*சூதாட்டத்திட்டம்*
குளச்சல் (இனயம்) துறைமுகத்திற்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். அவரது கனவுத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமாக நடக்கின்றன. தொகுதி சீரமைப்பிற்கு முந்தைய எங்கள் சட்டமன்ற தொகுதியான விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டி.மணியுடன் பொன்னாரை ஒப்பிட்டு இத்தனை நாளும் என்னையே நான் ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கின்றேன்.
இனயம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள் இரண்டும் வேறு வேறு. குளச்சலில் ஏற்கெனவே தமிழக அரசின் மீன்பிடி துறைமுகம் இருக்கின்றது. இனயத்தில் புதிதாக வரவிருப்பது மத்திய அரசின் பன்னாட்டு பெட்டக மாற்று முனையம். குளச்சல் துறைமுகத்திலிந்து வரவிருக்கும் புதிய இனயம் துறைமுகம் 6 கிலோமீட்டர் வான்வெளி தொலைவில் இருக்கின்றது. குளச்சல் துறைமுகத்திற்கும் இனயம் துறைமுகத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.
தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி வஉசி துறைமுக கழக தலைமை இனயம் துறைமுகம் கட்டுவதற்கான முதற்படியாக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருக்கின்றது. ஆனால், அந்த விண்ணப்ப துணை ஆவணங்களில் துறைமுக எல்லையை வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தேங்காய்பட்டினம் வரை காட்டப்பட்டிருக்கின்றது. ஒருவேளை அந்த எல்லை குளச்சல் துறைமுகத்திற்கானதாகக்கூட இருக்கலாம். அந்த விண்ணப்பம் முழுக்க முழுக்க தவறுகளாலும் அபத்தங்களாலும் பொய்புரட்டுகளாலும் நிரம்பியிருக்கின்றது.
மீன்வர்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் எந்த பாதிப்புமில்லை, மக்கள் அடர்த்தியாக வசிப்பது இனயத்திலிருந்து 30கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நாகர்கோயிலில், துறைமுகப்பகுதியில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லை, மீனினங்களோ, தாவரங்களோ அந்த கடல்பகுதியில் இல்லை என்பதுபோன்ற பல அரிய தகவல்களை கொண்டிருக்கின்றது இந்த விண்ணப்பம். இந்த எப்படி விண்ணப்பமென்று சொல்கின்றார்களென்று தெரியவில்லை.
நாம் வங்கிகளிலிருந்து கடன் பெறும்போது, நமக்கு தரப்படும் கடனின் அளவு நமது வருமானத்தையும், இதற்கு முன்பு நாம் வங்கியிலிருந்து பெற்ற கடனையும், கடனை திருப்பிச்செலுத்தும் திறனையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், கடன் அதிகமாக வேண்டுமென்பதற்காக இரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கடன்களுக்கும் விண்ணப்பிப்பார்கள். ஒன்று நிராகரிக்கப்பட்டாலும் இன்னொன்று கிடைத்துவிடும். நமது நாட்டில் இரண்டு வங்கிக்கடன்களும் அனேகமாகக் கிடைத்துவிடும்.
அதே முறையை இனயம் துறைமுகத்திலும் கையாண்டிருக்கின்றார்கள். விழிஞ்சம் துறைமுகத்தில் ஆர்வம் காட்டாமலிருந்த கேரள அரசை நிர்பந்திப்பதற்காக விழிஞ்சம் இல்லையென்றால் இந்த துறைமுகத்தை தமிழகத்திற்கு கொண்டுசெல்வோம் என்று ஒரு பகடையாக இனயம் துறைமுக திட்டம் பேச்சளவில் சொல்லப்பட்டது. ஆனால், அதானியம்பானிகளின் புதிய தேவைகளை கருத்தில்கொண்டு இனயம் துறைமுகத்தை தொடையப்பிமீன் போல் விடாப்பிடியாக பிடித்திருக்கின்றது.
புதிய துறைமுகம் கட்டும்போது, அதற்கு பக்கத்தில் அதைப்போன்ற துறைமுகம் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். பக்கத்திலிருக்கும் துறைமுக்கத்தினால் புதிய துறைமுகத்திற்கு என்ன பாதிப்பு, அல்லது என்ன நன்மை என்பதை ஆராயவேண்டும். இனயம் துறைமுகத்திற்கு பக்கத்தில் விழிஞ்சம் துறைமுகம் புதிதாக கட்டப்படுகின்றது. விழிஞ்சம் துறைமுகத்தைக்குறித்த எந்த தகவலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்ட இனயம் துறைமுக விண்ணப்பித்தின் ஒரு பகுதியான செயலாக்க திட்ட அறிக்கையில் சொல்லப்படவேயில்லை.
விழிஞ்சம் துறைமுகம் 25 கிலோமீட்டர் வான்வெளி தொலைவில் இருக்கின்றது. இனயம் துறைமுகத்தின் தேவைக்கான, துறைமுகத்தினால் கிடைக்கும் வருமானத்திற்கான அதே காரணங்களைத்தான் விழிஞ்சம் துறைமுக செயலாக்க திட்ட அறிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல், இனயம் துறைமுக ஆவணங்களில் விழிஞ்சம் துறைமுக ஆவணங்களில் இனயம் குறித்து எதுவுமில்லை.
விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகத்தின் 15 வான்வெளி தூரத்திற்குள் ஒரு சில தமிழக கடற்கரை கிராமங்களும் அடங்கியிருக்கின்றன. விழிஞ்சம் துறைமுகத்திற்கு உட்பட்ட புல்லுவிளையிலிருந்து தமிழகத்தின் மார்த்தான்டன்துறை 10 கிலோமீட்டரிலும், சின்னத்துறை 15கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கின்றன. விழிஞ்சம் துறைமுக ஆய்விலோ அல்லது வேறெந்த ஆவணங்களிலோ தமிழக கிராமங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி குறிப்பிடவில்லை. இந்த கிராமங்கள், ஆமைகள் முட்டியிடுவதாலும், மணற்குன்றுகள் இருப்பதாலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் முதல் நிலையில் (CRZ-1) இருக்கின்றன. கடற்கரைகளில் பெரிய கட்டுமானங்களுக்குத் தடையிருக்கின்றது.
விழிஞ்சம் துறைமுக எல்லைக்கு உட்பட்ட தமிழக மக்களிடம் கருத்துக்கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை. தமிழக அரசிடம் விழிஞ்சம் துறைமுகத்திற்காக அனுமதி பெறப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஆனாலும், விழிஞ்சம் துறைமுக கட்டுமானம் முழுவீச்சுடன் எந்தவித தடையுமின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறைந்தபட்சம் கேரள மீனவர்களுக்கு விழிஞ்சம் துறைமுகத்தினால் கிடைக்கும் அனுகூலியங்கள் தமிழக மீனவர்களுக்கும் கிடைக்கவேண்டும். கேரள மீனவர்களுக்கு பழங்குடியினருக்கான சில சலுகைகளை கேரள அரசு அளிப்பதுபோல், தமிழக மீனவர்களுக்கும் அந்த சலுகையை அளிக்கவேண்டும். அதைவிட, தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு இருக்கின்றது.
References:
1. http://environmentclearance.nic.in/auth/FORM_A_PDF.aspx?cat_id=IA/TN/MIS/59873/2016&pid=New
*
Let all our fisherman communities come forward with the help of our Bishops and protest against it. Let’s all close the schools and colleges until we get justice…
LikeLike
very nicely written and breaks the Government’s intention to help the Adani’s at the cost of poor fisher people’s life. We have elected Government to protect the people but in the name of development the Government itself is only protecting the Rich. The Government should stop the project at the earliest.
LikeLike