திலேப்பியா

இடைப்பாடு கிராமத்தில் கடற்காற்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. கடலிருக்குமிடம் தெற்கு! சூரியன் உச்சியில் நிலைத்து மெதுவான அதிர்வுகளோடு தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கடலில்குளித்து கரையேறிய சிறுவர்கள் சுடுமணலில் உட்கார்ந்து தொடையிடுக்கில் சுடுமணலை வாரிவாரி வைத்து புதைந்தார்கள். கட்டுமரங்கள் மெதுவாக ஆழ்கடலிலிருந்து கரைநோக்கி உடைந்து சிதறிய கண்ணாடிச் சில்லுகளின்மேல் சேதாரமின்றி வழுவி வந்துகொண்டிருந்தது. சில வள்ளங்களை தலை நிமிர்ந்து மீனவர்கள் கடலில் நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.
ஒருசிறுவன் மயக்கம் தெளிந்து, “லேய், ராயூ வருதாம் பாரு”, என்று கூவியபடி பயந்து கடல் நோக்கி ஓடினான்.
மற்ற சிறுவர்கள் கண்திறப்பதற்க்குள், ராஜு அருகில் வந்துவிட்டிருந்தான். வந்தவன் முகத்திற்கும் ஓடிய சிறுவனின் அலறலுக்கும் எந்தவித சம்மந்தமும் இருக்கவில்லை. ராஜு சிறுவர்களைப் பார்த்து பல்காட்டி சிரித்தான். பல் முழுக்க பச்சைமஞ்சள். ஒரு சிறுவன் வந்தவனை வடக்குப்பக்கம் வந்து உட்காரச்சொல்வதற்கு சைகையால் மன்றாடினான். சிறுவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை. கையால் மூக்கை பொத்திக்கொண்டார்கள்.
ராஜு வந்து உட்கார்ந்ததும், கடற்கரையை ஒட்டியிருந்த முத்தம்மாளின் வீட்டின் முன் நின்றிருந்த தென்னை மரத்தில் உட்கார்ந்திருந்த காக்கை ஒன்று கலவரமாக கரைந்துவிட்டு ஓலை மாறி உட்கார்ந்தது. ஓலையில் கால்வழுக்கியதால் கரைந்து மீண்டும் ஓலை மாறியது.
வீட்டுத்திண்ணையில் நூல்முடித்துக்கொண்டிருந்த முத்தம்மை, காக்கைச் சத்தம்கேட்டு, “யாரு, புதிய விருந்து…?” என்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கடற்காற்று அதற்கேயுரிய வெம்மையோடு மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. ராஜுவைக் கண்டதும், வீட்டுமூலையில் வைத்திருந்த அலுமினிய சருவத்தை சும்மாட்டுத்துணியால் துடைத்துவைத்துவிட்டு, நேற்று சந்தையில் யாருக்காகவோ வாங்கிய ஒரு மாங்காயை சருவத்தில் எடுத்துப்போட்டுவிட்டு, கட்டுமரம் கரைக்கு பக்கத்தில் வருவதை மீண்டும் உறுதிசெய்துகொண்டு அது வரும் திசை நோக்கி, சும்மாட்டுத்துணியை சருவத்தில் போட்டுவிட்டு அதை இடுப்பில் அணைத்துக்கொண்டு நடந்தாள்.
ராஜு கடற்கரையின் எந்தப்பகுதியில் சென்று உட்கார்கின்றானோ அங்கே ஏதேனும் கட்டுமரம் கரையில் அணையவருகின்றது என்று அர்த்தம். கட்டுமரம் இல்லையென்றால் எங்கும் உட்காரமாட்டன். ஒன்று நடந்துகொண்டேயிருப்பான் அல்லது ஆற்றில் சென்று மீன்பிடிப்பான். இப்போதும்கூட தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டி இங்கே வந்து சேர்ந்திருந்தான்.
ராஜு சட்டை போட்டு நான் பார்த்ததில்லை. கறுத்த மிக மெல்லிய தேகம். உடல் முழுக்க வெள்ளை உப்புப் பொருக்கை பரவியிருந்தது. உடுத்தியிருக்கும் ஒரே லுங்கிதான் எப்போதும் அவனது மீன்போட்டுவைக்கும் கூடை.
ஒருசிறுவன் லுங்கியின் “கக்குமடியில்” மீன் இருக்கின்றதா என்று சைகையில் கேட்டான். இல்லையென்று கைமலர்த்தி தலையசைத்துச் சிரித்தபோது ஈறு சிவந்திருந்தது. நேற்றைய மீனின் செதில்கள் லுங்கி முழுக்க ஒட்டியிருந்தது. லுங்கி கறுப்பு மற்றும் மஞ்சளுக்கு இடைப்பட்ட அனைத்து நிறங்களையும் தாங்கி, இனிமேலும் அழுக்கை வாங்கும் திராணி இல்லாமலிருந்தது. கக்குமடியில் மீனில்லையென்றால் கட்டுமரமெதுவும் கரைக்கு வரவில்லை என்று அர்த்தம்.
கட்டுமரங்களின் மீன் விற்பனை செய்வதற்கு முன் தனக்குப் பிடித்தமான மீனை எடுத்துக்கொள்வான். அனைத்து கட்டுமரங்களும் அவனுக்குச் சொந்தமானதல்லவா!
பதின்ம வயது. சிறுவயதில் ராஜூ நன்றாகத்தானிருந்தான். வயது ஏற ஏற அவனில் சில மாற்றங்கள். தண்ணீரைக்கண்டால் அவ்வளவு எரிச்சல். ஆனால் மழையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்றுகொண்டிருப்பான்.
முத்தம்மா சிறுவர்களின் பக்கதில் சென்று, “லேய், ராயு…” என்றழைத்துவிட்டு சருவத்திலிருந்து மாங்காயை எடுத்துக் காட்டினாள். ராஜு “ஓ…” வென்று கத்திவிட்டு மாங்காயைத்தேடி எம்பிக்குதிதான். முத்தம்மை கராறாக, “ஆத்தியம் பல்லுதீட்டு. அப்பந்தான் மாங்காயத் தருவேன்”, என்றாள். ஒரு நாள் முத்தம்மை ராஜுவின் பின்பக்கமாக வந்து அவனது தலையில் கையில் கொண்டுவந்த தேங்காய் எண்ணையை தேய்த்த அன்றிலிருந்து சிறிது நாட்கள் இந்தப் பக்கம் வராமலிருந்தான்.
ராஜுவும் ஆர்வமாக உட்கார்ந்து, உலர்ந்த மணலை நீவி அதற்கு கீழிருந்த ஈரமான வண்டல் மண்ணை எடுத்து வாயில் போட்டு விரலால் பல்தீட்டினான். சிறிது நேரத்தில் வாய் முழுக்க சகதியில்லாத வெத்திலை பாக்கு. துப்பியபோது சிவப்பு நூல் வழிந்தது. கையால் துடைத்துவிட்டு மாங்காயை வாங்கி அதை சாப்பிட்டுக்கொண்டே கட்டுமரம் நோக்கி சிறுவர்களுடன் முத்தம்மையை பின்தொடர்ந்து சென்றான். வேறு சில வியாபாரிகளும் பெண்களும் அணைந்த கட்டுமரத்தின் பக்கதில் கூடினர்.
கட்டுமரத்திலிருந்து விற்பனைக்கு எடுத்துபோட்ட மீனைச் சுற்றி நின்றிருந்தவர்களைத் தள்ளிவிட்டு மீனைத்தேடி முன்னேறியபோது யாரோ ஒருவர் ஈரமணலை அவனது தலையில் வாரிப்போட்டார். அவனது சத்தத்தின் எதிரொலியில் கூட்டம் சற்று சிதறியது. பயத்தில் ஓடிய சிறுவர்களை விரட்டிக்கொண்டு ஓடினான். சிறுவர்கள் சிறிது தூரம் ஓடியதும் கடலில் குதித்தார்கள். சிறுவர்களைப் பார்த்து கோபத்தில் சத்தம் போட்டவனை கடல் அலை தன்னை தரையில் அறைந்து அவனை திருப்பித் திட்டியது. இவனும் விடவில்லை. இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டிருந்தார்காள். கோபம் தலைக்கேறிய அலை முடிவில் இவனது லுங்கியை நனைத்து இழுத்தது. இவன் பயத்தில் கத்திவிட்டு விலகி ஓடினான். கோபத்தின் உச்சியில் கையிலிருந்த மாங்காயை அலையை நோக்கி எறிந்தான். அது லாவகமாக அதனை வாங்கி அதிலிருந்து ரத்தத்தை உறுஞ்சிவிட்டு கரையில் மிச்சத்தை துப்பிவிட்டுச் சென்றது. ராஜுவின் சுயமரியாதை ஒப்புக்கொள்ளாததனால் அதை எடுக்க மனமின்றி மீன் விற்பனை செய்யும் இடத்தை நோக்கி திரும்பி நடந்தான்.
கூட்டதை வந்ததடைந்தபோது மீன் ஏலத்தில் முத்தம்மைக்கு கட்டுப்படியாகும் விலையில் மொத்த மீனும் கிடைக்கும் சாத்தியக்கூறு அதிகமாக இருந்தது. வந்தவன் கூட்டத்தை விலக்கி தனக்கான மீனை எடுத்தபோது “ஒருதரம்….ரெண்டுதரம்….மூணுதரம்” என்று ஏலம் போட்டவர் முத்தம்மை மீன் வாங்கியதான அத்தாட்சியைக் கொடுத்தார்.
ராஜு எடுத்தது ஒரு பெரிய “வேளாக்குட்டி கார” மீன். மொத்த விற்பனைத் தொகையில் ஐந்தில் ஒருபங்கு. “ஐயோ எனக்க செல்ல மோன அதத்தா.” என்று முத்தம்மை கெஞ்சினாள். ராஜுவுக்கு அலையோடுள்ள கோபம் மூக்கின் நுனில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. முத்தம்மையும் மற்றும் சிலரும் அந்த மீனை அவனிடமிருந்து பிடுங்க முயன்றபோது, பக்கதில் நின்ற முத்தம்மையின் இடது விலாவில் தனது வலது உலக்கையை இறக்கினான். முத்தம்மைக்கு முப்பது வருடம் கழிந்து மீண்டும் பிரசவ வலி. மூச்சுமுட்டி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உட்கார்திருந்தாள். கடல் அலை தன் சத்தத்தை பயத்தில் அடக்கியது.
முத்தம்மையின் பக்கத்தில் நின்றிருந்த ராஜு, மீனை அவளிடம் நீட்டியபோது அதை வாங்கிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தாள்.
கடலிலிருந்து ஒரு 200மீட்டர் தள்ளி வடக்குப்பக்கம் அனந்த விக்டோரியா மார்த்தாண்டம் கால்வாய் ஓடுகின்றது. இது மார்த்தாண்டவர்மாவினால் திருவனந்தபுரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் நீர்வழிப்போக்குவரத்திற்காக இருபதாம் நூற்றாண்டின் முடிவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த ஆறு திருவனந்தபுரத்திலிருந்து தேங்காய்ப்பட்டணம் வரை ஓடி பின்னர் தேங்காய்ப்பட்டணத்திலிருந்து கல்வீடுகளுக்கு கீழ் சில மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் வழியாக கன்னியாகுமரிவரை ஓடி உயிர்தப்புகின்றது என்ற நம்பிக்கையுமுண்டு!
எங்களூர் ஆற்றில் சுலோப்பியா என்று நாங்கள் அழைக்கும் திலேப்பியா என்னும் நன்னீர் மீன் அதிகமாக கிடைக்கும்.  முதுகில் முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிருக்கும். இந்த மீனின் பிறப்பிடம் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மீன்பிடித்த கலீலியக்கடல். அப்படியென்றால் கலீலியக்கடல் கடலில்லையா? அங்கிருந்து இந்தமீன் எவ்வாறு, புனித தோமா போல், மலபார் கரையை வந்தடைந்தது? அல்லது இந்தியாவில் இரண்டாவதாக வந்ததாகக் கருதப்படும், தோலுரிக்கப்பட்ட அப்போஸ்தலர் புனித பர்த்தலோமியோ என்னும் நத்தானியேல் கொண்டுவந்ததா? கிறிஸ்து இரண்டு மீனையும் இரண்டு அப்பத்தையும் பதினையாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள் ஒன்று. அந்த இரண்டு மீன்களும் உலர்ந்த அல்லது உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட திலேப்பியாக்கள் தானா? திலேப்பியாவை புனித பீட்டர் மீன் என்பார்கள் சிலர்.
ராஜு முத்தம்மாள் கொடுத்த காசில் சில தூண்டில்கள் மற்றும் கங்கூஸ் என்னும் நைலான் ரோளும் வாங்கிக்கொண்டு மிச்சத்தை தன்னுடன் வந்த சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களையும் கூட்டிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தான். கையில் ஒரு சிரு பிளாஸ்டிக் பையை எடுத்து வைத்துக்கொண்டான்.
போகும் வழியில் அத்துலுவாப்பாவின் சாயக்கடையின் பின்பக்கத்தில் சாக்கடை நீர் தேங்கிய பகுதியில் சென்று ஒரு சிறு கம்பினால் தோண்டி கையினால் நெழியும் மண்புழுவை எடுத்து பையில் போட்டான். ராஜுவின் பையிலிருந்த இடியாப்பத்திற்கு உயிரிருந்தது.
“லேய், மதி. பெண்ணுங்க குளிச்ச வருததுக்க முன்ன போலாம்”, ஒரு சிறுவன் சற்று தள்ளி நின்று ராஜுவிடம் சொன்னான்.
“ங்..ங்க்..” என்று இளித்து சிரித்துவிட்டு எழும்பி கையை உதறிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தான்.
சிறுவர்கள் ஆற்றை வந்தடைந்ததும் ஒரு பெண் கத்தினாள், “லேய், லேய்… போங்கல அங்ஙன. ஆத்திலி மீனிபிடிச்ச வருதானுவ. நிங்க அமமமாரு பெறேஞ்சா?”
திலேப்பியா மீன் குழந்தை பெற்ற பெண்களின் பத்திய உணவில் முக்கியமானதாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ராஜு சிரித்துவிட்டு கத்தினான், “நீ…நீ….பெத்…த.. ஓ….ஓ….”
மார்புக்கு மேல் லுங்கியை தூக்கிக்கட்டிய பெண்கள் சிறுவர்களை தாங்கள் குளிக்கும் துறையிலிருந்து விரட்டியடித்தனர்.
சிறுவர்கள் பெண்கள் குளிக்கும் துறைதாண்டி சிறிது தூரம் நீங்கிச் சென்றனர். பெண்கள் குளிக்கும் பகுதி தாண்டி ஆறு மிக சகதியாக இருந்தது. ஆற்றின் இரண்டு கரையிலும் தென்னைந்தொண்டுகள் பெரிய வலையில் போடப்பட்டு ஊறவைக்கப்பட்டிருந்தது. நன்கு ஊறியபிறகு இதனை அடித்து அதன் நாரை தனியாகப்பிரிது கயிறாக திரிப்பார்கள். இது பலகாலமாக ஒரு குறிப்பிட்ட இனமக்களால் செய்யப்படும் தொழில். இதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.
ஆற்றின் இருபக்கங்களிலும் தென்னை மரங்கள் நெருக்கமாக ஓங்கி வளர்ந்திருந்தது. சூரிய ஒளிக்கீற்றுகள் தென்னையின் இடைவெளி வழியாக ஊடுருவி வந்தது.
சிறுவர்கள் இருந்த பகுதியில் ஆறு கறுப்பாக ஓடியது. அவர்கள் அங்கே உட்கார்ந்து தூண்டிலை நைலான் ரோளின் நுனியில் கட்டி, தூண்டிலில் மண்புழுவை பிய்த்து கொருத்து ஆற்றில் வீசி மீன்பிடிக்கத் தொடிங்கினார்கள். கிடைக்கும் மீன்களை நுனியில் கட்டிட்ட ஈர்க்கிலை மீனின் வாயில் நுழைத்து செவுள்வழியாக கொருத்தெடுத்து மீன்மேல் மீனாக மாலைபோல் ஆக்கிக்கொண்டார்கள். திலேப்பியா மீன் மிகவும் கறுப்பாக வழுவழுப்பாக சேணி நாற்றத்துடனிருந்தது.
இரண்டு மூன்று மாலை மீன்கள் கிடைத்ததும் சிறுவர்கள் அதனை விற்பதற்காக பக்கத்து ஊர் மீன் கடைக்கு எடுத்துச் செல்வதை சந்தையிலிருந்து திரும்பி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முத்தம்மை கண்டாள். ராஜுவைக் காணாமல் திரும்பிப் பார்த்தபோது அவன் தனியாக மீன்பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வேறு யாரும் அவனுடன் இல்லை.
முத்தம்மாள் குளித்து கரையேறியபோது சில தவளைகள் சத்தமிட்டு உயிருக்குப் பயந்து சற்று தள்ளி கரையேறியது.
முத்தம்மாள் துணிமாற்றி சுத்தமாகக் கழுவிய ஒற்றைக்குரிசு வரைந்த சருவத்தை இடுப்பில் வைத்து நடக்கத் துவங்கியபோது ராஜுவின் “ம்..ம்ம்…மா…” என்ற அலறல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜு தேள் கொட்டியது போல், அலறலிட்டு ஓடினான். ஓடியவேகத்தில் தென்னையில் இடித்து விழுந்துவிட்டு மீண்டும் மீண்டும் எழும்பி உடலை வளைத்து ஓடினான். எம்பி எம்பிக் குதித்தான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் ஓடி தென்னையில் இடித்து கீழே விழுந்து மண்புழுபோல் ஊர்ந்தும் கடைசியில் எழும்பி ஓட சக்தியற்று தலையை மண்ணில் புதைத்து உருண்டுகொண்டிருந்தான்.
“எனக்க ஏசுவே, ஏனக்க ஏசுவே…” என்று பயத்தில் செய்வதறியாது முத்தம்மாள் முனகிக்கொண்டு பின்னர் வெறிவந்தவளாக, சருவத்தையும் பணத்தையும் தூரவீசிவிட்டு, ராஜுவை நோக்கி ஓடினாள். முந்தானை அவிழ அவிழ அதைப் பிடித்துக்கொண்டு ஓடி ராஜுவின் பக்கத்தில் சென்றபோது அவன் பேச்சில்லாமல் கிடந்தான். தலையிலிருந்தும் வாயிலிலுந்தும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. உடல் முழுக்க சிராய்ப்பு.
முத்தம்மாள் சுருண்டு அடங்கிய ராஜுவின் தலையை தன் மடியில் தூக்கிவைத்து, வாயில் கையிட்டு எதையோ தேடினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, திலேப்பியாவின் சில சதைத் துண்டுகள் இரத்தத்தோடு கையில் வந்தது.

“திலேப்பியா” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s