இனயம் துறைமுகம் – 3

அதானி குழுமம் குஜராத்தில் பல துறைமுகங்களை நிர்வகிக்கின்றது. இவற்றில் முக்கியமானது ஹஜிரா துறைமுகம். சில மாதங்களுக்கு முன்பு “ஹஜிரா மச்சிமார் சமிதி” என்னும் மீனவர் அமைப்பு ஹஜிரா துறைமுகத்தினால் 300 மீனவ குடும்பங்கள் இடம்பெயந்ததாகவும் மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் தங்களின் பாரம்பரிய மீன்பிடித்தொழில் பாதிப்படைவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2016 ஜனவரி 28 நாள் விசாரணைக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதானி குழுமத்திற்கு ஆஜரானார். முடிவில் தேசிய பசுமை தீர்பாயம் அதானி குழுமத்திற்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும்,  மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாதென்றும், இனியும் இந்த துறைமுத்தில் எந்த வித விரிவாக்கமும் செய்யக்கூடாதென்றும், வழக்கு தொடர்ந்த ஹஜிரா மச்சிமார் சமிதிக்கு 8 லட்சம் ரூபாய் வழக்குச்செலவிற்கு அதானி குழுமம் கொடுக்கவேண்டுமென்றும்  பசுமை தீர்ப்பாயம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதைப்போல, விழிஞ்சம் துறைமுகத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த ஒப்புதல் செல்லுபடியாகாது என்று சுதந்திர மீனவர் கூட்டமைப்பு கேரள அரசிற்கு எதிராக தொடுத்த வழக்கு 2016 பெப்ருவரி 2 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்னும் ஆறு வாரத்தில் தேசிய பசுமை தீர்பாயம் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும். விழிஞ்சம் துறைமுகம் கட்ட 7525 கோடி ரூபாயில் கேரள அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதும் அதானி குழுமம்தான்.

இவை ஒருபுறமிருக்க, இனயம் துறைமுகத்திற்கான எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றது. கடந்த 2016 பெப்ருவரி 29-ம் நாள் இனயம் துறைமுகத்தை எதிர்த்து இனயம் பகுதி மீனவர்கள் நாகர்கோயில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நடந்த போராட்டத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்குகொண்டார்கள்.

குஜராத் ஹஜிரா துறைமுகப்பகுதியில் வெறும் 300 மீனவ குடும்பங்கள் தான் இடம்பெயரவேண்டியிருந்தது. இனயம் அப்படியல்ல, மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. நீரோடியிலிருந்து குளச்சல் வரை 2 லட்சத்திற்கும் அதிகமான கடலையும் மீனையும் நம்பியிருக்கும் மக்கள் வாழ்கின்றார்கள். வள்ளவிளையில் மட்டும் 2500 குடும்பங்களுக்கும் அதிகமான அனைத்து இன மக்களும் இருக்கின்றார்கள்.

வல்லார்பாடம் துறைமுகத்தில் வருடத்திற்கு சுமார் 3 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு வண்டல் படிகின்றது. [2.5 கிலோமீட்டர் நீளமும் 200மீட்டர் அகலமும் கொண்ட கால்வாயில் இரண்டு மாதத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு மணல் நிரம்பும்.] இந்த துறைமுகம் பொழிமுகத்தில் இருப்பதால் வண்டல் படிவு சிறிது அதிகம். பெரிய கப்பல்கள் வரவேண்டுமென்றால் தொடர்ந்து துறைமுகத்தை தினமும் இருபத்து நான்கு மணி நேரமும்  ஆழப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். அதற்கு வருடத்திற்கு 110 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்யவேண்டும். எப்போதும் அதன் ஆழம் 14.5 மீட்டருக்கு குறையாமல் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் பெரிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுவிடும்.

2013 ஆகஸ்டு மாதம் கத்தார் நாட்டிலிருந்து இயற்கை எரிவாயு கொண்டுவந்த எம்.வி. வில் எனர்ஜி என்னும் கப்பல் துறைமுக கால்வாயில் வண்டல் படிந்து துறைமுகத்தினுள் செல்லமுடியாத நிலை. மூன்று கப்பல்கள் தொடர்ந்து ஒரு வாரகாலம் 14 மீட்டர் அளவிற்கு கால்வாயை ஆழப்படுத்திய பிறகுதான் எரிவாயுக்கப்பல் துறைமுகத்தினுள் செல்லமுடிந்தது. இதைப்போன்ற பெரிய கப்பல்கள் அடுத்தமுறை இந்த துறைமுகத்தில் வருவதற்கு சிறிது தயங்கும்.

தோண்டியெடுக்கப்படும் மணலும் களிமண்ணும் 20 கிலோமிட்டர் தொலைவில் கடலில் கொட்டப்படுகின்றது. [இதனால் மீன்வளவும் சுற்றுச்சூழலும் பாதிக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.] இவ்வாறு தூரத்தில் கொட்டப்படும் மணலும் களிமண்ணும் மீண்டும் ஒரு சில நாட்களில் துறைமுகத்தை நிறைக்கும். மீண்டும் அவற்றை தோண்டவேண்டும். இதற்குத்தான் வருடத்திற்கு 110 கோடி ரூபாய்.

இப்போது வல்லார்பாடத்தை அப்படியே விட்டுவிட்டு விழிஞ்சத்தையும் இனயத்தையும் குறிவைக்கின்றார்கள். ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு பொதுமக்கள் பலியாடுகளாவதில் வியப்பொன்றுமில்லை.

விழிஞ்சமும் இனயமும் அலையேற்றப்பகுதிகள். இந்த இரண்டு பகுதிகளிலும் வண்டல் அதிகமாக படியும். கடலை தொடர்ந்து ஆழப்படுத்தவேண்டும். இவற்றிற்கும் வல்லார்பாடத்தின் கதிதான் வரும். அரிய மணல் தாதுக்கள் நிறைந்த இனயம் பகுதியில் துறைமுகம் வந்தால் அது  மணல்கொள்ளையர்களுக்கு அல்வா துண்டம்தான். ஆனால் கதிர்வீச்சுத்தனிமங்கள் நிறைந்த தாதுமணல் ஒரு சிறந்த புற்றுநோய் பரப்பி.

இதைவிட கொடுமையானது கடற்கரைகள் காணாமல் போகும் அபாயம். விழிஞ்சம் துறைமுகத்தினால் அதற்கு கிழக்கிலிருக்கும் கடல் பகுதியில் அதிக வண்டல் படிந்து கிழக்குப்பகுதியிலிருக்கும் ஊர்களின் கடற்கரை நீண்டு பெரிதாகும். கடல் தூரத்தில் சென்றுவிடும். இந்த மணலை கடல் மேற்கு கடற்கரையிலிருந்து கொண்டுவரும். மேற்கிலிருக்கும் ஊர்களை கடல்கொள்ளும்.

எந்தவித திட்டமிடலுமில்லாமல் கட்டப்பட்ட, பயன்படுத்தமுடியாமல் கிடக்கும்  தேங்காய்பட்டணம் துறைமுகத்தினால் இரையும்மன்துறை மீனவ கிராமம் கடல்கொண்டு அழியும் நிலையிலிருப்பது இதற்கு சான்று. இதை சரிசெய்யக்கூட எந்த அரசும் எந்தவித  முயற்சியும் எடுக்கவில்லை.

இதைப்போல் மிகப்பெரிய இனயம் துறைமுகம் வந்தால் தூத்தூர் தீபகற்ப ஊர்களை கடலில் ஆழத்தில் மூழ்கிச்சென்று தடவித்தான் பார்க்கவேண்டியிருக்கும். குறைந்த பட்சம் சாதரணமாக காணப்படும் கடற்கரையின் நீட்டல் குறுக்கத்தை ஆனியாடி காலகட்டத்தில் கடற்கரைக்கு வந்து பார்த்தாலே ஆட்சியாளர்களுக்கு தெரிந்துவிடும்.

கடந்த பெப்ருவரி மாதம் காதலர்தின வாரத்தில் ஒரு நாள் சில இந்திய கடற்படை அதிகாரிகள் கடற்கரை ஊர்களில் வந்து ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு மீனவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். கடல்வழியாக தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ உத்தேசித்திருப்பதாகவும் கடலில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் விசைப்படகுகளை கண்டால் நேவிக்கு தெரியப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். நம் மீனவர்கள் கொச்சி குஜராத் ஆழ்கடல் பரப்பில் மீன்பிடிப்பவர்கள்.  மீனவர்கள் இந்திய கடற்படையின் ஊதியம் பெறாத ஒரு அங்கம். தற்போதைய மத்திய அரசு இந்த மீனவரகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கத்தான் இனயம் துறைமுகம் என்னும் பெயரில் வேடிக்கை காட்டுகின்றது.

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட்டுவிட்டு மீனவர்களின் வளர்ச்சிக்கு தேவையான மீன்பிடி துறைமுகங்கள் கட்டுவதே சரியானது. குளச்சல் மற்றும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களே அவர்களுக்கு தேவையானது. குறைந்தபட்சம் பலகோடி ரூபாய் செலவுசெய்து கட்டப்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை முதலில் சரிசெய்வதே புத்திசாலித்தனமானது.

அரசு வேறு, அரசியல் வேறு. அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை அவை ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றுமா என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூடங்குளத்தில் அணுவுலை வருவதை எதிர்த்த பிஜேபி, அது ஆட்சிக்கு வந்தபிறகு கூடங்குளம் மீதான அணுகுமுறை வேறுவிதமானது. கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புடினும் 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதில் முக்கியமானது, 12 புதிய அணுவுலைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம். இதில் இரண்டு அணுவுலைகள் கூடங்குளத்திற்கு. எனவே மக்கள் அதிக  கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கின்றது. இனயம் துறைமுகம் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதைத்தவிர வேறு நன்மையில்லை.

இது தொடர்பான முந்தைய பதிவுகள்:
குறிப்புகள்: