எரியும் பனிக்கட்டி

[மீத்தேன் பிரச்சனை துவங்குவதற்கு முன்பு 2012 எழுதிய ஒரு எளிய கட்டுரை]
ஒருபக்கம் இலங்கை கடற்படை, மறுபக்கம் அணுவுலை அது போக ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமையை பன்னாட்டு மீன்பிடி கம்பனிகளுக்கும் தாரை வார்த்து இந்திய மீனவனில் சங்கை நெரித்து குப்புறத் தள்ளியாகி விட்டது. இன்னும் என்ன என்று யோசித்த போது இது சிக்கியது. எரியும் பனிக்கட்டி!
புவியின் வெப்பத்தை சமன் செய்வதில் புவி வளிமண்டலத்திலிருக்கும் பசுமைக்குடில் வாயுக்களான மீத்தேன், கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் ஓசோன் போன்றவை பெரும்பங்காற்றுகின்றன. இந்த வாயுக்களால், புவியின் சராசரி வெப்பநிலை 33% செல்சியஸ் உயர்ந்து, தற்போது 16° செல்சியஸ் அளவாக இருக்கின்றது. இந்த வாயுக்கள் இல்லையெனில், புவி வெப்பனிலை -20° செல்சியஸாக இருந்திருக்கும். பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவற்றின் வெப்பம் உமிழும் தன்மை காரணமாக, புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்ப்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு, வளிமண்டலத்தின் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கணிசமாக உயர ஆரம்பித்து இன்று விரிந்து பரவி பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு என்று மனித இனத்திற்கு சவாலாக வந்து நிற்கின்றது. இதில் நாம் பயன்படுத்தும் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப்பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு.
இது ஒருபுறமிருக்கு, மனிதனின் இயற்க்கை எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து, அனைத்து நாடுகளும் ஒரு சில எண்ணை வளமிக்க வளைகுடா நாடுகளையே நம்பியிருக்கின்றது. பயன்பாடு காரணமாக, எண்ணைவளமும் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றது. தற்போதைய தேவையை கருத்தில் கொண்டால், பூமியின் எண்ணைவள கையிருப்பு இன்னும் 40 வருடங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு பூமித்தாய், போண்டியாகிவிடுவாள் என்று கருதி ஒவ்வொரு நாடும் தங்களால் முடிந்த மட்டும் சேமிக்கத் துவங்கியது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. குறிப்பாக, பெட்ரோலியப் பொருகளை ஒரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்க்கு கடல்வழி மற்றும் தரை மாற்க்கமாக கொண்டுசெல்வது மிக சவாலாகவே உள்ளது. இன்னொருபக்கம், சில நாடுகள் கார்பன்-டை-ஆக்ஸைட் வாவுவை குறைவாக வெளிவிடும் மாற்று எரிவாயு பக்கமும் தங்கள் ஆராய்ச்சியை முடுக்கி விட்டது.
ஆனால், குறிப்பாக, அமெரிக்கா தன் கவனத்தை இன்னொரு பக்கம் திருப்பியது. 1823-ம் வருடம் ஹம்ப்ரி டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் அவரது ஆய்வுக்கூட உதவியாளர் மைக்கேல் ஃபாரடேவுக்கு கண்டுபிடிப்புக்கான பெருமையை பெற்றுக் கொடுத்த, மீத்தேன் ஹைட்ரேட் (அல்லது எரியும் பனிக்கட்டி) தங்கள் கடற்கரை படுகையில் இருக்குமா என்பதை கண்டறிய 1982லிருந்து 1992க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டது. ஆனால் 1990க்குப் பிறகு, இந்தியாவும் ஜப்பானுமே மீத்தேன் ஹைட்ரேட் ஆரய்ச்சியில் முன்னிலையிலிருந்த்தது.
இப்போது அமெரிக்கா, கனடா, ஜப்பான், சைனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கடற்கரைகளில் 1000 அடி ஆழத்திற்கு கீழ் மீத்தேன் ஹைட்ரேட் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையிலும், அந்தமானின் கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் அரபிக்கடலோரம் நெடுகிலும் மீத்தேன் ஹைட்ரேட் இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த குறிப்பிட்ட பகுதியில் கண்டறியப்பட்டவை தோராயமாக 5 ட்ரில்லியன் கனமீட்டர்கள்.
மீத்தேன் ஹைட்ரேட் அல்லது மீத்தேன் கிளாத்ரேட் என்பது இயற்கை எரிவாயுவான, மீத்தேன் வாயுவின் அணுக்கள் உயர் அழுத்தம் மற்றும் மிகக் குறைவான வெப்பனிலை காரணமாக தண்ணீர் மூலக்கூறிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களோடு இணந்து பனிக்கட்டி வடிவில் உறைந்திருக்கும் ஒரு கரிம வேதிப்பொருள். ஒரு கனமீட்டர் மீத்தேன் ஹைட்ரேட்டில் 164 கனமீட்டர் அளவுக்கு மீத்தேன் இயற்கை எரிவாயு அடைந்திருக்கும். இதை வெட்டியெடுத்து கொண்டுசெல்வதும் சுலபம். அதாவது, 164 டேங்கர் லாரி கொள்ளளவுள்ள மீத்தேன் வாயுவை ஒரு லாரியில் திணிப்பதுபோல.
கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் வாயுவுக்கு 21 மடங்கு வெப்பத்தை தக்கவைக்கும் திறன் அதிகம். அதுபோல் மீத்தேன் வாயு காற்றைவிட கனம் குறைவாதலால், இது மிக விரைவாக, மீவெளிமண்டலத்தில் சென்று தங்கிவிடும். இதன் ஆயுட்காலம் 10லிந்து 20 வருடங்கள். ஆனால், கார்பன்-டை-ஆக்சைடின் ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள்.
கடலாழத்திலிருக்கும் மீத்தேன் படிகம் எப்போதும் கடல்தளத்தை நிலயற்றதாக வைத்திருக்கும். சில இடங்களில், எரிவாயுவிற்காக, கடலில் துளையிடும்போது மீத்தேன் படிகம் அகப்படுவதுமுண்டு. அவ்வாறு எதிர்பாராத விதமாக அல்லது மீத்தேன் படிகத்தையே துளையிட்டு எடுக்கும்போது ஏற்படும் விபத்து காரணமாக மீத்தேன் வெளிப்பட்டு மீவளிமண்டலத்தில் தங்கி புவியின் வெப்பனிலையை விரைவாக உயர்த்திவிடும்.அவ்வாறு வெளியேறும்போது அல்லது வெட்டியெடுக்கும்போது கடலாழத்தில் ஏற்படும் பள்ளம் காரணமாக, நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட வய்ப்புகள் அதிகம். வளிமண்டலத்தில் இருப்பதைபோல் 3000 மடங்கு மீத்தேன் மீத்தேன் படிகமாக உறைந்திருக்கின்றது. இதில் சிறு கூறு வளிமண்டலத்தில் கலந்தால்கூட தட்பவெப்பனிலையை வெகுவாக பாதித்துவிடும்.
இப்போதைய பூமியின் இயற்கை எரிவாவுவின் கையிருப்பு சுமார் 368 ட்ரில்லியன் கன மீட்டர். ஆனால், தற்போது மதிப்பிடப்பட்டுள்ள, நிலத்தடியில் படிந்திருக்கும் மீத்தேன் ஹைட்ரேட்டின் அளவு 2,800 ட்ரில்லியன் கன மீட்டரிலிருந்து 8.5 மில்லியன் ட்ரில்லியன் கன மீட்டர்கள். எனவே அனைத்து நாடுகளும் மீத்தேன் ஹைட்ரேட் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியதில் ஆச்சரியமில்லை.
சுடு நீரை படிகத்தில் செலுத்தியோ அல்லது எரிசாராயம் என்னும் மெத்தனாலுடன் வேதிவினையாற்றியோ மீத்தேனை பிரித்தெடுக்கலாம். இருப்பினும் மீத்தேன் படிகத்தின் அழுத்தத்தைக் குறைத்து, படிகத்திலிருந்து மீத்தேனை பிரித்தெடுப்பதே மிகசிறந்த முறையாக கருதப்படுகின்றது. மீத்தேன் படிகம் இருக்கும் பகுதியில் துளையிட்டு, அதன் அழுத்து வெளிப்படும் மீத்தேனை குழாய் வழியாக வெளியிலெடுக்கப்படுகின்றது.
பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் திடீரென்று மூழ்குவது மற்றும் விமானங்கள் காணாமலாவது, அந்த பகுதியில் உறைந்திருக்கும் மீத்தேன் ஹைட்ரேட் அங்கு ஏற்ப்படும் நில அதிர்ச்சி காரணமாக மீத்தேன் வடிவில் வெளிவருவதானால் என்ற ஒரு கருத்துண்டு. ஆனால், இதை பல அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். எனினும், பெர்முடா முக்கோணத்தின் புதிருக்கு மீத்தேன் ஹைட்ரேட்டின் பங்கும் கண்சமாக உண்டு என்பதில் ஐயமில்லை.
இன்னும் சில வருடங்களில், கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை வெட்டியெடுப்பது போல் கடற்கரை ஆழத்திலிருந்து எரியும் பனிக்கட்டியை வெட்டியெடுப்பதைக் காணலாம். இந்தியாவில், ஆழ்துளையிட்டு பூமித்தாயின் கருங்குருதியை உறுஞ்சிக்குடித்து மிச்சத்திற்கு விலை நிர்ணயிக்கும் பொறுப்பு சில தனியார் எண்ணை நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தனை டன் வெட்டியெடுத்தார்களென்று கணக்கிருக்குமா?
கூடங்குளம் அணுமின் நிலயம் அமைந்திருக்கும், கடல்பகுதியின் ஆழத்தில் மீத்தேன் படிகம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்வது யார்? அணுவுலைகளுக்கிருப்பதுபோல், மீத்தேன் படிகத்திற்க்கும் ஏதேனும் வரைமுறைகள் இருக்கின்றதா? யார் கண்காணிப்பது?
ஜப்பான், இப்போது தனது அனைத்து அணுவுலைகளின் பயன்பாட்டையும் நிறுத்திவிட்டு, தனது கடலாழத்திலுள்ள மீத்தேன் ஹைட்ரேட்டை வெட்டியெடுக்க முயற்சியை துவங்கியுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை இல்லையெனில், இன்னும் ஒரு புஃகுஷிமா போன்ற போன்ற பேரிடரை அது சந்திக்க வாய்ப்புகள் அதிகம்.
அப்படியென்றால் நாம் ஜப்பானுக்கு சளைத்தவர்களா?
இந்தியா தனது கடற்கரையை ஒரு கிலோமீட்டர் அளவிற்கு உள்ளுக்குள் சுருக்கினாலே போதும், இந்தியா 2020-ல் வல்லரசாவது உறுதி.