2024 பாராளுமன்ற தேர்தலில் மீனவர்கள் காங்கிரசிற்கு ஓட்டுப்போடவேண்டும். ஏன்?

ஒரு சிறந்த அரசாங்கம் மீனவர்கள் மீது எந்தளவு அக்கறைகொண்டிருக்கிறது என்பதன் அளவுகோல் 2017-ம் வருடம் ஏற்பட்ட ஒக்கி புயல். அந்த புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அப்போதைய மத்திய (பாரதீய ஜனதா) மற்றும் மாநில (அஇஅதிமுக) அரசுகளின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாகவும், மனிதாபிமானமற்றதாகவும் இருந்தது. புயலில் சிக்கிய மீனவர்களை துரிதமாக மீட்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டிருந்தால் பல உயிர்கள் மீட்கப்பட்டிருக்கும். கேரள எல்லையை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தின் எட்டு மீனவ கிராமங்களில் மட்டும் ஆயிரம் ஆழ்கடல் விசைப்படகுகள் இருக்கிறது. ஒரு விசைப்படகில் சராசரியாக பத்து மீனவர்கள் வேலைசெய்கிறார்கள்.  இதில் பாதிக்கும் மேலான விசைப்படகுள் புயலில் சிக்கியதென்று கூக்குரலிட்டபோதும், யாரும் பொருட்படுத்தவில்லை. கண்ணகியின் கற்பை மிஞ்சும் அறச்சீற்றம் கொண்ட இலக்கியவாதிகளுக்கும் இதில் நம்பிக்கையில்லை. அப்போதைய தமிழகத்தின் அமைச்சர் ஒருவர் வெறும் 69 படகுகள் தான் தமிழக துறைமுகத்தில்  பதிவுசெய்யப்பட்டதாகச் சொன்னார். மீனவர்கள் பொய்சொல்கிறார்கள், அரசு சொல்வதையே நம்பவேண்டுமென்றார்கள். மீனவர்கள் ஆழ்கடலில் குட்டிபோடுகின்றார்களா என்று கேட்டார்கள். தமிழக மீனவர்கள் கேரளம், கர்நாடகம் மற்றும் கோவா துறைமுகங்களை மையமாகக்கொண்டு தொழில்செய்கிறார்கள் என்பது இந்த அடிமுட்டாள்களுக்குத்தெரியவில்லை. மத்திய மாநில அரசுகளின் திட்டமிட்ட கோமாளித்தனங்களுக்குப்பிறகு சுமார் இருநூற்று ஐம்பது மீனவர்கள் இறந்தார்கள். அரசு துரிதமாக மீட்புப்பணியில் செயல்பட்டிருந்தால், இதில் பாதிக்கும் மேலான மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

எதிர் கட்சியான காங்கிரசின் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் பல முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. 

1. இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வதுபோல், விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகள் அரிய நிகழ்வல்ல. பல நாடுகள் ஒக்கி போன்ற சூறாவளிகளை தகுந்த நேரத்தில் கணிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கின்றன. விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகளை கணிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த தொழில்நுட்பம் இருக்கும் நாடுகளின் உதவியையும் பெறவேண்டும்.

2. இந்திய வானிலை மையம், வானிலையை கணிக்க வளிமண்டல மாதிரிகளை (atmospheric models) மட்டுமே பயன்படுத்துகின்றது. கடல் மாதிரிகளை (oceanic models) பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஒக்கி புயல் கடல் மாதிரிகளை பயன்படுத்தாத காரணத்தினால், நம்மால் ஒக்கிபுயலை கணிக்கமுடியவில்லை. எனவே, கடல் மாதிரிகளை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்படுத்தவேண்டும். வெளிநாடுகளின் உதவியுடன், அதற்கான ஆய்வுகளை விரைந்து நடத்தவேண்டும்.

3. கடல் சீதோஷண நிலையை தெர்மல் செயற்கைக்கோள்களின் உதவியுடன் பெற்று அதை சூறாவளி   முன்கணிப்பு மாதிரிகளுடன் இணைக்கவேண்டும்.

4. புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல்நீர் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. எனவே, ஒக்கி போன்ற சூறாவளிகளின் பாதையையும் வீரியத்தையும் கணிப்பது கடினமானது. எனவே, கணிக்கமுடியாத சூறாவளிக்களுக்கு பொதுவான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure) உலக நாடுகளுடன் செயல்படுத்தவேண்டும். 

5. INSAT 5B செயற்கைகோளின் உதவியுடன் செயல்படும், படகுகளில் பயன்படுத்தப்படும் கப்பல் கண்காணிப்பு யூசர் டெர்மினல்களையும், மைய கண்காணிப்பு அமைப்பையும் கூடிய விரைவில் இஸ்ரோவின் உதவியுடன் செயல்படுத்தவேண்டும். மேற்சொன்ன Vessel Tracking System அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளிலும் கண்டிப்பாக இருக்கும்படிசெய்யவேண்டும். மற்றபடகுகளில் VHF மற்றும் DAT ஆகியவையும் இருக்கவேண்டும். இவற்றை சலுகை விலையில் கொடுக்கவேண்டும்.

6. இஸ்ரோ உருவாக்கிக்கொண்டிருக்கும் FishermanApp அடுத்த ஆறுமாத காலத்தில் அனைத்து மீனவர்களின் செல்பேசிகளிலும் இருக்கும்படி செய்யவேண்டும். FishermanApp தரவிறக்கம் செய்யப்பட்ட செல்பேசிகளில் செயற்கைகோள் மூலமாக தகவலகளை பரப்பமுடியும்.

இதில் ஒன்றைக்கூட இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தொழில்நுட்பமும் அறிவியலும் என்னவென்று பாரதீய அரசிற்குத்தெரியவில்லை.  

கடந்த பத்தாண்டுகளில், கடலையும் கடற்கரைகளையும், கடல்குறித்த ஆய்வுகள் என்னவென்றே அறியாத அதானியம்பானிகளுக்கு பாரதீய அரசு தாரைவார்த்துக்கொண்டிருக்கிறது. கடலையோ, கடல்வளத்தையோ, மீனவர்களையோ காப்பதற்கு மத்திய அரசு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இனயம் துறைமுகம் போல்,  மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது.

எனவே, மீனவர்கள் பாரதீய அரசாங்கத்திற்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்குச் சமானமானது. 

*

திரு. ராகுல் காந்தி, மீனவர்களுக்கும் மீன்வளத்திற்கும் தனி அமைச்சகம் உருவாக்கப்படுமென்று உறுதிமொழி கொடுத்திருந்தார். ஆனால், இது காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் விடுபட்டுள்ளது. இதை, வாக்குறுதி கொடுத்த திரு. ராகுல் காந்தி தெளிவுபடுத்தவேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறைக்கையின் முக்கிய ஷரத்துகள்:

1. விசைப்படகுகளுக்கு டீசல் மானியம்.

2. கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனவர் இறந்ததாக அனுமானிக்கப்பாட்டால், மூன்று மாதங்களுக்குள் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

3. விசைப்படகுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

4. மீனவர்களுக்கு கிரடிட் கார்டுகள் வழங்கப்படும்.

5. ஜாதிவாரி கணக்கெடுப்பில் மீனவ சமூகங்களும் வகைப்படுத்தப்படும்.

6. உள்நாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு விவசாயமாக அங்கீகரிக்கப்படும்.

7. பைட்டோசானிட்டரி (தாவரநல) தரநிலைகள் உருவாக்கப்பட்டும், அத்தகைய தரநிலைகளை சந்திக்கும் கடல் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.

8. மீன்பிடித்துறைமுகங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

9. மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்படும்.

10. அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் (உயிரிழப்பு, கைது, படகுகள் கையகப்படுத்துதல்) தவிர்க்கப்படும்.

ப.சிதம்பரம் தலையைலான நிலைக்குழுவின் பரிந்துரையை செயல்படுத்துவார்களா? 

துறைமுக கட்டுமானங்களை அதானிகு மட்டும்தான் கொடுப்பார்களா? விசைப்படகுகள் வாங்க லோன் கொடுப்பார்களா? 

அரசின் தவறுதலால் கடலில் நடக்கும் பேராபத்துகளில் இறக்கும் மீனவர்களுக்கான குறைந்தபட்ச உதவித்தொகை என்ன? 

மீன்வள அமைச்சகம் உருவாக்கப்படுமா?

என்பது போன்ற கேள்விகள் இருந்தாலும், இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸின் மீது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே, மீனவர்கள் காங்கிரஸிற்கு ஓட்டுப்போடுவது காலத்தின் கட்டாயம்.

பின்னூட்டமொன்றை இடுக