இளம் இந்தியா தன் கூழாங்கல்லை வீசுகிறது – சி. எப். ஆன்ரூஸ்

இந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தற்போதைய நிலையை யோசிக்கும்போது, ஒரு பழைய பைபிள் கதை அடிக்கடி என் நினைவுக்கு வருகிறது. கோலியாத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தாவீது எவ்வாறு புறப்பட்டார் என்று பைபிளின் ஆரம்ப புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்பு, சவுல் தான் பயன்படுத்திய கனமான கவசத்தை அணிவதற்கு தாவீதை வற்புறுத்தினார். தாவீது முதலில் அதைப் அணிய முயன்றாலும், மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார். பின்னர், அந்த கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓடைக்குச் சென்று சில மென்மையான கற்களை எடுத்துக்கொண்டு, தன் கவணைப் பயன்படுத்தி அந்த பெரிய ராட்சதனைக் கொன்றார்.

இது, இந்திய விவகாரங்களில் ஒரு உவமையாக எனக்கு எப்போதும் தோன்றுகிறது. இந்தியாவின் சமூக சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வம்கொண்ட, இந்தியாவை ஆளும் மேற்கத்திய சக்திகள், பயனுள்ளதென நிரூபணமான தங்கள் சக்திவாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, கிழக்கத்திய நாடுகளின் சமூக அமைப்புகளில் ஆழமாக வேரூன்றிய பழமையான தீமைகளுக்கு எதிராக போராடுவதற்காக இந்திய இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக முயன்றன. படித்த இந்தியர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த மீண்டும் மீண்டும் முயன்றனர். ஆனால், சமீபகாலங்களில் மகாத்மா காந்தியின் தலைமையில், இளம் இந்தியா மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்காமல், தாவீதைப்போல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது. மேற்கத்திய வழிமுறைகளுக்கு எதிரான இந்த எதிர்வினையில், இந்தியாவின் பழைய சமூக தீமைகளை கையாள்வதற்கு அதன் சொந்த விசித்திரமான வழிகளில் அது திரும்பியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் விவகாரங்களில் இதுவே தற்போதைய அம்சமாகும். கிழக்கில் தேசியவாதத்தின் எழுச்சி என்று சில நேரங்களில் இதை நாம் கருதினாலும், மேற்கின் துணையின்றி நம் சுய வழியில் காரியங்களைச் செய்வதற்கான ஒரு முயற்சி என்றே கருதவேண்டும்.

இந்த ஆய்வறிக்கையை எனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்க விரும்புகிறேன். நான் மகாத்மா காந்தியின் சீடர்களுடன் நெருக்கமாகப் பழகியதன் காரணமாக, நான் சொல்லப்போகும் அனைத்தும் என் கண்களால் நான் கண்டவற்றின் அடிப்படையிலானது.

வைக்கம் போராட்டம் என்று அழைக்கப்படும், தென்னிந்தியாவின் “தீண்டாமைக்கு” எதிரான தார்மீக போராட்டத்தை முதலில் விளக்குகிறேன். மிக அதிக எண்ணிக்கையிலான ஏழ்மையான மக்கள், குறிப்பாக தென்னிந்தியாவில், பறையர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தொடுவது கூட  உயர்சாதி மக்களால் தீட்டாக கருதப்படுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காயல்களுக்கு நடுவில் வைக்கம் கிராமம் இருக்கிறது. நிலப்பரப்பைச் சுற்றியிருக்கும் பல கால்வாய்களின் வழியாக கடல் அலைகள் உள்ளே நுழைகிறது. அதுபோல், ஒரேயொரு நெடுஞ்சாலை மட்டுமே வைக்கம் வழியாகச் செல்கிறது. இந்த சாலை இல்லையென்றால், வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு வயல் வரப்புகளையும் நீர்நிலைகளையும் தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே, இந்த நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானது. ஆனால் இது வைக்கம் கோயிலுக்கு அருகிலிருக்கும்  உயர்ஜாதி பிராமண குடியிருப்பு வழியாகச் செல்வதால், பறையர் இன மக்களால் தங்களுக்கு தீட்டுப்படும் என்பதால், பல நூறு ஆண்டுகளாக பிராமணர்கள் அந்த சாலைவழியாகச் செல்வதற்கு  பறையர் இன மக்களை அனுமதிக்கவில்லை. எனவே, இந்தச் சாலையை உயர்ஜாதியினர் மட்டுமே பயன்படுத்தினர். அதற்கு சட்டத்தின் அனுமதியையும் பெற்றிருந்தனர். இந்த சமூக அநீதியை துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் சட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

காந்தியின் இளம் சீடர்கள் இதை ஒரு சோதனைக் களமாகக்கொண்டு, இந்த சாலையை அனைத்து இன மக்களும் பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்கள். மகாத்மா காந்தியின் இயக்கத்தின் வலிமையைக் காட்டும் இந்த கதையின் சுவாரஸ்யமான விஷயம் இதுதான்: இந்த போராட்டத்தின் யோசனையைத் தோற்றுவித்த இளம் தலைவர், திருவிதாங்கூரில் உள்ள பண்டைய சிரியன் சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் – ஜார்ஜ் ஜோசப் என்ற இளம் பேரறிஞர். அவர் காந்தியின் தீவிர சீடர், மட்டுமன்றிதிருவிதாங்கூரில் ஒரு முக்கிய தேசபக்தி கொண்ட தொழிலாளி. போராட்டம் தொடங்கிய நேரத்தில் மகாத்மா காந்தி ஏறக்குறைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், பம்பாய்க்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் நான் அவருடன் இருந்தேன். அங்கு அவர் மிகுந்த பலவீனப்பட்டு கிடந்தார். ஜார்ஜ் ஜோசப் காந்தியை சந்திக்க வந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. எப்படியிருந்தாலும், காந்தியின் படுக்கையறையிலிருந்து முழு செயல் திட்டமும் வரைபடமாக்கப்பட்டு, போராட்டம் தொடங்கியது.

மகாத்மா காந்தியின் சீடர்கள், தாங்கள் ஆதரிக்கும் “தீண்டத்தகாத” நண்பர்களையும் அழைத்துக்கொண்டு பிராமணர்களின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தனர். அவர்கள் உடனடியாக தாக்கப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். திருவாங்கூர் மாநில காவல்துறையினர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் அவரது ஆதரவாளர்களை அத்துமீறலை ஊக்குவித்ததற்காக கைது செய்தனர். அவர்களுக்கு ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் இடத்தை நிரப்புவதற்காக நாட்டின் பல இடங்களிலிருந்தும் தன்னார்வலர்கள்  ஒரே நேரத்தில் அணிதிரண்டனர். அதன்பிறகு, யாரையும் கைது செய்யப்படக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டது. காந்தியின் ஆதரவாளர்கள் சாலையில் நுழைவதை காவல்துறையினர் பலத்துடன் தடுத்தார்கள். அவர்கள் சாலையின் குறுக்கே தடுப்புவேலி ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது காந்தியின் சீடர்கள் அவரது அறிவுரையைக் கேட்டார்கள். காவல்துறை வழிவிடும் வரை, காவல்துறை  அமைத்த தடுப்புவேலிக்கு எதிரே நிற்குமாறு அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் மனப்பான்மையுடன் அந்த போராட்டத்தை தங்களின் புனிதமான மதக் கடமையாகக் கருதினார்கள். காந்தியின் இளம் சீடர்கள் கிராமத்திற்கு அருகில் ஆஸ்ரமம் ஒன்றை அமைத்து, அனைத்தையும் மத அடிப்படையில் ஏற்பாடு செய்ததுடன், ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து முடித்தனர். போராட்டத்தில் எந்த விதத்திலும் வன்முறைக்கு இடங்கொடுக்காமல், அவர்கள் இறைபாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலிவரை சென்றார்கள். எவ்வளவு காலம் நீட்டிக்கமுடியுமோ, அதுவரை போராட்டதை தொடர்ந்து நடத்த மகாத்மா காந்தி அவர்களை வலியுறுத்தினார். அனைத்து ஏற்பாடுகளும் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செயலற்றிருக்கும் எதிர்ப்பாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு உதவிசெய்வதற்கும், நடப்பவற்றை அவருக்கு தெரியப்படுத்தவும், காந்தி என்னை அங்கு அனுப்பினார். பின்வருபவற்றை நான் என் கண்களால் கண்டேன்.

அந்த இடம் மிகவும் தட்டையான தாழ்வான பகுதி. அந்த இடத்தை அடைய, நான் பல படகுகள் மாறி,நீர்வழிகளைக் கடக்கவேண்டியிருந்தது. அனைத்து இடங்களிலும் தென்னை மரங்கள் ஆடம்பரமாக வளர்ந்திருந்தன. அது தென்னை மரங்களின் நிலம். அவை தண்ணீரில் பிரதிபலித்தது. காந்தியின் சீடர்களின் ஆஸ்ரமம் தென்னை ஓலையால் அடர்த்தியாக வேயப்பட்டிருந்தது. ஆஸ்ரமத்தில் அதிகாலை நான்குமணிக்கு பிராத்தனை துவங்கியது. அதிகாலையில் அவர்கள் தங்கள் அரிசி உணவை விரைவாக சமைத்தார்கள். ஐந்து மணிக்குப் பிறகு, தன்னார்வலர்கள் தடுப்புவேலியை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். கிராமத்தின் மத்தியப் பகுதிக்குச் செல்வதற்கு, தென்னைமரங்களுக்கு இடையினூடாக, கொடூரமான குறுகிய பாதைகள் இருந்தன. சத்தியாகிரகிகள் கடந்து செல்வதைக்காண கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் சாலையோரத்தில் வரிசையாக நின்றார்கள். அவர்கள் வெள்ளியாடை உடுத்தி இறைதுதிப்பாடலை பாடிக்கொண்டு தடுப்புவேலி நோக்கிச் சென்றார்கள். அவர்கள் பிரார்த்தனை மனநிலையில், பறையர்களுடன் தடுப்புவேலியருகே நின்றனர். மகாத்மா காந்தியின் கதர் இயக்கத்தின் அடையாளமாக ஒருவர் ராட்டைச் சக்கரத்தில் அமர்ந்து முழு நேரமும் அமைதியாக ராட்டையை சுற்றிக்கொண்டிருந்தார்.

கிராமவாசிகள் காந்தியின் போராட்டக்காரர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருக்கும்போது பிராமணர்களுடன் பலமுறை கலந்து பேசினேன். அவர்கள் நிலையற்றிருந்ததை காணமுடிந்தது. ஆனாலும் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் நீண்டகால சலுகையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. நற்பண்புகளின் மீதான நம்பிக்கையைவிடவும், பழமைவாதத்தின் மீது அவர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

தன்னார்வலர்களின் வெவ்வேறு குழுக்கள் ஆறு மணி நேரம் இடைவெளி இல்லாமல் தடுப்புவேலியில் நின்றார்கள. ஒவ்வொரு குழுவும் நண்பகலில் மீண்டு இன்னொரு குழு அவர்களிடத்தில் வந்தது. மாலை ஆறு மணிக்கு அன்றைய நாள் போராட்டம் முடிவுற்றது. பின்னர் தொண்டர்கள் தங்கள் மாலை நேரத்து கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி திரும்பிச் சென்றனர். முழு ஆசிரமமும், அரிசி சாதம் சாப்பிட்ட பிறகு, எட்டு முதல் ஒன்பது மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஓய்வெடுக்கச்சென்றது.

தென்மேற்கு பருவமழையின் போது உச்சகட்ட நிகழ்வு நடந்தது. அந்த நேரத்தில் கடல் மட்டத்திற்கு மிக அருகில் இருந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த போராட்டம் நடந்த வருடத்தில், வெள்ள நீர் தடுப்புவேலியில் நின்றவர்களின் இடுப்பு வரை சென்றது. வெள்ளப்பெருக்கின் போது தட்டையான படகுகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். படகுகள் சாலையின் குறுக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது. அவற்றை கயிற்றால் கட்டி தூண்களில் இணைத்திருந்தார்கள். அவ்வாறு, காவலர்கள் தண்ணீரில் நனையாமல் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். சிலநேரங்களில் தொண்டர்களில் தோள் அளவிற்கு தண்ணிர் இருந்தது. அவர்களின் சிரமத்தை கணக்கில்கொண்டு, தொண்டர்களின் போராட்ட நேரம் ஆறுமணியிலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு சமயத்தில் முகாமில் அதிக நோய் இருந்தது. முகாம் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கியிருந்தது. ஒரு காலகட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கடுமையாக இருந்தது. ஆனால், இந்த கொடிய நிலமையை தாங்கிக்கொண்ட துணிச்சலால், போராட்டக்காரர்களின் மீதான பொதுமக்களின் அனுதாபம் இயற்கையாகவே அதிகரித்தது.

அனேகமாக, மற்ற எதையும்விட, இந்த துணிச்சல்தான் பிராமணர்களின் எதிர்ப்பை உடைத்தது. முடிவில், சுமார் ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, போராட்டம் முடிவடைந்து, சாலை திறக்கப்பட்டது. பிராமணர்கள் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பறையர்களை கோயில் மற்றும் பிராமண வாழ்விடப்பகுதிகள் வழியாக நடக்க அனுமதித்தனர். “அவர்களின் வேண்டுதலை நாங்கள் இனியும் எதிர்க்கமுடியாது. நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர்கள் [பிராமணர்கள்] சொன்னார்கள்.

மேற்குலகின் ஆயுதங்களைப் போலல்லாமல், தனது சொந்த சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இந்தியாவின் இந்த சுதேச ஆயுதங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விளக்கத்திலிருந்து எளிதாகக் காணலாம். இந்த வைக்கம் போராட்டம் வாயிலாக, பறையர்களுக்கு ஒரே ஒரு நெடுஞ்சாலையைத் திறப்பதை, அல்லது இதுபோன்ற பல சாலைகளைப் பயன்படுத்துவதற்கான மனித உரிமையை வென்றெடுப்பதைவிட, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பழமைவாத சமூகங்களின் பார்வையிலும் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த போராட்டத்தின் வெற்றியின் மகுடமாக இருக்கும். ஐந்து கோடிக்கும் அதிகமான இந்த ஏழை “தீண்டத்தகாத” மக்கள் இருக்கும் நாட்டில், இதன் பொருளை அரிதாகவே மிகைப்படுத்த முடியும். பல நூற்றாண்டுகளாக, ஆழமாக வேரூன்றிய இந்த தீமை வெல்லப்படாமல் நடந்து வருகிறது. இப்போது இந்த தீமை அதன் உயிர் சக்தியை அழித்து பூமியிலிருந்து முழுமையாக அகற்றப்படும் என்று தோன்றுகிறது.

[Young India Throws Its Pebble, C.F. Andrews, The Survey, March 1, 1929]