழைக்கப்படும் கடல் பாடு செய்யக் கடினமான நாட்களில் ஒன்றில் கடலுக்குச் செல்ல முயல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. அங்கிருந்து அரசியல், வரலாறு, மதம், சமூகம், நட்பு, உறவு, தொழில் எனப் பல்வேறு கோணங்களில் நாவல் விரிந்து செல்கிறது.மூன்று காலங்களாகத் துறைவனின் கதை பிரிக்கப்பட்டுள்ளது. அவை மீனவர் தொழில் செய்யும் முறையைக்கொண்டே குறிக்கப்பட்டுள்ளன.

முதலில் சாதாரணக் கட்டுமரங்களும் பின்னர் ‘பைபர்’ எனப்படும் செயற்கை இழைகளைத் தோலாகக் கொண்ட படகுகளும் இறுதியாக நிகழ்காலத்தில் பெரிய விசைப் படகுகளும் காலத்தின் குறியீடாக வந்துசெல்கின்றன. இவற்றினூடே சொல்லப்படும் மீனவர்களின் வாழ்கையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இதுவே இந்தப் புதினத்தின் மையம்.

அவர்களின் தொழில் முறை மாறியிருக்கிறது, அதன் வழியாகச் சில வசதிகள் உருவாகியிருக்கின்றன. ஆயினும் அவர்களின் ‘பாடு’ மாறிவிடவில்லை. மீன்பிடித் தொழில் ‘பாடு’ என்று அழைக்கப்படுகிறது. ‘மீன்பாடு உண்டா?’ என்பது மீன் வலைகளில் படுவது என்பதைக் குறிக்கலாம் ஆனால் அது ‘பாடுபடுதல்’ என்பதையும் குறிக்கிறது.

ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அவர்க ளின் பழங்குடி மனம் மாறவில்லை. அவசர காலங்களிலேனும் ஆரத்தழுவும் அரசின் கரம் தொடாத ஏதோ தொலைத் தீவில் வாழும் மக்களைப் போல அவர்கள் தனித்து வாழும் நிலை மாறிவிட வில்லை. மதம் வெறும் வழிபாட்டு அமைப்பாக மட்டுமே அவர்கள் மத்தியில் இயங்கும் நிலை மாறவில்லை. நவீன வியாபார உலகின் நுட்பங் களோ, சாத்தியங்களோ அவர்களின் சிந்த னைக்கும் மொழிக்கும்கூட எட்டியிருக்கவில்லை. ஜிபிஎஸ், ரேடியோ எனச் சில நவீன வசதிகள் அவர்களின் பாரம்பரிய முறைகளை மாற்றியமைத் துள்ளன. அந்தக் கருவிகளை இயக்கும் மனிதனின் வாழ்க்கை முன்பைப் போலவே இருப்பதாகவே இந்நாவலும் சொல்கிறது.

மேலெழும் கேள்விகள்

ஒரு நவீனச் சமூகம் தன் வரலாற்றை எப்படி அறிந்துகொள்வது, எப்படி அதைப் புரிந்துகொள்வது, வரலாற்றிலிருந்து எதைப் பெற்றுக்கொள்வது என்பவை முக்கியக் கேள்விகள். கல்வியின் மூலம் ஒரு பழங்குடித்தன்மை கொண்ட சமூகம் அல்லது அதைச் சார்ந்த ஒருவர் எத்தனை தூரம் செல்ல முடிகிறது என்பது ஒரு கேள்வி.

அரசியலில் அவர்களின் ஈடுபாடும், அரசுக்கு அவர்களுடனான ஈடுபாடும் வெறும் தேர்தல் சடங்குகளைத் தாண்டி எப்படி இருக்க வேண்டும்? மதம் எளிய மக்களின் வாழ்க்கையில் என்ன பங்கை ஆற்ற வேண்டும்? எளிமையாகத் தோன்றும் உரையாடல்களின் மூலமும், அன்றாட நிகழ்வுகளின் விவரிப்பின் வழியேயும் துறைவன் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் இத்தகையவை.

நுட்பமான தகவல்கள் நாவல் முழுவதும் செறிந்துள்ளன. மரம் கட்டுவது, பாய் கிழிப்பது, குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகையில் பிடிக்கப்படும் மீன்களின் வகைகள், வலை பின்னுதல், மீன் விற்றல் போன்ற தொழில்களின் நிலைகள், முறைகள், மற்றும் பல வரலாற்றுத் தகவல்களும் தொன்மங்களுமாய் நாவல் நிறைந்துள்ளது. அதன் மொழி மக்களின் பொதுவழக்கில் அமைந்திருந்திருக்கிறது. முதல் சில வரிகளுக்குள்ளாகவே கோட்டுமால், இடியறை, துவர்த்து, சஞ்சி, சேலு என வட்டார வார்த்தைகள் சரளமாக வந்துபோகின்றன.

பர்த்தலோமியின் கதை முக்கியமாகச் சொல்லப்பட்டாலும் அவர் ஒரு முழுமையான மூலக் கதாபாத்திரமாக உருவாக்கப்படவில்லை. அதேபோல கதை என்ற வகையில் ஒருங்கிணைந்த கதையாக முழு நாவலும் இல்லை என்பவற்றை ஒரு அவதானமாக முன்வைக்கலாம். ஆனால் அவை குறைகள் அல்ல. ஒரு நிலைப்படத் தொகுப்பை (ஸ்லைட் பாக்) கொண்டு கதைகளைச் சொல்வதைப்போல ஒவ்வொரு அத்தியாயமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிப்பிகளுக்குள் ஒட்டுண்ணிகள் நுழைந்து அவற்றின் தசைகளை அரிக்கும்போது சிப்பிகள் ஒரு திரவத்தைக் கொண்டு அவற்றை மூடுகின்றன. மெல்ல மெல்ல அத்திரவம் உறைந்து முத்தாகிறது. கிறிஸ்டோபர் ஆன்டணி தன் மனதை அரித்துக்கொண்டிருக்கும் பல்வேறு கேள்விகளையும் நினைவுகளையும் அவற்றின் வழியே தான் அடைந்தவற்றையும் ஒரு நாவல் வடிவில் நமக்கு தந்திருக்கிறார். தமிழ் இலக்கிய உலகின் இளைய முத்துக்களில் துறைவனும் ஒன்று. உயிர்மை பதிப்பகம் வழங்கிய நாவலுக்கான சுஜாதா விருதை கிறிஸ்டோபர் இந்நாவலுக்காகப் பெற்றுள்ளார். அதைவிட முக்கியம், இன்று கடற்கரையில் அதிகமாக வாசிக்கப்படும் புதினமாக இது இருப்பது.

அலைகளிலிருந்து கடலை அறிவது கடினமே. அலைகள் கேள்விக்குறிகளாய் வளைந்து வளைந்து வீழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்தக் கேள்விகளைச் சுமந்தலையும் கடற்பறவைகளாய்த் துறைவன் நம்மை மாற்றிவிடுகிறது.

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/article8748447.ece