துறைவன் ஒரு நேர்மையான விமர்சனம்

திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் துறைவனுக்கு எழுதிய மிக நேர்மையான விமர்சனம். இவர் ஒரு நெய்தல் படைப்பாளி என்பதால் நான் இந்த விமர்சனத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றேன். மிகவும் விரிவாக அலசியிருக்கின்றார். நன்றி!

பொதுவாக இலக்கிய ஆக்கங்களுக்கு வரும் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கவேண்டிய தேவையில்லாதிருப்பினும், எழுதுகின்றவர்களின் தகுதி, அவர்கள் இதற்காக செலவழித்த நேரம், விமர்சனத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இலக்கிய ஆக்கங்களில் வாசக இடைவெளி இருப்பினும், அந்த விமர்சனங்கள் புதிய வாசகரை தவறான வாசிப்பிற்கு கொண்டுசெல்லும் வலிமை இருப்பதாலும், நல்ல முடிவிற்கு வந்த வாசகர்கள் இந்த விமர்சனத்தை வாசித்துவிட்டு படைப்பாளி தன்னை ஏமாற்றிவிட்டான் என்னும் முடிவுக்கு வர காரணமாக இருப்பதாலும், இந்த விமர்சனத்தின் நோக்கம் எதிர்மறையாக இருப்பதாலும், அவர் துறைவனால் புண்பட்டிருப்பதாலும், திரு. தொ. சூசைமிக்கேல் அவர்களுக்கு நான் ஒரு “முழுமையடையாத” படைப்பாளியாக இருந்தாலும் என்னளவில் ஒரு சிறிய விளக்கத்தை வாசகர்களுக்கு கொடுப்பதை என்னுடைய கடமையாகவே நினைக்கின்றேன்.

இந்த விமர்சனம் ஒருவர் எழுதியதுபோல் தெரியவில்லை. இரண்டு மூன்று படைப்பாளிகள் சேர்ந்து எழுதியது. இரண்டு மூன்று மாதங்கள் துறைவனை ஊன்றிப்படித்து இந்த விமர்சனத்தை எழுதியிருக்கின்றார்கள். இதை புத்தகமாக அச்சிட்டு கடற்கரை பொதுமக்களுக்கு வினியோகிக்க இருப்பதாகவும் அறிந்தேன். அதை உறுதிபடுத்துவதுபோல் விமர்சனமும் புத்தகவடிவிலேயே இருக்கின்றது. அதில் தவறில்லை. காலம் தாமதிக்காமல் அவ்வாறு செய்ய நான் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இது ஒரு மிகவும் முக்கியமான அலசல். ஆனால் அதை தவறான நோக்கத்தோடு, பொய்ப்பிரச்சாரத்திற்காக எழுதியிருப்பதை அறியும்போது மனம் சில்லிடுகின்றது.

துறைவன் நாவலை 2014 மே மாதத்தில் எழுதி முடித்தேன். துறைவனை வெளியிடுவதற்காக பலரை தொடர்புகொண்டும் முடியாமல் போனது. 2015 ஆகஸ்டு மாதம் குறும்பனை பெர்லினின் தொடர்பு கிடைத்தபிறகு துறைவன் விரைவில் வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 2015 நவம்பர் மாதம் முக்கடல் பதிப்பகம் துறைவனை வெளியிட்டது.

நான் துறைவனை எழுதி முடித்ததும் மூன்று பேரிடம் அணிந்துரை எழுதிக்கேட்க நினைத்தேன். அவர்கள் மூவரும் எழுதியிருக்கின்றார்கள். துறைவன் வெளியீட்டுவிழாவிலும் அவர்கள் மூவரும் கலந்துகொண்டார்கள். என் வாழ்க்கையில் நான் மகிழ்சியடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

தூவார்தே பர்போசாவால் என் மனம் புண்பட்டதால்தான் நான் துறைவன் நாவலை எழுதினேன். ஆனால் துறைவனால் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்களின் மனம் புண்பட்டதாகச்சொல்வதில் வியப்பொன்றுமில்லை.

நான் துறைவனை ஏன் எழுதினேன் என்பற்கான காரணங்களை பதாகை இலக்கிய இதழ் நடத்திய நேர்காணலில் பதிவு செய்திருக்கின்றேன். இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளை இங்கே குறிப்பிட்டு என்னுடைய பதிலையும் தருகின்றேன். முதலில் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்களின் விமரிசனத்தை படித்தால்தான் பின்வரும் எனது பதில் புரியும்.

1. பிழைகள் பொருட்படுத்தப்பட வேண்டியவையே:

ஒற்றுப்பிழைகளும்  இலக்கணப்பிழைகளும் எனக்கு முக்கியமானதாகப்படவில்லை. என்னால் முடிந்தவரை அவற்றை திருத்தியிருக்கின்றேன். இருப்பினும், நான் எப்படி சிந்திக்கின்றோனோ அப்படித்தான் நான் எழுதமுடியும். இலக்கணம் படித்தபிறகு எழுதவேண்டுமென்றால் துறைவனை என்னால் கண்டிப்பாக எழுதியிருக்க முடியாது. பிழைகளை கண்டிப்பாக செப்பனிடலாம். ஆனால் அது எடிட்டரின் வேலை. அதில் வரும் உகரமும் ஒகரமும் நான்பேசுவதும், சிந்திப்பதும். நான் “உள்ளதா?” என்று கேட்பேனே தவிர “ஒள்ளதா?” என்று கோணலாக கேட்கமாட்டேன்.

2. திருப்தியற்ற சில பகுதிகள்:

நான் எழுதும்போது எந்த வார்த்தைகள் என்கைகளுக்கு கிடைக்கின்றதோ அதைத்தான் நான் எழுதமுடியும். எங்கள் ஊரில் பயன்பாட்டில் இல்லாத உரி என்னும் சொல்லை நான் எப்படி பயன்படுத்தியிருக்கமுடியும்? போத்திப்பிள்ளை என்னும் பெயரில் உங்களுக்கு திருப்தியில்லையா? அப்படியென்றால் வள்ளவிளையிலும் பூத்துறையிலும் இருக்கும் போத்திபிள்ளைகளை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?

எனக்குத்தெரிந்த, வேறு நெய்தல் ஆக்கங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நெய்தல் கலைச்சொற்களை இங்கே தொகுத்திருக்கின்றேன்.

3. துறைவனுக்கு முன்னுரை எழுதிய மூவர்:

நான் கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தின் அரசியலை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கின்றேன். எனவே துறைவனுக்கு ஜெயமோகன் அணிந்துரை எழுதினால் யாரெல்லாம் துறைவனை தீண்டத்தகாததாகப்பார்ப்பார்கள் என்பதும், ஜோ டி’குரூஸ் ஒரு மீனவனாக இருந்தாலும் ஒரு பெரும் நெய்தல் படைப்பாளியாக இருந்தாலும் அவர் துறைவனுக்கு அணிதுரை எழுதினால் யாரெல்லாம் துறைவனுக்கு ஹிந்துத்வா முத்திரைகுத்தி விலக்குவார்கள் என்பதும், பாதர் பங்கிராஸ் அணிந்துரை எழுதினால் யாரெல்லாம் துறைவனை கிறிஸ்தவ மதச்சாயம் பூசி ஒதுக்குவார்கள் என்பதும் எனக்குத்தெரியாமலில்லை.

மற்ற இருவரையும் விட்டுவிட்டு திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் ஜெயமோகனை மட்டும் சாடுவது அவரது தனிப்பட்ட காழ்ப்பு மட்டுமே. அதற்கு துறைவனை பயன்படுத்துகின்றார்.

மூவரின் மதிப்புரைகளும் எனக்கு அனுப்பப்பட்டு நான் சரிபார்த்து திருத்தம் செய்தபின்னர்தான் அவற்றை நான் பதிப்பாளருக்கு அனுப்பிவைத்தேன். எனவே யாருக்காவது துறைவனிலிருக்கும் மூன்று மதிப்புரைகளில் எதிலாவது விமர்சனமிருந்தால் என்மீதுதான் வைக்கவேண்டும்.

மதிப்புரை மீது வைக்கப்பட்டிருக்கும் முதலாவது குற்றச்சாட்டிற்கான பதில் : செண்பகராமன் பள்ளு ஆசிரியரின் பெயரை முதலில் ஜஸ்டின் திவாகரிடம் சொல்லித் திருத்தவேண்டும். அதன்பிறகு பழியை அடுத்தவர் மீது போடலாம்.

இரண்டாவது: புனித சவேரியாரால் மதமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறியதற்கும் இடைப்பட்ட காலத்தில் கேரளக்கடற்கரை மீனவர்கள் யாரின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தார்கள்?

4. துறைவனின் சொல்விளக்கம்:

“துறைவனும் பரதவனும் இனப்பெயரு கெடயாது” என்று நாவலில் வருவது சரியானது. இனமென்றால் திராவிடம் ஆரியம் என்னும் பொருள்பட இங்கே சுட்டப்படுகின்றது.

துறைவன் கடைசி அத்தாயத்தின் தலைப்பாகவும் விசைப்படகின் பெயராகவும் மட்டுமே வருகின்றது என்று சொல்கின்றீர்கள். துறைவனின் அனைத்து அதிகாரங்களின் தலைப்புகளும் குறியீடுகள்.

உதாரணமாக,

“கடற்குதிரை” – ஆண் கடற்குதிரை இனப்பெருக்கம் செய்யும். அதில் தாசையா “புதிய தலைவர்கள் வரட்டும்” என்று சொல்லியிருப்பார்.

அதுபோல் சுங்கான், தெரச்சிவால், துறைவன். துறைவன் தலைவன் என்னும் பொருள்பட பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துறைவன் அதிகாரத்தின் முடிவில் யார் தலைவன் என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கின்றேன்.

நாவலில், கோபத்தின் உச்சியிலிருக்கும் மீனவர்களிடம் துறைவன் குறித்த சங்கப்பாடல்களைச் சொல்லவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

5. பரதவனும் முக்குவனும்:
6. முக்குவன் என்பதன் சொல்வரலாறு:

முக்குவன் பெயர் எவ்வாறு உருவானதென்று முக்குவா அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. கடைசியில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

7. முக்குவனின் பிற பெயர்கள்:

முக்கர ஹத்தனா குறித்து விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதை மொழிபெயர்த்து தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள். எனக்கு தெளிவில்லாததை, நான் ஆதாரபூர்வமாக படிக்காததை என்னுடைய நாவலில் நான் எப்படி சொல்லமுடியும்?

முக்கர ஹத்தன 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பதும், அந்த நிகழ்வு 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்ததென்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் முக்குவன் என்னும் பெயர் பரவலாக்கப்பட்டுவிட்டது.

(Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka By Dennis B. McGilvray: பக்கம் 61 )
Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka: பக்கம் 58

“From the language and the events of which it relates the Mukkara Hatana could not have been written earlier than the second half of seventeenth century.”

The Karāva of Ceylon: Society and Culture, Page 24
The Legal System of Ceylon in Its Historical Setting By Tambyah Nadaraja

“The Mukkaru Hatana (The Mukkara War) a sinhalese work of the second half of the seventeenth century (H. Nevil collection of mss, British Museum Or. 6606(53), trans. M. D Raghavan, The karma of ceylon 1961 pp. 16-18) records the defeat of Mukkuvans encamped at Puttalam by south indian mercenaries of Prahrama Bahu VI, king of Kotte (1412-62)”

8. முக்குவக் குடியின் உட்பிரிவுகள்:

காந்தளூர் சாலை குறித்த சோழனின் எந்த கல்வெட்டில் அல்லது செப்பேட்டில் முக்குவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்னிடமிருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே நாவல் எழுதப்பட்டிருக்கின்றது.

9. அரையர் என்னும் முக்குவர்:

கடைசியில் பார்க்கவும்.

10. இலக்கியத்தில் ‘முக்குவன்’ இருக்கின்றானா?

அவன் இலக்கியத்திலும் இல்லை. தமிழ் நிகண்டுகளிலும் இல்லை. ஆனால் முக்குவர்களுடன் வாழும் நுளையர்கள் இலக்கியத்திலும் நிகண்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்கள்.

விரிவாக கடைசியில் பார்க்கவும்.

11. மொசாம்பிக் முக்குவனா? எவன் அவன்?
12. மொசாம்பிக் நாட்டு ‘முக்குவா’ பாசை:

துறைவனை கவனமாகப்படிக்கவும். இந்த விமரிசனத்தை இரண்டுமூன்று பேர் எழுதியிருப்பதால் இந்த பகுதியை எழுதியவரின் கவனக்குறைவு. துறைவன் குறியீடுகளுடனும் வாசக இடைவெளியுடனும் இருக்கின்றது. வாசக இடைவெளி நாவலின் ஒரு தனிப்பண்பு. கேரளக்கடற்கரையிலும் இலங்கையிலும் முக்குவா மொழி இல்லையென்பதால் மொசாம்பிக் நாட்டவருக்கும் இந்திய இலங்கை முக்குவருக்கும் சம்பந்தமில்லையென்பது மிகவும் தெளிவாகவே துறைவனில் சொல்லப்பட்டிருக்கின்றது. துறைவனை மீண்டும் படியுங்கள். படிக்காமல் குற்றம்சாட்டாதீர்கள்.

13. ஆதியில் நின்றதும் பாதியில் வந்ததும்:

எது சறுக்கல்? துறைவனை மீண்டும் படிக்கவும்.

துறைவனில் முக்குவர்களின் உண்மையான பெயர் என்னவென்று விவாதிக்கப்படுகின்றது. இந்த தெளிவுகூட இல்லாமல் முக்குவர்களை வேறு எங்கிருந்தோ பெயர்த்தெடுத்து கப்பலில் கொண்டுவந்ததுபோல் நான் சொல்வதாக அவர் எண்ணுவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?.

14. எதிர்வினைவுகள்:

தூவார்தே பர்போசா முக்குவப்பெண்களை கேவலமாகச்சொல்லும் வார்த்தைகள் துறைவனில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதை பொய்யென்று ஆணித்தரமாக நிறுவி தெற்கு மலபார் மீனவர்கள் அரையர்கள் என்று துறைவனில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் துறைவனை மேற்கோள்காட்டி முக்குவப்பெண்களை மிகவும் மோசமாகப்பேச வேற்று ஜாதியினருக்கு இது ஒரு வாய்ப்பாகப்போய்விட்டதாம். இது எவ்வளவு பெரிய அபாண்டமான குற்றச்சாட்டு. அவரது யூகத்தை என்மீது பழியாக வைக்கின்றார். அதாவது அவர் பொய்ப்பிரச்சாரம் செய்வார். அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டுமாம்.

வெளிமக்கள் துறைவனின் நம்பகத்தன்மை தெரியாமல் புளகாங்கிதமடைகின்றார்களாம். ஆனால் “முதன் முதலாக முக்குவன் நோகடிக்கப்பட்டிருக்கின்றான்” என்று கோடிட்டுக்காட்டுகின்றார். அவர் சொல்லவருவது என்னவென்றால் துறைவனை படித்தவர்களையும் அதற்கு விமர்சனம் எழுதியவர்களையும் எழுத்தாளனாகிய நான் ஏமாற்றிவிட்டேன் என்று. இனியும் யாரும் துறைவனை படிக்கத்தேவையில்லை. துறைவனுக்கு மதிப்புரை எழுதிய மூவரும் ஒன்றும் தெரியாத மடையர்கள். விமர்சனமும் மதிப்புரையும் எழுதுகின்றவர்கள் ஐயோ பாவம்.

10-ம் நூற்றாண்டிலும், 12-ம் நூற்றாண்டிலும் முக்குவருக்கான தடயம் எங்கே இருக்கின்றது?

உங்களிடமிருக்கும் வரலாற்று ஆதாரத்தை வெளியிடுங்கள். அதனடிப்படையில் துறைவனிலிருக்கும் தவறுகளை திருத்த முயற்ச்சிக்கின்றேன். குறைந்தபட்சம் அதுவரையிலாவது துறைவன் மீது குற்றச்சாட்டுகளை வைக்காமல் இருந்திருக்கலாம்.

15. இறுதியாக:

மொத்தத்தில் துவார்தே பர்போசாவால் என்மனம் புண்பட்டதால்தான் நான் துறைவனை எழுதினேன். துறைவன் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்களை புண்படுத்திவிட்டதாக வருத்தப்படுகின்றார். உண்மையான மீனவர்கள் துறைவனை கொண்டாடுகின்றார்கள். துறைவனை விற்பனை செய்து காசுபார்க்கும் நிலையில் நானில்லை.

உங்களைப்போன்றவர்களுக்கும் சேர்த்துதான் நான் இரவு தூங்காமல் விழித்திருந்து படித்து எழுதவேண்டியிருக்கின்றது. நான்கு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, வேலைக்குச்சென்று வந்தபிறகு இரவில் படித்து, உயிரைக்கொடுத்து உண்மையான நெய்தல் இலக்கியம் படைப்பவனை உங்களைப்போன்றவர்கள் விரட்டியடிக்க நினைப்பதில் வியப்பொன்றுமில்லை.

துறைவனில் “சுங்கான்” என்னும் சொற்பதத்தை உபயோகித்திருப்பேன். சுங்கான் ஒரு சிறியமீன். ஆனால் அதன் முள் மிகவும் விஷமானது. சில நேரம் நல்லமீன்களின் கூட்டத்தின் இடையிடையே சுங்கானும் கிடக்கும். நாம் கரைமடியில் கிடக்கும் நெத்திலி போன்ற சிறிய மீன்களை கையினால் வாரியெடுக்கும்போது சுங்கானின் முள் எதிர்பாராவிதமாக நம் கையில் குத்திவிடும். அப்புறம் ஓவென்ற அலறல்தான். இந்த விமர்சனமும் அதைத்தான் காட்டுகின்றது.

முக்குவன் என்கின்ற சாதிப்பெயர் 16-ம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்பதை துறைவன் முக்குவா அதிகாரத்தில் பேசுகின்றது. நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல் முக்குவன் ஆண்ட ஜாதி என்பதை பேச துறைவன் வரவில்லை. முக்குவன் என்பவன் அரையன். அரையன் தென் மலபாரில் ஒரு ஜாதியின் பெயர். இதனால் நீங்கள் ஏமாற்றமடைந்தால் அதற்கு துறைவன் பொறுப்பல்ல. இது என்னுடைய தொடர்ச்சியான் ஆய்வுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது. எனக்கு புதிய தரவுகள் கிடைத்தால் அடுத்த புத்தகத்தில் கண்டிப்பாகச் சொல்வேன்.

அனைவருக்கும் அனைத்து நாவலையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தாமலிருந்தாலும் பறவாயில்லை, மாறாக அவனது எழுத்தார்வத்தையும், படைப்பாற்றலையும் வேருடன் பிடுங்கியெறிய முற்படக்கூடாது.

நான் யாருக்காக துறைவனை எழுதினேனோ அந்த இலக்கை துறைவன் அடைந்துவிட்டது. என்னுடைய நண்பன் புதிதாக கட்டியிறக்கிய விசைப்படகில் பயன்படுத்தும் வொயர்லெஸ் கருவியின் பெயர் துறைவன். ஏராளம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் ஓய்விலிருக்கும் நேரத்தில் படிப்பதற்காக துறைவனை வாங்கிச்செல்கின்றார்கள். மீனவர்கள் ஆழ்கடலில் இலக்கியமும் படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த நேரத்திலும் ஆழ்கடலில் “துறைவன்…ஓவர்…துறைவன்…ஓவர்…துறைவன்…” என்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

துறைவன் எழுதியதிலிருந்து எனக்குக் கிடைத்த முக்கியமான இலக்கியப்பாடம் “தன்னுடைய புத்தகத்திற்கு யாரெல்லாம் மதிப்புரையும் அணிந்துரையும் எழுதவேண்டுமென்பதை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை.”

நன்றி

கிறிஸ்

ANNEXURE:
—————
16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் முக்குவன் என்னும் பெயர் தென் கேரளக்கரை மீனவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களின் பெயர் அரையர். முக்குவன் என்னும் பெயர் பிரபலமானது போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப்பின்னர். அதன்பிறகுதான் அனைத்து ஜாதிகளும் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

 

அதற்கு முன்னர் முக்குவர் என்னும் வார்த்தை பயன்பாட்டில் இருந்திருந்தால் அது குறைந்தபட்சம் 16-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நிகண்டுவில் சொல்லப்பட்டிருக்கும்.

 

ஆனால் சூடாமணி நிகண்டு (16-ம் நூற்றாண்டு), சேந்தன் திவாகர நிகண்டு (8-ம் நூற்றாண்டு), அரும்பொருள் விளக்க நிகண்டு (18-ம் நூற்றாண்டு), பிங்கல நிகண்டு (10-ம் நூற்றாண்டு) ஆகிய நான்கு நிகண்டுகளிலும் முக்குவன் என்னும் சொல் காணப்படவில்லை. இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நெய்தல் நிலப்பெயர்களையும் கீழே தருகின்றேன்.

 

அ) சேந்தன் திவாகரன் நிகண்டு:

மக்கள் பெயர்: பரதவர், நுளையர், கடலார், வலையர், சல்வர், திமிலர்
தலைவன்: கொண்கன், துறைவன், மெல்லன், புலம்பன், தண்கடற்சேர்ப்பன்

ஆ) சூடாமணி நிகண்டு:

மக்கள் பெயர்: பரதவர், நுளையர், பஃறியர், திமிலர், சாலர், கடலர், கழியர்
தலைவன்: கொண்கன், துறைவன், மெல்லம் புலம்பன், கடர்சேர்பன்

இ ) பிங்கல நிகண்டு:

மக்கள் பெயர்: கடலர், திமிலர், சலவர், நுளையர், பரதர்
தலைவன்: மெல்லன், புலம்பன், தண்கடற்சேர்ப்பன், துறைவன், கொண்கன்

ஈ ) அரும்பொருள் விளக்க நிகண்டு:

இதில் நெய்தல் மக்கள் குறித்து எதுவும்  சொல்லப்படவில்லை.

 

ஆனால் பிங்கல நிகண்டிலும் சேந்தன் திவாகரன் நிகண்டிலும் சொல்லப்பட்டிருக்கும் நுளையர் ஜாதி இன்னும் கேரளக்கடற்கரையில் இருக்கின்றது. அப்படியென்றால் ஏதேனும் ஒரு நிகண்டில் முக்குவன் இல்லாமல்போனது எப்படி?

 

பிங்கல நிகண்டில் கடலின் பெயர்களில் ஒன்றாக “அரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூடாமணி நிகண்டிலும் இருக்கின்றது. “அரி” என்னும் வார்த்தையிலிருந்து அரையன் வந்திருக்கவாய்ப்பிருக்கின்றது.   இடுப்பில் பட்டைய துணியுடன் கடலுக்கு செல்வதனால்கூட அரையன் என்னும் பெயர் வந்திருக்கலாம்.

 

எட்கர் தட்சன் தன்னுடைய Castes and Tribes of Southern India (Volume 1, பக்கம் 107-ல் முக்குவர்கள் குறித்து சொல்லும்போது “தெற்கு மலபாரில் இவர்கள் அரையர்கள் என்று அழைக்கப்பட்டனர்.” என்று தெளிவாகச்சொல்கின்றார்.

 

அரையர்கள் என்றால் முக்குவர் தலைவன் என்று நம்மில் பலர் நம்புகின்றனர்.  எட்கர் தட்சன் அதே பக்கத்தில் “[தெற்கு மலபாரைத்தவிர்த்து]  வேறு இடங்களில் அரையர்கள் என்பது குலத்தலைவர்களின் பட்டமாக கொடுக்கப்பட்டது” என்கின்றார்.

 

இதிலிருந்து தெற்கு மலபாரிலிருந்த மீனவர்களின் பெயர் அரையர்கள் என்பது தெளிவாக வரையறுக்கப்படுகின்றது. அரையர்கள் என்பது ஒரு ஜாதியின் பெயர்.

 

கடலில் முங்கி முத்தெடுப்பதால் முக்குவன் என்னும் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றார்கள். ஆனால் தெற்கு மலபாரில் கடலில் முங்கி வேலைசெய்பவர்களின் பெயர் “குளியாளி”. அதுபோல் ஒரு சிறு துச்சமான எண்ணிக்கையிலான மக்கள் முத்துக்குளிப்பதால் ஒட்டுமொத்த மக்களுக்கும் அந்தப்பெயர் வராது.

 

முக்குவன் என்னும் சொல் மூழ்குதல் என்பது உண்மை. ஆனால் அது இன்னொரு வார்த்தையிலிருந்து மருவி வந்தது.

 

Duarte Barbosa எழுதி Mansel Longworth Dames மொழிபெயர்த்த Book of Duarte Barbosa (Volume 1)-ல் முக்குவன் என்பது எவ்வாறு பயன்பாட்டில் எவ்வாறு மருவி உருவானது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

Monguers -> Muchoa -> Mucoa -> Mukkuvan. (பக்கம்: 71)

மாங்குவர் என்பது மோகர் என்பதிலிருந்து வந்தது. மோகர் என்றால் மூழ்குதல். மாங்குவர் என்பவர்கள் வடக்கு மலபாரில் இருந்தார்கள். (பக்கம் 64)

 

எட்கர் தட்சன் தன்னுடைய Castes and Tribes of Southern India (Volume 1, பக்கம் 107-ல் முக்குவர்களும் அரையர்களும் வேறுவேறு ஜாதிகள் என்று தனக்கு சொல்லப்பட்டதாக அவர் சொல்கின்றார் “I am informed that the mukkuvans claims that to be a caste distinct from Arayans”

 

இதிலிருந்து தெற்கு மலபாரில் இருந்த மீனவர்களின் பெயர் அரையர்கள் என்று உறுதிபடுத்தப்படுகின்றது. முகோவா இனம் மொசாம்பிக் நாட்டவர். முக்குவா தெற்கு கானரா (தட்சிண கன்னடா + உடுப்பி + காசர்கோடு) நாட்டவர். எனவேதான் நான் தெற்கு மலபார் மீனவர்கள் அரையர்கள் என்னும் தெளிவான முடிவுக்கு வந்தேன்.

 *

துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

[நண்பர் வேணு தயாநிதி சொல்வனம் இலக்கிய இதழில் எழுதிய கட்டுரை.]

//அலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. யானைகளின் குருதி வெள்ளை நிற நுரையாகக் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கிறது.//

//அலை விழும் இடத்திலிருந்து கடல் விளிம்பு வரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்பு சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளை விளிம்புபோலத் தரையில் உரசியபடி படிகிறது. அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொள்கிறது. வீடுகளின் இடுக்குவழியாக ஓடிய செம்மண் கலந்த மழைவெள்ளம் கடற்கரையெங்கும் இரத்தம் போலச் சகதியாகிறது. மீனவர் வாழ்க்கையில் கடலே சகல திசைகளிலும் வியாபித்திருக்கிறது.//

//”நாமளே எரப்பம்மாரு. எரப்பன் எரந்து எரப்பாளிச்சு கொடுக்கணும்”. “அப்போ நான் பணக்காறனெண்னு அடுத்தவனுக்குக் காட்டவேண்டி குடிச்சேன். அதுக்கப்பெறவு எனக்க போட்ட எரிச்ச சோகத்துல குடிச்சேன். இப்போ கேன்சறுக்க வேதன தெரியாமயிருக்கக் குடிக்கேன். இனியும் இத விட முடியாது பிள்ள” என்பது போன்ற உரையாடல்கள் கதையின் மொழிக்குள் இயல்பாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. படமெடுத்தாடும் ஒரு சர்ப்பத்தின் தலைமேல் நிற்பதை போலத் தன் கட்டுமரத்தில் நின்று கொண்டிருக்கிறார் பார்த்தலோமி.//

//ஓர் இலக்கிய முயற்சியின் முக்கியத்துவம் அதன் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான ஒன்றாக முன்னிறுத்தப்படக்கூடும். இதுவரையிலும் முற்றிலும் அறியாத தமிழ்நாட்டின் தென்மேற்கு கடற்கரையின் வாழ்க்கையைத் தமிழ் வாசகனுக்கு இயல்பாக அறியத்தருகிறது என்பதால் துறைவன் முக்கியமான ஒரு நூலாகிறது. //

முழுவதும் படிக்க: http://solvanam.com/?p=43698