துறைவன் விமர்சனம் – சுந்தர் கார்த்திகேயன்

துறைவனை வெளி-நிலத்திற்கும் கொண்டுவந்த உங்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

சாதாரணமாக என் உள்ளுணர்வினால் மட்டுமே நான் புத்தகங்களை தேர்வு செய்கிறேன்! 2015-ன் கடைசியில் 27-ம் தேதி டிசம்பர், விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிற்கு வந்த எனக்கு உங்கள்துறைவன் நூல் வெளியீட்டை அறிவதற்கும், வாங்குவதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது! 9-ம் தேதி ஜனவரி படித்து முடித்தபோது இவ்வருட தொடக்கத்திலேயே நான் ஒரு நல்ல பதிவை படித்தஅதிருஷ்டக்காரன் ஆனேன் என்றுதான் சொல்லவேண்டும்! 45தினங்கள் ஆகியும் உங்களுக்கு நான் எழுதும் இந்தக் கடிதமே, உங்களுடைய இந்த முயற்சிக்கான பாராட்டாக, என்னுள் ஆழ்ந்தசலனத்தை ஏற்படுத்தியதற்கான, சான்றாக இருக்க முடியும்!

Clive Cussler, Alistair MacLean தாண்டி கடல் சார்ந்த புதினங்கள் படித்ததில்லை! உங்களுடைய துறைவன் தான் நான் படித்த, கடல் வாழ்வியல், வரலாறு சார்ந்த முதல் தமிழ் பதிவு…படித்த பிறகுதான்ஆங்கிலேயர்களின் தொழில் நுட்பம் சார்ந்த பதிவுகள், திரும்பத் திரும்ப ,வாழ்வியலை மறக்க அடிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். மேலும் ஜஸ்டின் திவாகர் குறிப்பிட்டு இருந்த நெய்தல் நிலபடைப்பாளிகளின் பட்டியலை பற்றி, ஜெ.மோ முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தாலும், என்னைப் போன்ற வாசகர்களை, உங்களைப் போன்றவர்களின் பிரயத்தனங்கள் இடிகரைகளைத் தாண்டி வந்துசேர்வதில்லை. கலங்கரை விளக்கங்களின் வெளிச்சமும் போதுமானதாக இருப்பதில்லை.

துறைவன் படித்த பிறகே, நெய்தல் நில,வாழ்வியல், தினசரி போராட்டங்கள், உறவுகளின் மேன்மை, மதக் கோட்பாடுகள், கட்டுமரங்கள், மீன் பிடி வலை, மீன்கள் ஆகியவற்றின் வகைகள்,படகுகளின்செயல்பாடுகள், மீன்பிடிமுறைகள் ஆகியவை தெளிவாகின.

போத்தி, லார்சன், படத்துலோமி, ஆகியோரையும் வள்ளவிள அல்கந்தறு, முக்குவர் வரலாறு ஆகியவற்றையும் என்னால் மறக்க இயலாது!

90-களில் இருந்து என்னுடைய நண்பர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ்-ன் ராஜக்க மங்கலம் துறை வீட்டிற்கு போய் வந்து கொண்டிருந்தாலும், கடலை நான் ஒரு ‘கேளிக்கை’ என்ற கோணத்தில் மட்டுமே பார்த்துவந்திருக்கிறேன், என்று -துறைவன்- எல்லாவகைகளிலும் உணர்த்தியது!

துறைவன் புதினத்தை என்னுடைய நண்பர்களுக்கும்,நான் படித்த கல்லூரிகளுக்கும், எனது மகன் படிக்கும் கல்லூரிக்கும் பரிசளிக்க உத்தேசித்துள்ளேன்!

உங்களுடைய நேரத்தையும், சக்தியையும் நெய்தல் நில வரலாற்றை பதிவு செய்வதில் செலவிட்டமைக்கு முக்கடல்களும் வெகுவாக ஆர்ப்பரித்து, தன்னுடைய மைந்தனான உங்களை “வாழ்வாங்குவாழ” அசீர்வாதத்தை கொடை கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

முக்கடல் பதிப்பகத்திற்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவியுங்கள்!

 

நாள்: Feb 18, 2016

கடிதம்: சுந்தர் கார்த்திகேயன்